Wednesday, August 15, 2012

பாட்ரிசியோ குஸ்மான்

“ஆவணப்படங்கள் இல்லாத நாடு,
புகைப்பட ஆல்பம் இல்லாத குடும்பத்தைப் போன்றது”
– பாட்ரிசியோ குஸ்மான்

பேட்ரிசியோ குஸ்மான்: சிலியின் தார்மீகக்குரல்
- அமுதன் இராமலிங்கம் புஷ்பம்



1941ல் சிலி நாட்டின் தலைநகரான சந்தியாகு நகரில் பிறந்த பேட்ரிசியோ குஸ்மான், சர்வதேச அரசியல் ஆவணப்பட இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர். 1973ல் குஸ்மான் இயக்கிய BATTLE OF CHILE (சிலியின் போராட்டம்) உலகின் தலைசிறந்த 10 அரசியல் படங்களில் ஒன்றாகக் கருத்தப்படுகிறது.

தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் குஸ்மான் ஐரோப்பாவிலும் லத்தின் அமெரிக்காவிலும் ஆவணப்படங்கள் பற்றி வகுப்புகள் எடுத்தபடி பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பத்துக்கும் மேற்பட்ட படைப்புகளுடன் தனது பயணத்தைத் தொடர்கிறார். அவர் கடைசியாக 2011ல் எடுத்த “வெளிச்சத்திற்கான நினைவேக்கம்” (NOSTALGIA FOR THE LIGHT) என்ற ஆவணப்படம் கான்ஸ் திரைப்படவிழா உள்ளிட்ட பல சர்வதேசத் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்றது.

1950களின் இறுதியில் தன் பதின்பருவத்தில் (Adolescent) கிரிஸ் மார்கர், லூயி மால் போன்ற தலைசிறந்த ஆவணப்பட இயக்குநர்களின் படைப்புகளைக் காணும் வாய்ப்பு பெற்று ஆவணப்படங்களின் பால் ஈர்க்கப்பட்ட பேட்ரிசியோ குஸ்மான், சிலியின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் சினிமா படித்துவிட்டு ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட் நகரில் அரசு திரைப்படக்கல்லூரியில் இயக்குநருக்கான பட்டப்படிப்பு பயின்றார்.

உலகின் நீளமான/ஒல்லியான நாடு:

தென் அமெரிக்காவின் தென்மேற்கு ஓரத்தில் ஒரு பூரான் வடிவத்தில் நீண்டிருக்கும் உலகிலேயே நீளமான (4506 கிமி) நாடு சிலி. கத்தோலிக்க ஸ்பானியர்கள் பெரும்பாலாக வாழும் இந்நாட்டில் பூர்வீக்க்குடிகள் எல்லாம் ஐரோப்பிய குடிபெயர்ந்தவர்களால் அழித்தொழிக்கப்பட்டு அதிபர் ஆட்சி முறை நடந்து வருகிறது. 1500களில் தொடங்கிய ஸ்பானிய காலனியமயமாக்கலின் விளைவாகவும், வன்முறையாலும், ஐரோப்பிய வியாதிகளான அம்மை போன்ற வியாதிகளுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாததாலும் பூர்வீக குடிமக்கள் பெருவாரியாக மடிந்து போய் சிறுபான்மையினராக வாழ்ந்துவரும் நாடு. வந்தேறிகளான ஐரோப்பியர்கள் பெரும் வசதியுடனும் பூர்வகுடிளான பழங்குடியினர்கள் மற்றும் அடிமைகளாக வந்த கறுப்பர்கள் பஞ்சத்திலும் வாழும் தென் அமெரிக்காவின் சிங்கப்பூர் என்றழைக்கப்படும் நாடு சிலி. 

சிலியின் சோசலிசம்:

1971ம் ஆண்டு பேட்ரிசியோ குஸ்மான் தனது சொந்த நாடான சிலிக்குத் திரும்பியபோது, அதுவரை வலதுசாரி/மிதவாத கிறிஸ்தவ அரசாங்கங்கள் ஆட்சி செய்த சிலியில் அமெரிக்க அதிபர் நிச்சனால் வேசியின் மகன் என்று அழைக்கப்பட்ட சல்வடார் ஆலண்டே தலைமையிலான புதிய சோசலிச அரசு பதவியேற்று இருந்தது. உலகிலேயே முதன்முதலாக ஜனநாயக ரீதியாக தேர்தல் முறையில் வெற்றிபெற்று உருவான சோசலிச தேசிய அரசாங்கம் இதுவென்பது கூடுதல் சிறப்பாகும். ஆலன்டே பதவியேற்பதை கூடியவரை தடுக்க நினைத்த அமெரிக்க அரசின் “உள்குத்து” முயற்சிகள் சிலியில் வீசிய புதிய அலையால் தற்காலியமாக முறியடிக்கப்பட்டன.



