Friday, June 22, 2018

போராடும் தமிழ்நாடு!

ஏன் போராடுகிறோம்?
இப்படியே போராடிக்கொண்டிருந்தால் தமிழ்நாடு மேற்குவங்கம் மாதிரி சீரழிந்துவிடும் என்று ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையாளர் சொன்னார்.
1) மேற்குவங்காளம் சீரழிந்ததா, இல்லையா என்பதைப் பற்றி சிபிஎம் மற்றும் பிற இடதுசாரித் தோழர்கள் பதில் சொல்லட்டும்.
2) தமிழ்நாடு வளர்ந்த மாநிலங்களில் ஒன்று (இதை இடதுசாரிகள், தமிழ்தேசவாதிகள், பாமக மற்றும் பாஜகவினர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்). தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, கல்வி, பொது சுகாதாரம், மனிதவளம், பொதுவிநியோகம் போன்ற துறைகளில் முதல் 4-5 இடங்களில் இருந்து வருகிற மாநிலம்.
இந்துத்துவ எதிர்ப்பு, சமூகநீதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றில் முன்னணியில் இருக்கும் மாநிலம்.
பெண் விடுதலையை நோக்கிய போராட்டத்தில் முன்னேறியபடி இருக்கிறோம். சிரிப்பு நடிகர் தலைமறைவு, ஆளுநர் மன்னிப்பு கேட்டது போன்றவை சிறந்த அறிகுறிகள். பெண் கல்வியில் முன்னேறியிருக்கிறோம்.
3) நாம் பின்தங்கி இருக்கும் இரண்டு துறைகள் : சாதிவெறி / தலித் வெறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு.
4) சாதி வெறி / தலித் வெறுப்பு எப்போது தீரும் என்று தெரியவில்லை. புதிய சிந்தனைப்போக்குகள் வந்தால் ஒழிய இதில் முன்னேற்றத்துக்கு வழி இல்லை. அதை நோக்கி நாம் கண்டிப்பாக உழைக்க வேண்டும்.
5) சுற்றுச்சூழல் பாதிப்பு என்பதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு வந்திருக்கிறது. இது நாம் அடைந்திருக்கும் பொருளாதார வளர்ச்சிக்குக் கொடுத்திருக்கும் விலை என்கிற பார்வை உருவாகியிருக்கிறது. அதனால் மக்கள் போராடுகின்றனர்.
இப்படி நான் பதில் சொன்னேன். பிறகு பேசலாம் என்று போய்விட்டார் அந்தப் பத்திரிக்கையாளர்.
பி.கு. அந்தப் பத்திரிக்கையாளர் ஒரு தமிழ் பார்ப்பனர். உடன் இருந்தவர் ஒரு மலையாளி. தமிழ்நாட்டில் இருந்து வரும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இவர்கள் தான் வேலை செய்கின்றனர்.

No comments:

Post a Comment