Thursday, February 7, 2013

கடல் அவ்வளவு மோசமான படமா?

மணிரத்னத்திற்கு கிடைக்கும் மட்டை அடி


மணிரத்னம் இயக்கிய மெளனராகம், அலை பாயுதே, அக்னி நட்சத்திரம் ஆகிய படங்களை நான் ரசித்துப் பார்த்ததுண்டு. உயர் சாதி அடையாளங்கள் அவற்றில் துருத்திக்கொண்டிருந்தாலும். 

அரசியல் காரணங்களுக்காகவும் சினிமா ரீதியாகவும் அவரது மும்பை, ரோஜா, தில்சே, கன்னத்தில் முத்தமிட்டால், குரு, ராவணனன் ஆகிய படங்களை என்னால் ஏற்க முடியவில்லை.

இருவர் சினிமா மொழியில் நல்ல படைப்பு என்று சொல்வேன். திராவிட கட்சிகளை அவர் அந்தப் படத்தில் கொச்சைப் படுத்தியிருந்தார் என்பதையும் நான் கவனப்படுத்த விரும்புகிறேன். ஆனால் அந்தக்கட்சிகள் நமக்கு ஒட்டுமொத்தமாக கொடுத்திருக்கும் இழைத்திருக்கும் தீங்கை நினைக்கும் போது நாம் இன்னும் திராவிடக் கட்சிகளைப் பற்றி நிறையப் படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

யுவா எனும் படத்தை வடஇந்தியாவில் பலர் சிலாகித்துப் பேசியதுண்டு. ஆனால் பாரதிராஜா அதில் நடித்தது மிகுந்த அதிர்ச்சி யைக் கொடுத்தது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அந்தப் படத்தில் பாரதிராஜா நடித்ததைப் பற்றி வருத்தப்பட்டார் என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அது உண்மையா என்று எனக்குத் தெரியாது.

ஆனால் சமீபத்தில் மணிரத்னம் இயக்கி வெளியிட்டுள்ள "கடல்" எனும் திரைப்படம் இங்கு பலர் மட்டையடி அடிப்பது போல மொக்கை அல்ல.




தமிழில் முழுநீள கிறிஸ்தவப்படம் இதுவரை வந்திருப்பதாக எனக்கு நினைவில்லை. ஒரு கணக்கிற்கு சில கதாபாத்திரங்கள் கிறிஸ்தவர்களாக தமிழ் சினிமாவில் வருவதுண்டு. இந்தப்படத்தின் கதைக்களமே ஒரு கத்தொலிக்க கிராமம் தான். கூடங்குளம் எதிர்ப்பு போராட்டமும் அதை கத்தோலிக்க மக்கள் முன்னின்று நடத்துவதும் இயக்குநரை இப்படி ஒரு படம் எடுக்க வைத்ததா என்பதை நாம் அவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதுபோல அவர் இந்தப் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறார் என்பது கவனத்திற்குரியது. சொல்லப்போனால் நிறையப்படங்கள் மீனவ மக்களைப் பற்றி வருவதும் கூடன்குளம் போராட்டம் தான் காரணமா என்றும் தெரியவில்லை.

நன்மை தீமைக்கு இடையே போட்டி. இறுதியில் நன்மை தனது உறுதியால் வென்றது என்பதே கடல் படத்தின் கரு என்று சொல்லலாம்.

ஒரு கத்தோலிக்க மீனவ கிராமம். அதில் ஒரு நல்ல பங்கு சாமியார். வன்முறையும் துரோகமும் நிறைந்த கிராமத்தினர். ஒரு பாலியல் தொழிலாளி. அவளது மகன். ஒரு பணக்கார தீயவன். அவளது மகள். இவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சிப்பூர்வமான போராட்டம் தான் இந்தக்கதை. அது திரைக்கதையாக நன்றாக வந்திருக்கிறதா என்றால் குழப்பமாகத் தான் இருக்கிறது. யாரைப் பின்பற்றி பார்வையாளன் போக வேண்டும் என்று தெரியவில்லை.

