Sunday, October 27, 2019

"பார்வையாளர்களிடம் அறிவை, பொறுமையை, கவனத்தை, உழைப்பைக் கோருகிற வடிவம் இது"

"பார்வையாளர்களிடம் அறிவை, பொறுமையை, கவனத்தை, உழைப்பைக் கோருகிற வடிவம் இது"


ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் 
===========================

அமுதன் ராமலிங்கம் புஷ்பம் (1971) ஊடகத்துறையில் ஒரு முக்கியமான ஆளுமை. கடந்த 25 ஆண்டுகளாக ஆவணப்படம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும்  அவர் காக்கைச் சிறகினிலே இதழுக்காக கொடுத்த  சிறப்பு நேர்காணல் இது. 

அவரை நேர்காணல் செய்தவர் பி.பீட்டர் துரைராஜ்.



கேள்வி : வெகு ஆண்டுகளாக மறுபக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறீர்கள் ? இது பற்றி சொல்லுங்களேன் ?

பதில் : பெரும்பாலான ஊடகங்கள் அரசு சார்பாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளன. நேர்மையாகவும், எளிமையாகவும், குறைந்த செலவிலும் நேரடியாக மக்களிடம் கருத்துச் சொல்லும் சாத்தியம் ஆவணப்படங்களில் உள்ளது. மாற்று ஊடகமாகவும், சரியான வடிவமாகவும் இருப்பது ஆவணப்படங்கள். 'மறுபக்கம்' என்ற அமைப்பை 1994 ல் மதுரையில் சில நண்பர்களோடு தொடங்கினோம். தொலைக்காட்சி,VCP, VCR ஐ பயன்படுத்தி அப்போது படங்களை திரையிட்டோம். இந்த 25 வருடங்களில் நூற்றுக்கணக்கான திரையிடல்கள் நடந்துள்ளன.
கேள்வி:மதுரை திரைப்பட விழாவை வெகு ஆண்டுகளாக நடத்தி வருகிறீர்கள் .இது பற்றி ?

பதில்: 1998 ல் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடந்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு இயக்கங்கள் நடந்தன. மதுரையில் 1998 ல் அணுசக்தி  எதிர்ப்புக் கருத்தரங்கம் நடத்தினோம். கருத்தரங்குடன் சேர்ந்து திரைப்பட விழாவும் நடந்தது. அப்போது கிடைத்த ஆதரவினால் தொடர்ந்து திரைப்படவிழாக்கள் நடத்தத் தொடங்கினோம். அது வருடாந்தர விழாவாக உருவெடுத்தது.

கேரளாவில் இருந்த ஆவணப்பட இயக்குநர் சரத் சந்திரன் படங்கள், புராஜெக்ட்டர் போன்றவை தந்து உடன் இருந்து வழிகாட்டுவார். இப்போது அவர் இல்லை;இறந்துவிட்டார். அவர் ஒரு அனுபவம் வாய்ந்த ஆளுமை.அதற்கு முன்னரே மதுரையில் 'யதார்த்தா','வைகை'  போன்ற பிலிம் சொசைட்டிகள் போன்றவை இருந்தன. இன்னும் யதார்த்தா செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நாங்கள் அந்தப் பாரம்பரியத்தை தொடர்ந்து செய்தோம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வடிவத்தில் மதுரை பன்னாட்டு ஆவணப்படவிழா நடக்கும். இதற்கு பல அமைப்புகள், குழுக்கள், பிலிம் சொசைட்டிகள்,நாடகக்குழுக்கள் உதவி செய்து வருகின்றன.எல்லாவிதமான சாத்தியங்களையும் செய்து பார்த்துவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். 

அரசு நடத்துகின்ற விழாவைத் தவிர்த்துப் பார்த்தால்,இந்தியாவில் நடைபெறும் மூத்த திரைப்பட விழா இதுவென்று சொல்ல  வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

இதில் 50 முதல் 80  வரையிலான ஆவணப்படங்களை திரையிடுவோம்.இதில் நம்நாட்டு ஆவணப்படங்களும் வெளிநாட்டு  படங்களும் திரையிடப்படும்.படத்தை இயக்கியவர்கள் குறைந்த பட்சம் ஐந்து பேர் (பத்து பேர் வரை) தங்கள் படங்களை திரையிட்டு பார்வையாளர்களோடு கலந்துரையாடுவர்.அவர்களுக்கும் ஒரு accountability இருக்கும். பார்வையாளர்களும் படத்தை எடுப்பவர்களின் ஆளுமை,புரிதல்,தொடர்பு போன்றவைகளை தெரிந்து கொள்வர்.நண்பர்கள், அமைப்புகள் உதவி செய்வதால் செலவும் பெரிதாக ஆகாது. சில கல்லூரிகள் இடம் தரும்;சிலர் சாதனங்களை இலவசமாக தருவர்;ஒரு சிலர் போக்குவரத்து செலவுகளை ஏற்றுக் கொள்ளுவார்கள்.இப்படி மக்கள் பங்கேற்பு இதில்  இருக்கிறது.

