Tuesday, June 26, 2018

இந்திய ஆண்கள் வெட்கப்படவேண்டும்!



உலகிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது.

1) எல்லா இந்திய ஆண்களும் இதற்காக வெட்கப்படவேண்டும். ஏனெனில் பெண்களுக்கு ஆபத்து வருவது சக ஆண்களிடம் இருந்து தான். குறிப்பாக இந்திய ஆண்களிடம் இருந்து. இப்படி ஒரு நிலை வருவதற்கு இந்திய ஆண்களே பொறுப்பு. நேரடியாகப் பெண்களுக்கு தீங்கு இழைக்காதவர் காட்டும் மெளனமும், கவனக்குறைவும், அக்கறையின்மையும் இதற்குப் பொறுப்பு.

2) இந்தியாவில் பொதுவெளியை விட வீடுகளுக்குள் தான் பெண்கள் மீதான வன்முறை அதிகம் நிகழ்வதாக மற்றுமொரு ஆய்வு சொல்கிறது. வீடு என்றால் குடும்பம், உறவுகள், சொந்தம், பந்தம் என்கிற இந்தியப் பண்பாட்டின் அடித்தளத்தில் தான் பெண்களுக்கு அதிக வன்முறை நிகழ்கிறது. அந்த வன்முறை இந்தியப்பண்பாடு என்று அங்கீகரிக்கப்படுகிறது; ஒத்தக் கருத்து உருவாக்கப்படுகிறது. இது இங்கு இயல்பானது என்று சமரசம் செய்யப்படுகிறது.

3) கருக்கொலை, சிசுக்கொலை, குழந்தைத் திருமணம், திருமணத்திற்குள் வல்லுறவு, வீட்டுக்குள்ளும் பொது இடங்களிலும் பாலியல் தொந்தரவு, சாதி மற்றும் மதக்கலவரங்களில் பெண்கள் மீதான வன்முறை, தனது இணையைத் தேர்வு செய்ய உரிமையற்ற நிலை, சொத்து இல்லாமை, கல்வியின்மை, அதிகாரமின்மை இப்படி பெண்கள் எதிர்க்கொள்ளும் வன்முறையைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

4) ஊடகம், காவல்நிலையம், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் இப்படிப் பல துறைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு, அலட்சியம், அடக்குமுறை மற்றும் வன்முறை கெட்டிதட்டிப் போயிருக்கிறது.

5) ஊடகங்கள் இன்னும் பெண்களை ஒரு பண்டமாக விற்பனை செய்யும் போக்கைக் கடைபிடிக்கின்றன. வியாபாரப் போட்டியில் பெண் உடல் காட்சிப்பொருளாக விற்கப்படுகிறது. விளம்பரங்களில், சினிமாவில், தொலைக்காட்சிகளில், பத்திரிக்கைகளில் பெண்கள் சித்தரிக்கப்படும் விதம் பெண் விரோத / வெறுப்புச் சிந்தனை கொண்டதாகவே இருக்கிறது.

6) கார்பரேட் பொருளாதாரம் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிராகவும் இருப்பதால், எல்லாச் சமூகங்களிலும் பெண்கள் பின்தள்ளப்பட்டிருப்பதால், கார்பரேட் அரசியல் பெண்களைக் கூடுதலாகச் சுரண்டுகிறது. வியாபாரம், லாபம், போட்டி, முதலிடம் ஆகிய வாதங்களிடையே பெண்களின் பாதுகாப்பு கடும் நெருக்கடியைச் சந்திக்கிறது. இரக்கமற்ற, அறமற்ற, தோழமையற்ற சூழலில் எல்லோரும் முரட்டு ஆண்தன்மையுடன் (masculine) செயல்பட நிர்பந்திக்கப்படுகின்றனர்.

7) இப்போது நாடெங்கும் பரவி வரும் காவிப் புயல் இதுவரை நாம் ஆண் பெண் சமத்துவத்துத்தில் அடைந்திருக்கும் சில முன்னகர்வுகளைக் கூடக் குலைப்பதாகவே இருக்கிறது. இந்தியப் பாரம்பரியம் என்ற பெயரில் பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசிகள் ஆகியோரது உரிமைகளைச் சிதைக்கும் சிந்தாந்தம் இன்றைய வெற்றிகரமான யதார்த்தமாகி விட்டதால் பெண்களை சாதி, குடும்பம் ஆகிய கூட்டுக்குள் அடைக்கும் முயற்சி வெளிப்படையாக நடக்கிறது.

8) காவிகளின் அரசியல் தாக்குதலினால் யாருக்குமே பாதுகாப்பற்ற ஒரு சூழல் இந்தியாவில் உருவாகி வருவது, வன்முறை ஒரு அரசியல் கருவியாக வெளிப்படையாகக் கடைபிடிக்கப்படுவது ஆகியவற்றால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோரின் பாதுகாப்பு கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.

சாதிவெறி, மதவெறித் தாக்குதல்களில் பாலியல் வன்முறை முக்கியமான கொடுஞ்செயலாக வெளிப்படுகிறது. அது ஒடுக்கப்பட்டோர் மீது அதிகாரம் செலுத்தவதாக, அவர்களைச் சிதைப்பதாக, ஒடுக்குவதாக, சுரண்டுவதாக, வெற்றி கொள்வதாக வெளிப்படுகிறது.