ஏதோ ஒரு பெரிய விஷயத்தைச் சொல்ல முயற்சித்து தடுமாறியிருப்பது போல தோன்றுகிறது.




கத்தோலிக்கப் பள்ளிகளிலும் கல்லூரியிலும் படித்தவன் என்ற முறையிலும் கத்தோலிக்க பாதிரியார்கள், செவிலியர்களைத் தனிப்பட்ட முறையில் பரிச்சயம் என்ற முறையிலும் கத்தோலிக்க இறையியல் கல்லூரியில் (செமினரி) இருந்து படம் தொடங்குவதை நான் வரவேற்கிறேன். ஆச்சர்யமாகவும் பார்த்தேன்.

வசதியான குடும்பத்தில் பிறந்து ஆன்மீக சேவை செய்ய பாதிரியாராக வந்திருக்கும் அரவிந்த்சாமி, ஏழை குடும்பத்தில் பிறந்து பிழைப்புக்காக வந்திருக்கும் அரஜூன் ஆகியோரின் மோதல், ஒருவர் ஏசுவின் பில்ளையாக, இன்னொருவர் சாத்தானின் பிள்ளையாக முன்னிருத்தப்படுவதும் தான் கதையின் முடிச்சு. பிழைப்புக்காக சாமியாராகும் நபர் சாத்தானாக ஏன் சித்தரிக்கப்படுகிறார் என்பது ஒரு கேள்வி. சோற்றுக்கு வழியில்லாமல் அரசு வேலைக்கு வருபவர்கள் நேர்மையாக இருக்க முடியாதா? இரண்டே பாத்திரங்கள். அதில் ஒரு நல்லவன். ஒரு கெட்டவன். நல்லவன் பணக்காரன். கெட்டவன் ஏழை என்று தொடங்குகிறது படம். அது எனக்கு நெருடலாக இருந்தது.

ஏழை அர்ஜூன், பாதிரிக்குப் படிக்கும் அர்ஜூன் அங்கு வேலை செய்யும் ஒரு கறுப்பான, அழுக்கான ஒரு பணிப்பெண்ணை ஒரு இரவில் ஒரு கொட்டகைக்குள் வைத்து சல்லாபம் செய்கிறார். அதை அர்விந்த்சாமி தட்டிக்கேட்கிறார். நல்ல வேளை அந்தக கறுத்த பெண்ணை உதைக்காமல் விட்டாரே என்று பெருமூச்சு விட்டேன். அர்ஜூன் குரு இல்லத்தின் தலைவரிடம் மன்னிப்பு கேட்க மறுக்கிறார். செமினரி விட்டு வெளியேறுகிறார். இனிதான் இருக்கு என்று எச்சரித்து விட்டும் போகிறார் அரவிந்த்சாமியிடம்.

செமினரி பற்றி காண்பித்தது எனக்கு பிடித்திருந்தாலும் இன்னும் சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது.

பாமா போன்றவர்கள் திருச்சபைக்குள் இருக்கும் சாதிய ஒடுக்குமுறை பற்றி எழுதியிருந்தாலும் அதை ஒரு கிறிஸ்தவர் செய்வதும் ஒரு வெளியாள் செய்வதும் ஒன்று இல்லை என்பதும் எனக்குத் தோன்றியது.

லூயி புனுவலின் ஒரு படத்தின் உல்டா என்றெல்லாம் பலர் சொல்கின்றனர். லூயி புனுவல் ஒரு ஸ்பானிஷ் கத்தோலிக்க கிறிஸ்தவர். தனது மதம் பற்றி விமர்சனம் செய்யலாம். பிறர் செய்வது நியாயமா என்றும் தோன்றுகிறது. 




ஒரு கத்தோலிக்க மீனவ கிராமம். அக்கிராம மக்களுக்கு ஏற்படும் ஆன்மிக நெருக்கடி பற்றி படம் பேசுகிறது. ஒரு கிராமத்திற்கு வெளியில் இருந்து நெருக்கடி வரும். கூடன்குளம் அணு உலை வந்தது போல. வி.வி.மினரல்ஸ் கடறகரை மணலை அள்ளி விற்பது போல. பெரிய படகுகள் கட்டுமரங்களின் மீன்பாட்டைக் காலி செய்வது போல. ட்ராலர்கள் பெரிய படகுகளின் பிழைப்பை அழிப்பது போல. இப்படி புற நெருக்கடி வரலாம்.

