Tuesday, April 19, 2016

திராவிடக் கட்சிகள் ஒன்றுமே செய்யவில்லையா?



திராவிடக் கட்சிகள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
அறுபதுகளின் இறுதியில் உயர் சாதியினரிடமிருந்து பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு (சூத்திரர்களுக்கு) அரசியல் அதிகாரம் கை மாறியது.
அதற்கு திமுகவும் அதிமுகவும் தான் காரணம். இல்லையென்றால் இங்கே பார்ப்பனர் மட்டுமே அரசியல் செய்திருப்பர்.
திராவிடக் கட்சிகள் மூலமாக சூத்திரர்கள் தங்களை வளர்த்துக்கொண்டார்கள்.
கல்லூரிகள், பள்ளிகள், விடுதிகள், தொழில் வளர்ச்சி, விவசாயத்தில் வளர்ச்சி, மீன்பிடித் தொழில், தோட்டத்தொழில், போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர் விநியோகம், மின்சாரம், வீட்டு வசதி என தமிழ்நாடு சூத்திரர் பார்வையில் வளர்ந்தது.
வளர்ச்சி என்ற சிந்தனை குக்கிராமங்களுக்கும் போனது.
மதிய உணவை காமராஜர் தான் கொண்டு வந்தார் என்றாலும் எம்ஜியார் சத்துணவு என்று அதை மேம்படுத்தவே செய்தார்.
இந்தியாவிற்கே முன்மாதிரியான மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.


இன்னும் பல மாநிலங்களில் பெருநகரங்களைத் தாண்டி பேருந்தே இல்லை. குஜராத்தில், சென்ற மாதம் நான் போன போது தனியார் வேனில் தான் கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து வசதிகள் இருப்பதைப் பார்ததேன்.
பொது சுகாதாரம் என்பது இன்னும் பலருக்கு எட்டாக்கனி. மதுரை மருத்துவக் கல்லூரி மாதிரியான ஒரு மாநில அரசு நடத்தும் கல்லூரி வேறு எந்த இரண்டாம் நிலை நகரங்களிலும் இல்லை.
தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டு கொள்கையை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். 69% இட ஒதுக்கீடு இந்தியாவில் எங்கும் இல்லை. அதாவது 31% தான் பொது கோட்டா. இதற்கான அரசியல் சூழல் உருவானதற்கு திராவிடக் கட்சிகள் தான் காரணம்.
சோசலிசம் பேசினார்கள். எம்ஜியார் சினிமாப் பாடல்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும். அதை வைத்து அரசியல் செய்தார்கள் என்றால் அதை மக்கள் நம்பினார்கள் என்று தானே அர்த்தம்.
வெல்ஃபேர் ஸ்டேட் என்கிற வளர்ச்சி மாதிரியை தமிழகம் பிற எந்த மாநிலத்தைவிடமும் செயல்முறைப் படுத்துவதில் முன்னணியில் நின்றது.
சூத்திரர்கள் மைய அரசியலுக்கு வந்தனர். மாவட்டச்செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ. அமைச்சர், போலீஸ் அதிகாரி, நீதிபதி ஆனார்கள்.
கொங்கு பகுதியில் கவுண்டர்கள் அடைந்திருக்கும் பொருளாதார வெற்றிக்கு அவர்கள் உழைப்பு மட்டுமா காரணம்? அதற்கு உகந்த சூழலை, வாய்ப்புகளை திராவிடக் கட்சிகள் தான் உருவாக்கின. இல்லையென்றால் நாயக்கர்கள் தான் இன்னும் கோலோச்சிக்கொண்டிருப்பர்.
சோசலிசம் படிப்படியாக, முதலாளித்துவமாகி பிறகு குரோனி கேபிடலிசம் என்று இப்போது தமிழகம் தேக்கநிலையை அடைந்துவிட்டது.
மண்ணையும் கல்லையும் விற்று வருமானம் பார்ப்பது பொருளாதாரத்தின் சரிவையே காட்டுகிறது.


