Tuesday, December 17, 2019

மாற்று கலை உலகில் நிலவும் திராவிட எதிர்ப்பு மனநிலை!

மாற்று கலை உலகில் நிலவும் திராவிட எதிர்ப்பு மனநிலை! 
- அமுதன் ஆர்.பி.


சமீபத்தில் இறந்து போன ஒரு நண்பர். மாற்று சினிமா, நாடகம் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியவர். இடது சாரி சிந்தனையாளர்.
ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு உரையாடலில் ரவி சுப்ரமணியன், எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றி எடுத்த ஒரு ஆவணப்படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது....
நான் : வழக்கமான ஆளுமைகள் பற்றிய படம் போல வெறும் பேட்டிகளாக இல்லாமல் பயணங்கள், சுவாரஸ்மான பதிவுகள் இந்தப்படத்தில் உண்டு. ஜெயகாந்தனும் ஆசிரியர் வீரமணியும் தாம் ஒன்றாய்ப் படித்த பள்ளிக்குப் போவது போல ஒரு காட்சி உண்டு. செழியன் மிகவும் அழகாகப் பதிவு செய்திருப்பார்.
அவர்: வீரமணி, ஜெயகாந்தன் கதையெல்லாம் படித்திருக்கமாட்டார். படித்திருந்தால் அந்தக்கட்சியில் இருந்து விலகியிருப்பார்.
இந்தக் கருத்தைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன்.
அதற்குக் காரணங்கள் பின்வருமாறு:
1) ஆசிரியர் வீரமணி ஜெயகாந்தன் கதைகளைப் படித்திருக்க மாட்டாரா? அவர் சிறந்த படிப்பாளி இல்லையா? அவரே நிறையப் புத்தகங்களை எழுதியவர். அவரைப் பற்றி ஏன் இந்தப் போராளி இப்படி அவதூறு பரப்புகிறார்?
2) ஜெயகாந்தன் அற்புதமான கதைகளை எழுதியிருக்கிறார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அவரது கதைகளைப் படிப்பது தான் உன்னத அறிவுச்செயல்பாடா? அது தான் அளவுகோலா?
3) ஆசிரியர் வீரமணிக்கென்று ஒரு சமூக, அரசியல் முக்கியத்துவம் இல்லையா? அவர் ஆற்றிவரும் பங்களிப்பை இப்படித் தான் அளவிடுவதா?
4) அதென்னா "அந்தக் கட்சி?" திராவிடக் கழகம் தமிழக, இந்திய அரசியலுக்கு ஆற்றிய பங்களிப்பை அப்படிக் குறைத்து மதிப்பிடமுடியுமா? 
இந்தப்போராளி எந்நேரமும் இளைஞர்களுடன் சுற்றிக்கொண்டிருந்தவர். என்ன வகையான அவதூறுகளை அவர்களிடம் இப்படி விதைத்திருப்பார் என்பதை நினைத்தால் அதிர்ச்சியாகவே இருக்கிறது. இவரிடம் பாடம் கற்றவர்கள் இந்த திராவிட அரசியலுக்கு எதிரான வெறுப்பையும் சேர்த்துத் தான் கற்றுக்கொண்டனரா?
இதெல்லாம் எங்கிருந்து வருகிறது?
தமிழகத்தில் அறிவு, கலை, பண்பாட்டுச் செயல்பாட்டில் ஈடுபடவேண்டுமெனில் பார்ப்பன சார்பு மற்றும் திராவிட எதிர்ப்பு மனநிலை தேவைப்படுகிறது. அதை எல்லாக் கட்டங்களிலும் பலர் நம்மைச் சோதிக்கின்றனர். இதைக் கடந்து தான் தமிழ்நாட்டில் குறிப்பாக மாற்று சினிமா, இலக்கிய, பண்பாட்டு செயல்பாடுகளில் ஈடுபடமுடியும்.
இதை நான் நேரடியாக ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டிருயிருக்கிறேன். இந்த அளவுகோலுக்குள் நான் அடங்காததால் இழந்த தொடர்புகள் மற்றும் வாய்ப்புகள் அதிகம்.
இத்தனைக்கும் இது கார்பரேட், அரசாங்க சட்டகங்களுக்கு வெளியே அவற்றுக்கு மாற்றாக நடப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தளங்களில் நடப்பது.


மோடி போன்றவர்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்?


நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது இன்னொரு பாடத்தில் ஒரு மாணவர் இருந்தார். உயர்சாதிக்காரர், வசதியானவர், ஸ்டைலாக இருப்பார், ரசிகைகள் அதிகம்.
அவருக்கு ஒரு திருமணமான பெண் மீது காதல். அந்தப் பெண் சம்மதிக்கவில்லை. அவர்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியாது. ஒரு நாள் அந்தப் பெண்ணின் 10 வயது மகனை இந்த நாயகன் கடத்திக் கொண்டு போய்விட்டார். அச்சிறுவனை கட்டிவைத்து அடித்து, பட்டினி போட்டு, பாலியல் பலாத்காரம் செய்து அந்தப் பெண்ணுக்கு 'பாடம்' புகட்டினார்.
இந்தச் செய்தி வெளியில் வந்து, நாயகனின் குடும்பப் பின்னணி காரணமாக அச்சம்பவம் ஊத்தி மூடப்பட்டது.
நான் சொல்லவந்தது அதுவல்ல.
அந்த நாயகனின் இந்த சாகசம் பற்றி எங்கள் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் அப்போது என்ன பேசிக்கொண்டார்கள் தெரியுமா?
1) நம்பமுடியவில்லையே, இப்படியெல்லாமா நடக்கும்? - சந்தேகம்
2) அய்யோ, இவன் இப்படிப்பட்டவனா? - பயம்
3) இவ்வளவு துணிச்சல் மிக்கவனா? தனக்கு வேண்டும் என்றால் இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுப்பானா? - ரசிப்பு
அவரை யாரும் தண்டிக்கவில்லை. இடைநீக்கம் கூட செய்யப்படவில்லை. ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இறுதியில் அந்த நாயகன் முதுகலைப் பட்டம் பெற்று நிம்மதியாக வெளியேறினார்.
இப்படித்தான் மோடியை இந்தியர்கள் எதிர்கொள்கின்றனர்.
2002 குஜராத் இனப்படுகொலை பற்றி என்ன தகவல் வெளியே வந்தாலும் அதை மறைக்க மோடி என்ன சட்டமீறல்கள் புரிந்தாலும் அதைக் கண்டு மிரள்வது, அல்லது ஒதுங்குவது, அல்லது ரசிப்பது என்பதாகவே இந்தியர்களின் எதிர்வினை இருந்தது.
சாகசக்காரர்களைப் பார்த்து மிரள்வது, ஒதுங்குவது அல்லது ரசிப்பது போலவே நாம் நடந்து கொண்டிருக்கிறோம்.
மோடிக்கு எதிரான ஒரு உறுதியான நிலைப்பாட்டை யாருமே அன்று எடுக்கவில்லை.
இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் குறைந்த பட்சம் இருக்கப்போகிறார்.
என்னவெல்லாம் நடக்கும் என்பதை நம்மால் கணிக்கக்கூட முடியாது.
அத்தனை நம்பமுடியாத, அச்சமூட்டக்கூடிய வரலாறு அவருடையது.

17வது சென்னைத் திரைப்படவிழாவில் ஒரு பார்ப்பன மிரட்டல்!



1
17வது சென்னை திரைப்பட விழாவை தேவி தியேட்டரி்ல் ஒருங்கிணைப்பு செய்யும் நபர் பார்வையாளர்களை ஆட்டு மந்தையைப் போல நடத்துவது எது? அவரது உயர் சாதியா, மேட்டுக்குடி வர்க்கமா?
எல்லாம் தெரிந்த கம்யூனிஸ்டுகள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் தான் பார்ப்பனர்களைக் குறை சொல்லாதே என்று பாடம் எடுப்பார்கள்.

2
ஒரு பார்ப்பனர், சென்னைத் திரைப்படவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தேவி தியேட்டரில் பார்வையாளர்களை அக்ரஹாரத்திற்குள் நுழைந்த சூத்திரர்களை விரட்டுவது போல விரட்டிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்பாரில்லையா? என்று தான் புலம்ப ஆசை.
ஆனால் கம்யூனிஸ்ட் தோழர்கள் 'பார்ப்பனர்' என்று சொல்லாதே என்று பல முறை என்னை ஏற்கனவே மிரட்டியிருப்பதால், எப்படியும் இரண்டாவது சுற்றில் அவர்களுக்கு தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதை முதலிலேயே செய்துவிட்டேன்.
இன்று நான் சாப்பிட்ட பீப் பிரியாணி மீது ஆணை. இது தான் உண்மை. எனக்கென்ன தோழர்களோடு வாய்க்காத் தகராறா?
மதுரை அருகே வாடிப்பட்டியில் ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்கக் கோயில் இருக்கிறது. அங்கும் இப்படித்தான் சில மூத்த கன்னியாஸ்திரிகள் பக்தர்களை மிரட்டிக் கொண்டேயிருப்பார்கள். அந்த இரைச்சலும் திரைப்படவிழாவில் அரங்கிற்குள் ஒலிபெருக்கியில் மேற்படியாரின் உருட்டல்களும் ஒத்திருந்தன.
உங்களுக்கு நாங்க படம் போடறதே பெரிய விஷயம், ஒழுங்கா நடங்கடா என்றே அர்த்தம் கிடைத்தது.