9) கொத்தடிமை முறை, அகதிகளாக்கப்படல், ஆள் கடத்தல், குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை போன்றவற்றிலும் இந்தியா பரிதாபமான நிலையில் முன்னணியில் இருக்கிறது. ஆவணக்கொலை, அமில வீச்சு, வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொந்தரவு / சுரண்டல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

10) வளர்ச்சி எனும் பெயரில் கிராமங்கள் கார்பரெட் கம்பெனிகளுக்கு விற்கப்படுவதால் பெண்கள் தம் சொந்த ஊரை விட்டு வெளியேறி கடும் சுரண்டல் மிக்க வேலைகளை, பாதுகாப்பற்ற முறையில் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் பல அரசியல், பொருளாதார, சமூக முடிவுகளை எடுக்கும் இடத்தில் ஆண்கள் இன்னும் இருப்பதால் இந்த இழிநிலைக்கு ஆண்களே காரணம். குறிப்பாக உயர்சாதி ஆண்கள்.

இந்த ஆய்வு நமக்கு ஒரு பெரும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. தேசபக்தி, மதம் மற்றும் சாதிப்பற்று, பாரம்பரியம், குடும்ப கெளரவம், பண்பாடு, வளர்ச்சி, முன்னேற்றம், போட்டி, லாபம், லட்சியம், கனவு என்கிற பெயரில் நாம் நம்மையேச் சிதைத்துக்கொண்டிருக்கிறோம்.

Monday, June 25, 2018

வி பி சிங் - இரண்டாம் அம்பேத்கர்!


சமூகநீதிப் பாதையே விடுதலை!

வி பி சிங் பிரதமராக இருந்த போது மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு / சூத்திரர்களுக்கும் / ஆண்ட பரம்பரைகளுக்கு / ஆதிக்க சாதியினருக்கு வழங்க முற்பட்டார். அதை எதிர்த்து நாடெங்கும் உயர்சாதி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்படியென்றால் நாங்கள் செருப்புத் தைக்கப் போக வேண்டுமா என்று கூறி இந்தியாவில் பல இடங்களில் செருப்புத் தைக்கும் போராட்டத்தை நடத்தினர். சிலர் தீக்குளித்தனர். உயர்சாதி இந்துக்களின் கட்சியான பாஜக, இந்துக்களின் ஒற்றுமையைப் பாதுகாக்க(!) பாபர் மசூதி பிரச்சனையைக் கையில் எடுத்தது.

அத்வானி எனும் பார்ப்பனர் பாபர் மசூதி இடிப்புப் போராடத்தைத் தொடங்கினார். இந்தியாவின் பல நகரங்களில் டயோட்டா ஏசி காரில் ரத யாத்திரை நடத்தினார்.

படித்து, வேலைக்குப்போய் தனது உரிமைக்குப் போராட வேண்டிய சூத்திரர்களைக் கொண்டு பஜ்ரங் தள் (வானரப்படை) என்ற அமைப்பை உருவாக்கி பாபர் மசூதியை இடிக்க முற்பட்டது சங் பரிவாரின் ஒரு அமைப்பான விஷ்வஹிந்த் பரிஷத். பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட வேண்டிய சூத்திரர்களை பார்ப்பனர்களின் தலைமையின் கீழ் தந்திரமாக முஸ்லீம்களோடு மோதவிட்டது. முஸ்லீம்களும் சூத்திரர்களும் மோதிக்கொண்டனர். ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர். அத்வானியின் ரதயாத்திரையை இடதுசாரிகள், திமுக, ஜனதாதளம், காங்கிரஸ், பிற பிராந்தியக் கட்சிகள் எதிர்த்தன.

அத்வானியின் ஊர்வலம் பீகாருக்குள் நுழைந்ததும் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், சட்ட ஒழுங்கு, கலவரம், சமூகங்களிடையே வெறுப்பை விதைத்த காரணங்களுக்காக அத்வானியைக் கைது செய்தார். அப்போது பிரதமர் விபி சிங் அவர்கள் பாஜகவின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார். தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள விபி சிங், அத்வானியை விடுவிக்கச் செய்திருக்கலாம். ஏனெனில் லல்லுவும் விபி சிங்கும் ஒரே கட்சி தான் அப்போது. தனது ஆட்சியைக் காப்பாற்ற மண்டல் கமிஷன் பரிந்துரையைத் தள்ளிப்போட்டிருக்கலாம். ஏனெனில் பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் ஆகியோர் மறைமுகமாகவும் நேரடியாகவும் அதை எதிர்த்தனர்.

பிரதமர் விபி சிங் இரண்டையும் செய்யவில்லை. பாஜக தனது ஆதரவைத் திரும்பப் பெறப்போவதாக மிரட்டியது.

அடிபணியவில்லை பிரதமர். ஆட்சி கவிழ்ந்தது. மகிழ்ச்சியோடு, பெருமையோடு வெளியேறினார் விபி சிங்.

அரசியல் தரகர் சோ, திமுக தலைவர் கலைஞரை அடுத்து அதிகம் வெறுத்த நபர் விபி சிங். துக்ளக் ஆசிரியர் கடைசி வரை அவரைத் தூற்றியபடி இருந்தார். கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர் விபி சிங். அம்பேத்கரையும் பெரியாரையும் கொண்டாடியவர் விபி சிங். அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கினார்.

இன்று மண்டல் கமிஷன் பரிந்துரை நடைமுறையில் இருக்கிறது. மத்திய அரசு நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு / சூத்திரர்களுக்கு / ஆண்ட பரம்பரைக்கு / ஆதிக்க சாதியினருக்கு இப்போது 27% இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது. இதற்கு முன்பு ஏன் இன்னும் கூட ஒரு மத்திய அரசு நிறுவனத்திற்குப் போய்ப் பாருங்கள். உயர்சாதி இந்துக்கள் பணியில் பெருத்த எண்ணிக்கையில் இருப்பார்கள். அல்லது படித்துக்கொண்டிருப்பர்கள்.

