Saturday, March 1, 2014

ஜான் ரூஷ் எனும் இனவரைவியல் ஆவணப்பட இயக்குநர்

அமுதன் ஆர்.பி.


உலகில் எடுக்கப்பட்ட முதல் முழுநீள ஆவணப்படம் என்று கருதப்படும் 1922ல் ராபர்ட் ஃப்ளகர்டி எடுத்த ”நானூக் ஆப் தி நார்த்” ஒரு இனவரையியல் ஆவணப் படம் என்று அழைக்கப்படுகிறது. (அதுவே நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட ஒரு மீட்பு (சால்வேஜ்) ஆவணப்படம்  என்ற விமர்சனத்திற்கு உள்ளானது; ஐரோப்பியர்கள் நாகரிகமாக இருப்பதாகவும் பிறர் தரித்திரத்தில், காட்டுமிராண்டிகளாக இருப்பதாகவும் அவர்களை மீட்கவேண்டும் எனும் ஐரோப்பிய காலனிய சிந்தனையை மீட்பு மனநிலை (சால்வேஜ்) எனலாம்).

ஒரு இனக்குழுவின் பண்பாட்டை, நம்பிக்கைகளை, வாழ்க்கை முறையை மற்றும் கலை வெளிப்பாடுகளை கள ஆய்வு செய்யும், பதிவு செய்யும் கல்விப்புலம் இன வரையியல் எனப்படும். அக்கள ஆய்வு முறை மற்றும் பதிவுகள் எழுத்துப் பூர்வமாக (குறிப்புகளாக), புகைப்படமாக, ஒலிப்பதிவாக, ஆவணப்படமாக, வீடியோ அல்லது திரைப்படப் பதிவாக இருக்கலாம். அத்தகைய இனவரையியல் முறையில் 150க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை குறிப்பாக மேற்கு ஆப்ரிக்காவின் பல இனக் குழுக்களைப் பற்றி ஆவணப்படங்களை இயக்கியவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முனைவர் ஜான் ரூஷ்.

ஆவணப்படங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைப்பட தொழில்நுட்பத்துக்கே, கதை சொல்லும் முறைக்கே, திரையிடும் முறைக்கே,  ஜான் ரூஷ் அவர்களின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சினிமா வெரிடே (சினிமா உண்மை) எனும் படமாக்கும் முறையை செழுமைப்படுத்தியதன் மூலம் அமெரிக்காவின் டிரைக்ட் சினிமா மற்றும் பிரான்ஸின் நியூவேவ் சினிமாவுக்கு ஆக்கப்பூர்வமாக பல தாக்கங்களை கொடுத்தவர். மேலும் மேற்கு ஆப்ரிக்காவில் ஜான் ரூஷ் எடுத்த ஆவணப்படங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்ட இனவரையியல் (shared anthropology) மற்றும் இனவரையியல் புனைவு (ethno fiction) எனும் ஆய்வு மற்றும் பதிவு முறைகளை உருவாக்கி அவற்றின் அடிப்படையில் ஆவணப்படங்களின் சாத்தியங்களை மேலும் அதிகப்படுத்தினார்.


இப்படி எல்லாம் எடுத்தால் ஆவணப் படமா எனும் கேள்விகளை ஜான் ரூஷ்ஷின் படங்களைப் பார்க்கையில் தவிர்க்க முடியாது. மேலும் இவரது படங்கள் இனவரையியில் வட்டங்களுக்கு வெளியே இனக்குழுக்கள் பற்றிய புரிதல்களில் தவறான விளைவுகளையும், முன்முடிவுகளையும், குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. புனைவு இனவரையியல் எப்படி இனவரையியல் ஆகும் என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆப்ரிக்க மக்களை ஜான் ரூஷ் பூச்சிகளைப் போல பார்க்கிறார் என்று ஆப்ரிக்க திரைப்பட இயக்குநர் செம்பேன் ஆஸ்மேன் விமர்சித்தார்.

ஆனாலும் முனைவர் ஜான் ரூஷ் அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஏனெனில் இயக்குநருக்கும் படத்தில் கதைமாந்தர்களுக்க்கும் அல்லது புனைவுக்கும் அ-புனைவுக்குமான இடைவெளியை அல்லது எல்லையை மங்கலாக்கி முற்றிலும் புதியதொரு ஆவணப்பட வகையை ஜான் ரூஷ் உருவாக்கினார். மேலும் ஜான் ரூஷ் எடுத்த இனவரையியல் ஆய்வு ஆவணப்படங்கள், இனவரையியில் தொடர்பான ஆய்வுகளுக்கு, கல்வி புலத்திற்கு, புரிதல்களுக்கு, விவாதங்களுக்கு சர்வதேச அளவில் புதிய வெளிச்சத்தைக் கொடுத்தன.

1917 மே 31ம் நாள் பாரிஸ் நகரில் பிறந்த ஜான் ரூஷ் தனது தந்தை கடல் பற்றிய ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்ததால் சிறுவயதிலேயே பல நாடுகளுக்குப் (ஜப்பான், மொராக்கோ, செனகல்) பயணம் செய்து பலவிதமான மக்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். முதல் முறையாக ஜான் ரூஷ் பார்த்த சினிமா ராபர்ட் ஃப்ளகர்தி எடுத்த நானூக் ஆஃப் தி நார்த் எனும் இனவரையியல் சினிமா என்பது ஆச்சர்யமான பொருத்தம். அந்த சினிமா சிறுவயது ஜான் ரூஷின் மனதில் ஏற்படுத்திய தாக்கம் வீரியமானது. “ஒவ்வொரு இரவும் நானூக்கின் நாய்க்குட்டிகள் இக்லூவில் தூங்கியதைப்போல படுக்கையில் சுருண்டு படுத்துக்கொள்வேன்” என்று குறிப்பிடுகிறார் ஜான்.