சிலியின் சோசலிசம் என்ற பெயரில் அதிபர் ஆலண்டே செல்வந்தர்களிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றி ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தல், தனியார் தாமிரத் தொழிற்சாலைகளை மற்றும் வங்கிகளை அரசுடைமையாக்குதல், கல்வி, மருத்துவம் மற்றும் வீட்டு வசதியை அரசே ஏற்று நடத்துதல், ஏழைகளுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல், குழந்தைகளுக்கு இலவசமாகப் பால் வழங்குதல், குறைந்தபட்ச கூலியை உயர்த்துதல், பொது விநியோக முறையை அறிமுகப்படுத்தி விலைவாசியைக் கட்டுப்படுத்துதல் போன்ற மாற்றங்களைக் கொண்டு வந்தார். தீவிர மற்றும் வெகுசன கலைவடிவங்களை அரசே நிதியுதவி செய்து ஊக்குவித்தது. பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கும் எழுத்தறிவு இல்லாதவர்களுக்கும் வாக்குரிமை என்ற சட்டம் கொண்டுவந்து பெருவாரியான பொதுமக்கள் நாட்டை நடத்துவதில் பங்கேற்பது ஊக்குவிக்கப்பட்டது. சமூக வளர்ச்சிக்கான நிதி குறிப்பாக வீடு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிக்கு நிதி அதிகரிப்பட்டதன் மூலம் நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. ஆலண்டேக்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தன்னார்வமுள்ள இளைஞர்களும் இளம்பெண்களும் பொதுசேவையில் ஈடுபட கிராமங்களுக்குக் கிளம்பிச்சென்றனர். க்யூபாவின் அதிபர் பிட்ரெல் காஸ்ட்ரோ ஒரு வாரம் சுற்றுப்பயணம் வந்து சிலியில் நடக்கும் மாற்றங்களினால் உற்சாகமடைந்து இரண்டு வாரங்களுக்குத் தங்கினார்.


இந்தச்சூழல் தனியார் முதலாளிகளுக்கும், நிலஉடமையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும், பெரும் லாரி உரிமையாளர்களுக்கும் நெருக்கடியைக் கொடுத்தது. வலதுசாரி கட்சியான தேசியக்கட்சியினரும், கத்தோலிக்க திருச்சபையும், சிலியின் மற்றுமொரு பிரதான கட்சியான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும் சல்வடார் ஆலண்டேயின் இந்த முயற்சிகளை எதிர்த்தனர். வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களும் அமெரிக்க அரசும் பெரும் அதிருப்தி அடைந்தனர்.


இந்தச்சுழலின் பின்னணியில் தான் பாட்ரிசியோ குஸ்மான் தனது முதல் ஆவணப்படமான முதல் வருடம் (THE FIRST YEAR) என்ற படத்தை எடுத்தார். சல்வடார் ஆலண்டே அரசின் முதல் வருடப் பணிகளை, முயற்சிகளை, அவ்வரசு கொண்டு வந்த சமூக மாற்றங்களை, புதிய அலையை இந்தப்படம் பதிவு செய்திருந்தது. வணிகத்திரையரங்குகளில் இந்தப்படம் திரையிடப்பட்டது.

அப்போது சிலி நாட்டிற்கு வந்த பிரஞ்சு ஆவணப்பட இயக்குநர், புகைப்படக்கலைஞர் மற்றும் எழுத்தாளர் கிறிஸ் மார்கர் குஸ்மானின் “முதல் வருடம்” என்ற படத்தைப் பார்த்தார். பிரான்ஸ் நாட்டில் திரையிடுவதற்கும் ஏற்பாடு செய்தார். பின்னாட்களில் பாட்ரிசியோ குஸ்மான் எடுத்த சிலியின் போர் (BATTLE OF CHILE) என்ற மூன்று பாகங்கள் கொண்ட படத்தொடருக்கும் கிறிஸ் மார்கர் படச்சுருள் கொடுத்து உதவியிருக்கிறார்.

சிலியின் போர் (BATTLE OF CHILE)


சல்வடார் ஆலன்டேயின் சோசலிச அரசு கொண்டு வந்த புரட்சிகரமான மாற்றங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆனால் முதலாளிகளும் திருச்சபையும் வலதுசாரி அடிப்படைவாத கட்சிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் அமெரிக்க அரசும் கடும் கோபம் கொண்டன. லாரி உரிமையாளர்கள் பெரும் வேலை நிறுத்தம் ஒன்றை நடத்தி அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். முதலாளிகளும் வன்முறையில் ஈடுபட்டனர். ஆலன்டேக்கு ஆதரவாக இடதுசாரி தீவிரவாதக்குழுக்களும் போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்க அரசின் சதிக்கு ஒத்துழைக்க மறுத்த ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த சூழல் பேட்ரிசியோ குஸ்மானையும் பாதித்தது. 1971 முதல் 1973 வரை சிலியில் நடந்த அரசுக்கு ஆதரவான எழுச்சியையும் அரசுக்கு எதிராக முதலாளிகளும் தனியார் ஊடகங்களும் அமெரிக்க உளவுத்துறையும் எதிர்கட்சிகளும் நடத்திய சதிவேலைகளையும் வன்முறையையும் பேட்ரிசியோ குஸ்மான் படம்பிடிக்கத் தொடங்கினர்.

அமெரிக்காவிற்கு ஆதரவான ராணுவ அதிகாரி ஜெனரல் அகஸ்டோ பினோச்சே தலைமையில் சிலியின் சோசலிச அரசுக்கு எதிராக ராணுவப்புரட்சி நடந்து ஜனநாயகம் தூக்கி எறியப்பட்டது. ஆட்சிக்கவிழ்ப்பு நடைபெற்று சிலியின் அதிபர் சல்வடார் ஆலன்டே தனது நண்பர் காஸ்ட்ரோ கொடுத்த துப்பாக்கியைக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் வரை, தான் கைது செய்யப்படும் வரை குஸ்மான் படப்படிப்பு நடத்திக்கொண்டேயிருந்தார். ஆயிரக்கணக்கானோருடன் சிலியின் தேசிய மைதானத்தில் 15 நாட்கள் சிறைவைக்கப்பட்டிருந்தார். விடுதலை செய்யப்பட்டதும் படச்சுருளுடன் ஐரோப்பாவிற்குத் தப்பி ஓடினார். படத்தொகுப்பு செய்வதற்கு பணமில்லை. க்யூபாவின் தேசிய திரைப்படக் கல்லூரி உதவ முன்வந்தது. ஹவானாவிற்குச் சென்று படத்தொகுப்பை முடித்து மூன்று பாகங்கள் கொண்ட படமான “சிலியின் போராட்டம்” (BATTLE OF CHILE)யை வெளியிட்டார்.