தலித்துகளும், ஆதிவாசிகளும் இருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தொடக்கத்திலிருந்தே முறையே 18%, 12% இடஒதுக்கீடு அந்நிறுவனங்களில் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்களைப் பார்ப்பது அரிது. ஏனெனில் அவர்கள் பொதுப் பிரிவில் பார்ப்பனர்களோடு, பிற உயர்சாதி இந்துக்களோடு போட்டி போடவேண்டும். அதில் அவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்? இப்போது அவர்களுக்கும் 27% இடஒதுக்கீடு இருக்கிறது. அவர்களும் படிக்கலாம், வேலைக்குப் போகலாம்.

வட்டிக்கு விடுதல், கஞ்சா விற்றல், சாராயம் காய்ச்சுதல், சங்கிலிப் பறிப்பு, ஆடு / மோட்டார் திருடுதல், கலவரம் செய்தல், தலையை அறுத்தல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். அதைத் தான் பாஜக எதிர்த்தது. அப்படி அவர்கள் விடுபட்டுவிடக் கூடாது என்று தான் தவித்தது. பார்ப்பனர்களுக்கு அவர்கள் என்று அடியாட்களாக இருப்பதையே விரும்பியது / விரும்புகிறது.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் துணையுடன் 69% இடஒதுக்கீடு தமிழக அரசு நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கடைபிடிக்கப்படுகிறது. தலித்துகள், ஆதிவாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மதச்சிறுபான்மையினர் என எல்லோரும் பயன் அடைகின்றனர். அதனால் தான் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது. வளர்ச்சி என்பது எல்லோருக்கும் வாய்ப்பளிப்பது. எல்லோரையும் சேர்த்துக்கொள்வது. எல்லோரது குரலையும் பிரதிபலிப்பது.

குஜராத் போல வெறும் தொழிற்சாலைகள் அல்ல வளர்ச்சி. அதில் ஒரு சிலர் எல்லா வசதிகளை பெறுவார்கள். பிறர் எல்லோரும் விடுபட்டுப் போவார்கள். அது தான் அங்கு நடக்கிறது. வடமாநிலங்களில் பலவற்றில் அது தான் நிலை.

சமூக நீதிக்காக தனது ஆட்சியைத் துறந்தவர் விபி சிங். மதச்சார்பின்மைக்காக, மதநல்லிணக்கத்திற்காக தனது பதவியை இழந்தவர் அவர். இரண்டாம் அம்பேத்கர் என்று அவரை பெருமையுடன் அழைக்கலாம்.

பின்குறிப்பு: தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் துணையுடன் அரசியல், பொருளாதார, சமூக விடுதலை பெற்ற சூத்திரர்கள் இப்போது ஆண்ட பரம்பரை என்றும் ஆதிக்கசாதியினர் என்றும் பொய் வேடமிட்டுக்கொண்டிருக்கின்றனர். தலித்துகளை ஒடுக்குவதும் பார்ப்பனர்களுடன் சமரசம் செய்வதுமாய் தம்மையே அழித்துக்கொண்டிருக்கின்றனர். தாம் வந்த பாதையை மறந்து காவிக் கூட்டத்திற்கு கொடி பிடிக்கின்றனர்.

சமூகநீதிப் பாதையே எல்லோருக்கும் விடுதலை! பார்ப்பனர்களுக்கும்!

Friday, June 22, 2018

செல்லாக்காசு மோசடியில் நடந்தவை!

பணமதிப்பிழப்பு அறிவிப்பும் மக்களுக்கு மோடி வைத்த ஆப்பும்! 
1) திடீரென்று இதை அறிவித்தத்தால் உபி மாநிலத்தேர்தல் செலவுக்குக் கட்டுக்கட்டாகப் (பழைய) ரூபாய்களை வைத்திருந்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. அது தமது கட்சிக்கு முதலிலேயே தெரிந்ததால் சிக்கல் வராமல் நோட்டை மாற்றி, தயாராக இருந்து காத்துக்கொண்டது.
2) தமது நண்பர்களான, ஆதரவாளர்களான வியாபாரிகள், முதலாளிகள் மற்றும் பாஜக பிரமுகர்கள் கையிருப்பில் வைத்திருந்த கருப்புப்பணத்தை வெள்ளை ஆக்க உதவியது, அதன் மூலம் பாஜகவுக்கு பெர்சண்டேஜ் கமிஷன் அடித்தது, 900 கோடி நன்கொடை சேர்த்தது, உலகிலேயே பெரிய அரசியல் கட்சி அலுவலகத்தை டெல்லியில் கட்டியது இப்படி பலான, பலான ஜில்மாக்கள் செய்தது.
3) இதன் மூலம் கருப்புப்பணத்தை, தீவிரவாதத்தை, கள்ளநோட்டை ஒழிக்கலாம் என்று படித்த முட்டாள்களை நம்ப வைத்து அல்வா கொடுத்தது.
4) ஏழை பாழைகளை வங்கிகளுக்கு அலையவிட்டு சாக அடித்தது.
5) இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபியை 2% குறைத்து 2 லட்சம் கோடி நாட்டுக்கு நட்டம் ஏற்படுத்தியது.
6) ஆறுமாத காலத்திற்கு நோட்டுப் புழக்கம் இல்லாமல் எந்தத் தொழிலும், வியாபாரமும் செய்யவிடாமல் எல்லோரது வயிற்றிலும் அடித்தது.
7) டிஜிடல் பொருளாதாரம் என்கிற பெயரில் நமது பணத்தை வங்கிகளும், பேடிஎம் போன்ற நிறுவனங்களும் கொள்ளை அடிக்க உதவியது.
8) எதையாவது செய்றார் மோடி என்று எல்லோரையும் ஸ்டண்ட் அடித்து, நம்ப வைத்துக் கழுத்தை அறுத்தது.
9) சும்மா கிடந்த வங்கி நிர்வாகிகளை ரவுடிகளாக்கி, எல்லோரையும் மிரட்ட வைத்தது, ஊழியர்களுக்கு வேலைப்பளுவை அதிகமாக்கி மக்களிடம் இருந்து அவர்களைப் பிரித்தது, அரசுக்கு விசுவாசியாக்கி, தொழிற்சங்க அரசியலைக் காய் அடித்தது, அவர்களையும் கருப்பை வெள்ளையாக்கும் ஆட்டத்தில் சேர்த்து எல்லோரையும் ஊழல் செய்ய ஊக்குவித்தது.
10) அடுத்து எதைத் தடை செய்வாரோ என்று எல்லோரையும் ஒரு மன உளச்சலுக்கு ஆளாக்கியது, அதைக் கொண்டா, இதைக் கொண்டா என்று மக்களை மிரட்டி உருட்டும் கலாச்சாரத்தை இயல்பாக்கியது.
என் அறிவுக்குப் பட்டது இப்போதைக்கு இவ்வளவு தான்!