ஐரோப்பாவை சர்ரியலியசம் சிந்தனை ஓட்டத்தில் பெரும் வீச்சை ஏற்படுத்திய காலம் அது. இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய பாரிஸ் நகரத்தில் கலையிலும் இலக்கியத்திலும் நிலவிய அவந்த் கார்டே போக்குகள் ஜான் ரூஷ்ஷை வெகுவாகப் பாதித்தன. ஆனால் ஃப்ரான்ஸின் மீதான ஜெர்மனியின் படையெடுப்பு எல்லாக்கனவுகளையும் உடைத்து எறிந்தது. “திடீரென்று எல்லாம் நடந்து முடிந்தன; அதற்கு பிறகு எதுவுமே முன்பைப்போல இல்லை” என்கிறார் ஜான் ரூஷ்.

இங்கிலாந்துக்குத் தப்பிப்போக முயற்சித்தார் என்று பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு நாஜி படைகளால் சிறையில் அடைக்கப்பட்டார் ஜான். பிறகு நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டார். காலனிய ஆப்ரிக்காவுக்கு பாலம் கட்டும் பொறியாளர் வேலை கிட்டியதும் (பொறியாளர் படிப்பு படிந்திருந்தார்) வாய்ப்பை இறுக்கப்பற்றி ஃப்ரான்ஸை விட்டு வெளியேறினார். 1941 அக்டோபர் மாதம் நைகர் நாட்டில் பத்தாயிரம் கொத்தடிமைத் தொழிலாளர்களைக் கொண்டு சாலை போடும் பொறுப்பை ஏற்றார். அவருடன் பின்னாட்களில் சக ஆய்வாளராக, சில சமயம் நடிகராக இணைந்து பணியாற்றிய டமூர் ஜிகா என்பவரை உதவியாளராக தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.

1942 ஆகஸ்ட் மாதத்தில் சாலைப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்த ஜான் ரூஷ்ஷின் பத்து தொழிலாளர்கள் மின்னல் தாக்கி இறந்து போனார்கள். இனிமேலும் மின்னல் தாக்காதிருக்க ஜான் ரூஷ்ஷின் உதவியாளர் டமூர் ஜிகா ஒரு யோசனை சொன்னார். தனது பாட்டி மின்னல் பேயை ஓட்டி விரட்டும் சக்தி உடையவர் என்றும் அவர் பேயோட்டும் சடங்குகள் செய்தால் இனிமேல் இது போன்ற ஆபத்துகள் நிகழாது என்றும் ஜிகா கூறியதும் ஒரு பேயோட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தன் வாழ்விலேயே முதல் முறையாக அப்போது தான் அப்படி ஒரு நிகழ்வைப் பார்க்கும் ஜான் ரூஷ் அதைப் படம் எடுக்க முடிவு செய்தார். “பேயோட்டும் நடனத்தை படமாகப் பதிவு செய்து தான் பிறருக்குக் காட்ட முடியும். எழுதினால், சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்” என்று தனக்குத் தோன்றியதாகக் குறிப்பிடுகிறார் ஜான். அப்படித் தொடங்கிய ஜான் ரூஷ்ஷின் இனவரையியல் பதிவுப்பயணம் பின்னாட்களில் சர்வதேச இனவரையியல் ஆய்வுலகத்துக்கு மிகவும் முக்கியமான, குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தது.




ஜான் ரூஷ் எடுத்த ஆவணப்படங்களுக்குள் போவதற்கு முன்பு இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடுவது மிகவும் முக்கியம். ஒன்று அவர் எப்படி 16 எம் எம் கேமராவைக் கையால் இயக்கி (HAND HELD SHOOTING) படம் எடுக்கும் முறையை தனது பாணியாக்கிக்கொண்டார் என்பதாகும். 1946ல் நைகர் நதியில் நடந்த ஒரு நீர்யானை வேட்டையைப் பற்றி படம் எடுக்கும் போது அவர் சென்ற படகில் இருந்து அவரது ட்ரைபாட் அல்லது கேமரா ஸ்டான்ட் தண்ணீருக்குள் விழுந்து விட்டது. ப்ரான்சில் இருந்து ஆப்ரிக்காவில் நைகர் நாட்டுக்கு வந்து ஒரு நதியில் படம் எடுக்கும் போது ஸ்டான்ட் தண்ணீருக்குள் விழுந்தால் என்ன செய்வது? வேறு வழியே இல்லாமல்  16 எம்.எம் பெல்& ஹவெல் கேமராவை கையால் இயக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டார். அப்போது அவர் உணர்ந்த சுதந்தரம் அவருக்கு புதிய வெளிச்சத்தைக் கொடுத்தது. ஒரு புதிய பாணியைக்கொடுத்தது. அன்று முதல் தனது இறுதிப்படம் வரை கையால் (ஸ்டான்ட் எதுவும் பயன்படுத்தாது) கேமராவை இயக்கினார். அவரது கதை சொல்லும் முறைக்கு, அவர் தனது கதைகளைத் தேர்ந்தெடுக்கும் காரணங்களுக்கு, அவற்றைப் படம் எடுக்கும் ஒரு நேரடி, இயல்பான, பாசங்கற்ற, இறுக்கமற்ற பாணிக்கு அவர் தனது கேமராவைக் கையால் இயக்கியது மிகுந்த பங்களிப்பைச் செய்தது. பின்னாட்களில் ஜான் ரூஷ் தழுவிய, செழுமைப்படுத்திய சினிமா வெரிடே (சினிமா உண்மை) எனும் கதை சொல்லும் முறைக்கு இந்த நேரடி, இயல்பான, பாசங்கற்ற, இறுக்கமற்ற, சுதந்தரமான கேமரா அசைவுகள் ஒரு முக்கியமான அங்கமாகும்.