இந்த திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும். இதற்கான வேலைகளை மூன்று மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கி விடுவோம்.இதற்காக ஆவணப்படங்களை பெறுவோம்.அவை இரண்டு ஆண்டுகளுக்குள்  வெளிவந்தவையாக  இருக்க வேண்டும்.100 முதல் 150 வரை படங்கள் வரும்.அதில் 30 படங்களை தேர்ந்தெடுத்து திரையிடுவோம்.இதுமட்டுமின்றி திரும்பிப் பார்த்தல் (Retrospective ) என்ற அமர்வில் மூத்த இயக்குநர்களின்  படங்கள்; குறிப்பிட்ட நாட்டுப் படங்கள் ,குறிப்பிட்ட தலைப்பில் (சமூக நீதி,சுற்றுச்சூழல், ஆளுமை,மனித உரிமை போல)படங்களை திரையிடுவோம். இது ஒரு முக்கியமான பண்பாட்டு அசைவு நடவடிக்கைதான்.
கேள்வி: ஆவணப்படங்களுக்கு ஊடகங்கள் உரிய முக்கியத்துவம் தருகின்றன என்று நினைக்கிறீர்களா ? 

பதில் :போதுமான வரவேற்பு இருக்கிறது.  ஒவ்வொரு ஆண்டும் மதுரை திரைப்படவிழா பற்றி நான்கு,ஐந்து பத்திரிக்கைகளாவது செய்தி வெளியிடுகின்றன.எனக்கு இது குறித்து புகார் ஏதுமில்லை. ஏனெனில் ஆவணப்படங்கள் வெகுசன வடிவம் இல்லை. தீவிர வாசகரை மையமாக வைத்தே இயங்குகின்றன. பார்வையாளர்களிடம் அறிவை, பொறுமையை, கவனத்தை, உழைப்பைக் கோருகிற வடிவம் இது. பத்திரிகைகள் நான் சொல்லுவதை மேற்கோள் காட்டுகின்றன; செய்தி வெளியிடுகின்றன. எனவே ஊடகங்கள் குறித்து எனக்கு வருத்தமில்லை.

கேள்வி: நீங்கள் 1997 ல் லீலாவதி என்ற முதல் ஆவணப்படத்தை எடுத்து இருக்கிறீர்கள்.'தீவிரவாதிகள்'' பீ','மெர்குரி(Mercury in the Mist),Radiation Stories  போன்ற ஆவணப்படங்களை இதுவரை இயக்கி இருக்கிறீர்கள்.இந்தத் துறையில் ஒரு கவனம் கொள்ளத்தக்க ஆளுமையாக இருக்கிறீர்கள்.உங்களுடைய முன்னோடி என்று யாரையும் சொல்ல முடியுமா ?

பதில்:நிறைய பேர்  ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறார்கள்.ஆனந்த் பட்வர்தன் ,சிலி நாட்டைச் சார்ந்த பேட்ரிசியோ குஸ்மான்(Patricio Guzman) , ஆஸ்திரேலியாவைச்  சார்ந்த டென்னிஸ் ஓர்க் (Dennis O' Rourke ),தீபா தன்ராஜ் (பெங்களூர்),கே.பி.சசி(பெங்களூர்),  குட்டி ஜப்பானின் குழந்தைகள்(சிவகாசிபற்றி படம் ) எடுத்த சலம் பென்னுராக்கர்(Chalam Bennurkar) போன்றவர்கள் எனக்குள் ஆரம்ப காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள்.போலந்து நாட்டைச் சார்ந்த கீஸ்லோவ்ஸ்கி (Krzysztof Kieslowski) எனக்குப் பிடித்தமானவர். நான் தற்போது  நெருக்கமாக உணர்வது அமெரிக்கா வைச்சார்த்த பிரெடெரிக் வைஸ்மேன்- தான்.(Frederick Wiseman).அவரது ரசிகர் நான். எனது ஆவணப்பட முயற்சிகள் என்னை அறியாமல் அவரை ஒத்து இருக்கின்றன.
கேள்வி: உங்களுக்கு திராவிடர் கழகம் 'பெரியார் விருது' கொடுத்துள்ளது .அதைப் பற்றி ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?

பதில் : தமிழக, இந்திய அரசியலை தீர்மானிக்கிற அம்சமாக திராவிட அரசியல் இருக்கிறது. தமிழக அரசியலில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள், அரசியல் போக்குகள்,வளர்ச்சித் திட்டங்கள்,மாநிலம் போகும் திசை,தமிழ்நாட்டின் வாழ்க்கைத் தரம் போன்றவற்றை திராவிட அரசியல் தீர்மானிக்கிறது. அதன் ஊற்று திராவிட அரசியல். எனவே தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் எனக்கு 'பெரியார் விருது' வழங்கியதை(2017)  மிகுந்த மரியாதையோடு ஏற்றுக் கொள்கிறேன். இதை நான் சரியான திசைவழியில்தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதற்கான அடையாளமாக கருதுகிறேன்.

 'பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை'யுடன் இணைந்து திரையிடல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.வருகிற ஏப்ரல் 12 முதல் 14 வரை சமூக நீதி திரைப்பட விழா , பெரியார் திடலில் நடத்த உள்ளோம்.


கேள்வி:'என்சாதி' என்ற ஆவணப்படத்தை எடுத்து வருகிறீர்கள்! இதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?

பதில் : மோடியை பிரதம மந்திரி வேட்பாளராக 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அறிவித்த போது நான் திகைப்பு அடைந்தேன். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். வன்முறை அரசியல் மீதான நம்பிக்கை, சர்வாதிகார குணம் கொண்டவர் மோடி. வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம், உரையாடல், நெகிழ்வுத் தன்மை போன்ற குணங்களை கடைபிடிக்காதவர்.முரட்டு அரசியலை கடைபிடிப்பவர்.முதலமைச்சராக இருந்தபோது ,கார்ப்பரேட்டுகளுக்காக தன் மாநில பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டவர்.இப்படிப்பட்ட குணங்கள் கொண்ட ஒருவரை இந்திய சிவில் சமூகம்  பிரதம மந்திரி வேட்பாளராக ஒத்துக் கொண்டதை ஜனநாயகத்தின் வீழ்ச்சியாக கருதினேன்.இது எனக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.'மோடி போல ஒரு நபர் வேண்டும்' என்ற எண்ணம் மக்களுக்கும் உள்ளதோ என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில் அவர் எதிர்ப்பு இல்லாமல் இருக்கிறார். இங்கு நடக்கும் பல குற்றங்களுக்கு குற்றவாளி எண் ஒன்றாக( A.1 ) மோடி இருந்தால் அக்குற்றத்திற்கு துனைநிற்பவர்களின்  பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். அதிகாரவர்க்கம், ஊடகம்,தொழில் அதிபர்கள் என பலர் அதில்  உண்டு.அந்தப் பட்டியலில்  அக்குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் அடக்கம்.

குற்றத்தை செய்வதை விட அதனை ஆதரிக்கிற,அங்கீகரிக்கிற, பாதுகாக்கிற மனநிலையைப்  பற்றித்தான்  பேச வேண்டும் என்று தோன்றியது.'Consensus', 'Hegemony' ,என்ற கருதுகோள் களின் அடிப்படையில் குற்றங்கள் நடைபெறுகின்றன.'ஒத்தக் கருத்தை உருவாக்கி ஆதரிக்கச் செய்வது' என்று அந்தோனியா கிராம்சி சொல்வதை நாம்  புரிந்து கொள்ள வேண்டும். எல்லா நேரமும் வன்முறையைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தப்படுவதில்லை.ஒத்தக் கருத்தை உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களையே அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதுதான் இதன் அடிப்படை. இதைத்தான் 'குஜராத் மாடல்' என்று சொல்லுகிறோம்.இதனுடைய வடிவம் தமிழ்நாட்டிலேயே இருக்கிறது.இன்னும் சொல்லப் போனால் குஜராத்திற்கு முன்பே இருக்கிறது.திருப்பூரில் அதுதான் நடைபெறுகிறது. அதை வைத்துத்தான் நான் 'டாலர் சிட்டி'(Dollar City) என்ற ஆவணப்படத்தை  எடுத்தேன்.தொழிலாளர்களை நசுக்கி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி தொழில் அதிபர்கள் சுரண்டுவதுதான் திருப்பூரில் நடக்கிறது.

இந்த டாலர் சிட்டியின் தொடர்ச்சிதான், இப்போது நான் எடுத்துக் கொண்டு இருக்கும் 'என் சாதி' (My Caste) என்கிற படம் சாதி பற்றி நாம் கொண்டுள்ள  மயக்கம்,போலித்தனம்,வேடம்,சமரசம், வெற்று முழக்கம் பற்றி  பேசும். ஒடுக்குமுறை வெளியில் தெரிகிறது. ஆனால்  அதன் பின்னால் இருக்கும் சிந்தனை ஆபத்தானது. அது நம் கவனத்துக்கு உரியது. சாதியை காப்பாற்றுகிற,அங்கீகரிக்கிற, கொண்டாடுகிற மனநிலையை அல்லது அதை மெளனமாகக் கடந்து போகும் மனநிலையை இப்போது நான் எடுத்துக் கொண்டு இருக்கிற ஆவணப்படம் பேசும்.
கேள்வி: உங்களுக்கு நியூஸ் 18 தொலைக்காட்சி கடந்த ஆண்டு 'மகுடம் விருது' கொடுத்ததே ?


பதில்: நியூஸ் 18 எனக்குப் பிடித்த தொலைக்காட்சி. குணசேகரன் போன்ற ஒரு நல்ல ஊடகவியலாளர் அதன் தலைமைப் பொறுப்பில் பணி புரிகிறார். இது போன்ற விருது என்னை பலரிடம் கொண்டு போய்ச் சேர்க்கும். என் வீட்டில் உள்ளவர்கள் பொறுத்துக் கொண்டு என்னை என் போக்கில் வேலை செய்ய அனுமதிக்கின்றனர்.அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும். ஆகவே இது போன்ற விருதுகள் என் குடும்பத்தாரையும் என்னை ஆதரிப்போரையும் என் தோழர்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்.
கேள்வி:நீங்கள் எடுக்கும் ஆவணப்படங்களுக்கு தயாரிப்புச் செலவு எப்படி கிடைக்கிறது ?

பதில்:இதுவரை நான் 19 ஆவணப்படங்கள் எடுத்துள்ளேன்.இதில் டாலர் சிட்டி என்ற படத்தை மட்டும் ராஜ் கஜேந்திரா  என்ற நண்பர் என் மீது கொண்ட அன்பின் காரணமாக தயாரித்தார். மற்ற படங்களுக்கு நண்பர்கள், தோழமைகள்தான் பங்களிப்பு செய்துள்ளனர். இதை ஒரு கொள்கையாகவே நான் தொடக்கம் முதல் கடைபிடித்து வருகிறேன். தனிநபர்களோ நிறுவனங்களோ நிதி உதவி செய்தால் கூட பத்தாயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நன்கொடை பெறுவதில்லை என்பதும் ஒரு கொள்கை முடிவு தான். 
கேள்வி: உங்கள் குடும்பம் பற்றி ?

பதில்: மனைவி தாக்‌ஷா, சினிமா, விளம்பரப் படங்களுக்கான உடை அலங்கார designer ஆக இருக்கிறார்.
கேள்வி: தமிழ்நாட்டில் ஆவணப்படம் எப்படி இருக்கிறது ?

பதில் : மிக நன்றாக இருக்கிறது. அரசியல், கலை,வரலாற்றுப்படம்,ஆளுமைகள் என பன்முகத்தன்மை கொண்ட ஆரோக்கியமான சூழலில் பலரது ஆவணப்படங்கள் உருவாகி வருகின்றன. இது போன்ற ஒரு வெரைட்டி மற்ற மாநிலங்களில் இல்லை. தில்லி,மும்பை,கல்கத்தா போன்ற நகரங்களில் ஆவணப்படங்கள் வெளியாகின்றன. அது வேறு தளம். 
கேள்வி:நீங்கள் என்னவாக அறியப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

பதில் : நான் ஒரு Documentary Activist (ஆவணப்பட செயற்பாட்டாளர்) ஆக அறியப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.Film Maker (படத்தை எடுப்பவர்),Curator (படங்களைச் சேகரித்து, தேர்ந்தெடுத்து, தொகுத்து வழங்குபவர்), Organiser (திரையிடல்களை நடத்துபவர்), Teacher(ஆவணப்படங்கள் பற்றி வகுப்பு எடுப்பவர்) ஆக இருக்கிறேன். இதில் எனது நேரம்,கவனம், உழைப்பு,பங்கை கடந்த 25 ஆண்டுகளாக செலுத்தி வருகிறேன்.
தமிழ்நாட்டுக்கு வெளியேயும் இந்தியா முழுக்க பயணம் செய்து ஆவணப்படவிழாக்களை நடத்தி வருகிறேன். நிறைய விழாக்களில் தேர்வுக்குழு உறுப்பினராகவும், நடுவராகவும் பங்காற்றி வருகிறேன். சென்ற ஆண்டு கூட ஜெர்மனியில் ப்ராங்க்பர்ட் நகரில் நடந்த ஒரு பன்னாட்டு ஆவணப்படவிழாவில் நடுவர் குழு உறுப்பினராகக் கலந்து கொண்டேன்.



கேள்வி: நீங்கள் Court,Fandry, ஒழிவு திவசத்தே களி போன்ற புனைவுப்படங்களை(Feature film) திரையிட்டு வருகிறீர்கள் ? 

பதில்: மறுபக்கம் சார்பாக புனைவு படங்களையும் அவ்வப்போது திரையிட்டுள்ளோம். சமீபத்தில் 'படப்பெட்டி திரைப்பட இயக்கம்" சார்பாக கவனிக்கப் படாத, திரைக்கு வந்த புனைவுப் படங்களை  திரையிட்டு வருகிறோம்.கடந்த மாதம் கூட மதுபானக் கடை ,கடைசி தரிப்பிடம் (The last Halt - இலங்கை) என்ற படங்களை திரையிட்டோம். இந்நிகழ்வுகளில் அந்தப் படங்களின் இயக்குநர்களும் கலந்து கொண்டனர். அவர்களோடு கலந்துரையாடல் நடத்துவதுதான் இந்நிகழ்வுகளின் முக்கிய அம்சம்.

கேள்வி: மாதாந்திர திரையிடல் செய்து வந்தீர்களே ? 

பதில்: மதுரையிலிருந்து 2008 ல் சென்னைக்கு வந்தேன். தொடக்கத்தில் முனைவர் எம்.டி.முத்துக்குமாரசாமி தாம் பணியாற்றும் National Folklore Support Centreல் மாதாந்தர திரையிடல் நடத்த இடம் கொடுத்தார். பின்பு அண்ணாசாலை புக்பாயிண்ட்டில் திரையிடல் செய்தோம். பேரா வீ.அரசு உதவியால் சென்னை பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் திரையிட்டோம்.  பிறகு பனுவல் புத்தக நிலையம், டிஸ்கவரி புக் பேலஸ், பெரியார் திடல் என தொடர்ந்து திரையிட்டு வருகிறோம். பேரா மணிவண்ணன், பேரா ரவீந்திரன் ஆகியோர் எங்களுக்குத் துணை நிற்கின்றனர். அவர்களது துறைகளிலும் திரையிடல்கள் நடத்துகிறோம். சமீப காலமாக மாக்ஸ் முல்லர் பவனிலும் திரையிடல்கள் நடத்துகிறோம்.

இது மட்டுமின்றி சமூகநீதி, காடு, இசை போன்ற தலைப்புகளின் கீழ் சிறப்புத் திரைப்படவிழாக்களும் சென்னைப் பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழாவையும் (ஏழாவது ஆண்டாக) பல்வேறு கல்லூரிகள், தோழமை அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தி வருகிறோம்.

கேள்வி: உங்களது ஆவணப்படத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம்  ஒருவர் பெற்றுள்ளாராமே ? 

பதில்: ஸ்வேதா கிஷோர்(Shweta Kishore) என்ற பெண்மணி , இந்தியாவில் எடுக்கப்பட்ட மூன்று ஆவணப்படங்களை தனது முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். அதில் ஒன்று  நான் எடுத்த 'செருப்பு'(தலீத் கிறிஸ்தவர் பற்றியது) என்ற ஆவணப்படம். இதற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.அது நூலாகவும்(Indian Documentary and Film Makers- Oxford University) வந்துள்ளது.எனது ஊடகப் பயணத்தில் இது ஒரு மைல் கல் எனலாம்.இது தவிர நிறைய பேர் ஆய்வு செய்துள்ளனர்.நான் எடுத்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு படத்தைப் பற்றி ஒரு ஆய்வுமாணவர் எழுதிஉள்ளார்.இதிலுள்ள பல விஷயங்கள் எனக்கே புதிதாக இருந்தது. நமது வேலையின் முக்கியத்துவத்தை இவர்கள் நமக்கு  உணர்த்துகிறார்கள்.

கேள்வி:வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள் ? 

பதில்: இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். அவர்கள் எல்லாவிதமான ஜனநாயக அமைப்புகளையும் சீர்குலைத்து விட்டார்கள்.திமுக,காங்கிரஸ் மீது நமக்குள்ள கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பாஜகவுடன் பேசவே முடியாது. பாஜக பேசுவது வெறுப்பு அரசியல், வன்முறை அரசியல், கார்ப்பரேட் அரசியல் மற்றும் சனாதன அரசியல். ஜனநாயகம் இருக்குமா என்ற அச்சமே இப்போது எழுகிறது. அது காப்பாற்றப்பட வேண்டும்.

"18 ஆண்டுகள் தொடர்ச்சியாக சர்வதேச ஆவண மற்றும் குறும்பட விழா நடத்தி வருவதே ஒரு சாதனைதான்"

"18 ஆண்டுகள் தொடர்ச்சியாக சர்வதேச ஆவண மற்றும் குறும்பட விழா நடத்தி வருவதே ஒரு சாதனைதான்"


ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் பேட்டி 
==============================
பேட்டி: பீட்டர் துரைராஜ்

அமுதன் ராமலிங்கம் புஷ்பம் ( 46 வயது )  பரவலாக அறியப்பட்ட ஆவணப்பட இயக்குனர்களில் ஒருவர். ஆவணப்படங்களை இயக்குதல், திரையிடுதல் , கல்லூரிகளில் வகுப்பு எடுத்தல் ,பயிலரங்குகள் நடத்துதல் என்பதை முழுநேரப் பணியாக செய்துவருபவர்.மதுரையைச் சார்ந்த இவர் இப்போது சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.timestamil.com ற்காக பீட்டருக்கு  கொடுத்த பேட்டி இது.

கேள்வி: ஆவணப்படங்கள் மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி ?
பதில்: என் அப்பா ஒரு கம்யூனிஸ்டு , அம்மா தீவிர எம்ஜிஆர் ரசிகை. இது போதாதா ? இரண்டு பேரின் கலவைதான் நான். என் வீட்டில் தோழர்கள் எதைப் பற்றியாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். எட்டாவது படிக்கும் போதே நான் சினிமா இயக்குநராவேன்  என்றுதான் சொன்னேன் . 1994  ல் நான் கல்லூரியில் எம்.ஏ. படிக்கும்போது  BBC எடுத்த Children of Chernobyl  என்ற படத்தை திரையிட்டேன்.