ரஜினி ஒரு பாசிஸ்டா?

ரஜினி - ஆண் ஜெயா! 


ஆரம்ப காலத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரங்கள் (ஏழை, உதிரி, சாமி கும்பிடாதவர், உழைப்பாளி, ஆங்கிலம் பேசத்தெரியாதவர், கருப்பு நிறம்) காரணமாக தமிழர்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று நட்சத்திர அந்தஸ்து பெற்றார். 
அப்போதே சஞ்சய் காந்தியை பிடிக்கும் பால் தாக்கரேவைப் பிடிக்கும் என்று பிதற்றிக்கொண்டிருப்பார்.
ஜெயலலிதாவை எதிர்த்தது கூட ஆண்திமிர் தான் காரணமே ஒழிய, ஊழல் எதிர்ப்பல்ல. ஜெயாவிற்கு எதிராக மன்னன் என்கிற படத்தையே எடுத்து தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். 
வெளிப்படையாக திருநீறு பூஷி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இந்து மதத்தை யதார்த்தமாக்கியவர் ரஜினி. 
90களுக்குப் பிறகு ரஜினியின் உணமையான முகம் வெளிப்பட்டது. ஆணாதிக்கம், நிலபிரபுத்துவம், ஆண்டான் அடிமை, முதலாளித்துவம், பார்ப்பன அடிமை மனநிலை ஆகியவற்றை வெளிப்படையாக தனது படங்களில் புகுத்த ஆரம்பித்தார். 
இந்துக்கடவுளர்களின் பெயர்களில் படங்கள் எடுக்க ஆரம்பித்தார். ஆன்மிகம், பக்தி என்று தனது அப்பாவி ரசிகர்களை பகுத்தறிவற்ற பாதைக்கு அழைத்துப்போனார். 
சோ ராமசாமி எனும் இந்துத்தவ பரப்புரையாளருடன் நட்பு பாராட்டினார். அவரை தனது குரு என்று பெருமைப்பட்டுக்கொண்டார். 
தமிழர்களுக்கு எந்தவிதத்திலும் நேர்மறையான பங்காற்றாத, அதே நேரத்தில் தமிழ் ரசிகர்களின் பெரும் மதிப்புப் பெற்ற ஒரு தந்திரக்காரர். தேர்ந்த வியாபாரி. 
அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசுவார்; எளிமையாக இருப்பதாக ஏமாற்றுவார், மேக் அப் போடாமல் வெளிவருவதை ஒரு தனிநபர் பிரச்சார உத்தியாகக் கையாண்டார். 
ஜெயாவும், கலைஞரும் செயல்பாட்டில் இருக்கும் வரை வாலை ஆட்டாதவர். இப்போது ஆள் இல்லாத வீட்டில் துள்ளி விளையாடுகிறார். 
பாஜகவின் அரசியலான இந்துத்துவ அரசியலுக்கு மிகவும் பொருத்தமானவர். ஜெயா விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப முயல்கிறார். 
தமிழர்களின் நெருக்கடி காலம் தொடர்கிறது. தமிழர்களின் எதிரி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 
ரஜினி ஒரு பெண் ஜெயா! நிராகரிக்கப்படவேண்டியவர். தோற்கடிக்கப்பட வேண்டியவர். 
தான் ஒரு பாசிஸ்ட் என்பதை தூத்துக்குடியிலும் சென்னையிலும் பேசியதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். 
தமிழர்களாகிய நாம் பல போராட்டங்களுக்கு நடுவில் அங்குலம் அங்குலமாக முன்னேற முயற்சிக்கிறோம். 
ரஜினி நமக்கு ஒரு தடை தான். உடைத்தெறியப்படவேண்டிய தடை.

ஸ்டெரிலைட் ஆதரவு அறிவியல் ஆவணப்படம்!