இரண்டாவது சம்பவம் 1954ம் ஆண்டு நைகர் நாட்டில் நடந்தது. தான் எடுத்த Bataille sur le grand fleuve  எனும் ஒரு படத்தை (அதுவும் நீர்யானை வேட்டை பற்றியது என்பது ஒரு ஆச்சர்யமான பொருத்தம்) அந்தப் படத்தில் இடம்பெற்ற “நாயகர்களுக்கு” திரையிட்டார். அதுவரை சினிமாவே பார்த்திராத பார்வையாளர்கள் வெள்ளந்தியாக அந்தப்படத்தில் மயங்கி புகழ்ந்து தள்ளுவதற்குப் பதிலாக ஜான் ரூஷ் அந்தப் படத்தில் இசையைப் பயன்படுத்திய விதம் பற்றி விமர்சித்தனர். மேற்கத்திய பாணியில் சங்கீதத்தை இணைத்திருந்த ஜான் ரூஷ்ஷுக்கு, பார்வையாளர்கள் சொன்ன கருத்து மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. தன் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணம் என்று அந்நாளைப் பற்றிக்குறிப்பிடுகிறார் ஜான். அந்த ஆப்ரிக்க கறுப்பின, சினிமாவே பார்த்திராத பார்வையாளர்கள் சொன்ன கருத்து பின்வருமாறு: “நீர்யானைக்கு கேட்கும் திறன் அபரிதமானது. தண்ணீருக்குள்ளேயே காது கேட்கும். எந்த சத்தம் வந்தாலும் அது கவனித்துவிடும். நீர்யானை வேட்டையின் போது நாங்கள் கடுமையான, கூர்மையான அமைதியைக் கடைபிடிப்போம். அப்போது தான் எங்களது இரையைப் பிடிக்க முடியும். சிறிது சத்தம் கேட்டாலும் நீர் யானை சுதாரித்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடும். இவ்வளவு இசை சேர்த்திருப்பது பொருத்தமானதாக இல்லை. இவ்வளவு இசை கேட்டால் நீர் யானை தப்பித்திருக்கும்” என்றார்கள். அந்தக்கணத்தில் இருந்து சினிமாக்கூறுகள் மீதான பிடிப்பைக் கைவிட்டு, தனது கதை மாந்தர்களின் கருத்துக்களை ஏற்று தனது படங்களை படப்பிடிப்பின் போதும், படத்தொகுப்பின் போதும் மெருகேற்றும் பாணியை ஜான் ரூஷ் தழுவினார்.

ஜான் ரூஷ் எடுத்த முக்கியமான ஆவணப்படங்கள்:




THE MAD MASTERS (LES MAÎTRES FOUS):

ஜான் ரூஷ் எடுத்த படங்களிலேயே மிகவும் சர்ச்சைக்கு உள்ளான, அதே நேரத்தில் மிகவும் கொண்டாடப்படுகிற இந்தப் படத்தில் ஹெளகா எனும் மதப்பிரிவினரின் பேயோட்டும் சடங்குகள் பற்றி சினி-ட்ரான்ஸ் எனும் உச்சநிலை உத்திகளைக் கொண்டு விவரிக்கிறார். சினி-ட்ரான்ஸ் என்கிற பதத்தை ஜான் ரூஷ் ரஷ்ய திரைப்பட இயக்கநர் ஜிகா வெர்டோவ் இடம் இருந்து உருவாக்குகிறார். வெர்டோவ் சினிமா கண்கள், சினிமா காதுகள், சினிமா உண்மை என்று கேமரா என்னவெல்லாம் செய்யக்கூடும் என்று தனக்கென இலக்கணங்களை வகுத்து அதற்கென பதங்களை உருவாக்கினார். சினிமா வெரிடே (சினிமா உண்மை) என்பதும் வெர்டோவ் உருவாக்கிய கினோ ப்ராவ்தா என்பதன் ப்ரெஞ்சு மொழியாக்கமே.

இதுமாதிரியான பேயோட்டும் சடங்குகளைப் படம் பிடிக்க தூரத்தில் எட்டி நின்றால் அந்த நிகழ்வின் உணர்வுகளை எட்ட முடியாது, பார்வையாளர்களுக்கு அரைகுறை அனுபவம் தான் கிடைக்கும் என்கிற காரணத்தால் ஜான் ரூஷ் கேமராவைக் கையால் இயக்கியபடி பேயோட்டும் நடனங்களுக்கு மிகவும் அருகில் அதற்கேற்றபடி முன் பின் நகர்ந்து (நமது ஊர் கர்ணனைப் போல) சில சமயம் பேயோட்டுபவர்கள் கேமராவின் ஒரு அங்கமாகி அவர்கள் கேமராவைப் பின் தொடர்கிறார்களா அல்லது கேமரா அவர்களைத் தொடர்கிறதா எனும் நிச்சயமற்ற நிலையில் கேமராவை இயக்குபவர் பேயோட்டும் நிகழ்வில் ஒன்றாகி கலந்து அடையும் உச்சநிலையை சினி-ட்ரான்ஸ் என்று குறிப்பிடுகிறார் ஜான் ரூஷ்.