அதே போல சூத்திரர்கள் ஆதிக்க சாதி ஆனார்கள். தாம் பெற்ற அதிகாரத்தை தலித்துகளுடன் பகிர்ந்து கொள்ள மறுத்தனர். அவர்களை வன்முறை கொண்டு ஒடுக்கப் பார்த்தனர்.
தங்களை முதலாளிகளாக, ஆண்ட பரம்பரையாக உருவகப்படுத்திக்கொண்டனர்.
தாம் பெற்ற பொருளாதார வெற்றி அவர்களுக்கு அகங்காரத்தை மட்டுமல்ல, பயத்தையும் கொடுத்தது. தாம் அடைந்த வசதி வாய்ப்புகளை தலித்துகளிடம் இழந்து விடுவோமோ என்று பயந்தனர்.
தலித் எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்தனர். தங்கள் தலை மீதே தீ வைத்துக்கொண்டனர்.
என்றைக்கு மேலவளவு முருகேசன் (தலித்/திமுக உறுப்பினர்) தலையை வெட்டி கிணற்றில் போட்டனரோ, அன்றைக்கே தொடங்கியது அவர்களின் வீழ்ச்சி.
சூத்திரர்களை வாக்கு வங்கிகளாகக் கொண்ட திராவிடக் கட்சிகள் தலித் உரிமை என்று வரும் போது மெளனம் காத்தனர். தாம் செய்ய வேண்டியதை அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் செய்யவில்லை. சூத்திரர்களுக்கே முன்னுரிமை கொடுத்தனர். அவர்களுக்கு வலிக்காமல் வைத்தியம் பார்த்தனர்.
இஸ்லாமியருக்கு எதிரான ஒடுக்குமுறையிலும் திராவிடக் கட்சிகள் இந்துத்துவ அரசியலுக்கு சளைத்தவரில்லை.
இப்போது திராவிட கட்சிகள் தம்மைப் புதுப்பித்துக்கொள்ள முடியாத முட்டுச்சந்துக்குள் போய்விட்டனர்.
சூத்திரர்களின் அற வீழ்ச்சியே திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சியாகப் பரிணமித்தது. இரண்டு சக்திகளையும் பிரித்துப் பார்க்க முடியாது.
ஆணவக் கொலை என்பது இந்த வீழ்ச்சியின் உச்சக்கட்டம். இனி அவர்கள் ஆர்.எஸ்.எஸ், எனும் பார்ப்பனக் கும்பலிடம் (எந்த கும்பலிடம் இருந்து விடுதலை பெற்றனரோ) சரண் அடைவது தான் பாக்கி.
இரண்டாயிரத்திற்குப் பிறகு எழுந்த புதிய கேள்விகளான சுற்றுச்சூழல் பாதிப்பு, அணுமின் எதிர்ப்பு, ஈழப்போர் ஆகியவற்றுக்கு பதில் சொல்லக்கூடிய நிலையிலும் திராவிடக்கட்சிகள் இல்லை.
திராவிடக் கட்சிகளிடம் தாம் பதில் இல்லையே தவிர திராவிட அரசியல் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.
பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, மதச்சார்பின்மை, நாத்திகம், இந்தி எதிர்ப்பு, தமிழ் இன உணர்வு, பெண் விடுதலை, தலித் விடுதலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலியல் சிறுபான்மையினர் உரிமை என திராவிட அரசியல் உயிர்ப்போடே இருக்கிறது.
இது மேலும் தமிழ்த்தேசிய அரசியல், மார்க்சிய அரசியல், அம்பேத்கரிய அரசியலுடன் இணைந்து பயணிப்பதன் மூலமே ஆர்.எஸ.எஸ். மற்றும் கார்ப்பரேட் தாக்குதலை வீழ்த்த முடியும்.
தமிழகம் எதிர் நோக்கி இருக்கும் சவால்களை எதிர்கொள்ள முடியும்.