நவம்பர் 1974ல் “சிலியின் போராட்டம்” ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜோர்ஜே ம்யூலர் சில்வா, பினோச்சே ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு “காணாமல்” போனார். இந்தக்கட்டுரை எழுதும்வரை அவரைப் பற்றி எந்தத் தகவலும் யாருக்கும் தெரியாது. ம்யூலரைப் போன்று 3500 பேர் பினோச்சே அரசால் “காணாமல்” போகியிருக்கின்றனர்.

“சிலியின் போராட்டம்” மூன்று பாகங்களைக் கொண்டது. முதல் பாகமான “பூர்சுவாக்களின் கலகம் (INSURRECTION OF BOURGEOUISIE) நூறு நிமிடங்கள் ஓடக்கூடியது. இப்பாகம் சல்வடார் ஆலன்டேயின் சோசலிச அரசின் மக்கள் மையப்பணிகளுக்கு எதிராக முதலாளிகளும், அமெரிக்க அரசும் இணைந்து நடத்தி கலகம் பற்றியது. லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம், மத்தியதர வர்க்கத்தினர் (அன்னா ஹஜாரேயினர் இங்கு நடத்துவது போல) வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதன் மூலமாக சிலியின் பொருளாதாரத்தை, பொது நிர்வாகத்தைக் குலைத்தது, தெருக்களில் வன்முறையில் ஈடுபடுவது, புரளிகளைக் கிளப்பி அரசின் மீதான நம்பிக்கையைச் சிதைத்தது, ஆலன்டேயின் ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஆலன்டேயை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கான முஸ்தீபுகளில் இறங்கியதை நேரடியாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் பேட்ரிசியோ குஸ்மான்.

இரண்டாவது பாகத்தில் ராணுவ அதிகாரி ஜெனரல் அக்ஸ்டோ பினோச்சேயின் தலைமையில் ராணுவத்தினர் புரட்சி செய்து அதிபர் மாளிகையை குண்டு வீசி தகர்ப்பது வரை ஒரு புனைவுப் படத்தின் திட்டமிட்ட காட்சியமைப்பு போல, ஒழுங்கு படுத்தப்பட்ட நிகழ்த்துகலை போல ஜனநாயகம் துப்பாக்கி முனையிலும் டாலர் மழையிலும் நொறுங்கி விழ்வதை நம் கண் முன்னே விரித்துக்காட்டுகிறார் பேட்ரிசியோ குஸ்மான். இடதுசாரிக்குழுவினரிடம் இருந்த பிரிவுணர்வு, வலதுசாரிக் குழுவினரிடமிருந்த ஒற்றுமை ராணுவப்புரட்சிக்கு வழிசெய்து கொடுத்ததையும் இறுதியாக தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு அதிபர் சல்வடார் ஆலன்டே துப்பாக்கியுடன் ஆட்சியைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது, வீழ்ச்சியை உணர்ந்து ஆலன்டே வானொலியில் மக்களுக்கு உரையாற்ற முயல்வது, இறுதியாக ராணுவப்புரட்சி நடந்து பினோச்சேயின் தொலைக்காட்சி நிகழ்ச்சி வரை சிலியின் சோசலிச முயற்சிகள் முறியடிக்கப்படுவதை மிகுந்த கவலையுடன் விவரிக்கிறார் குஸ்மான்.


மூன்றாவது பாகத்தில் சோசலிச அரசுக்கும் பூர்சுவாக்களுக்கும் இடையே நடந்த போராட்டங்களுக்கு வெளியே சாதாரண மக்கள் சல்வடார் ஆலன்டேயின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் முதலாளிகளின் தடைகளை மீறி கிராமக்கமிட்டிகளை அமைப்பது, சிறிய கடைகளைத் திறந்து பொருட்களின் தட்டுப்பாட்டைக் குறைக்க முயன்றது, பண்ணைகளை, தொழிற்சாலைகளைக் கைப்பற்றி உற்பத்தியை, சகஜ வாழ்க்கையைக் காக்க முயன்றது, கறுப்பு சந்தையை, பதுக்கல் கும்பலை வீழ்த்தியது, தங்கள் நலனுக்காக வந்த அரசாங்கத்தை எதிரிகளான முதலாளிகளிடமிருந்து காக்க முயன்றது போன்ற உணர்வுப்பூர்வமான ஜனநாயகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் குஸ்மான்.

இந்த அரசு தமது அரசு என்ற சிந்தனையுடன் அதற்கு தரப்படும் நெருக்கடியை முறியடிக்க வேண்டும் என்று தொழிலாளிகளும், சிறு விவசாயிகளும், பழங்குடியினரும் (தங்களது மூதாதையரைக் கொன்று அமைக்கப்பட்ட ஸ்பானிய வந்தேறி அரசாக இருப்பினும்), மாணவர்களும், சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம் பற்றிய பிரதிபலிப்பு தான் மூன்றாவது பாகம்.