இம்முறை போயோட்டும் நடனம் மட்டுமின்றி எல்லா சடங்குகளைப் பதிவு செய்யும் போதும் அதனதன் ஆக்ரோசத்தைப் பொறுத்து மாறுபடும். கதைமாந்தரின் உடல் போகும் போக்கில் கேமரா நெருக்கமாகி பயணப்படுகிறது.

THE MAD MASTERS எனும் இந்த ஆவணப்படம் நிகழும் புவிப்பரப்பு கோல்ட் கோஸ்ட் பகுதியின் அக்ரா எனும் கடற்கரை நகரம் (இன்றைய கானா நாடு). ஹெளகா எனும் மதப்பிரிவினர் பக்தர்களிடம் குறை கேட்டு அவர்களை உசுப்பேற்றுகின்றனர். அப்படியே படிப்படியாக ஆவிகள் வந்திறங்குகின்றன. ஒற்றைக்கம்பி கொண்ட வயலின் இசைக்க, ஆவிகளின் தாக்கத்தினால் பக்தர்கள் தூக்கத்தில் நடப்பது, நாக்கால் மட்டும் பேசுவது, தங்களையே நெருப்பால் சுட்டுக்கொள்வது என்று தொடர்ந்து இறுதியில் மயங்கி கீழே விழுகின்றனர். விலங்குகள் பலி கொடுக்கப்படுகின்றன. ஜான் ரூஷ் இந்நிகழ்வை தூரத்தில் நின்று படம் பிடிக்காமல் நிகழ்வின் அருகில் சென்று கையால் இயக்கிய கேமராவின் வேகமான நகர்வுகள், சிறிய காட்சித்துண்டுகளை ஏற்படுத்தும் துரிதமான எடிடிங் வெட்டுகள் மூலமாக சினி-ட்ரான்ஸ் உத்திகளைப் பயன்படுத்தி படத்தை நகர்த்திச் செல்கிறார்.

ஆனால் இத்தோடு நிற்பதில்லை இந்தப்படம் அல்லது இந்த ஆவியாட்டம். கோல்ட் கோஸ்ட் பகுதியை காலனியாக்கி சுரண்டிக்கொண்டிருக்கும் துரைமார்களும் அவர்களின் பெண்களும் இந்த ஆவியாட்டத்தில் கதாபாத்திரங்களாக வெளிப்படுவர். இப்படி ஒரு அரசியல் நாடகமாகவும் இந்த ஆவியாட்டம் உருமாறுகிறது. கவர்னர் ஜெனரல், பொறியாளர், மருத்துவரின் மனைவி என்று பல கோல்ட் கோஸ்ட்டின் பிரித்தானிய காலனிய ஆட்சியாளர்கள் வேடங்களில் ஆப்ரிக்க கறுப்பின ஹெளகா பக்தர்கள் ஆவியாட்டம் போடுகின்றனர். ஹெல்மெட்டுகள், காக்கி சீருடைகள் எல்லாம் அணிந்து வெள்ளைத் துரைகளை நையாண்டி செய்யும் நிகழ்வுகள் நடக்கின்றன.

இந்த சடங்குகள் முடிந்ததும்  இந்த பேயோட்டத்தில் கலந்து கொண்ட ஹெளகா மதப்பிரிவினர் தங்களது அன்றாட வாழ்க்கையில் தொழிலாளர்களாக, கடை நிலை படை வீரர்களாக, பிக் பாக்கெட் அடிப்பவர்களாக இருப்பதைக் காண்பிக்கிறார் இயக்குநர் ஜான் ரூஷ். இம்மக்கள் எதிர்கொள்ளும் காலனிய ஒடுக்குமுறையின் அழுத்தத்தில் இருந்து இடைக்கால உளவியல் விடுதலையாக இந்தச் சடங்குகள் இருப்பதாக ஜான் ரூஷ் உணர்த்துகிறார்.

MOI, UN NOIR:




வழமையான இனவரையியில் பதிவிலிருந்து விடுபட்டு இணைந்து பணியாற்றுதல் மற்றும் படப்பிடிப்பில் மெருகேற்றுதல் ஆகிய உத்திகளைக் கொண்டு “பகிர்ந்துகொள்ளப்பட்ட இனவரையியல்” மற்றும் “புனைவு இனவரையியல்” என்னும் புதிய தளங்களுக்கு ஜான் ரூஷ் நகர்ந்தது இந்தப் படத்தில் தான் காத்திரமாக வெளிப்பட்டது.

நைகர் நாட்டிலிருந்து ஐவரி கோஸ்ட் நாட்டின் அபிட்ஜன் நகருக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) சிலரது ஒரு வார வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டுகிறது இந்த ஆவணப்படம். இந்தப்படத்தில் சிறப்பு அம்சம் அந்தக் கதாபாத்திரங்களே தங்களைப் பற்றிய வர்ணனையை எழுதி அவர்களது குரல்களையே பதிவு செய்து ஜான் ரூஷ் பயன்படுத்தினார். கதாப்பாத்திரங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப கதையை வடிவமைத்து, அதன் அடிப்படையிலேயே படம் எடுத்தார். புனைவுக்கு அ-புனைவுக்கும் இடையேயான எல்லை மங்கலாவது இங்கு தான். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காட்சிகளை உருவாக்கி, அதன்படி அவர்களை இயக்கி அக்காட்சிகளை புனைவு சினிமா போல காட்டியிருந்தார் ஜான் ரூஷ்.

