Friday, September 4, 2015

மதுரையில் நான் சாப்பிட்ட லட்டும் ஜிலேபியும்!

மதுரையில் இருக்கும் தமிழ்நாடு இறையியல் கல்லூரிக்கும் மதுரையின் களப்பணிக்கும் நிறைய தொடர்புண்டு.
குறிப்பாக அக்கல்லூரியின் ஒரு துறையான சமூக ஆய்வு மையம், அங்கு நடக்கும் விவாதங்கள், உரையாடல்கள், அங்குள்ள நூலகம் என் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியிருக்கின்றன.
அத்துறையின் முக்கிய உறுப்பினர்களான விடுதலை இறையியலில் நம்பிக்கை கொண்ட மார்க்சியரான பாஸ் வில்லாங்கா, கேப்ரியல் டீட்ரிச், ஜான் ஜெயகரன், டேவிட் ராஜேந்திரன், விக்டஸ், ஆட்லின் ஆகியோரும் அந்த நூலகத்தில் பணிபுரிந்த ஜான் மற்றும் மணிகண்டன் ஆகியோரும் என்னை களப்பணிக்குத் தயார் செய்தவர்கள்.
1996ம் ஆண்டு புதுதில்லியில் ஆவணப்படங்களுக்கான பயிற்சி முடிந்து மதுரைக்குத் திரும்ப முடிவெடுத்த போது இயக்குநர் கே.பி.சசி தான் என்னை கேப்ரியல் அவர்களைச் சந்திக்கச் சொன்னார்.
அப்படி ஏற்பட்ட அறிமுகம் என் ஊடகப்பணிக்கு அடிப்படை வித்திட்டது.
சமூக ஆய்வு மையத்தின் நூலகம், ஒரு களப்பணியாளனுக்குத் தேவையான முறையில் அங்கு வகைப்படுத்தப்பட்ட புத்தகங்கள்/பத்திரிக்கைகள்/ ஆய்விதழகள், அந்தச் சூழல், அங்கு நடக்கும் கூட்டங்கள், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு மூலமாக ஏற்பட்ட மேதா பாட்கரின் அறிமுகம், அதன் மூலம் நர்மதா பள்ளத்தாக்குக்குப் போனது, சர்தார் சரோவர் அணைக்கு எதிரான போராட்டத்தின் ஜல் சமர்ப்பண் இயக்கத்தில் கலந்து கொண்டது, ரத்னகிரி மாவட்டத்தில் நடந்த என்ரான் கம்பெனிக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டது என எனக்கு அற்புதமான அனுபவங்கள் கிடைத்தன.
திருநெல்வேலி/தூத்துக்குடி பகுதியில் பெருமணல்/கூட்டப்புளி கிராமங்களில் நடந்த மணற்கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், மதுரையைச் சுற்றியுள்ள பகுதியில் வேலை செய்த பெண்ணுரிமை இயக்கம், கட்டடத்தொழிலாளர் சங்கம், என எனக்கு சமூக அரசியல் பாடங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன.
அதே காலத்தில் இறையியல் கல்லூரியின் இன்னொரு முகமாக தொடங்கப்பட் தலித் கலைவிழா, அங்கு நிகழ்ந்த சந்திப்புகள், முழு இரவு நிகழ்த்துகலைகள், உரைவீச்சுக்கள், புத்தக வியாபாரம், மாட்டுக்கறி பிரியாணி என இன்னொரு புறம் எனக்கு சாதி மறுப்பு பாடங்களும் நிகழ்ந்தன.
தலித் ஆதார மையத்தின் முக்கிய களப்பணியாளர்களான பரட்டை, மோகன் லார்பீர், அலெக்ஸ் ஆகியோரின் நட்பு அவர்களின் கறாரான விமர்சனங்கள்/கேள்விகள் எனது இடைச்சாதி போதாமைகளை புரியவைத்தன.
அந்தக் காலத்தில் தான் நான் பீ, மயானக் குறிப்புகள், செருப்பு ஆகிய ஆவணப்படங்களை எடுத்தேன்.
ஸ்டாலின் கே. எடுத்த "லெஸ்ஸர் ஹ்யூமன்ஸ்" எனும் ஆவணப்படத்தின் தமிழ் பிரதியை பரட்டை அவர்களின் தலைமையில் தான் திரையிட்டோம். ஒரு தலித் வாழ்க்கையை தலித் அல்லாதவர் படமாக எடுத்தால் எதிர்கொள்ளவேண்டிய விமர்சனம் என்ன, அதன் நியாயங்கள் என்ன என்கிற புரிதலும் அப்போது தான் கிடைத்தது.
பல்வேறு தலித் தலைவர்களும் களப்பணியாளர்களும் வந்து போகிற வளாகமாக உருமாறியிருந்தது தமிழ்நாடு இறையியல் கல்லூரி.
கொண்டவெளை எனும் களப்பணியாளர் அங்கு அப்போது பணி புரிந்து வந்தார். அவரோடு நான் நடத்திய பல உரையாடல்கள் என்னைச் செழுமைப் படுத்தின.
அக்கல்லூரிக்கும் எனக்கும் ஏற்பட்ட உறவினால் தனியாக அறையெடுத்து கல்லூரிக்குப் பின்புறம் இருக்கும் எஸ்.எஸ்.காலனியில் தங்கினேன்.
1998ல் மதுரை நண்பர்கள் சுந்தர், பாபு, லோகு, மணிகண்டன் ஆகியோருடன் இணைந்து பொக்ரான் அணு குண்டு சோதனைக்கு எதிரான ஒரு கருத்தரங்கத்தை இறையியல் கல்லூரியில் இருக்கும் துரைராஜ் பீட்டர் அரங்கில் தான் (வாடகைக்கு அரங்கை எடுத்து ) நடத்தினோம்.
அப்போது தொடங்கப்பட்டது தான் மதுரை சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்படவிழா. எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அங்கு தான் நடைபெற்றது. பிறகு தான் அங்கிருந்து வெளியேறி பிற இடங்களில் நடத்த ஆரம்பித்தோம்.
மிகக் குறைந்த வாடகைக்கு அரங்கு கிடைக்கும். சில சமயங்களில் அக்கல்லூரியின் ஊடகத் துறையுடன் இணைந்து நடத்தினால் ஹால் இலவசமாகக் கிடைக்கும். ஆனால் நாங்கள் திரையிடும் படங்கள் பற்றி அவர்கள் தலையிட மாட்டார்கள். முழு சுதந்தரம் கிடைத்தது.
நானும் மறைந்த கேரள ஆவணப்பட இயக்குநர் சரத் சந்திரனும் தொடர்ந்து அங்கு திரையிடல்கள் நடத்தியிருக்கிறோம்.
நண்பர்கள் கோணங்கி, முருகபூபதி, முகம்மது சஃபி, லேனா குமார். மறைந்த பாண்டி, மோகன் ஆகியோர் இல்லாமல் அந்தக் காலத்தில் திரையிடல்கள் நடக்காது.
எனக்குத் தேவையான அறிவும் அனுபவமும் ஊக்கமும் அந்த வளாகத்தில் கிடைத்ததினால் தான் அங்கேயே என் வாழ்க்கை சுற்றிச் சுற்றி வந்தது.
பல நண்பர்கள் எனக்கு அங்கு பணம் கிடைக்கிறது என்றும் அங்கு நான் வேலை செய்கிறேன் என்றும் பல வருடங்கள் நினைத்தனர். என்னிடம் விளக்கம் கேட்காமலேயே என்னைப் புறக்கணித்தனர்.
2006 வரை தொடர்ந்த இறையியல் கல்லூரியினுடனான எனது உறவு படிப்படியாக மறைய ஆரம்பித்தது.
நானும் 2007ல் சென்னைக்குக் குடியேறினேன்.
கடந்த சில ஆண்டுகளாக அங்கு ஏற்பட்ட பல சிக்கல்கள், குழப்பங்கள், முரண்பாடுகள் காரணமாக இறையியல் கல்லூரிக்குள் ஒரு சோர்வு நிலவி வந்தது.
பல செயல்பாடுகள் முடங்கிக் கிடந்தன.
இப்போது மீண்டும் சமாதானமும் சமரசமும் ஏற்பட்டு விடுதலை இறையியலிலும் மார்க்சியத்திலும் நம்பிக்கை கொண்டவரான டேவிட் ராஜேந்திரன் அக்கல்லூரி முதல்வராக வந்திருப்பதைக் கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
யதார்த்தா திரைப்பட இயக்கத்தின் ராஜன் அவர்களும் நானும் நேற்று பிற்பகல் டேவிட் ராஜேந்திரன் அவர்களைச் சந்தித்து வாழ்த்து சொன்னோம்.
அங்கிருந்த பல நண்பர்கள் இனிமையாக வரவேற்றனர்.
இருண்ட காலத்தைக் கடந்து விட்ட தெளிவு அவர்களிடம் இருந்தது.
அவர்களைப் பார்த்த குஷியில் நானும் ராஜனும் வெளியில் வந்து சபரீஸில் வயிறு முட்ட சாப்பிட்டோம்.
பிறகு ஒரு லட்டையும், ஜிலேபியையும் பங்கிட்டுக் கொண்டோம்.
தமிழ்நாடு இறையியல் கல்லூரியோடு பலருக்கும் கருத்து முரண்பாடு இருக்கலாம். அது ஒரு கிறிஸ்தவ மத நிறுவனம் என்றும் மதமாற்றம் செய்வது தான் அவர்கள் நோக்கம் என்று நினைக்கலாம்.
என்னைப் போன்ற பல நாத்திகர்கள் அங்கு செயல்படுவதற்கு களம் கிடைத்தது இந்து மதத்திற்கு எதிரான வேலை என்று கூட நீங்கள் நினைக்கலாம்.
அதற்குப் பதில் நான் என்ன சொன்னாலும் உங்களுக்குப் போதாமல் கூடப் போகலாம்.
ஆனால் இன்று சென்னையில் பெரியார் திடலுடன் இணைந்து நான் திரையிடல்கள் நடத்திவருகிறேன் என்பதை மட்டும் சொல்லி என் லட்டுக் கதையை முடிக்கிறேன்.
அமுதன் ஆர்.பி.