கே: உங்களுக்கு முன்னோடி என்று யாராவது இருக்கிறார்கள் ?
பதில் : தில்லியில் செண்டிட் என்ற அரசு சார்ந்த அமைப்பு 5 நாட்கள் ஆவணப்பட பயிலரங்கம் நடத்தியது..அதில் 25 ஆவணப்படங்கள் திரையிட்டனர்; விவாதித்தோம். பிறகு இரண்டு ஆண்டுகள் தில்லியில் பயிற்சி எடுத்தேன்.இதுதான் நான் ஆவணப்படம் எடுக்கக் காரணமாயிற்று.

கே: நீங்கள் இயக்கியுள்ள  ஆவணப்படங்கள் பற்றி சொல்லுங்களேன் !
ப: மார்க்சிஸ்டு கட்சி மாமன்ற உறுப்பினர் படுகொலையை மையப்படுத்தி லீலாவதி என்ற ஆவணப்படத்தை நான் முதலில் 1997 ல்  இயக்கினேன்.அடுத்த ஆண்டு குண்டுப்பட்டி தலித்துக்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையை பற்றி  " தீவிரவாதிகள் " என்ற படம் இயக்கினேன்.மரணதண்டனைக்கு எதிரான " தொடரும் நீதிக் கொலைகள் "  , திருப்பூர் நகரைப்பற்றி கடந்த ஆண்டு " டாலர் சிட்டி "என 19 ஆவணப்படங்கள் இதுவரை இயக்கி உள்ளேன். இப்போது " என்ற சாதி "  என்ற படம் எடுத்துவருகிறேன். இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில்  இந்த துறையில்  நான் ஒரு முக்கியமான முன்னோடி என்று சொல்லலாம்.

கே: ஆவணப்படங்கள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்புகிறீர்ரகளா ?
ப : ஆவணப்படம் சொல்லும்  செய்தி என்பது எளிமையானது; ஆழமானது; தல மட்டத்தோடு தொடர்பு கொண்டது( local ness) ;நேரடியானது;நாணயமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழில்  சுயாதீனமான அரசியல் படங்கள் வெளிவரத் தொடங்கி விட்டன என்பது ஆரோக்கியமானது.2003 ல் நான் எடுத்த " பீ " ஆவணப் படத்திற்கு மதுரை மாநகராட்சி நல்ல எதிர்வினை ஆற்றியது.ஆணையாளராக இருந்த கார்த்திக் பொதுக் கழிப்பிடங்களின் பாராமரிப்பை சுய உதவிக் குழுக்களிடம் கொடுத்தார்.பல இடங்களில் தமுஎச இதனை திரையிட்டது; அப்படி திரையிட்டதே சில சமயங்களில் பின்னர்தான் எனக்கு தெரியவரும். இந்தப்படத்தினால்  துப்புரவு தொழிலாளர்களின் நிலை குறித்த விவாதம் நடைபெற்றது.அந்த சமயத்தில் இது ஒரு முன்முயற்சி என்று சொல்லாம்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 80 ம் ஆண்டு விழா பம்பாயில் நடைபெற்ற போது அதில் அரைநாள் நிகழ்வை திரைப்படங்களிற்காக ஒதுக்கி இருந்தார்கள். அதில் இந்தப்படத்தையும் ஆனந்த் பட்வர்தன் பரிந்துரையின்பேரில்  திரையிட்டார்கள். நான் இயக்கிய " தொடரும் நீதிக் கொலைகள் " மரண தண்டனைக்கு எதிராக சலனத்தை ஏற்படுத்திய படம்.

கே: வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் திரைப்படம் இயக்குவீர்களா ?
பதில்: நிச்சயமாக மாட்டேன்.ஏனெனில் திரைப்படம் என்பது தனி துறை. அதற்கும் ஆவணப்படத்திற்கும் சம்மந்தமே கிடையாது .
கே: நீங்கள் ஆவணபடம் திரையிடுவது குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.
ப: வெள்ளைச் சுவர்  அல்லது வெள்ளை வேட்டி இருந்தால் போதும். என்னிடம் புராஜெக்ட்டரும் ,லேப் டாப்பும் எப்போதும் இருக்கும்.நாங்கள் 10 பேர் சேர்ந்து மறுபக்கம் என்ற அமைப்பை 1994 ல் ஏற்படுத்தினோம்.இதுவரை 1000 திரையிடல்களுக்கு மேல் செய்துள்ளோம். 1998 முதல் மதுரையில் 18 ஆண்டுகளாக , தொடர்ச்சியாக ஆண்டுதோறும்  " சர்வதேச திரைப்பட மற்றும ஆவணப்பட விழா " நடத்தி வருகிறோம். அரசு சாராத மூத்த திரைப்பட விழா இது. இதுவே ஒரு பெரிய சாதனைதான்.சென்னையிலும் 6 ஆண்டுகளாக இந்த திரைப்பட விழாவை மறுபக்கம் நடத்தி வருகிறது. இது தவிர ,கல்லூரிகள் , சங்கங்கள் ,பல அமைப்புக்கள் , நண்பர்கள் என எல்லா இடங்களிலும் திரையிட்டு வருகிறோம்.