உதாரணமாக  ஒருவருக்கு ஒரு சினிமா நடிகர் போல தன்னை பாவித்துக்கொள்ள ஆசை எனில் அதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இன்னொருவருக்கு ஒரு குத்துச்சண்டை வீரர் போல தான் காண்பிக்கப்படவேண்டும் என்றால் அதற்கும் சரி. ஏனெனில் ஒருவரின் “உண்மையான” வாழ்க்கை எப்படி முக்கியமோ அதே போல அவரது கற்பனை வாழ்க்கையும் – அவரது கனவுகள், ஆசைகள், ஏக்கங்கள்- முக்கியம். ஒருவருக்கு ஒரு ஹாலிவுட் நடிகையுடன் உல்லாசமாக இருக்க ஆசை இருக்கலாம். இன்னொருவருக்கு கிடைக்கிற காசுக்கு குடித்துவிட்டு மயங்கிக்கிடக்க ஆசை இருக்கலாம். இவற்றையும் ஒரு ஆவணப்படத்தில் (புனைவும் அ-புனைவும் இணைந்து) புனைவு இனவரையியல் படமாக ஜான் ரூஷ் எடுத்திருக்கிறார்.

இன்னும் விளக்கமாக சொன்னால் ஒரு புனைவு சினிமாவில் ஒரு ஏழை கதாபாத்திரம் ஒரு காரில் போக வேண்டும் ஆசைப்பட்டால் அவர் ஒரு காரில் போகிற மாதிரியான காட்சியைக் காட்டி இப்படி அவர் ஆசைப்பட்டார் என்று கூறமுடியும். ஏனெனில். அன்றாட வாழ்க்கையில் ஒருவர் செய்யும் செயல்கள் மட்டும் அவரது உண்மையான தன்மை அல்ல. ஒருவரின் கனவும் கற்பனையும் சேர்ந்து தான் அவரது ஆளுமை உருவாக்கப்படுகிறது இதையே ஜான் ரூஷ் தனது ஆவணப்படத்தில் இணைத்திருப்பதால் இந்த ஆவணப்படம் ஒரு புனைவுத் தன்மை பெறுகிறது.

உதாரணமாக இந்தப்படத்தில் இடம் பெறும் ஒமாரு காண்டா எனும் நபர் எட்வர்ட் ஜி.ராபின்சன் எனும் ஹாலிவுட் நடிகராகத் தன்னைப் பாவித்துக்கொள்கிறார். அப்படியே வசனங்கள் பேசுகிறார். தான் இடம் பெறும் காட்சிகளுக்கு மட்டுமின்றி மொத்தப்படத்திற்கே மனம் போன போக்கில் வர்ணனை செய்கிறார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் வசிக்கும் ட்ரஸ்வில்லா எனும் குடிசைப்பகுதியின் வறுமை பற்றியும் தான் துறைமுகத்தில் கடினமாக வேலை செய்வது பற்றியும் தனது வர்ணனையில் குறிப்பிடுகிறார். வார இறுதியில் ராபின்சனும் அவரது நண்பர்களும் கடற்கரைக்கும் பார்களுக்கும் உல்லாசமாக இருக்கப் போகின்றனர். அங்கேயும் அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுவதையும் இப்படம் காட்டுகிறது.




MOI, UN NOIR எனும் இந்தப்படம் மேலும் ராபின்சன், காம்பி எனும் ஒரு கறுப்பின நைகர்காரியை திருமணம் செய்ய வேண்டும் என்றும் கனவு காண்பதைக் காட்டுகிறது. அவளை டோரத்தி லாமூர் எனும் ஹாலிவுட் நடிகையாக கற்பனையும் செய்து பார்க்கிறார் ராபின்சன். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நெடுந் துயரங்களையும், அவ்வப்போது கிட்டும் கொண்டாட்டங்களையும் அவர்களது உளவியல் சிக்கல்களுடன் இந்தப்படம் விவரிக்கிறது. ஜான் ரூஷ்ஷின் இந்த புத்தாக்கம் பிரஞ்சு நாட்டின் புதிய அலையை (நியூவேவ்) தீர்க்கமாகப் பாதித்தது. இவரது இந்த இணைந்த படமாக்கல் முறை ஆப்ரிக்க சினிமாவுக்கு புதிய உந்துதலைக் கொடுத்தது.

THE LION HUNTERS

மாலி மற்றும் நைகர் நாடுகளின் எல்லையில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக படம் பிடிக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தில் சன்கோய் மக்களின் கவ் வேட்டைக்காரர்கள் நிகழ்த்தும் சிங்கவேட்டை ஜான் ரூஷ் பதிவு செய்துள்ளார்.

நைகர் நதிக்கரையில் தொடங்கும் இந்த ஆவணப்படம் வடக்கு நோக்கி வெகு தூரத்தில் இருக்கு புதருக்குப் பயணப்படுகிறது. அங்கு இருக்கும் பாலைவனத்தில் வசிக்கும் கால்நடை வளர்ப்பவர்களான ஃபுலானி இன மக்கள் தங்கள் பகுதியில் “அமெரிக்கன்” எனும் சிங்கம் பசுக்களை இரக்கமற்று கொன்று குவிப்பதால் அதை அழிக்கவேண்டும் என்று கவ் வேட்டைக்காரர்களைக் கேட்டுக்கொள்கின்றனர். அந்த சிங்கம் மிகவும் சூழ்ச்சிக்கார சிங்கமாக இருப்பதால் அதற்கு “அமெரிக்கன்” என்று பெயரிட்டிருந்தனர்.