3
ஒரு பார்ப்பனர், சென்னைத் திரைப்படவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தேவி தியேட்டரில் பார்வையாளர்களை அக்ரஹாரத்திற்குள் நுழைந்த சூத்திரர்களை விரட்டுவது போல விரட்டிக் கொண்டிருக்கிறார்.
மதுரை அருகே வாடிப்பட்டியில் ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்கக் கோயில் இருக்கிறது. அங்கும் இப்படித்தான் சில மூத்த கன்னியாஸ்திரிகள் பக்தர்களை மிரட்டிக் கொண்டேயிருப்பார்கள். அந்த இரைச்சலும் திரைப்படவிழாவில் அரங்கிற்குள் ஒலிபெருக்கியில் மேற்படியாரின் உருட்டல்களும் ஒத்திருந்தன.
உங்களுக்கு நாங்க ஒலகப்படம் போடறதே பெரிய விஷயம், ஒழுங்கா இருங்கடா, ஞான சூன்யங்களா என்றே அர்த்தம் கிடைத்தது.
நெளிந்தபடி படம் பார்க்கத் தொடங்கினேன்.

4
கம்யூனிஸ்டுகள் பார்ப்பனர்களுக்கு ஆதரவானவர்கள் என்று நான் சொன்னதற்கு கோபம் கொள்ளும் தோழர்கள், 10% இடஒதுக்கீட்டை மோடி அரசு உயர் சாதி ஏழைகளுக்கு வழங்கிய மசோதாவை மார்க்ஸிஸ்ட் கட்சி ஏன் ஆதரித்தது என்று சொல்லமுடியுமா?
என்னைக் கூட்டமாக வந்து தாக்குவதால் உண்மையை மறைக்க முடியுமா?
நான் பார்ப்பனர்களை விமர்சிக்கும் போதெல்லாம் என்னை எதிர்கேள்வி கேட்போரே இப்போதும் என் (திரைப்பட விழா அனுபவம்) கருத்திற்கு எதிராகப் பதிவிடுவது நகைமுரண்.
எனது பார்ப்பன எதிர்ப்பு கருத்துக்களுக்கு சங்கிகளை விட கம்யூனிஸ்டுகளே மறுப்பு அதிகம் தெரிவித்திருக்கின்றனர். சங்கிகள் தோழர்களிடம் தோற்கும் இடம் இது தான். ஆதாரம் என் முந்தைய பதிவுகளில் நீங்கள் பார்க்கலாம்.
திரைப்படவிழாவில் ஒரு பார்ப்பனர் அவமரியாதையாக பார்வையாளர்களை நடத்துகிறார் என்பதைப் பதிவிட நான் நினைத்ததும் இதற்கு முன் தோழர்கள் என்னைத் தாக்கி எழுதியதை, என்னைத் தாக்கி எழுதியவர்களுக்கு லைக் இட்டதை நினைக்காமல் இருக்கமுடியவி்ல்லை. அதனாலேயே எனது தயக்கத்தை வெளிப்படுத்தினேன்.
நான் சாதி பற்றித் தொடர்ந்து படங்கள் எடுத்தும், திரையிட்டும், விவாதித்தும் வருகிறேன். அதன் நீட்சியாகவே என் விமர்சனங்களை வைக்கிறேன். யார் மீதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை.
எதிரிகளைப் போரிடுவதோடு உடன் பயணிப்போரின் போதாமையையும் சுட்டுதல் முக்கியம்.
இந்தப் பதிவுக்கும் அவதூறுகள், கேலி, இடிப்பு, வசைமொழிகள் வரக்கூடும், என் நேர்மையை, என் பின்னணியைப் பழித்துப் பதிவுகள் வரலாம். திசை திருப்பும், திரித்து எழுதும் கருத்துகள் வரலாம்,
நான் பெரியார் தொண்டன். அதற்கெல்லாம் சோர்ந்து போகமாட்டேன்.

5

இப்போது கூட ஒரு பார்ப்பனப் பெண் எனக்கு எதிராகத் துவேஷத்துடன் வசை பாடியிருப்பதில் பல இடதுசாரிகள் லைக் இட்டிருக்கின்றனர். பார்ப்பனர் மீதான அபரிதமான விசுவாசம், சாதி மீதான மயக்கம் நம்மில் பலரை வாட்டுகிறது. சாதியை ஒரு சித்தாந்தமாக எதிர்க்காமல் அதன் கொடுமையை மட்டும் எதிர்ப்பதில் இருக்கும் பிரச்சனை தான் இது. இந்தியாவில் சாதி ஆதிக்கத்தின் வேர் பார்ப்பனியம் தான். அதுவே சங்கி அரசியலில் வேரும் கூட. இப்போது நாம் எதிர்க்கும் மோடி அரசாங்கத்தின் வேரும் அதுவே. இதில் நாம் எப்படி தயக்கம் காட்டலாம்?
இதற்கும் பலர் கும்பலாக (mob) வந்து என்னைச் சாடலாம். இருந்தாலும் உண்மையைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.