இந்த கிராமத்தில் அக நெருக்கடி. அதுவும் ஆன்மீக நெருக்கடி. கத்தோலிக்க கிராமம். ஆனால் பங்குத் தந்தை இல்லை. ஆலயம் சீரழிந்து போய் இருக்கிறது. மக்கள் பணத்திற்கு அடித்துக்கொள்கின்றனர். ஏன் என்று விளக்கப்படவில்லை. மீனவர்களே அப்படித்தானா? இல்லை இந்த கிராமத்து மக்கள் அப்படியா? தெரியவில்லை. ஆனால் அந்த கிராமத்து மக்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளாய் கட்டற்று திரிகின்றனர். மீன் பாடும் நன்றாகவே நடக்கிறது. ஆனால் அறம் இல்லை. அன்பு இல்லை. வன்மமும் ஏச்சும் பேச்சும் ஏளனமும், குரூரமும் வார்த்தைகளாய் செயல்களாய் தெரிக்கின்றன.




அசாதாரணமான கதாபாத்திரங்கள். ஒரு பாலியல் தொழிலாளி. அவர் பிணமாகவே அறிமுகமாகிறார். அவரது சிறிய மகன். அனாதையாகிறான். கடும் வன்முறைக்கும் அவமானத்திற்கும் உள்ளாகின்றான். பாலியல் தொழிலாளியின் வாடிக்கையாளர் (சிறுவன் அவரை அவனது தந்தை என்று தன் தாய் சொன்னதை நம்புகிறான்) பிணத்தை அடக்கம் செய்கிறார். எந்த சடங்குகளும் இன்றி. சந்தையின் நடுவே அவளது பிணம் கொண்டு போகப்படும் போது யாரும் அதை பொருட்படுத்தவில்லை. தூற்றுகின்றனர். ஒரு ஐஸ் பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்யும் போது அவளது கால் வெளியே நீட்டிக்கொண்டிருக்க, அதை வெட்டி, உடைத்து உள்ளே வைக்கின்றனர். அத்தனை வன்மம். சிறியவன் துடிக்கிறான்.

அந்த ஊருக்குத் தான் நல்லவர் அரவிந்த்சாமி பங்கு சாமியாராய் வருகிறார். அவரை கோயில் உதவியாளர் தவிர யாரும் மதிக்கமறுக்கின்றனர். நீ தேவையில்லை என்கின்றனர். அவர் சிதைந்த நிலையில் இருக்கும் கோவிலைச் சுத்தம் செய்யும் போது யாரும் உதவிக்கு வரவில்லை. பூசைக்கும் யாரும் வர மறுக்கின்றனர். மீன் சந்தைக்கே கடற்கரைக்கே வந்து சாமியார் அவர்களை அழைக்கின்றார். யாரும் எளிதில் வந்த பாடில்லை.

அனாதையாக திரியும் பாலியல் தொழிலாளியின் மகனை ஆதரிக்கிறார் சாமியார். அவனை தனது மனச்சாட்சியாக வளர்த்தெடுக்கிறார். பிழைப்புக்கு வழி வகுக்கிறார். அவனே நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம். மிகவும் அற்புதமான அறிமுகம். அவர் எதைச்செய்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது. மீனவனாக அவரை நம்பவும் முடிகிறது. பல சமயங்களில் பலர் நம்பும் படி இருப்பதில்லை.




கதையில் புதிய திருப்பமாக அந்த ஊருக்கு அர்ஜூன் வருகிறார். இப்போது அவர் குண்ட்டிபட்டு கிடக்கிறார் கடற்கரை ஓரம். அவர் கடத்தல் தொழில் செய்யும் பெரிய முதலாளி. தொழில் போட்டியில் யாரோ அவரை விரட்டிச் சுடுகின்றனர். அவரைக் காப்பாற்றுகிறார் அரவிந்த்சாமி. ஆனால் ரசகியமாய்.

தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை (அவளும் ஒரு பாலியல் தொழிலாளி) உதவிக்கு கொண்டுவந்தால் தான் பிழைத்துக்கொள்வேன் என்று அர்ஜூன் சொன்னதும் அவளையும் அழைத்து வருகிறார் அரவிந்த்சாமி. தன்னுடன் அரவிந்தசாமி உடலுறவு வைத்துக்கொண்டார் என்று ஊர் மக்கள் முன் அவள் பொய்சாட்சி சொல்லி அரவிந்தசாமியை மாட்டிவிடுகிறார். அதில் நடக்கும் ஒரு தள்ளு முள்ளுவில் ஒரு இறக்க அரவிந்தசாமி மீது கொலை பட்டம் விழுகிறது. அர்ஜூன் படம் ஆரம்பிக்கும் போது விட்ட சவால் நிறைவேறுகிறது.

இந்த சம்பவங்களில் கிராமமக்கள் செம்மறி ஆடு போல, யேசு நாதரை துன்புறுத்தியது போல நல்லவராகியா அரவிந்த்சாமியை அடித்துத் துவைக்கின்றனர். ரத்தக் காயங்களுடன் தான் கைதாகிறார்.

அந்தகிராமத்தில் சாமியாருக்கு ஆதரவாய் - அதாவது அறம், அன்பு, நேர்மை இவற்றுக்கு ஆதரவாய் உதவியாளர், கெளதம், ஒரு பெண் தவிர யாரும் இல்லை. எல்லோரும் தூற்றுகின்றனர். ஊரே சேர்ந்து அரவிந்த் சாமியை சந்தேகிக்கிறது. யாரும் ஆதரவாக இல்லை. காவல்துறை தான் வந்து அவரைக் காப்பாற்றுகிறது. இடைவேளை வருகிறது.

இது ஒரு மிகை நாடகம் போலவே நடக்கிறது. இந்தப் படமே ஒரு மிகை உணர்ச்சி ததும்பிய இசை நாடகம் போலவே காட்சியளிக்கிறது. பல ஐரோப்பிய சினிமாக்களின் காட்சிகள் கண் முன்னே வந்து போயின. நன்மைக்கும் தீமைக்கும் நிகழும் போட்டியில் நன்மை தோற்கிறது நடுவில். ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான். ஆனா கைவிட மாட்டான் எனும் ரஜினி வசனம் நினைவுக்கு வந்தது. ஆனால் வலிய புகுத்தப்பட்ட இனவரைவியல் கிறிஸ்தவ பின்னணி சந்தேகம் ஊட்டியபடி இருந்தது.

மணிரத்னமும் ஜெயமோகனும் இப்படி ஒரு மிகை நாடகத்தை ஒரு இந்து கோவிலின் பின்னணியில் செய்திருந்தால் எத்தனை அழுத்தமாய் இருந்திருக்கும். எத்தனை நம்பகத்தன்மை இருந்திருக்கும். இப்படி ஒரு நன்மை தீமை எனும் போராட்டம் இந்து பின்னணியில் சாத்தியமா என்றும் தெரியவில்லை. ஏனெனில் இந்து அவதாரம் எல்லாம் எளியவர்களை அழிப்பதாகவே இருப்பதால் கிறிஸ்தவ பின்னணி தான் சரியோ என்னவோ.


கிறிஸ்தவர்கள் பற்றியும் மீனவர்கள் பற்றியும் மணிரத்னம் மற்றும் ஜெயமோகனுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி வெளிப்படுகிறது திரையெங்கும். இறுதியில் நன்மை வென்றதாக இயேசு பாட்டு போட்டாலும் உழைக்கும் மக்கள் பற்றி இப்படி குரோதமாகப் படம் எடுத்திருப்பது அதிர்ச்சியாகவே உள்ளது. ஒரு வேளை உயர் சாதி இந்து கண்களுக்கு மீனவர்கள் மூளையற்ற, அறமற்ற, துரோகம் நிறைந்த, பொய்யும் புரட்டும் நிறைந்த கூட்டமாகத் தெரிகிறதோ என்னவோ!