சங்காய் சமூகத்தின் அதிகாரப்பூர்வ வேட்டைக்காரர்களான கவ் வேட்டைக்காரர்கள் வேட்டைக்கு முன்பு நீண்ட சடங்குகளை மேற்கொள்கின்றனர். மரக்கிளைகளில் இருந்து அம்பு, வில் ஆகியவற்றை தயாரிப்பது தொடங்கி, போடோ எனும் விஷத்தை தயாரித்து அதை அம்புகளில் பூசுவதும், அதன் பிறகு பிரமிக்க வைக்கும் நடனங்களும் மந்திரங்கள் ஓதுவதும் நிகழ்கின்றன. பொறிகளைத் தயார் செய்து குள்ளநரிகளுக்கும் காட்டுப்பூனைகளுக்கும் வைத்து தாங்கள் தயாரித்த விஷத்தை சோதிக்கின்றனர். ஆனாலும் “அமெரிக்கனை” பிடிப்பதற்கு இந்த விஷம் போதுமானதாக இல்லை.



தான் நேரில் பார்த்துப் பெற்ற அனுபவத்தைப் பார்வையாளர்களும் பெறவேண்டும் என்பதை மனதில் கொண்டே இந்தப் படத்தை எடுத்ததாகச் சொல்கிறார் ஜான் ரூஷ். THE LION HUNTERS வேட்டையின் அருகாமையை வெளிக்கொணர்கிறது. மேலும் அதன் பின்னிருக்கும் சிக்கலான சமூக அமைப்பைத் தேட முயல்கிறது.

படப்பிடிப்பின் போது எல்லாக் கணங்களிலும் வேட்டைக்காரர்களிடம் தொடர்ந்து கருத்துக்களைக் கேட்டபடியே இருந்தார். உள்ளூர் குழந்தைகளுக்கு அவர்களின் பூர்வக்கதையை சொன்னது போல அமைந்த ஜான் ரூஷஷின் வர்ணனையின் கட்டமைப்பில் ஒரு வளமான கதை உருவாகிறது. கிராமத்தினர் சிங்கத்தோடு அமைதியாக இணைந்து வாழ்கின்றனர். இந்த உடன்படிக்கையை சிங்கம் மீறி கிராமத்தினரின் கால்நடைகளை கொலை செய்யும் போது தான் கிராமத்தினர் கவ் வேட்டைக்காரர்களை உதவிக்கு அழைக்கின்றனர் என்கிறது ஜான் ரூஷ்ஷின் வர்ணனை. இறுதியில் காயமடைந்த சிங்கம் கிராமத்தினர் ஒருவரைத் தாக்க முயலும் போது வேட்டைக்காரனின் அம்பு ஒன்று சிங்கத்தின் இதயத்தை பாய்ந்து வேட்டையையும் படத்தையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது.

JAGUAR

ஆப்ரிக்காவின் உட்கிடை நாடான நைகர் நாட்டிலிருந்து ஆப்ரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்திருக்கும்   கோல்ட் கோஸ்ட் (தற்போது கானா நாடு) பகுதிக்கு புலம் பெயர்ந்து செல்லும் லாம் இப்ராகிம், இல்லோ கொடிலிஸ் மற்றும் ஜானின் ஆஸ்தான நடிகர் டெமூர் ஜிகா ஆகிய மூன்று இளைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி ஜான் ரூஷ் இயக்கியிருக்கும் மிகுந்த கவனிப்புக்கும் பாராட்டுகளுக்கும் உள்ளான இனவரையியல் புனைவுப் படம் இது.



ஆப்ரிக்க மக்களின் ஆப்ரிக்காவிற்குள்ளான உட்புலம்பெயர்வு பற்றி தான் செய்த கள ஆய்வின் அடிப்படையில் ஜான் ரூஷ் (1956ல் அதை Migrations au Ghana எனும் ஒரு நூலாகவும் வெளியிட்டார்) மூன்று கதைமாந்தர்களுடன் இணைந்து திறந்த மனதுடன் மெருகூட்டியபடி உருவாக்கப்பட்ட கதைகூறல் கொண்ட படம் ஜாகுஆர். 1950களின் மத்திய காலத்தில் இம்மூவரின் பயணத்தைப் படம் பிடித்தார் ஜான். பிறகு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்து அம்மூவருக்கும் நினைவுக்கு வரும் விஷயங்களைக் கொண்டு வர்ணனை மற்றும் உரையாடல்களைப் பதிவு செய்தார். இதன் விளைவாக ஒரு விளையாட்டுத்தனமான ஆவணப்படம் மூன்று ஆப்ரிக்க ஆண்கள் தங்களது பண்பாட்டின் இனவரையியலை நிகழ்த்திக்காட்டியதன் மூலம் உருவானது. இது இயக்குநர் மற்றும் மூன்று ஆப்ரிக்க கதைமாந்தர்கள் இணைந்து கூட்டுமுயற்சியில் உருவான ஒரு பகிர்ந்துகொள்ளப்பட்ட இனவரையியில் மற்றும் இனவரையியில் புனைவு ஆவணப்படம்.

