Saturday, January 8, 2022

"நமக்கு எதற்கு இவ்வளவு மின்சாரம்?" - அமுதன் ஆர்.பி.

"நமக்கு எதற்கு இவ்வளவு மின்சாரம்?"
- அமுதன் ஆர்.பி.



2012ல் கூடன்குளம் / இடிந்தகரை அணு உலைகளுக்கு எதிரான போராட்டம் பற்றி நான் ஒரு ஆவணப்படம் எடுத்து இந்தியா முழுக்க திரையிட்டபோது திரையிடலுக்குப் பிறகான கலந்துரையாடல்களில் பங்கேற்பாளர்கள் முதலில் அணு உலையில் ஏற்படும் விபத்துகளைப் பற்றிப் பேசுவார்கள். பிறகு அணு உலை இருந்தாலே கதிர்வீச்சு இருக்கும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், கடல்வளம், ஆறுகள், காடுகள், வயல்வெளிகள் பாதிப்படும், தொழிலாளர்கள், சுற்றி வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள், அணுக்கழிவுகளை அழிக்க நம்மிடம் தொழில்நுட்பம் இல்லை, அது நிரந்தரமான ஆபத்து என்று பேசுவோம்.
பிறகு மாற்று வழிகள் பற்றிப் பேசுவார்கள். சூரிய சக்தி, காற்றாலை, கடல் அலை என்று பேசுவோம். இயற்கைக்குப் பாதகம் இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்வது பற்றி பேசுவோம்.
அதன் பிறகு நான் "நமக்கு எதற்கு இவ்வளவு மின்சாரம்?" என்று கேட்பேன். அது பலரை அதிர்ச்சிக்கு, எரிச்சலுக்கு உள்ளாக்கும். அரைவேக்காட்டுத் தனமாகப் பேசாதே என்பார்கள். அதற்காக நாம் வரலாற்றில் பின்னோக்கிப் போகமுடியுமா? இந்தத் திரையிடல் நடத்துவதற்கே மின்சாரம் வேண்டுமே என்று கேட்பார்கள். இன்னும் நிறைய கிராமங்களில் மின்சாரம் இல்லை, நமது தேவை அதிகம், இன்னும் உற்பத்தி செய்யவேண்டும் என்பார்கள்.
"நமக்குத் தேவை அதிக உற்பத்தியா? அளவான / சிக்கனமான பயன்பாடா? நியாயமான பகிர்வா?" ஆகிய கேள்விகள் எழுப்பப்படும். இரவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது ஆடம்பரம் இல்லையா? அகங்காரம் இல்லையா என்றால் மெளனமாக இருப்பார்கள். ஒரு வழியாக விவாதங்கள் மனக்கசப்பில் முடிவடையும்.
நிற்க...
"முதலாளித்துவம் தனது எல்லையை அடைந்துவிட்டது, இதற்கு மேல் மக்களை, அரசுகளை ஒடுக்குவது மற்றும் சுரண்டுவது ஆகாது, அதனால் தான் கொரொனா எனும் கிருமியை பரப்பி, கட்டுப்பாடுகளை விதித்து மக்கள் தாமாக முன்வந்து தமது உரிமைகளை விட்டுக்கொடுக்க, நடவடிக்கைகளைக் குறைக்க, நிர்பந்திக்கப்படுகின்றனர்" என்றார் கேரளாவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர்.
"தொழில்நுட்ப வளர்ச்சி அரசுகளுக்கு எதிராக, அமைப்புகளுக்கு எதிராக, கார்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக செயல்பட, தங்களை ஒருங்கிணைக்க, தமக்குள் புதிய உறவுகளை ஏற்படுத்த, பலப்படுத்த மக்களுக்கு அளப்பரிய வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இவ்வேளையில், மக்களின் செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டுவர கார்பரேட் மற்றும் அரசுகளின் கூட்டு சதியாகக் கூட இந்தப் பெருந்தொற்று இருக்கலாம்" என்று கூட சொல்லத் தோன்றுகிறது.


இன்னும் கூடுதலாக யோசித்தால்...
நாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது அத்தியாவசியம், அடிப்படைத்தேவைகள் என்று கருதிய பலவற்றை விட்டுக்கொடுத்து விட்டோம். வெளியே போகாதே என்றால் ஒத்துக்கொள்கிறோம். வீட்டுக்குள் இரு என்றால் சரி என்கிறோம். எந்நேரமும் முகக்கவசம் அணிய ஒத்துக்கொண்டிருக்கிறோம். பேருந்துகள் ஓடாது என்றால் சரி, ரயில் இல்லை என்றால் சரி, கோயில் இல்லை என்றால் சரி, கல்யாணத்திற்கு, காரியத்திற்கு கூட்டம் கூடாதே என்றால் சரி, திருவிழா கூடாது என்றால் சரி, தனியாக இருக்க ஒத்துக்கொண்டிருக்கிறோம். இருப்பதை வைத்து வாழவும் கற்றுக்கொண்டுள்ளோம்.
இதன் விளைவாக நாம் இயற்கை வளங்களைக் குறைவாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம், வாயு, திரவ, திடக் கழிவு என குறைவான கழிவுகளை உற்பத்தி செய்கிறோம், விபத்துகள் குறைந்துள்ளன, பிற நோய்களின் எண்ணிக்கை என்ன ஆகியிருக்கிறது என்று ஆய்வுகள் தான் சொல்லவேண்டும்.
கூடன்குளம் ஆவணப்படத்திற்கு எதிர்வினை ஆற்றிய நண்பர்கள் இப்போது என்ன சொல்வார்கள் என்று நான் யோசித்துப் பார்க்கிறேன். அது எப்படி மின்சாரம் இல்லாம் இருப்பது, அது எப்படி நவீன வசதி வாய்ப்புகளை அனுபவிக்காமல் இருப்பது என்று முரண்டு பிடித்தவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்?
(கொரோனா பொதுமுடக்கத்தினால் தொழில் இழந்தோரை, வேலை இழந்தோரை, வாழ்விழந்தோரைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை. அவர்களின் இழப்பை நான் மதிக்கிறேன். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். ஆனால் எதையும் குறைத்துகொள்ளமுடியாது என்று நாம் நினைத்தவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை மட்டுமே இங்கு சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.)