மறுபடியும் ஒரு சமூக அரசியல் படம் எடுத்து மறுபடியும் தனது போதாமையை வெளிப்படுத்துகிறார் இயக்குநர்.

Sunday, February 3, 2013

விஸ்வரூபம் தொடர்பாக...

கமலஹாசனின் விஸ்வரூபம் தொடர்பான எனது கருத்துக்களுக்கு பல நண்பர்கள் வருத்தமும் சிலர் எச்சரிக்கையும் விடுத்திருப்பதை ஒட்டி:
1) நான் எந்த படைப்பையும் அரசோ அல்லது ஒரு இயக்கமோ தடை செய்வதை ஆதரிக்கவில்லை. தணிக்கை முறைக்கே எதிரானவன் நான். எனது படங்களுக்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வாங்கவில்லை. படைப்புகள் சுதந்தரமாக வெளிவரவேண்டும். படைப்புகளை முடக்குவது சமூகத்தில் விமர்சனங்களை முடக்குவதற்கு சமம். விமர்சனங்களும் மாற்றுக்கருத்தும் ஜனநாயகத்திற்கு அடிப்படை. எனவே படைப்புகள் தடையின்றி வெளிவரவேண்டும்.

2) அதே நேரத்தில் படைப்புகள் பற்றி சமூகத்தில் விவாதங்கள் நடக்க வேண்டும். திரைப்படவிழாக்களும் திரையிடல்களும் அவற்றில் நடக்கும் விவாதங்களும் இதில்அடங்கும். முகநூல் போன்ற சமூக ஊடகங்களும், விமர்சனக்கூட்டங்களும், கட்டுரைகளும், பயிலரங்குகளும் மிகவும் அவசியம். தமிழ் சினிமா போன்ற வெகுசன ஊடகம் பற்றி நாம் பேசித்தான் ஆகவேண்டும். அவை வெறும் பொழுது போக்குக்கூடங்கள் அல்ல. அவை ஒரு சமூகத்தின் பிரதிபலிப்புகள்.

3) ஒரு கலைவடிவம் அது எதற்காக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டாலும் சரி நமது பார்வையை, புரிதலை விரிவு படுத்துகிறதா இல்லை நம்மை சுருக்குகிறதா என்பது மிகவும் முக்கியமான கேள்வி. ஒரு படைப்பு பிறர் மீதான துவேசத்தைப் பரப்பினால், வெறுப்பை விதைத்தால், உண்மையை மறைத்தால், பொய்ப் பிரச்சாரம் செய்தால் சிவில் சமூகத்தினர் அதை விமர்சனம் செய்வது தான் சரி. அதை நான் செய்வேன்.

4) இந்த அனுபவம் நம்மை இன்னும் நல்ல மனிதர்களாக்கும் என்று நம்புகிறேன்.


நான் சொன்ன கருத்துக்கள்:
மதுரையில் மாட்டுத்தலையை இந்து முன்னணி அலுவலகத்தில் யாரோ போட்டுவிட்டனர் என்று சொல்லி மதுரை மெகபூப்பாளையும் மற்றும் ஹாஜிமார் தெருவில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களை காவல்துறையினர் இழுத்துக்கொண்டு போய் ரவுண்டு கட்டி அடித்தார்களே அதை எந்த "நாயகனும்" படமாக எடுக்க மாட்டார்களா?

பார்ப்பனர்களை அல்லது இந்திய அரசை அல்லது இந்திய ராணுவத்தை அல்லது அம்பானி மாதிரியான முதலாளியை விமர்சனம் செய்து பார்ப்பனர் அல்லாத ஒருவர் படம் எடுத்திருந்து அதை மாநில அரசோ மத்திய அரசோ தடை செய்திருந்தால் இப்போது கமல்ஹாசனுக்காக கொதிப்பவர்களும் துடிப்பார்களா?
வடிவேலு எனும் மகாகலைஞனை எல்லோரும் ஓரம் கட்டினீர்களே! அப்போது எங்கே போனது உங்களது கருத்துரிமை? "சிவப்பா இருக்கிறவன் சொன்னா அது உண்மையாயிருமா?" "உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா?" (இதெல்லாம் வைகைபுயலின் தத்துவங்கள்)
"தேவர்மகன்" தென்தமிழ்நாட்டில் தலித் மக்களின் மீதான வன்முறைக்கு ஒரு கோஷமானது போல (போற்றிப்பாடடி பெண்ணே! தேவர் காலடி மண்ணே!) இந்தப்படமும் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அணிதிரட்சியை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறதா?