இது ஒரு பகிர்ந்துகொள்ளப்பட்ட இனவரையியல். ஏனெனில் இயக்குநர் ஜான் ரூஷ் ஒரு ஐரோப்பியர். படிப்பாளி. கேமராவைக்கையாளுகிறவர். அவர் கையில் ஒரு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அவர் மட்டும் தன்னிச்சையாக செயல்படவில்லை. கதைமாந்தர்களாக இவர் தெரிவு செய்தவர்களான மூன்று ஆப்ரிக்க கறுப்பின ஆண்கள் தங்களது புரிதல், அனுபவம், ரசனை, மதிப்பீடுகள் ஆகியவற்றைக்கொண்டு வெறும் நடிகர்களாக மட்டும் இல்லாமல் கதையின் போக்கைத் தீர்மானிக்கும் பங்கேற்பாளர்களாகவும் செயல்படுகின்றனர். எனவே தான் இதை ஜான் ரூஷ் ஒரு பகிர்ந்துகொள்ளப்பட்ட இனவரையியல் என்கிறார். மேலும் இது ஒரு இனவரையியில் புனைவு. ஏனெனில் மூன்று ஆப்ரிக்க ஆண்கள் என்ன செய்யலாம் என்று இயக்குநருடன் இணைந்து முடிவு செய்து புலம்பெயர்வு பற்றி ஒரு இனவரையியல் கதை உருவாக்கி அதன் படி காட்சிகளை நிகழ்த்தினர். அதையே படம் பிடித்தார் ஜான் ரூஷ். சில ஆண்டுகள் கழித்து இந்தக் காட்சிகளைப் பார்த்த மூன்று கதை மாந்தர்களும் தங்களுக்கு நினைவுக்கு வந்த விஷயங்களை வசனங்களாக, வர்ணையாகப் பேச அதையே ஒலிப்பதிவு செய்தார் ஜான். எனவே இது ஒரு இனவரையியல் புனைவு என்கிறார்.

JAGUAR எனும் இப்படம் நைகர் நாட்டின் அயுரு எனும் ஒரு சந்தைப்பகுதியில் மூன்று ஆண்கள் (கதாநாயகர்கள்) வேலை செய்து கொண்டிருக்கிற காட்சியுடன் தொடங்குகிறது. கோல்ட் கோஸ்ட் நாட்டிற்கு வேலைக்குப் போனவர்கள் செல்வாக்காகத் திரும்பி வருவதைப் பார்த்தவுடன் இவர்களும் கோல்ட் கோஸ்ட் பகுதிக்கு அடிமைகள் கொண்டு செல்லப்பட்ட பாதையிலும் போர்வீரர்கள் சென்ற பாதையிலும் புதர்க்காடுகள் வழியாக கால்நடையாகக் கிளம்புகின்றனர்.


மூவரில் இருவர் அக்ரா நகரத்திற்கும் ஒருவர் குமாசி நகருக்கும் போகின்றனர். அக்ராவிற்கு போனவர்களில் ஒருவருக்கு நல்ல வேலையும் சம்பாத்தியமும் கிடைக்கிறது. மற்றொருவர் படிப்பறிவு இல்லாததால் சிரமப்படுகிறார். நகர வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை இருவரும் கற்றுக்கொள்கின்றனர். குடி, உல்லாசம், சமூக ஏற்றதாழ்வு ஆகியன முகத்தில் அறைகின்றன.

சிறிது காலம் கழித்து மூவரும் இணைந்து ஒரு கடையைத் தொடங்குகின்றனர். நல்ல வருமானம் கிடைக்கிறது. பணத்துடன், கதைகளுடன் நைகர் நாட்டுக்குத் திரும்புகின்றனர்.

இந்தப்படம் வெறும் ஒரு இனவரையியல் படமாக அமையாமல் ஜான் ரூஷ்ஷும் அவரது சக ஆய்வாளர்களும் இணைந்து (மூன்று நடிகர்கள்) ஒரு புதுவகையான கட்டுக்கதையை உருவாக்கினர் என்றே சொல்லலாம்.

Chronique d’un été 

1961ல் எட்கர் மோரின் என்பவருடன் இணைந்து ஜான் ரூஷ் இயக்கிய ஒரு சினிமா வெரிடே இலக்கணப்படம் Chronique d’un été . தனது சொந்த இனத்தவரான பாரிஸ் நகரத்து மக்களை நோக்கி கேமராவைத் திருப்பும் ஜான் ரூஷ் ஜிகா வெர்டோவ் உருவாக்கிய கினோ ப்ராவ்டா (சினிமா உண்மை) என்பதை ஒட்டி கேமராவின் மூலம் ஒரு உண்மையை உருவாக்குகிறார். நடுநிலைமை என்பதைப் பற்றி அக்கறை கொள்ளாமல் கேமராவைக்கொண்டு பாரிஸ் நகரத்தில் வசிக்கும் வெள்ளை இனத்தவரை “நீங்கள் மகிழ்ச்ச்சியாக இருக்கிறீர்களா?” என்று ஒரே ஒரு கேள்வி கேட்டு அதன் மூலம் மக்களை தூண்டி விட்டு ஒரு முன்முடிவு செய்யப்பட்ட உண்மையை நிலைநாட்டுகிறார் ஜான் ரூஷ். கேமரா மறைந்திருந்து காவியம் படைக்காமல் துருத்திக்கொண்டு முன்வந்து “சினிமா உண்மை”யை உருவாக்குகிறது.

இப்படி ஜான் ரூஷ் உருவாக்கிய சினிமா வெரிடே (சின்மா உண்மை) அமெரிக்காவின் டிரைக்ட் சினிமா மற்றும் பிரஞ்சு சினிமா நியூ வேவ் ஆகிய இயக்கங்களுக்கு ஒரு உந்துதலாக இருந்தது.

