Monday, November 4, 2019

பின் உண்மைக் காலம்

உண்மைக்கு வெளியே!


இது பின் உண்மை காலம் (post truth era) என்று சர்வதேச அளவில் சொல்கிறார்கள்.
ஆதாரம் இல்லாமல் ஆய்வு இல்லாமல் எனக்குத் தெரிந்தவரை, நான் புரிந்தவரை, எனக்குப் பிடித்தவரை, என் சாதிக்கு / இனத்திற்கு / மொழிக்கு / மதத்திற்கு / நாட்டுக்கு / வர்க்கத்திற்கு / பண்பாட்டுக்கு / நம்பிக்கைக்கு உகந்த வகையில் உண்மைகளைச் சுருக்குவதை, திரிப்பதை அதையே நம்புவதை, அதைப் பின்பற்றி முடிவுகள் எடுக்கப்படுவதை பின் உண்மைக்காலத்தின் முக்கியக்கூறுகள் எனலாம்.
ட்ரம்ப் தொடங்கி மோடி வரை வெறும் கட்டுக்கதைகளை எந்தக் கூச்சமுமின்றி அவிழ்த்துவிடுவதையும் அதை மக்களும் ஆஹா ஓஹோ என்று பாராட்டுவதையும் என் செல்ல மகன் என்னமா மூத்திரம் போறான் பாரு என்பது போல நாம் இத்தலைவர்களைப் பார்த்து உச்சி முகர்வதையும் பின் உண்மைக்காலத்தின் வெளிப்பாடாக நாம் கருதலாம்.
இப்போது இந்தியா இயங்குவது எல்லாமே கட்டுக்கதைகள், புரளிகள், வதந்திகள், திரிக்கப்பட்ட உண்மைகள், மறைக்கப்பட்ட செய்திகள் இவற்றின் மீது தான்.
நேற்று ஒரு கல்லூரியில் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகள், சொன்ன கருத்துக்கள், எழுப்பிய சந்தேகங்கள் எல்லாமே இந்தப் புரளிகளைச் சார்ந்து தான் இருந்தன.
இந்தப் புரளிகள் அவை உருவாக்கப்படும் போதும், பரப்பப்படும் போதும் உண்டாக்கும் ஆபத்தை விட அவை அப்படியே நம்பப்படும் போது தான் கடும் சேதங்களை ஏற்படுத்துகின்றன.
ஒரு வகையில் இந்தக்கட்டுக்கதைகள் மீது அதை உள்வாங்குவோருக்கு / நுகர்வோருக்கு ஒரு மோகம் ஏற்படுவதை நாம் காணமுடிகிறது.
அந்தக்கதைகளைத் தேடி அலையும் வேட்கையும் நுகர்வோருக்கு ஏற்படுகிறது.
உருவாக்கும், பரப்பும் நபர்கள் சற்று சோர்ந்தால் கூட பழைய வற்றை நுகர்வோரே வாந்தி எடுத்து மகிழ்ச்சியோடு நக்கிச் சாப்பிட்டு இன்புறுகின்றனர்.
உருவாக்கும், பரப்பும் முனைகள் மீது கட்டுக்கடங்காத நம்பிக்கைகளை நுகர்வோர் உருவாக்கிக்கொள்கின்றனர். அங்கிருந்து வரும் 'உண்மைகளை' மட்டுமே அப்படியே நம்புவதும் மாற்று முகாமிலிருந்து வரும் உண்மைகளை சந்தேகிப்பதும், ஆதாரம் கேட்பதும் இந்த விசுவாசத்தின் விளைவுகள்.
இந்த நுகர்வோர் தமது விசுவாச முனைகளில் இருந்து வரும் உண்மைகளுக்காகக் காத்திருக்கின்றனர். ஏங்குகின்றனர். தேடித்தேடி அலைகின்றனர்.
இந்தியாவில் ஸ்மார்ட் அலைபேசிகள் இந்த 'உண்மைகளை'ப் பரப்பும் வானொலி நிலையங்களாக, தொலைக்காட்சி நிலையங்களாக, நூலகங்களாக செயல்படுகின்றன.
எல்லா வகுப்பினரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்நிலையங்களில் இருந்து இந்த 'உண்மைகளை' நுகர்ந்து கொண்டேயிருக்கின்றனர்.
இந்த 'உண்மைகள்' அடைமழையாக மனிதர்கள் மீது பெய்து கொண்டயிருக்கிறது. மனிதர்கள் 'பின் உண்மைக்கால' சதுப்புநிலத்தில் தட்டுத்தடுமாறி நகர்ந்தபடி இன்னும் இன்னும் கொடுங்கள் என்று மன்றாடிக்கொண்டிருக்கின்றனர்.
அமுதன் ஆர்.பி.
5 நவம்பர் 2019