“சிலியின் போராட்டம்” தனது முதல் திரையிடலை (PREMIERE) 1975 கான்ஸ் திரைப்படவிழாவில் நிகழ்த்தியது. 10க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைப் பெற்றது. 35 நாடுகளில் திரையரங்குகளில் வணிகரீதியாக வெளியிடப்பட்டு பெறும் வெற்றி பெற்றது. “கொலை அல்லது சதி பற்றிய எந்த ஒரு ஹாலிவுட் படத்தைக் காட்டிலும் விறுவிறுப்பாகவும் பதட்டமாகவும் இருந்தது சிலியின் போராட்டம்” என்று ஜூடி ஸ்டோன் என்ற விமர்சகரும் இந்தப் படத்தை பள்ளிக்கூடத்தில் பாடமாக வைக்கவேண்டும் என்று மானுவல் வாஸ்குவஸ் என்ற விமர்சகரும், “எந்தப்படமும் தராத ஒரு வரலாற்றுப்பாடத்தை சிலியின் போராட்டம் கொடுக்கிறது” என்று லூயி மார்கொரல்லஸ் என்ற விமர்சகரும் அந்த வருட கான்ஸ் திரைப்படவிழாவிலேயே சிறந்த படம் இதுதான் என்று காம்பியோ பத்திரிக்கையும் பாராட்டின/ர்.

எந்த ஒரு பெரிய சினிமா தயாரிப்பு அனுபவம் இல்லாமல் 5 நபர் குழுவைக் கொண்டு ஒரு நாட்டில் நடக்கும் ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டத்தைப் பதிவு செய்திருப்பது எல்லாத் தரப்பிலும் மிகுந்த கவனத்தைப் பெற்றது. தான் வீதிகளில் நடக்கும் போராட்டத்தைப் பதிவு செய்யும் போது ஒளிப்பதிவாளர் பின் நின்று கொண்டு ஒவ்வொரு கணத்தையும் வரும்முன் கணித்து முன் பின் நகர்ந்தும் கேமராவை உயர்த்தியும் தாழ்த்தியும் ஒரு புனைவு சினிமாவைப் பதிவு செய்வது போல பதிவு செய்ததாக பேட்ரிசியோ குஸ்மான் கூறுகிறார்.

நியூயார்க் பத்திரிக்கை சிலியின் போராட்டம் பற்றி குறிப்பிடும் போது “பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது” என்றும் நியூயார்க் போஸ்ட் “முழுமையாக ஆட்கொண்டுவிட்டது” என்றும் நியூயார்க் டைம்ஸ் “இது ஒரு காவியம்” என்றும் வில்லேஜ் வாய்ஸ் “நம் காலத்தின் மிகப்பெரிய அரசியல் படம்” என்றும் ஜீடி ஸ்டோன் “நடப்பு அரசியலை சினிமாவில் பதிவு செய்வதில் இது ஒரு மைல்கல்” என்றும் பாராட்டின/ர். 1997 வரை ஜெனரல் அகஸ்டோ பினோச்சேயின் சிலியில் இந்த ஆவணப்படம் தடை செய்யப்பட்டிருந்தது. ஜாக்குலின் மூஸ்கா என்ற எழுத்தாளர் தனது “பிளானோ செகுன்சியா டி லா மெமோரியா டி சிலே” என்ற நூலில் பேட்ரிசியோ குஸ்மான் சிலியின் சிறந்த ஆவணப்பட இயக்குநர் மட்டுமல்ல, உலகின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர்” என்று குறிப்பிடுகிறார்.

சிலியின் சோசலிச ஆட்சி, பினோச்சேயின் ஆட்சி கவிழ்ப்பு, அதனால் ஏற்பட்ட விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி பேட்ரிசியோ குஸ்மானின் விசாரணை பார்வையாளரின் உள்ளத்தை உலுக்குவதாகவும் புரட்சி, ஒடுக்குமுறை, நம்பிக்கை, நினைவுகள் மற்றும் துயரமான கணங்களை கடந்துபோதல் ஆகியவற்றை நுட்பமாகவும் தைரியமாகவும் இந்தப்படம் (படங்கள்) பதிவு செய்திருப்பதாக நீண்ட காலத்திற்கு கருதப்படும் என்று அர்ஜென்டினாவின் முக்கிய சிந்தனையாளர், எழுத்தாளர், மனித உரிமைப் போராளி ஏரியல் டார்ப்மான் கூறுகிறார்.

“உலகில் மிகச்சிறிய எண்ணிக்கையிலேயே ஆவணப்பட இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் நான்கைந்து நல்ல படைப்புகள் வருகின்றன. நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்” என்றும் “சிலியின் போராட்டம்” படத்தைத் தயார் செய்யும் போது கல்வியாளர் மத்தியில் கவனத்திற்குள்ளாகும் என்று தான் நினைத்தேன். இப்படி பெருவாரியாக வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை” என்றும் “எனது பணி கதை சொல்வது…. உணர்ச்சிவசப்படாமல் கதை சொல்வது, சாதாரண மனிதர்களைப்பற்றி... தன்னளவில் தாமே தமது கதையைக்கூறும் பிம்பங்களை, வர்ணனையாளரின் இடையீடு இல்லாமல் தருவது தான்” என்றும் பேட்ரிசியோ குஸ்மான் கூறுகிறார்.