Jaguar, Moi un Noir போன்ற படங்கள் போல் அல்லாமல் இந்தப் படத்தின் செய்தி தெளிவாக இருக்கிறது. உரையாடல்கள் அரசியல் சார்பு கொண்டவையாக அல்ஜீரியாவின் மீதான பிரஞ்சு ஆதிக்கம், நாஜிப் படையினர், ஆப்ரிக்கா ஆகிய தலைப்புகளில் அரசியல் ரீதியாக தீவிரவமாக செயல்படுகிறவர்களின் பேட்டிகள் அமைந்து ஒரு “சினிமா உண்மை” உருவாக்கபடுகிறது. மற்ற படங்களைப் போல இந்தப் படத்திலும் படத்திற்கு படப்பிடிப்பு குழுவினர் தயார் ஆவது, படப்பிடிப்பு, திரையிடல்கள், அவற்றில் நிகழ்ந்த உரையாடல்கள் ஆகியனவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது படத்தின் நடுநிலைமையை ஆட்டம் காண வைத்தாலும் உருவாக்கப்பட்ட உண்மைக்கு மற்றும் அரசியலுக்கு இந்தப்படம் உறுதியாக இருக்கிறது. அதற்கு சாதகமான காட்சிகள், தொழிலாளர்களின் கதைகள், நாஜி படைகளின் வன்முறையை வெளிப்படுத்தும் சித்ரவதை முகாம்கள் பற்றிய நினைவுகள் மற்றும் ஆப்ரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் அனுபவங்கள் ஆகியன “சினிமா உண்மை”க்கு ஆதாரமாக விளங்குகின்றன.

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா எனும் ஒற்றைக்கேள்வியுடன் தொடங்கும் இந்தப்படம் உருவாக்கும் விவாதங்கள் மற்றும் உரையாடல்கள் சமகால பாரிஸ் நகரத்து வாழ்க்கையப் பதிவு செய்து சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது. இந்தப்படத்தின் இயக்குநர்களான ஜான் ரூஷ் மற்றும் மோரின் ஆகியோர் தான் 16எம்.எம். கேமராவை முதன் முதலாக வீதியில் கையால் கையாண்டு (hand held), தெருவிலேயே ஒலியைப் பதிவு செய்து படம் எடுத்தவர்கள். இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராவுல் கொதார்ட் பின்னாட்களில் எடுக்கப்பட்ட எல்லா முக்கியமான பிரஞ்சு சினிமாவிற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அதன் மூலம் இந்தப்படம் பிரஞ்சு புதிய அலை இயக்கத்திற்கும், பிற ஆவணப்படங்களுக்கும் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இறுதியாக:
18 பிப்ரவரி, 2004ம் ஆண்டு நைகர் நாட்டில் ஒரு சாலை விபத்தில் இறக்கும் வரை ஜான் ரூஷ் படங்கள் எடுத்தபடி இருந்தார். 150 இனவரையியல் ஆவணப்படங்கள்.  அவர் பல சமயங்களில் இனவரையியல் ஆய்வாளர். சில சமயங்களில் ஆவணப்பட இயக்குநர். வெகு சில சமயங்களில் தான் இனவரையியல் ஆவணப்பட இயக்குநர். தொடர்ந்து இனவரையியல் பற்றி வகுப்புகள் எடுத்தபடியே இருந்தார். கட்டுரைகள் எழுதபடியே இருந்தார். இனவரையியல் வட்டாரங்களுக்கு வெளியே அதிகம் தெரியாதவராக இருந்தாலும் ஆவணப்பட வட்டாரங்களில் இனவரையியல் ஆவணப்பட இயக்குநராகவே அறியப்படுகிறார். ஆனாலும் சினிமா வெரிடே எனும் சினிமா மொழியின் ஊற்று அவர்தான். உலகெங்கும் எடுக்கப்படும் அரசியல் ஆவணப்படங்களுக்கு ஆதாரமாக சினிமா வெரிடே எனும் மொழி விளங்குகிறது என்பது கவனிக்கப்பட வேண்டியது.

வாழ்நாளில் மூன்றில் இரண்டு பகுதியை மேற்கு ஆப்ரிக்காவில் ஜான் ரூஷ் கழித்தாலும் ஒரு ஐரோப்பியராகவே கடைசிவரை வாழ்ந்தார் என்றும் மரக்கட்டைகள் எவ்வளவு தான் ஆற்றில் ஊறிக்கிடந்தாலும் முதலையாக முடியாது என்றும் அவர் கறுப்பர்கள் பற்றி நூற்றுக்கும் மேற்பபட்ட படங்கள் எடுத்தாலும் கறுப்பர் ஆகிவிட முடியாது என்றும் அவரது பார்வை ஒரு ஐரோப்பியப் பார்வையாகவே இருந்தது என்றும் பல விமர்சனங்களை எதிர்கொண்டபடியே இறந்துபோனார். ஒரு சமூகத்தை மற்றொருவர் பிரிநித்துவப்படுத்த முடியாது எனும் அரசியல் சூத்திரம் அவரது கடின உழைப்பை, அர்ப்பணிப்பை, ஆளுமையை, கலையார்வத்தை அடித்துச்சென்றுவிட்டது. ஆனாலும் அவர் உருவாக்கிய ஆப்ரிக்க கறுப்பின நடிகர்களும் இயக்குநர்களும் இப்போது தமது சொந்த மொழியில், சொந்த பாணியில் ஆவணப்படங்களையும் புனைவுப்படங்களையும் எடுத்தபடியே உள்ளனர். இனவரையியல் கள ஆய்வுப்பணியில் அவர் உருவாக்கிய செயலாக்க முறைகள், இலக்கணங்கள், தொழில்நுட்பங்கள், வார்த்தைகள், அணுகுமுறைகள் எல்லா ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு களஞ்சியமாகவே விளங்குகின்றன.