Saturday, October 5, 2013

வரலாறு நம்மை மன்னிக்காது!


பினோசே எனும் ஒரு சர்வாதிகாரி சிலி நாட்டில் ஜனாதிபதியாக இருந்தார். அவர் ஆட்சியில் ஜனநாயகம் அடித்து நொறுக்கப்பட்டது. மாற்றுக்கருத்துடையவர்கள் காணாமல் போனார்கள். தேர்தல் நிறுத்தப்பட்டது. பாராளுமன்றம் களைக்கப்பட்டது. ஆனாலும் அங்கு தொழில் வளர்ச்சி இருந்தது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆனார்கள். மத்திய தர வர்க்கத்தினர் மேலும் மகிழ்ச்சியடைந்தனர். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆனார்கள். பழங்குடியினரும் கருப்பின மக்களும் விளிம்புக்கு வெளியே தள்ளப்பட்டனர். வன்முறை அதிகரித்தது. ஏற்ற தாழ்வும் வறுமையும் அதிகரித்தது. குடிசைகள் அதிகரித்தன. அடிப்படை வசதிகள் இல்லாமல் நான்கில் மூன்று பகுதி மக்கள் அவதிப்பட்டனர். ஆனாலும் அமெரிக்காவுக்கு பினோசேயை பிடித்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு அவரைப் பிடித்தது. சோசலிஸ்ட் ஆட்சி வராமல் இருந்தால் சரி அவர்களுக்கு. நாட்டுக்குள் யாரும் அவர் ஆட்சியில் நடந்த அநியாயங்களைத் தட்டிக்கேட்க முடியவில்லை. மனித உரிமை ஆர்வலர்கள் மட்டும் தான் கத்தினார்கள். போராடினார்கள். செத்து மடிந்தார்கள். காணாமல் போனார்கள். மிகுந்த சிரமப்பட்டுத் தான் பினோசேயை ஆட்சியில் இருந்து நீக்க முடிந்தது சிலி நாட்டு மக்களால். அதன் பிறகும் அவரைத் தண்டிக்க முடியவில்லை. அவர் செய்த அநியாயங்களுக்கு அவரை யாருமே ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து அங்கேயே இறந்தும் போனார். சிலியின் வரலாற்றின் அவமானச்சின்னம் பினோசே.



மோடி ஒரு ஆர் எஸ் எஸ் காரர். அவர்களுக்கென்று ஒரு இந்துத்துவ அரசியல் உண்டு. காந்தியும் நேருவும் அம்பேத்கரும் உருவாக்கிய, உருவாக்க முயன்ற இந்தியாவுக்கு எதிரான கருத்து உடையவர்கள் ஆர். எஸ். எஸ். காரர்கள். ஒரு இந்து, இந்தி நாட்டை உருவாக்குவதே அவர்களின் கனவு. அமெரிக்காவுக்கும் முதலாளிகளுக்கும் பிடித்த மாதிரியான ஒரு இந்து நாட்டை மோடி உருவாக்கினால் இங்கு என்ன நடந்தாலும் யாரும் கேட்கப் போவதில்லை. மேலும் மேலும் மக்களிடம் இருந்து வளங்கள் பிடுங்கி எடுக்கப்பட்டு முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படும். மக்களது உரிமைகள் முடக்கப்படும். முதலாளிகள் ஒன்றும் புனிதர்கள் இல்லை. அவர்கள் மேலும் ரத்தம் வேண்டுவார்கள். அப்போதும் மோடி அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவார். பார்ப்பனர்களுக்கு பிடித்த மாதிரியான முதலாளிகளுக்குப் பிடித்தமாதிரியான இயற்கைக்கு எதிராக, ஏழைகளுக்கு எதிராக, தலித்துகளுக்கு எதிரான, ஆதிவாசிகளுக்கு எதிரான, தமிழ் மொழிக்கு எதிரான, பிற இந்திய மொழிகளுக்கு எதிரான, பிற மதங்களுக்கு எதிரான, தமிழர்களுக்கு எதிரான ஒரு ஆட்சியை மோடி உருவாக்குவார். அதனால் தான் நாம் அவரை எதிர்க்க வேண்டும்.

இப்போதே ராணுவ அதிகாரிகள் பலர் மோடிக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்கள். பாகிஸ்தான் மீது போர் என்று மோடி போனால் எல்லா ஊடகங்களும் அவர் பின்னால் ஓடுவார்கள். அப்புறம் ஜனநாயகம் என்றால் என்ன விலை என்று கேட்பார்கள். தரகர்களுக்கு நல்ல வாழ்க்கை காத்திருக்கிறது!

மேலும் மோடி ஒரு சர்வாதிகாரி என்பதை குஜராத்தில் வேலை செய்யும் எந்தக்கட்சிக்காரரிடமும் எந்த களப்பணியாளரிடமும் எந்த கலைஞரிடமும் பத்திரிக்கையாளரிடமும் நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். பாஜகவுக்குள்ளேயே இரண்டாம் நிலை தலைவர்களே இல்லை எனும் அளவுக்கு ஜனநாயகம் அங்கே பரிதாபமாக இருக்கிறது.




உங்களுக்கு சர்வாதிகாரி தான் வேண்டும் என்றால் மோடி சரியானவரே! ஆனால் சர்வாதிகாரி ஆட்சி என்றால் என்னவென்று தெரியாமல் அப்பாவித்தனமாக சர்வாதிகாரி தான் வேண்டும் என்று பேசுவது சரியா என்பதும் கேள்வி!

ஜெர்மனியில் ஹிட்லர் என்று ஒரு சர்வாதிகாரி இருந்தார். அவரும் அவரது நண்பர் இத்தாலியின் முசோலினியும் நம்பிய பாசிச ஆட்சி நம் முன்னே நடந்தேறியிருக்கிறது. அறிவியலும், பணமும், முதலாளிகளும், தொழிற்சாலையும், ராணுவமும், சுயநலமான மத்திய தரவர்க்கமும், ஜால்ரா போடும் ஊடகங்களும் ஒரு சர்வாதிகாரிக்குத் துணை போனால் என்ன நிகழும் என்பதற்கு ஹிட்லர் ஒரு நல்ல உதாரணம். அதை மறந்து விடக்கூடாது. வரலாறு நம்மை மன்னிக்காது.