“உங்கள் இளமைக் காலத்தில் உங்கள் அதிர்ச்டம் காரணமாகவும் பல தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய படைப்பை நீங்கள் உருவாக்கக்கூடும். உங்களுக்கு அனுபவமும் முதிர்ச்சியும் ஏற்படும்போதுதான் அதன் முக்கியத்துவம் புரிகிறது. இனியொரு “சிலியின் போராட்டத்தை” எடுக்கமுடியாது. முக்கியமான ஒரு காலகட்டத்தில் ஒரு படம் எடுக்க எனக்கு வாய்ப்பு கிட்டியது. இது திரும்ப நிகழ வாய்ப்பில்லை. தீவிரவாதத்தன்மை (MILITANT) அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எடுக்கப்பட்ட ஆவணப்படங்களில் ஒரு முக்கிய கூறாக இருந்தது. DIRECT CINEMA என்று அழைக்கப்பட்ட வெளிப்படையான சினிமா (கனடாவிலும் அமெரிக்காவிலும் நிலவிய டாகுமென்டரி எடுக்கும் முறை)வும் முக்கியமான அலையாக வீசியது” என்று அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியார் ஜார்ஜ் ருபிநெல்லிக்கு அளித்த பேட்டியில் பேட்ரிசியோ குஸ்மான் குறிப்பிடுகிறார்.

சிலியில் பதவிக்கு வந்த சோசலிச அரசு, அதற்கு எதிராக அமெரிக்க சதியுடன் நிகழ்ந்த ஆட்சி கவிழ்ப்பு, பினோச்சேயின் ராணுவ ஆட்சி, அதில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், முதலாளித்துவத்தை முன்வைத்த அரசியல் பொருளாதார நிர்வாகம் ஆகியன பேட்ரிசியோ குஸ்மானை எவ்வளவு தூரத்திற்குப் பாதித்தது என்றால் 2004 வரை அவர் தயாரித்த பத்து படங்களில் 7 படங்கள் இந்த பிரச்சனையை பின்புலமாக வைத்தே எடுக்கப்பட்டன. அறம் சார்ந்த அரசியலில் நம்பிக்கை உள்ள எந்தப் படைப்பாளியும் இப்படித்தான் இயங்கமுடியும். இத்தகைய இயக்குநர்களும் படைப்பாளிகளும் முழுமையடையாத ஒரு அரங்கேற்றத்தை அடைந்துவிட தொடர்ந்து முயல்வது போலே இருக்கிறது.



“கடவுளின் பெயரால்” (IN THE NAME OF GOD) 1985-86ல் குஸ்மான் எடுத்த அடுத்த முக்கியமான ஆவணப்படம். 95 நிமிடங்கள் ஓடக்கூடியது.

சிலியின் கத்தோலிக்க திருச்சபை 1985யை ஒட்டிய காலங்களில் சர்வாதிகார பினோச்சேயின் ராணுவ ஆட்சியின் கொடுமைகளுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் இணைந்து போராடிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படம். இதனைத் தொடர்ந்து ‘தெற்கத்திய சிலுவை (SOUTHERN CROSS) என்ற ஆவணப்படத்தை குஸ்மான் இயக்கி 1992ல் வெளியிட்டார். லத்தீன் அமெரிக்க மதநம்பிக்கைகளை மையச் சரடாகக் கொண்டு கொலம்பஸின் வருகைக்கு முந்திய அமெரிக்க பழங்கதைகளில் தொடங்கி, வெள்ளைக்காரர்களின் வருகை, பிற்காலத்திய முரண்(பட்ட மதங்களின்)கலப்பு (SYNCRETISM), மற்றும் விடுதலை இறையியல் வரையிலான நீண்ட வரலாற்றுப் பயணத்தை இந்தப்படத்தில் மேற்கொள்கிறார் பேட்ரிசியோ குஸ்மான்.

வட அமெரிக்காவோடு ஒப்பிடும்போது தென் அமெரிக்காவில் கத்தோலிக்க மதமும், பாரம்பரியமான மதநம்பிக்கைகளும் கலந்திருப்பதையும் அரசியல், பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றில் மதநம்பிக்கைகள் கலந்திருப்பதையும் மதச்சார்பின்மையற்ற முதலாளித்துவ முன்னெடுப்புகளுக்கு இங்கு கடும் எதிர்ப்புகள் இருப்பதையும் காணலாம். ஆயுதம் தாங்கிய இடதுசாரிகுழுக்களும், இடது சாரி அரசுகளும் இங்கு அதிகம் என்பதையும் கவனிக்கலாம். மதநம்பிக்கைகள் மனித மாண்புகளைக் காப்பதற்கான போராட்டத்தில் ஒரு அங்கம் வகிப்பதையும் பழங்குடிகளின் பெண்தெய்வ வழிபாட்டு முறையும் கத்தோலிக்க மதத்தின் மரியன்னையும் இணையும் புள்ளிகளையும் லத்தீன் அமெரிக்காவில் காணலாம். போராட்டக்குழுக்கள் தீவிர மதநம்பிக்கை உடையனவாகவும், திருச்சபையின் பிரசங்கமேடையும் பலிபீடமும் அநீதிக்கு எதிரான முழக்கமிடும் தளமாக மாறியதையும் நூற்றுக்கணக்கான பாதிரியார்களும் மதகுருக்களும் ராணுவ ஆட்சிகளுக்கு எதிராகவும் பெரும் முதலாளிகளுக்கு எதிராகவும் போராடி உயிர் நீத்தகதைகளும் லத்தீன் அமெரிக்காவில் உண்டு.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த முரண்(பட்ட மதங்களின்)கலப்பில் லட்சக்கணக்கான பூர்வகுடிமக்கள் விடுதலை தேடி தஞ்சம் புகுந்த வரலாற்றை பேட்ரிசியோ குஸ்மான் தனது படத்தில் விளக்குகிறார். இடதுசாரி சிந்தனை கொண்ட குஸ்மானுக்கு இந்த முரண்கலப்பு ஒரு விடுதலைக்களமாகவே தெரிகிறது.