அறிவியல் அப்பாவிகள்!
ஸ்டெரிலைட் போராட்டம் பற்றிய அறிவியல் ஆவணப்படம் (!) ஒன்று சமூகவலைத்தளங்களில் உலா வருகிறது. ஒருவர் பல தரவுகளைத் தந்தபடி உரைவீசிக்கொண்டு இருக்கிறார். இறுதியில் ஸ்டெரிலைட்டை விட வைகுண்டராஜன் நடத்தும் வி வி மினரெல்ஸ் தான் அதிகம் சூழல் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது, அதைப் பற்றிப் போராடாமல் ஸ்டெரிலைட்டை எதிர்க்கிறீர்களே என்றும் ஏசி அறையில் அமர்ந்தபடி நித்யானந்த் ஜெயராமன் மற்றும் பாத்திமா பாபு போன்றவர்கள் மக்களைத் தூண்டி விடுகின்றனர் என்றும் உளறிக்கொட்டுகிறது இந்த வீடியோ. பாதிக்கப்பட்ட மக்களைப் பேசவிடாமல், தொகுத்தளிப்பவரே பேசி தீர்ப்பும் வழங்குகிறார்.
1) விவி மினரல்ஸ்க்கு எதிராக மக்கள் போராடிக்கொண்டு தான் இருக்கின்றனர். 1997-98ல் இடிந்தகரை அருகே கூட்டப்புளி மற்றும் பெருமணல் ஆகிய கிராமங்களில் விவி மினரல்ஸ் நடத்தும் கார்னட் மணல் கொள்ளைக்கு எதிராக பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் உட்பட பொதுமக்கள் போராடியதும், அதை அப்போதைய காவல்துறை (ஜான்கிட் தலைமையில்) அமைதியாகப் போராடியவர்களை அடித்து நொறுக்கியதும் எனக்குத்தெரியும்.
விவி மினரல்ஸின் அராஜகம் பற்றி "சாமி" எனும் வெகுசன சினிமாவிலேயே அந்த வில்லன் கதாபாத்திரத்தின் மூலமாக அப்போதே பேசப்பட்டுவிட்டது. இந்த ஆவணப்படக்குழுவினர் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஊருக்கே தெரியும் அவர்களின் அட்டகாசம். அந்தக் கம்பெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தபடி தான் இருக்கின்றன.
2) ஸ்டெரிலைட்டை விட விவி என்ன இன்னும் பல கம்பெனிகள் பாதிப்புகள் ஏற்படுத்தலாம். அதற்காக ஸ்டெரிலைட் போராட்டம் தவறா? முக்கியத்தவம் இல்லாததா? ஸ்டெரிலைட்டைக் காப்பாற்ற ஏன் முயல்கிறார் இந்த இயக்குனர்?
3) ஸ்டெரிலைட் போராட்டம் அந்தக் கம்பெனி தொடங்கிய நாள் முதல் நடக்கிறது. இப்பொழுது தான் தமிழ்நாடு விழித்துக்கொண்டிருக்கிறது. கூடன்குளம் போராடத்திற்குப் பிறகு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. சாதாரண மக்களும், அறவழியில் போராட முடியும் என்று நம்பிக்கை உருவாகியிருக்கிறது. சூழலைக் கெடுத்து உருவாகும் வளர்ச்சி தேவையில்லை என்கிற அறிவு தமிழருக்கு வந்திருக்கிறது. அது தவறா? முன்பு ஏன் வரவில்லை கேட்க முடியுமா?
ஒரு போராட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் முக்கியத்துவம் பெறுவதற்கு பல வரலாற்றுக்காரணிகள் இருக்கின்றன. கூடன்குளம் போராட்டம் கூட புகுஷிமா பேரிடருக்குப் பிறகு தான் பேரெழுச்சி பெற்றது. அதற்காக முன்பு இங்கு மக்கள் போராடவில்லை என்று சொல்ல முடியுமா? முன்பு ஏன் இந்த எழுச்சி வரவில்லை என்று கேட்க முடியுமா? என்ன அபத்தம்?
ஜல்லிக்கட்டுப்போராட்டம் தந்த வெற்றி தமக்கு உந்துதலாக இருந்ததாக போராடும் மக்கள் பலர் சொல்லியிருக்கின்றனர்.
4) வெளியாட்கள் மக்களைத் தவறாகத் தூண்டி விடுகின்றனர் என்று பாஜக, ஸ்டெரிலைட் மற்றும் மாநில / மத்திய அரசாங்கங்களின் மொழியில் ஒரு ஆவணப்படம் பேசலாமா? நடுநிலை எடுக்கிறாரோ இயக்குனர்? நடுநிலை என்று யாருமே இவ்வுலகில் இல்லை என்பது அவருக்குத் தெரியாதா? இது பாதிக்கப்பட்ட மக்களை, போராடுவோரை சிறுமைப் படுத்துவது போல் இல்லையா? இந்தப் படத்தின் உள்நோக்கம் என்ன?
5) ஸ்டெரிலைட் மட்டுமல்ல, இன்னொரு நிறுவனமும் தவறு செய்கிறது, அதை எதிர்த்தும் போராடுங்கள், நாங்கள் ஆதாரம் தருகிறோம் என்று சொல்லியிருந்தால் அது நியாயமான வாதம். அதை விடுத்து ஸ்டெரிலைட்டை ஏன் எதிர்க்கிறீர்கள், மக்களை ஏன் தூண்டிவிடுகின்றனர் என்று கேட்பது நேர்மையற்ற செயலாகவே எனக்குப் படுகிறது.

மணவாளக்குறிச்சி பற்றிய எனது ஆவணப்படம்!

கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 1 : மணவாளக்குறிச்சி
இயக்கம்: அமுதன் ஆர்.பி. ; 54 நிமிடங்கள்; 2010; ஆவணப்படம்
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியில் இந்திய அரசின் அணுசக்தித்துறை நடத்தும் இந்திய அருமணல் ஆலை கதிர்வீச்சு ஆற்றல் கொண்ட மணலை அள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய ஆவணப்படம்.
குறிப்பாக மோனசைட் (கதிர்வீச்சுத் தன்மை கொண்ட தோரியம் உள்ளடக்கியது) எனும் கனிமத்தை கடற்கரை மணலில் இருந்து பிரித்து எடுக்கும் வேலை இந்த ஆலையில் நடைபெறுவதால் இப்பகுதியில் இயற்கைக்கும் மீறிய கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக முனைவர் லால் மோகன் நடத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
இப்பகுதியில் உள்ள கடலோர கிராமங்களில் குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், நடுத்தர மற்றும் வயதான ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் புற்றுநோய், உடல் ஊனம், மூளை வளர்ச்சி அற்ற குழந்தைகள் பிறப்பு, கருச்சிதைவு, உடலின் முக்கிய உறுப்புகள் சேதமடைதல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதைப் விரிவாகப் பதிவு செய்கிறது இந்தப்படம்.
அரசு நிறுவனம் மணல் அள்ளுவதை எதிர்த்த மீனவர்களைக் கொண்டே மணல் அள்ளி அவர்களையும் இதற்குப் பங்குதாரர்களாக்கி அழகு பார்த்தது அதிகார வர்க்கம்.
வளர்ச்சி வேண்டும், இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என்று துடிப்போருக்கு இந்தப்படம் சமர்ப்பணம்.
அப்சர்வேஷன் மற்றும் சினிமா வெரிடே ஆகிய பாணியில் இயக்குநரின் இடையீடு இல்லாமல், வர்ணனை இல்லாமல், மக்களின் அனுபவங்களை, நின்று நிதானமாகப் பதிவு செய்திருக்கும் படம்.

தமிழகத்தில் சூத்திரன் வீழ்ந்தான்!

படிப்பு இல்லாதவன் செய்யும் வேலை!

தமிழ்நாட்டில் சூத்திரர்கள், பார்ப்பனர்களுடன் சமரசம் செய்து கொண்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. ஜெயா காலில் எல்லா சூத்திரர்களும் விழுந்து எழுந்து தமது விசுவாசத்தைக் காட்டியதை மறக்கலாமா? தமது குலதெய்வத்தை விட பெருஞ்சாமிகளுடன் தான் தினசரி டச்சில் இருக்கின்றனர். போதாதற்கு இப்போது சீரடி சாய்பாபா போன்ற டீசண்ட் சாமிகள் வேறு. குறையேதுமில்லை. 

தமது வீரத்தை / பெருமையை / சுயமரியாதையை தலித்துகளின் மீது வன்கொடுமையாக வெளிப்படுத்துவதே போதும் இந்த "ஆதிக்க சாதியினருக்கு". நீட் மட்டுமல்ல, எந்தப்படிப்பும் இவர்களுக்குத் தேவையில்லை. அதெல்லாம் எதுவும் இல்லாதவன் செய்கிற வேலை. இவர்களுக்குத் தான் கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம், கஞ்சா, அடிதடி, போலீஸ், வக்கீல், சினிமா என பல துறைகள் இருக்கின்றனவே! நிலம் இருக்கு, விவசாயம் பண்ணுவோம், கம்பெனி ஆரம்பிப்போம், மொதலாளி வம்சம் அல்லவா! நீட்டைப் பற்றி எதுக்கு இப்போது வெட்டிப் பேச்சு! 

ஒருவகையில் நீட்டினால் தலித்துகளுக்கும் சீட்டு கிடைக்கவில்லை என்பது சூத்திரர்களுக்கு ஒரு ஆறுதல் தானே! (தாம் படிக்கவில்லை என்பது முக்கியமில்லை, தலித்துகளும் படிக்ககூடாது). பஜ்ரங் தள், விநாயக சதுர்த்தி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக என பல ப்ளாட்பாரம்கள் இருக்கின்றன, தேசிய உணர்வை வெளிப்படுத்த! இது போதாதா? மோடி வாழ்க! பாரத் மாதா கீ ஜெய்!

போராடும் தமிழ்நாடு!

ஏன் போராடுகிறோம்?
இப்படியே போராடிக்கொண்டிருந்தால் தமிழ்நாடு மேற்குவங்கம் மாதிரி சீரழிந்துவிடும் என்று ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையாளர் சொன்னார்.
1) மேற்குவங்காளம் சீரழிந்ததா, இல்லையா என்பதைப் பற்றி சிபிஎம் மற்றும் பிற இடதுசாரித் தோழர்கள் பதில் சொல்லட்டும்.
2) தமிழ்நாடு வளர்ந்த மாநிலங்களில் ஒன்று (இதை இடதுசாரிகள், தமிழ்தேசவாதிகள், பாமக மற்றும் பாஜகவினர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்). தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, கல்வி, பொது சுகாதாரம், மனிதவளம், பொதுவிநியோகம் போன்ற துறைகளில் முதல் 4-5 இடங்களில் இருந்து வருகிற மாநிலம்.
இந்துத்துவ எதிர்ப்பு, சமூகநீதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றில் முன்னணியில் இருக்கும் மாநிலம்.
பெண் விடுதலையை நோக்கிய போராட்டத்தில் முன்னேறியபடி இருக்கிறோம். சிரிப்பு நடிகர் தலைமறைவு, ஆளுநர் மன்னிப்பு கேட்டது போன்றவை சிறந்த அறிகுறிகள். பெண் கல்வியில் முன்னேறியிருக்கிறோம்.
3) நாம் பின்தங்கி இருக்கும் இரண்டு துறைகள் : சாதிவெறி / தலித் வெறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு.
4) சாதி வெறி / தலித் வெறுப்பு எப்போது தீரும் என்று தெரியவில்லை. புதிய சிந்தனைப்போக்குகள் வந்தால் ஒழிய இதில் முன்னேற்றத்துக்கு வழி இல்லை. அதை நோக்கி நாம் கண்டிப்பாக உழைக்க வேண்டும்.
5) சுற்றுச்சூழல் பாதிப்பு என்பதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு வந்திருக்கிறது. இது நாம் அடைந்திருக்கும் பொருளாதார வளர்ச்சிக்குக் கொடுத்திருக்கும் விலை என்கிற பார்வை உருவாகியிருக்கிறது. அதனால் மக்கள் போராடுகின்றனர்.
இப்படி நான் பதில் சொன்னேன். பிறகு பேசலாம் என்று போய்விட்டார் அந்தப் பத்திரிக்கையாளர்.
பி.கு. அந்தப் பத்திரிக்கையாளர் ஒரு தமிழ் பார்ப்பனர். உடன் இருந்தவர் ஒரு மலையாளி. தமிழ்நாட்டில் இருந்து வரும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இவர்கள் தான் வேலை செய்கின்றனர்.