கமல்ஹாசனுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஒத்துக்கொள்கிறோம். தமிழக அரசு ஒரு அராஜக ஆட்சி நடத்துகிறது. ஒத்துக்கொள்கிறோம். இதைக் கண்டிக்கிறோம். இப்படி எல்லாம் நடக்கக்கூடாது தான்.

ஆனால் தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை, கிறிஸ்தவர்களை, ஏழைகளை, குடிசைவாழ் மனிதர்களை, தலித்துகளை, பெண்களை, திருநங்கைகளை, பாலியல் சிறுபான்மையினரை, விவசாயிகளை, உழைப்பாளர்களை, தமிழர்களை, கறுப்பானவர்களை, குண்டானவர்களை, குட்டையானவர்களை, மாற்றுத் திறனாளிகளை கீழான நிலையில் சித்தரிப்பதைப் பற்றி கமல்ஹாசனுக்காக, கருத்துரிமைக்காக கண்ணீர் விடுவோர் விவாதிக்கத் தயாரா?

உதாரணமாக "வேட்டையாடு விளையாடு" திரைப்படத்தில் கதாநாயகனின் பெயர் "ராகவன்" என்கிற பார்ப்பனப் பெயராக இருந்ததும் வில்லன்களாகச் சித்தரிக்கப்பட்டவர்களுக்கு தூய தமிழ் பெயர் இருந்ததும் அவர்கள் ஓரினச்சேர்க்கை புரிபவர்களாகக் காண்பிக்கப்பட்டதும் எதேச்சையாக நடந்ததா? கெளதம் மேனன் எனும் மலையாளிக்கும் கமல்ஹாசன் எனும் தமிழனுக்கும் இது தெரியாமல் நடந்ததா? இது தான் உலக நாயகனின் உலக சினிமாவா?

இப்படி ஒட்டுமொத்த பார்வையாளர்களை (ஆடியன்ஸ்) அவமானப்படுத்திவிட்டு எமது மக்களின் காசில் நீங்கள் சொகுசாய் வாழ நினைப்பது என்ன நியாயம்? இதை கலைச்சேவை என்றாலும் வியாபாரம் என்றாலும் கண்டிக்க வேண்டாமா? எருமை மாட்டில் மழை பெய்வது போல என்ன செய்தாலும் தலை அசைத்து கொடி பிடிக்கலாமா?

குறிப்பாக கமல்ஹாசன் போன்றவர்கள் தமிழ் சினிமாவிற்காக உயிரைக்கொடுப்பதாக முழக்கமிடுபவர்கள் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டாமா?

சினிமா ஒரு பொழுது போக்கு ஊடகம் தானே என்று எத்தனை நாள் நாம் நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கப்போகிறோம்?

அசிங்கமான சினிமாவால் அதன் ரசிகர்களுக்குத்தானே கேவலம்?

இறுதியாக:

எந்தப்படைப்பும் தடை செய்யப்படக்கூடாது. அதனால் அய்யா படம் வெளியே வரவேண்டும். அவர் டவுசர் கிழிய வேண்டும் என்று தான் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

மிகச்சிறந்த கலைஞன் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்! தரகு வேலை பார்த்தால் அதற்குப் பெயர் வேறு!

எனக்குப் பிடித்த படம் கரகாட்டக்காரன் தான். அந்தப்படத்தில் இவ்வளவு பித்தலாட்டமும் மோசடியும் துரோகமும் இல்லை!

விஜய்காந்துக்கும் அர்ஜூனுக்கும் விஜய்தம்பிக்கும் கோயில் கட்டலாம் என்று தோன்றுகிறது!