இந்த வாதத்தை நமது இந்திய ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தனின் ‘கடவுளின் பெயரால்’ (IN THE NAME OF GOD) என்ற படத்தில் காணலாம். இந்துமதவாதிகள் பாபர் மசூதியை இடிக்க முயற்சி செய்யும் போது அங்குள்ள சிறிய ராமர் கோயிலின் அர்ச்சகர் பூஜாரி லால் விஸ்வ ஹிந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தள் உள்ளிட்டோரைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார். தனது பேட்டியில் ராமரும் ஒரு கம்யூனிஸ்ட் தான் என்கிறார். ராமராஜ்யத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தது என்கிறார். இந்துத்துவவாதிகள் ராமருக்கு எதிரானவர்கள்; பாபர் மசூதியை இடிப்பதை நான் எதிர்க்கிறேன் என்கிறார். பின்னாட்களில் பூஜாரிலால் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை மீறல், சித்ரவதை, நாடு கடத்துவது, ஒடுக்குமுறை ஆகியன கிறிஸ்தவத்தன்மையல்ல என்று பேட்ரிசியோ குஸ்மானின் ‘கடவுளின் பெயரால்’ (IN THE NAME OF GOD) என்ற படத்தில் பிசப் ஜார்ஜ் ஹூர்டன் கூறுவதையும் (ஒடுக்குமுறையில் ஈடுபடும் இந்த சிலியின்) ஆட்சியாளர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பது எனக்கு தீர்க்கமாகிவிட்டது என்று இறையிலாளர் ரோனால்டோ மூனோஸ் கூறுவதையும் நாம் கவனிக்கலாம். என்னை கம்யூனிஸ்ட் என்கிறார்கள்; நான் பதிலுக்கு இவர்களை முதலாளித்துவ சிந்தனை உடையவர்கள் என்றும் நாத்திகர்கள் என்றும் அழைக்கமுடியும் என்று கார்டினல் சில்வா ஹென்ட்ரிக்யூஸ் கூறுவதையும் நாம் கவனிக்கலாம். தென் அமெரிக்காவில் மதநம்பிக்கைகள் (பன்மையில்) நீதிக்கான போராட்டத்தில் ஒரு அங்கம் வகிப்பதையும் ஒடுக்கப்பட்டவர்கள் மதநம்பிக்கைகளில் சரணடைவதையும் நாத்திகரான பேட்ரிசயோ குஸ்மான் தனது மேற்குறிப்பிட்ட இரு படங்களில் வெளிப்படுத்துகிறார்.

பேட்ரிசியோ குஸ்மானின் அடுத்த ஆவணப்படம் மறுபடியும் சிலியைப் பற்றியும் செல்வடார் ஆலன்டேயின் ஆட்சிக்கு எதிராக அமெரிக்க உதவியுடன் அகஸ்டோ பினோச்சே நடத்திய ராணுவப்புரட்சி, அதனால் முறியடிக்கப்பட்ட சோசலிசக்கனவு பற்றியுமே ஆகும். ஆனால் இம்முறை 25 வருடங்கள் கழித்து இந்தக்கனவை மறந்து போன புதிய, முதலாளித்துவ சிலி நாட்டில் குஸ்மான் தொலைந்து போன இந்நினைவுகளைத் தேடுகிறார். ‘சிலி, தீராத நினைவுகள்’ (CHILE, OBSTINATE MEMORIES) என்கிற இந்தப்படம் செப்டம்பர் 11, 1973ம் ஆண்டு நடந்த சிலியில் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு பற்றிய படமான ‘சிலியின் போராட்டம்’ (BATTLE OF CHILE) என்கிற குஸ்மானின் முதல் படத்தைப் பற்றியது.

ஆட்சிக்கவிழ்ப்பிற்குப் பிறகான  பினோச்சேயின் ராணுவ ஆட்சியில் பேட்ர்சியோ குஸ்மான் சிலிக்குப் போகமுடியவில்லை. 1998ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு குஸ்மான் தனது முதல் படத்தை 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக சிலியில் திரையிடுகிறார். செல்வடார் ஆலன்டேயின் சோசலிச ஆட்சி மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்கள், அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது அதை நேரில் கண்டவர்கள், இதைப் பற்றி எதுவுமே தெரியாத இளைஞர்கள் எல்லோரும் குஸ்மானின் ‘சிலியின் போராட்டம்’ என்கிற ஆவணப்படத்தைப் பார்க்கின்றனர். நினைவுகள் தட்டியெழுப்ப படுகின்றன. பார்வையாளர்களில் சிலர் படத்தில் காணப்படுகின்றனர். படத்தில் இருப்பவர்களில் பலர் கொல்லப்பட்டுவிட்டனர். காணாமல் போய்விட்டனர்.  உணர்ச்சியலை பொங்கியெழுகிறது. பினோச்சேயின் ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், சித்ரவதைகள், காணாமல் போனவர்கள் பற்றிய நினைவுகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

‘சிலி, தீராத நினைவுகள்’ என்ற படமே ‘சிலியின் போராட்டம்’ என்ற ஆவணப்படத்தின் திரையிடல், அதையொட்டிய பகிர்வுகள், முடக்கப்பட்ட நினைவுகள் வெளிப்பட்டு தெருக்களில் மறுபடியும் புரட்சிப் பாடல்கள் ஒலிப்பது என்று நினைவுகளைத் தேடிப்போவது தான். பாடல் கேட்டதும் பாதசாரிகள் தடுமாறுகின்றனர். மறந்துபோன, மறுத்துவிட்ட, அரசாங்கமே முடக்கிய, மக்கள் சுயமாக தணிக்கை செய்த உணர்வுகள் பரவுகின்றன. ஒரு படமே இன்னொரு படமாக வெளிப்படுகிறது.