அம்பேத்கர் எனக்கு! பெரியார் உனக்கு!

தலித் பகுஜன் ஒற்றுமை சாத்தியமா?
நாங்கள் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தொடங்கிய போது தலித் தோழர்கள் பலர் கடுமையாக அதை எதிர்த்தனர். நீங்கள் எப்படி அம்பேத்கரையும் பெரியாரையும் சேர்க்கலாம் என்று வெளிப்படையாகக் கேட்டனர்.
சில தமிழ்தேசவாதிகள் இன்னுமா பெரியார், அம்பேத்கர்னு பேசிட்டிருக்கீங்க? காலம் மாறிப்போச்சு தோழர் என்று எங்களைப் பரிதாபமாகப் பார்த்தனர்.
நாங்கள் நடத்திய பல நிகழ்ச்சிகளில் பேசவந்த தலித் சிந்தனையாளர்கள் பலர் பெரியார் பெயரை உச்சரிக்கவே இல்லை.
பெரியாரை தலித் சிந்தனையாளர்கள், போராளிகள் புறக்கணிப்பது யதேச்சையானதல்ல.
பெரியாரைச் சேர்த்தால் இடைச்சாதிக்காரன் வருவான். நமக்கு யோசனை சொல்வான். ஏற்கனவே அவனிடம் பட்டது போதாதா என்கிற மனநிலை.
நீ பெரியாரை மட்டும் பேசு. அம்பேத்கரைப் பேசாதே என்கின்றனர்.
நானும் அம்பேத்கரை மட்டும் பேசுகிறேன். பெரியார் எங்களுக்கு வேண்டாம் என்கின்றனர்.
உங்க திருவிழாவும் வேண்டாம், உங்க பொங்கச்சோறும் வேண்டாம் என்கிற நிலை.
அதே போல பல பெரியார்வாதிகள் இன்னும் "அவுங்க அப்படித்தான்" என்கின்றனர். "நாங்க அவுங்களுக்குப் பண்ணாததா?" என்றும் மார் தட்டுகின்றனர்.
இதுக்கு என்ன தான் தீர்வு?

8 வழிச்சாலை : குஜராத் மாடலில் நில அபகரிப்பு மோசடி!

வளர்ச்சியின் காலம் முடிந்துவிட்டது!

நில அபகரிப்பெல்லாம் குஜராத்தில் மிகவும் சாதாரணம். எந்தத் தடையும் இல்லை. யாரும் போராட முடியாது. போராடவும் மாட்டார்கள். ஏனெனில் மோடி அய்யா மேல் இருக்கும் பாசம். அது தான் குஜராத் மாடல். எல்லாவற்றையும் அரசுக்குக் கொடுத்துவிட்டு பிச்சை எடுப்பது ஒரு தியாகம் தானே!
சர்தார் சரோவர் அணை தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய நில / நீர் மோசடி. அதற்கு நிலத்தை, நீரை இழந்தவர்கள் இன்னும் எழுந்திருக்க வழியில்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர்.
பெரும் விவசாயிகளுக்கும், தனியார் கம்பெனிகளுக்கும் நீரை வழங்க காங்கிரஸ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சதி தான் அது. வறண்ட கட்ச், செளராஷ்றா பகுதிகளுக்கு தண்ணீர் கொடுக்க என்று சொல்லி உருவாக்கப்பட்ட திட்டம் இப்பொது யாருக்கோ பயனளித்துக்கொண்டிருக்கிறது. அதனால் வயிற்றில் அடிக்கப்பட்ட லட்சக்கணக்கான சிறு குறு விவசாயிகளுக்கு இன்னும் முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை.
அதில் நடந்த முறைகேட்டைக் கண்டித்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராகத் தான் பின்னாட்களில் பதவிக்கு வந்த முதல்வர் மோடி உண்ணாவிரதம் நாடகம் நடத்தி மக்களை உசுப்பி விட்டார்.
சுற்றுச்சூழல், பாதிக்கப்பட்டோர் இழப்பீடு & மறுவாழ்வு விதிமுறைகள் சரியாகக் கடைபிடிக்கப்படவில்லை என்று பலர் கதறிய போது அவர்களை குஜராத்தின் எதிரிகள் / துரோகிகள் என்று மோடி தூற்றினார்.
இப்போது அளவுக்கு அதிகமான தண்ணீரில் குஜராத் முதலாளிகள் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றனர். அதனால் நிலம் இழந்த குஜ்ராத், மத்தியபிரதேசம், மகராஷ்டர விவசாயிகள் இன்னும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
அகமதாபத் நகரின் சபர்மதி நதியை சர்தார் சரோவரிலிருந்து கொண்டு வரப்பட்ட நர்மதா நீரால் நிரப்பி, அதை ஒரு ஏரியாக்கிவிட்டார் மோடி. அங்கே எல்லோரும் உல்லாசப் படகு சவாரி போய்க் கொண்டிருக்கின்றனர். அது ஒரு பெரிய தீம் பார்க் ஆகிவிட்டது. தினசரி கொண்டாட்டம் தான். அதற்காக நிலம் கொடுத்தவன், நீர் கொடுத்தவன் கதி அதோ கதி தான். இன்று வரை விடிவு இல்லை அவர்களுக்கு.
நானோ கார் கம்பெனி மேற்கு வங்காளத்தில் எதிர்ப்பைச் சந்தித்த போது "எங்கள் மாநிலத்திற்கு வாருங்கள்" என்று மோடி அழைத்து இலவசமாக நிலம் கொடுத்து, அரசு பணத்தை முதலீடும் போட்டு ஹீரோயிசம் காட்டினார். இப்போது அந்தக் கம்பெனியே இல்லை. ஊத்தி மூடிவிட்டனர்.
முதலாளிகளுக்கு எல்லாவற்றையும் அள்ளிக் கொடுப்பது குஜராத் / மோடி மாடல். மக்களை, தொழிலார்களை தமது உரிமையை விட்டுக்கொடுக்க நிர்பந்திப்பது, மூளைச்சலவை செய்வது மோடி பாணி. அதைத்தான் 15 ஆண்டுகள் செய்தார். நெருக்கடி வரும்போதெல்லாம் முஸ்லீம்களுக்கு எதிராகக் கலவரம், இந்துத்வா என்று மக்களை மயக்கினார்.
இத்தகைய மோடி பிரதமரானால் நாடெங்கும் இது நடைமுறைக்கு வராதா என்ன?
நிலத்துக்கு நிலம் இழப்பீடு என்கிற திட்டம் இருந்தது. இப்போது பணம் கொடுக்கிறார்கள். பணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? கண்மூடித் திறப்பதற்குள் அது கரைந்துவிடும். பத்தை நூறாக்குவது ஒரு கலை. அது எல்லோருக்கும் வராது.
தில்லிக்கு அருகில் இருப்பதால் நிலத்தின் விலை மதிப்பேறிய குர்காவுன் பகுதியில் நிலத்தை பல கோடிக்கு விற்று பென்ஸ் கார் வாங்கியவர்கள் எல்லாம் இப்போது செலவுக்குக் காசில்லாமல் அதை விற்றுத் தின்கிறார்கள். ரியல் எஸ்டேட்காரர்கள் தான் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.
ஒரிசா, சத்திஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வளர்ச்சி என்கிற பெயரில் ஆதிவாசிகளில் நிலங்களை, காடுகளை, நதிகளை, மலைகளை முதலாளிகள் அரசுகளின் துணை கொண்டு கொள்ளை அடித்து வருகின்றனர். அவர்களை எல்லாம் மாவோயிஸ்ட் என்று சுட்டுக் கொல்கிறது அரசு.
வளர்ச்சியின் காலம் முடிவுக்கு வந்து விட்டது. கலாம் சொன்ன கனவு காணுங்கள் எனும் கோஷம் காலாவதி ஆகிவிட்டது. இனி எல்லாவற்றையும் நிறுத்துவதே உத்தமம்.
எல்லாவற்றையும் மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
வளர்ச்சி அத்தகைய வெள்ளந்தியான, அப்பாவியான, நடுநிலையான கோட்பாடு அல்ல.

பழைய மகாபலிபுரம் ரோடு எனும் மோசடி!

சென்னையின் வளர்ச்சி எவ்வளவு கொடுமையானது, இயற்கைக்கு எதிரானது, ஏழைகளுக்கு எதிரானது என்பதற்கு ஒரு உதாரணம், பழைய மகாபலிபுரம் ரோடு, அங்கிருந்து அகற்றப்பட்ட மரங்கள், அதற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட கண்ணாடி மூடிய ஏசி பொருத்தப்பட்ட கட்டடங்கள்.
சாலை விஸ்தரிப்பு, கட்டடங்கள் கட்டுதல், விரிவாக்கம், புதுப்பித்தல் என்ற பெயரில் ரோடு முழுக்க ஏற்கனவே இருந்த மரங்கள் வெட்டித்தள்ளப்பட்டுவிட்டன. சாலையே மொட்டையாகக் காட்சியளிக்கிறது.
மரத்தைப் பார்த்தால் அந்தத் தெருவே ஒன்றிணைந்து வெட்டித்தள்ளும் அளவுக்கு அவர்களுக்கு இயற்கையின் மீது வெறுப்பு. காசு இருக்கும் ஆணவம். பணம் இருந்தால் எதையும் வாங்கிவிட முடியும் என்கிற திமிர். ஏசியைக் கொண்டு எதையும் எதிர்கொள்ள முடியும் என்கிற மடமை.
அங்கு பகலில் மனிதர்கள் போகவே முடியாத அளவுக்கு கடும் வெயில். ஏசி காரில் பயணம் செய்வோர் தவிர எல்லோருக்கும் சிரமம் தான். கடும் வெயிலில் அவஸ்தைப் படுகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் புலம்புகிறார்கள். எங்குமே நிறுத்த முடியவில்லை என்று. ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். சவாரி இல்லையென்றால் எங்கும் நின்று காத்திருக்கமுடியாது. அவ்வளவு கொடுமையான வெயில்.
இருசக்கர வாகன ஓட்டிகள் நிலையும் அது தான். பேருந்தில் போனால் அடுப்பில் இருப்பது போன்ற வேதனை.
நிழல் வேண்டுமெனில் இறங்கி ஏதாவது ஏசி வைத்த கடைக்குள் போய் எதையாவது தின்று, வாங்கி இளைப்பாறலாம். அது தான் அவர்கள் சதித் திட்டம்.
வெயிலில் வெந்து போ, இல்லையென்றால் உள்ளே வந்து காசைக் கொட்டு, கரியாக்கு, நான் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற புரிதல்.
இது தான் பழைய மகாபலிபுரம் ரோட்டின் நிலை. இது தான் வளர்ச்சி.
அப்பட்டமான முட்டாள்த்தனம். மோசடி.