கே: நீங்கள் திரையிடுகிற படங்களுக்கு எத்தனை பேர் சாதாரணமாக வருவார்கள் ?
ப: எண்ணிக்கை என்பது எனக்கு ஒரு பிரச்சினையே அல்ல. 10  பேருக்கு கூட நான் திரையிட்டுள்ளேன்; பெரிய அரங்குகளிலும் திரையிட்டுள்ளேன்.மற்ற இயக்குநர்களின் படங்களையும் நாங்கள் திரையிட்டு வருகிறோம். என்னைப் பொறுத்தவரை திரையிடலுக்குப் பின்பு விவாதம் நடத்துவோம்.வந்தவர்கள் தங்கள் கருத்தைச் சொல்லுவார்கள். வந்தவர்களிடம் ஒரு intellectual stimulation நடந்தால்  அதுவே எனக்கு போதுமானது.

கே: தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஆவணப்பட இயக்குநர்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?
ப: ரவி சுப்பிரமணியம் ( ஜெயகாந்தன் ) , அம்ஷன் குமார் , ப்ரசன்னா ராமசாமி ( அடூர் கோபாலகிருஷ்ணன் ) போன்றோர் ஆளுமைகள் குறித்து படம் எடுத்துள்ளனர்.சமூகம் சார்ந்து கீதா இளங்கோவன் ( மாதவிடாய்) படங்கள் எடுத்து வருகிறார்.பாரதி கிருஷ்ணகுமார் , ஆர்.வி.ரமணி போன்றோரும் படம் எடுத்து வருகின்றனர்.ஆர். ஆர். சீனிவாசன் , லீனா மணிமேகலை போன்றோர் அரசியல் படம் எடுத்து வருகின்றனர்.தமிழ் இசுலாமியர்கள் பற்றி கோம்பை எஸ்.அன்வர் " யாதும்" என்ற படம் எடுத்துள்ளார்.
திவ்யபாரதி எம்.எல். தோழர்கள் உதவியோடு  " கக்கூஸ் " படம் எடுத்துள்ளார். பூவுலகின் நண்பர்கள் , மே 17 இயக்கம் , மகஇக   போன்ற அமைப்புகளும் படம் எடுத்து வருகின்றன.

கே: கருத்துரிமைப் பாதுகாப்பு இயக்கம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?
ப: பெருமாள் முருகனின் நாவலுக்கு தடை என்ற போது இதை ஆரம்பித்து இயக்கம் நடத்தினோம்.பாடகர் கோவன் கைதை எதிர்து இயக்கம் நடத்தினோம். இதில் என் பங்களிப்பு என்று தனியாக சொல்ல முடியாது ; கூட்டு முயற்சிதான்.

கே: அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் பற்றி சொல்லுங்களேன் ?
ப :சென்னை ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கு தடை என்று வந்தபோது அதற்கு எதிர் வினையாக .அம்பேத்கர் அய்யங்காளி வட்டம் ( கேரளா ) ,அம்பேத்கர் மார்க்சு வட்டம் , அம்பேத்கர் பூலே வட்டம் ( மகாராஷ்டிரா ) அம்பேத்கர்  சிங்காரவேலர் வட்டம் போன்ற பல அமைப்புகள் நாடெங்கும் தோன்றின.அதில் ஒன்றுதான் இது. மதுரை, திருச்சி, கோவை, சென்னை நகரங்களில் இவை தோன்றின.இதன் மூலம் பல நிகழ்ச்சிகள் நடத்தினோம்.
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சொல்லி அக்கலாக் முகமது , தாத்ரியில் படுகொலை செய்யபட்ட போது மாட்டிறைச்சி திருவிழா நடத்தினோம்.ஏறக்குறைய தமிழ்நாட்டில் நடந்த முதல் மாட்டிறைச்சி விழா இதுதான்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சொந்தமான அம்பேத்கர் திடலில் நடத்தினோம்.
பெரியார், அம்பேத்கர் , மார்க்ஸ் பற்றி தொடர் வகுப்புகள் எடுத்தோம். திராவிட ஆட்சியின் கீழ் நடைபெற்ற நற்செயல்கள் குறித்து பேச " எது வளர்ச்சி ? " என்ற முழுநாள் கருத்தரங்கு நடத்தினோம்.பூனா திரைப்பட கல்லூரி மாணவர்களின் 100 ம் நாள் போராட்ட நாளன்று முழுநாள் கலைவிழா நடத்தினோம்.இத்தகைய நிகழ்வுகளில் ஏறக்குறைய எல்லா அமைப்புகளிலிருந்தும் கலந்து கொண்டனர் என்பதுதான் சிறப்புச் செய்தி.மகளிருக்கான தனியான  மகளிர் விழா நடத்தினோம்.
மத்திய அரசினை எதிர்த்து சாகித்திய அகாதமி விருதுகளைத்  திருப்பி அளித்த கர்நாடகா எழுத்தாளர்களுக்கு பாராட்டுவிழா நடத்தினோம்.ரோகித் வெமுலா , நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்காக கூட்டம் நடத்தினோம்.