அதற்குப் பிறகு குஸ்மான் அதிபர் செல்வடார் ஆலன்டே பற்றியும் பினோச்சேயின் மீதான வழக்கு பற்றியும் இரண்டு படங்கள் எடுத்தார்.



இறுதியாக பேட்ரிசியோ குஸ்மான் 2011ம் ஆண்டு ‘வெளிச்சத்திற்கான நினைவேக்கம்’ (NOSTALGIA FOR LIGHT) என்றொரு ஆவணப்படம் எடுத்தார். இந்தப்படம் கான்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. பல சர்வதேச விருதுகளைக் குவித்தது. இந்தப்படமும் சிலியின் முறிந்து போன சோசலிச கனவைப்பற்றியதே.

சிலியின் வடக்கு மூலையில் சிலி-பெரு எல்லையருகே கடல் மட்டத்திலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் இருக்கிற உலகத்திலேயே மிகவும் வறண்ட நிலப்பகுதி அடகாமா பாலைவனம். அப்பகுதியின் வானம் மேகமே இல்லாது, வறண்ட காற்று, காற்றில் கழிவுகள் இல்லாது மிகவும் தெளிவாக இருப்பதால் பிரபஞ்சத்தின் எல்லைகளையும் அங்கிருந்து காணமுடியும். நட்சத்திரங்களையும் கோள்களையும் ஆய்வு செய்வதற்கு வானியல் வல்லுநர்கள் கூடும் அவ்வறண்ட பூமிக்கு பேட்ரிசியோ குஸ்மான் நம்மை அழைத்துச்செல்கிறார்.

அப்பகுதிக்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. சூரியனின் வெப்பத்தாக்குதல் மிகவும் அதிகம் இருப்பதால் மனிதச்சடலங்கள் இயற்கையாகவே பதப்படுத்தப்பட்ட நிலையில் காணக்கிடைக்கின்றன. கொலம்பஸின் வருகைக்கு முந்திய காலத்து மம்மிக்கள், 19ம் நூற்றாண்டுப் பயணிகள் மற்றும் சுரங்கத்தொழிலாளிகளது சடலங்கள், 1973 ராணுவப்புரட்சிக்குப் பிறகு அரசியல் கைதிகளாகக் காணாமல் போனவர்களின் சடலங்கள் அடகாமா பாலைவனத்தில் புதைந்து கிடக்கின்றன.

ஒரு புறம் விஞ்ஞானிகள் வானத்தை நோக்கி தங்களது தொலைநோக்கிகளைத் திருப்பிக்கொண்டிருக்க, மறுபுறம் காணாமல் போனவர்களின் உறவினர்கள், குறிப்பாகப் பெண்கள் புதைந்து போன தங்களது சொந்தங்களின் எலும்புத்துண்டுகளைத் தேடுகின்றனர்.

இரண்டு தேடல்களையும் கவித்துவமாக இணைத்து குஸ்மான் இதயங்களைப் பிழிவதாக விமர்சகர்கள் பாராட்டுகின்றனர். இந்தப்படம் மிகவும் மெதுவாக, அழகாக ஒரு தியானத்தைப் போல நகர்வதாகக் கூறுகிறார் க்ளோப் அன்டு மெயில் பத்திரிக்கையின் ஸ்டீபன் கோல். பேட்ரிசியோ குஸ்மானின் மாஸ்டர் பீஸ் என்கின்றன லீ மோன்ட் மற்றும் SF 360 ஆகிய பத்திரிக்கைகள். அரசியலையும் அறிவியலையும் கலந்து கலக்குகிறது இந்த காட்சிக் கட்டுரை என்கிறது வீடியோ லைப்ரேரியன்.

ஐரோப்பிய திரைப்பட அகாடமி வழங்கும் 2010க்கான சிறந்த ஆவணப்பட விருது இந்தப்படத்திற்கு வழங்கப்பட்டது. 2010ல் வெளிவந்த சிறந்த பத்துப் படங்களில் ஒன்று ‘வெளிச்சத்திற்கான நினைவேக்கம்’ (NOSTALGIA FOR THE LIGHT) என்று SIGHT AND SOUND பத்திரிக்கை பாராட்டியிருக்கிறது.

தற்போது பேட்ரிசியோ குஸ்மான் சிலியின் தலைநகரமான சந்தியாகுவில் தான் தொடங்கி வைத்த சர்வதேச ஆவணப்படவிழாவின் இயக்குநராக இருக்கிறார். பாரிஸில் தனது மனைவி ரேனேட் சாசே மற்றும் தனது மகள்கள் ஆன்ட்ரியா, கெமிலா ஆகியோருடன் வசித்து வருகிறார். ரேனேட் ‘வெளிச்சத்திற்கான நினைவேக்கம்’ படத்தின் தயாரிப்பாளர். பல படங்களுக்கு திரைக்கதை அமைப்பில் பங்கேற்பவர். ஆன்ட்ரியாவும் கெமிலாவும் திரைப்பட இயக்குநர்கள். தங்களது தந்தையுடன் பல படங்களில் பணிபுரிந்துள்ளனர்.



(கட்டுரையாளர் 1994ம் ஆண்டு குஸ்மானின் ‘சிலியின் போராட்டம்’ என்ற படத்தைப் முதன்முதலாகப் பார்த்தார். 1999ம் ஆண்டு புனேயில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேட்ரிசியோ குஸ்மானை நேரில் சந்தித்திருக்கிறார்).

அமுதன் R.P.

