Friday, June 22, 2018

8 வழிச்சாலை : குஜராத் மாடலில் நில அபகரிப்பு மோசடி!

வளர்ச்சியின் காலம் முடிந்துவிட்டது!

நில அபகரிப்பெல்லாம் குஜராத்தில் மிகவும் சாதாரணம். எந்தத் தடையும் இல்லை. யாரும் போராட முடியாது. போராடவும் மாட்டார்கள். ஏனெனில் மோடி அய்யா மேல் இருக்கும் பாசம். அது தான் குஜராத் மாடல். எல்லாவற்றையும் அரசுக்குக் கொடுத்துவிட்டு பிச்சை எடுப்பது ஒரு தியாகம் தானே!
சர்தார் சரோவர் அணை தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய நில / நீர் மோசடி. அதற்கு நிலத்தை, நீரை இழந்தவர்கள் இன்னும் எழுந்திருக்க வழியில்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர்.
பெரும் விவசாயிகளுக்கும், தனியார் கம்பெனிகளுக்கும் நீரை வழங்க காங்கிரஸ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சதி தான் அது. வறண்ட கட்ச், செளராஷ்றா பகுதிகளுக்கு தண்ணீர் கொடுக்க என்று சொல்லி உருவாக்கப்பட்ட திட்டம் இப்பொது யாருக்கோ பயனளித்துக்கொண்டிருக்கிறது. அதனால் வயிற்றில் அடிக்கப்பட்ட லட்சக்கணக்கான சிறு குறு விவசாயிகளுக்கு இன்னும் முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை.
அதில் நடந்த முறைகேட்டைக் கண்டித்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராகத் தான் பின்னாட்களில் பதவிக்கு வந்த முதல்வர் மோடி உண்ணாவிரதம் நாடகம் நடத்தி மக்களை உசுப்பி விட்டார்.
சுற்றுச்சூழல், பாதிக்கப்பட்டோர் இழப்பீடு & மறுவாழ்வு விதிமுறைகள் சரியாகக் கடைபிடிக்கப்படவில்லை என்று பலர் கதறிய போது அவர்களை குஜராத்தின் எதிரிகள் / துரோகிகள் என்று மோடி தூற்றினார்.
இப்போது அளவுக்கு அதிகமான தண்ணீரில் குஜராத் முதலாளிகள் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றனர். அதனால் நிலம் இழந்த குஜ்ராத், மத்தியபிரதேசம், மகராஷ்டர விவசாயிகள் இன்னும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
அகமதாபத் நகரின் சபர்மதி நதியை சர்தார் சரோவரிலிருந்து கொண்டு வரப்பட்ட நர்மதா நீரால் நிரப்பி, அதை ஒரு ஏரியாக்கிவிட்டார் மோடி. அங்கே எல்லோரும் உல்லாசப் படகு சவாரி போய்க் கொண்டிருக்கின்றனர். அது ஒரு பெரிய தீம் பார்க் ஆகிவிட்டது. தினசரி கொண்டாட்டம் தான். அதற்காக நிலம் கொடுத்தவன், நீர் கொடுத்தவன் கதி அதோ கதி தான். இன்று வரை விடிவு இல்லை அவர்களுக்கு.
நானோ கார் கம்பெனி மேற்கு வங்காளத்தில் எதிர்ப்பைச் சந்தித்த போது "எங்கள் மாநிலத்திற்கு வாருங்கள்" என்று மோடி அழைத்து இலவசமாக நிலம் கொடுத்து, அரசு பணத்தை முதலீடும் போட்டு ஹீரோயிசம் காட்டினார். இப்போது அந்தக் கம்பெனியே இல்லை. ஊத்தி மூடிவிட்டனர்.
முதலாளிகளுக்கு எல்லாவற்றையும் அள்ளிக் கொடுப்பது குஜராத் / மோடி மாடல். மக்களை, தொழிலார்களை தமது உரிமையை விட்டுக்கொடுக்க நிர்பந்திப்பது, மூளைச்சலவை செய்வது மோடி பாணி. அதைத்தான் 15 ஆண்டுகள் செய்தார். நெருக்கடி வரும்போதெல்லாம் முஸ்லீம்களுக்கு எதிராகக் கலவரம், இந்துத்வா என்று மக்களை மயக்கினார்.
இத்தகைய மோடி பிரதமரானால் நாடெங்கும் இது நடைமுறைக்கு வராதா என்ன?
நிலத்துக்கு நிலம் இழப்பீடு என்கிற திட்டம் இருந்தது. இப்போது பணம் கொடுக்கிறார்கள். பணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? கண்மூடித் திறப்பதற்குள் அது கரைந்துவிடும். பத்தை நூறாக்குவது ஒரு கலை. அது எல்லோருக்கும் வராது.
தில்லிக்கு அருகில் இருப்பதால் நிலத்தின் விலை மதிப்பேறிய குர்காவுன் பகுதியில் நிலத்தை பல கோடிக்கு விற்று பென்ஸ் கார் வாங்கியவர்கள் எல்லாம் இப்போது செலவுக்குக் காசில்லாமல் அதை விற்றுத் தின்கிறார்கள். ரியல் எஸ்டேட்காரர்கள் தான் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.
ஒரிசா, சத்திஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வளர்ச்சி என்கிற பெயரில் ஆதிவாசிகளில் நிலங்களை, காடுகளை, நதிகளை, மலைகளை முதலாளிகள் அரசுகளின் துணை கொண்டு கொள்ளை அடித்து வருகின்றனர். அவர்களை எல்லாம் மாவோயிஸ்ட் என்று சுட்டுக் கொல்கிறது அரசு.
வளர்ச்சியின் காலம் முடிவுக்கு வந்து விட்டது. கலாம் சொன்ன கனவு காணுங்கள் எனும் கோஷம் காலாவதி ஆகிவிட்டது. இனி எல்லாவற்றையும் நிறுத்துவதே உத்தமம்.
எல்லாவற்றையும் மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
வளர்ச்சி அத்தகைய வெள்ளந்தியான, அப்பாவியான, நடுநிலையான கோட்பாடு அல்ல.

No comments:

Post a Comment