கே : முசாபர் நகர் பாகி ஹை - ஆவணப் படம் திரையிடல் குறித்து ?
ப:ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி தூண்டுதலின் பேரில் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திரையிடுவதாக இருந்த இந்த படத்தை திரையிட கடைசி நேரத்தில் மறுத்து விட்டது நிர்வாகம். எனவே கல்லூரி மாணவர்கள் தங்கள் உணவுக்கூடத்தில் வேட்டியை திரையாக கட்டி திரையிட்டனர்.இதனையொட்டி நாடு முழவதும் 50 இடங்களில் இதே படத்தை ஒரே நாளில் திரையிட முடிவுசெய்தார்கள்.தமிழ் நாட்டில் நான்கு இடங்களில் திரையிட முடிவு செய்தோம்.திருச்சி , மதுரையில் காவல்துறை தடுத்து விட்டது. கோவையில் பொது நிகழ்வாக இல்லாமல் நடத்தி விட்டார்கள். இங்கு சென்னையில் ஸ்பேசஸ் அரங்கில் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. பின்னர் நுங்கம்பாக்கம் காயிதே அரங்கில் நடத்திக் கொள்ள அதன் இயக்குனர் அனுமதி அளித்தார்.  எதிர்ப்பினை எதிர்த்து வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.

கே: இதுதான் உங்களுடைய முழுநேர வேலையா ? வருமானம் ?
ப: என் துணைவர் தாக்‌ஷா உடையலங்கார நிபுணர். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டார்.நான் கல்லூரிகளுக்கு வகுப்பு எடுக்கிறேன். நாடு முழுவதும் ஆவணப்பட பயிலரங்குகள் நடத்தி வருகிறேன்.இது தவிர ஒருசில நிறுவனங்களுக்கு in house படம் எடுக்கிறேன்; இது cooly films.

கே: உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் ?
ப: பியேதர் தஸ்தாயேவஸ்கி

கே: பிடித்த இயக்குனர் ?
ப: மகேந்திரன்

கே:பிடித்த படம் ?
ப: உதிரிப் பூக்கள்

கே: தற்போதைய அரசியல் சூழலை எப்படி பார்க்கிறீர்கள் ?
ப : வருகிற ஜூன் 16 முதல் 20 வரை சர்வதேச திரைப்பட மற்றும் குறும்பட விழா கேரளாவில் நடைபெற உள்ளது. கேரள அரசு இதனை நடத்துகிறது. இதில் திரையிடுவதற்காக 15 படங்கள் தேர்வு செய்யப்பட்டன.இதில் மூன்று படங்களை  (ரோகித் வெமுலா , காஷ்மீர் ,நேரு பல்கலைக்கழகம் தொடர்பானது )திரையிட மத்திய அரசு மறுத்து விட்டது.இதுதான் மத்திய அரசு.
ஜனநாயக சக்திகளின் தோல்விதான் , முற்போக்கு சக்திகளின் தோல்வியில்தான் மோடியின வெற்றி என்று நான் நினைக்கிறேன். மக்களின் மனதில் மென்மையான மோடி இருக்கிறது.அதனால்தான் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஒவ்வொரு விலங்கிற்கும் உள்ள உணவு , கலவி ( இனப்பெருக்கம்) போல மற்றொரு  அடிப்படையான உணர்வு ( basic instinct ) வன்முறை. மனிதர் மனதில் உள்ள வன்முறை கல்வி ,நாகரிகத்தால் ஆற்றுப் படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை உணர்வை தட்டி எழுப்பி மனிதர்களை மோதச் செய்வதில்தான் பாசிசச் சக்திகளின் வெற்றி இருக்கிறது. இப்போது அதைத்தான் செய்து வருகிறார்கள். இல்லையென்றால் காஷ்மீரில் இராணுவ ஜீப்பில் கட்டி வைக்கப்பட்ட இளஞைனுக்காக மக்கள் வெகுண்டு எழாமல் விவாதம் நடத்துவார்களா என்ன ?

கே: உங்கள் உழைப்பிற்கேப்ப அங்கீகாரம் உங்களுக்கு கிடைத்து  இருக்கிறதா ?
ப: நிச்சயமாக . இந்த ஆண்டு திராவிடர் கழகம் எனக்கு சமூக நிதிக்கான விருது வழங்கியுள்ளது. இதனை நான் பெருமையாக கருதுகிறேன்.எள்னுடைய பல ஆவணபபடங்களுக்கு விருதுகள் , பாராட்டுகள் கிடைத்து உள்ளன. கடந்த மாதம் கோழிக்கோடு நகரில் நடந்த Youth Spring Film Festival ல் honorary director   ஆக என்னை தேர்ந்து எடுத்தார்கள்; ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்குவார்கள், இந்த ஆண்டு எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. என் படத்தை திரையிட்டார்கள் , அதைப்பற்றி பேசினார்கள்.இப்போது சென்னையில் பத்து இடங்களில் என்னால் படங்களை திரையிடச் செய்ய முடியும். இதைவிட என்ன  அங்கீகாரம் வேண்டும் ?

பேட்டி: பீட்டர் துரைராஜ்.