எங்கே போயின அரசியல் ஆவணப்படங்கள்?




சுயதேடல் ஆவணப்படங்களின் புற்றீசல்

அமுதன் இராமலிங்கம் புஷ்பம்

இந்தியாவின் சுதந்தரமான (இன்டிபென்டன்ட்) ஆவணப்படப் போக்கை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று அரசியல் படங்கள். மற்றொன்று கலை அல்லது சுயதேடல் ஆவணப்படங்கள். புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு அரசியல் படங்கள் அதிகம் எடுக்கப்பட்டன. ஆனந்த் பட்வர்தன், மஞ்சிரா தத்தா, வசுதா ஜோசி, தீபா தன்ராஜ், கே.பி.சசி, பின்னாட்களின் சஞ்சய் காக், அமர் கன்வர், சரத் சந்திரன், பிஜூ டோப்போ போன்றோர் மக்கள் போராட்டங்களை, மனித உரிமை மீறல்களைப் பற்றி  ஆவணப்படங்கள் எடுத்தனர். மக்களிடம் படங்களைக் கொண்டு போய் சேர்ப்பதை தங்களது பணியின் ஒரு முக்கிய அங்கமாகப் பார்த்தனர். பல போராட்டங்களின் அங்கமாக ஆவணப்படங்கள் திகழ்ந்தன. ஆனால் அந்நிலை இரண்டாயிரத்திற்குப் பிறகு படிப்படியாக மாறத்தொடங்கியது.

ஆவணப்படச்சூழலில் உயர்தட்டு மக்களுக்கான பொழுதுபோக்கு அழகியல் அல்லது சுயதேடல் சினிமா என்று ஒரு வகை மேலோங்கியுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் இத்தகைய ஆவணப்படங்கள் எடுப்பதற்கு நிதி கிடைப்பது சுலபமாகியுள்ளது. அப்படிப்பட்ட படங்களே திரைப்படவிழாக்களில் தேர்வு செய்யப்படுகின்றன. அவற்றிற்கே விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்திய அரசின் தொலைக்காட்சியான தூர்தர்சன் ஒரு புதிய திட்டத்தை பத்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அதன் பெயர் பிஎஸ்பிடி. பொதுசேவை ஒளிபரப்பு தொலைக்காட்சி என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த நிதியின் கீழ் கார்பரேட் கம்பெனிகள் தூர்தர்சனுக்கு நிதி கொடுக்கின்றன. அந்த நிதியைக்கொண்டு ஒரு சில குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் படம் எடுப்பதற்கு நிதி கொடுக்கப்ப டுகின்றன. குறிப்பாக எயிட்ஸ், பாலியல் வெளிப்பாடுகள், ஓரினப்புணர்ச்சி மற்றும் பாலியல் சிறுபான்மையினர் பற்றிய தலைப்புகளுக்கு அதிகம் பணம் கொடுக்கப்படுகின்றது. ஒரு இயக்குநரின் மனு தேர்வு செய்யப்பட்டால் பிஎஸ்பிடியின் பொறுப்பாளர்கள் படம் எடுக்கப்படும் விதம், படம் எடிட் செய்யப்படும் விதம் ஆகியவற்றில் நேரடியாகத் தலையிட்டு தங்களுக்கு வசதியான தொனியைக் கொண்ட ஒரு ஆவணப்படத்தை அந்த இயக்குநர் உருவாக்குவதை உறுதி செய்கின்றனர். இந்தியாவில் இருநூறு இயக்குநர்கள் தொடர்ந்து படம் எடுக்கிறார்கள் என்றால் பத்தாண்டு காலத்தில் ஏறக்குறைய எல்லா இயக்குநர்களும் இந்த எந்திரத்திற்குள் சென்று வந்து “நேர்த்தி” செய்யப்படுகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளில் இந்திய ஆவணப்படங்களில் அதிகமாக படமாக்கப்படும் கதைக்கருக்கள் பாடகர்கள், இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள் பற்றியதாக இருப்பது எதேச்சையானதாக எனக்குத் தெரியவில்லை. இவற்றை “மென்” திரைப்படங்கள் என்று குறிப்பிடலாம். இவை எந்த அரசியல் நிலைப்பாடும் எடுப்பதில்லை. எதையும் சரி தப்பு என்று சொல்வதில்லை.  தொலைக் காட்சியின் பார்வையாளனுக்கு ஏற்றவகையில் பொழுதுபோக்கு அழகியல் தன்மை கொண்ட, அவனது இருப்பை, வசதியை, மனசாட்சியை கேள்வி கேட்காத மொன்னை அல்லது மலட்டு ஆவணப்படங்கள் எடுத்துத் தள்ளப்படுகின்றன. அரசியல் சினிமா ஏறக்குறைய இல்லாமல் போய்விட்டது.

ஆனால் இன்று நாடெங்கும் மக்கள் நெருக்கடியில் இருக்கின்றனர். இயற்கை வளங்கள் மக்களிடம் இருந்து துப்பாக்கி முனையில் பறிக்கப்பட்டு கார்பரேட் கம்பெனிகளிடம் தாரை வார்க்கப்படுகின்றன. உரிமைக்கான போராட்டங்கள் கிராமங்கள், நகரங்கள் என்ற பாகுபாடின்றி வெடித்தபடி இருக்கின்றன. இப்போதும் இந்த இயக்குநர்கள் சுயதேடல் ஆவணப்படங்களையே எடுப்பார்களா? அல்லது போராடும் மக்களுக்கு ஆதரவாக மறுபடியும் அரசியல் ஆவணப்படங்கள் எடுக்க யார் வருவார்கள்?.