Tuesday, June 26, 2018

இந்திய ஆண்கள் வெட்கப்படவேண்டும்!



உலகிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது.

1) எல்லா இந்திய ஆண்களும் இதற்காக வெட்கப்படவேண்டும். ஏனெனில் பெண்களுக்கு ஆபத்து வருவது சக ஆண்களிடம் இருந்து தான். குறிப்பாக இந்திய ஆண்களிடம் இருந்து. இப்படி ஒரு நிலை வருவதற்கு இந்திய ஆண்களே பொறுப்பு. நேரடியாகப் பெண்களுக்கு தீங்கு இழைக்காதவர் காட்டும் மெளனமும், கவனக்குறைவும், அக்கறையின்மையும் இதற்குப் பொறுப்பு.

2) இந்தியாவில் பொதுவெளியை விட வீடுகளுக்குள் தான் பெண்கள் மீதான வன்முறை அதிகம் நிகழ்வதாக மற்றுமொரு ஆய்வு சொல்கிறது. வீடு என்றால் குடும்பம், உறவுகள், சொந்தம், பந்தம் என்கிற இந்தியப் பண்பாட்டின் அடித்தளத்தில் தான் பெண்களுக்கு அதிக வன்முறை நிகழ்கிறது. அந்த வன்முறை இந்தியப்பண்பாடு என்று அங்கீகரிக்கப்படுகிறது; ஒத்தக் கருத்து உருவாக்கப்படுகிறது. இது இங்கு இயல்பானது என்று சமரசம் செய்யப்படுகிறது.

3) கருக்கொலை, சிசுக்கொலை, குழந்தைத் திருமணம், திருமணத்திற்குள் வல்லுறவு, வீட்டுக்குள்ளும் பொது இடங்களிலும் பாலியல் தொந்தரவு, சாதி மற்றும் மதக்கலவரங்களில் பெண்கள் மீதான வன்முறை, தனது இணையைத் தேர்வு செய்ய உரிமையற்ற நிலை, சொத்து இல்லாமை, கல்வியின்மை, அதிகாரமின்மை இப்படி பெண்கள் எதிர்க்கொள்ளும் வன்முறையைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

4) ஊடகம், காவல்நிலையம், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் இப்படிப் பல துறைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு, அலட்சியம், அடக்குமுறை மற்றும் வன்முறை கெட்டிதட்டிப் போயிருக்கிறது.

5) ஊடகங்கள் இன்னும் பெண்களை ஒரு பண்டமாக விற்பனை செய்யும் போக்கைக் கடைபிடிக்கின்றன. வியாபாரப் போட்டியில் பெண் உடல் காட்சிப்பொருளாக விற்கப்படுகிறது. விளம்பரங்களில், சினிமாவில், தொலைக்காட்சிகளில், பத்திரிக்கைகளில் பெண்கள் சித்தரிக்கப்படும் விதம் பெண் விரோத / வெறுப்புச் சிந்தனை கொண்டதாகவே இருக்கிறது.

6) கார்பரேட் பொருளாதாரம் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிராகவும் இருப்பதால், எல்லாச் சமூகங்களிலும் பெண்கள் பின்தள்ளப்பட்டிருப்பதால், கார்பரேட் அரசியல் பெண்களைக் கூடுதலாகச் சுரண்டுகிறது. வியாபாரம், லாபம், போட்டி, முதலிடம் ஆகிய வாதங்களிடையே பெண்களின் பாதுகாப்பு கடும் நெருக்கடியைச் சந்திக்கிறது. இரக்கமற்ற, அறமற்ற, தோழமையற்ற சூழலில் எல்லோரும் முரட்டு ஆண்தன்மையுடன் (masculine) செயல்பட நிர்பந்திக்கப்படுகின்றனர்.

7) இப்போது நாடெங்கும் பரவி வரும் காவிப் புயல் இதுவரை நாம் ஆண் பெண் சமத்துவத்துத்தில் அடைந்திருக்கும் சில முன்னகர்வுகளைக் கூடக் குலைப்பதாகவே இருக்கிறது. இந்தியப் பாரம்பரியம் என்ற பெயரில் பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசிகள் ஆகியோரது உரிமைகளைச் சிதைக்கும் சிந்தாந்தம் இன்றைய வெற்றிகரமான யதார்த்தமாகி விட்டதால் பெண்களை சாதி, குடும்பம் ஆகிய கூட்டுக்குள் அடைக்கும் முயற்சி வெளிப்படையாக நடக்கிறது.

8) காவிகளின் அரசியல் தாக்குதலினால் யாருக்குமே பாதுகாப்பற்ற ஒரு சூழல் இந்தியாவில் உருவாகி வருவது, வன்முறை ஒரு அரசியல் கருவியாக வெளிப்படையாகக் கடைபிடிக்கப்படுவது ஆகியவற்றால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோரின் பாதுகாப்பு கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.

சாதிவெறி, மதவெறித் தாக்குதல்களில் பாலியல் வன்முறை முக்கியமான கொடுஞ்செயலாக வெளிப்படுகிறது. அது ஒடுக்கப்பட்டோர் மீது அதிகாரம் செலுத்தவதாக, அவர்களைச் சிதைப்பதாக, ஒடுக்குவதாக, சுரண்டுவதாக, வெற்றி கொள்வதாக வெளிப்படுகிறது.

9) கொத்தடிமை முறை, அகதிகளாக்கப்படல், ஆள் கடத்தல், குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை போன்றவற்றிலும் இந்தியா பரிதாபமான நிலையில் முன்னணியில் இருக்கிறது. ஆவணக்கொலை, அமில வீச்சு, வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொந்தரவு / சுரண்டல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

10) வளர்ச்சி எனும் பெயரில் கிராமங்கள் கார்பரெட் கம்பெனிகளுக்கு விற்கப்படுவதால் பெண்கள் தம் சொந்த ஊரை விட்டு வெளியேறி கடும் சுரண்டல் மிக்க வேலைகளை, பாதுகாப்பற்ற முறையில் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் பல அரசியல், பொருளாதார, சமூக முடிவுகளை எடுக்கும் இடத்தில் ஆண்கள் இன்னும் இருப்பதால் இந்த இழிநிலைக்கு ஆண்களே காரணம். குறிப்பாக உயர்சாதி ஆண்கள்.

இந்த ஆய்வு நமக்கு ஒரு பெரும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. தேசபக்தி, மதம் மற்றும் சாதிப்பற்று, பாரம்பரியம், குடும்ப கெளரவம், பண்பாடு, வளர்ச்சி, முன்னேற்றம், போட்டி, லாபம், லட்சியம், கனவு என்கிற பெயரில் நாம் நம்மையேச் சிதைத்துக்கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment