Monday, November 21, 2011

டென்னிஸ் ஓ ரூர்க்


என்னுடைய படங்களை தெருவின் நடுவே தூக்கி எறியப்பட்ட கற்களுக்கு ஒப்பிடலாம்.
அவற்றைத் தாண்டியோ சுற்றியோ தான் நீங்கள் நடக்கவேண்டும் - டென்னிஸ் ஓ ரூர்க்

டென்னிஸ் ஓ ரூர்க்
© Copyright Camerawork Pty Ltd

கற்களை எறியும் டென்னிஸ் ஓ ரூர்க்
- அமுதன் இராமலிங்கம் புஷ்பம்


டென்னிஸ் ரூர்க் ஒரு ஆஸ்திரேலிய ஆவணப்பட இயக்குநர்.
1945ம்  ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிறந்த ரூர்க், 1980, 90களில் உலகின் மிகவும் வெற்றிகரமான, சர்ச்சைக்குள்ளான ஆவணப்பட இயக்குநர்/தயாரிப்பாளர்களில் ஒருவர். அவரது சமூக, அரசியல் படங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிற HALF LIFE, SHARK CALLERS OF KONTU ஆகிய படங்கள் நிறைய சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கின்றன.

டென்னிஸ், விளிம்புநிலை மனிதர்களைப் பற்றியே குறிப்பாக ஆஸ்திரேலிய கண்டத்தின் பூர்வகுடி மக்களான அபாரிஜின் மக்களைப் பற்றியே படம் எடுத்திருக்கிறார். டென்னிஸ் சர்ச்சைகளை விரும்புவதால் தனது படங்களைப் பற்றிக் குறிப்பிட்டது உண்மையானது தான். ரூர்க்கின் படங்களின் கதைக்கருக்களும் அவை படமாக்கப்பட்ட விதமும் பலரது கவனத்தைப் பெறக்கூடியவை மற்றும் விவாதம் எழுப்பக்கூடியவை. டென்னிஸ் ரூர்க்கின் கதைமாந்தர்களும் சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களே.

மார்சல் தீவுகளில் வசிக்கும் பூர்வகுடிமக்கள் மீது அமெரிக்க நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனையாகட்டும் (HALF LIFE), பாங்காக்கில் வாழும் பாலியல் தொழிலாளியினுடான ரூர்க்கின் உறவாகட்டும் (THE GOOD WOMAN OF BANGKOK), ஆஸ்திரேலியாவின் விலக்கப்பட்ட குடியிருப்பில் வாழும் உதிரிமக்களாகட்டும் (CUNNAMULLA) அவரது ஆவணப்படங்கள் அறமும் உண்மையும் கலந்து எண்ணற்ற சிறிய தகவல்களுடன் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவே அமைந்துள்ளன.

நான் எப்படி என் படங்களை எடுக்கிறேன் என்பது என்பது பெரிய மர்மமாக இருக்கிறது. சில சமயம் எனது படங்களை நான் பார்க்கும் போது என் பெயர் அதில் வந்தாலும் நான் தான் அவற்றை இயக்கினேன் என்ற உணர்வு எனக்கு வந்ததில்லை. படைப்பின் போக்கை விளக்க முயற்சிப்பது என்பது பூனை தனது வாலை விரட்டுவது போலத்தான் என்கிறார் டென்னிஸ் ரூர்க்.

தனது பெற்றோர்களின் வியாபாரம் காரணமாக அது வீழ்ச்சி அடையும் வரை குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆஸ்திரேலியாவின் சிறுநகரங்களில் வசித்த டென்னிஸ் ரூர்க், அதன் பிறகு கத்தோலிக்க விடுதிப்பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்தார். 60களின் இறுதியில் பல்கலைக்கழகப் படிப்பைப் பாதியில் விட்டு ஆஸ்திரேலியாவிலும் பசிபிக் தீவுகளிலும் தெற்கு ஆசியாவிலும் சுற்றித்திரிந்தார். இந்தக்காலத்தில் விவசாயக் கூலியாகவும், விற்பனைப் பிரதிநிதியாகவும், மாட்டுப்பண்ணையில், எண்ணெய்க் கிணறுகளில், கப்பல்களில் உதவியாளனாகவும் வேலை செய்தார். புகைப்படப் பத்திரிக்கையாளனாக வேண்டுமென்று புகைப்படக்கலையும் கற்றுக்கொண்டார். ஆவணப்பட இயக்குநராக வேண்டுமென்று ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு தொடக்கத்தில் தோட்டக்காரனாக வேலை செய்தார். பின்னாட்களில் அங்கே ஒளிப்பதிவாளரானார்.

யூமி யெட் 
© Copyright Camerawork Pty Ltd 

 1974 முதல் 1979 வரை குறிப்பாக ஆஸ்திரேலியாவின் காலனிய நாடான பழங்குடியினர்/பூர்வகுடியினர்/அபாரிஜின்கள் வாழும் பாப்பு நியூ கினியா தீவில் காலனிய ஆட்சி முடிவுக்கு வரும் போது டென்னிஸ் ரூர்க் அங்கு வசித்தார். புதிய சுதந்தர பாப்பு நியூ கினியாவில் ஆவணப்படத் தயாரிப்புக்கான பயிற்சியளித்தார். 1976ல்யூமி யெட்பாப்பு நியூ கினியாவின விடுதலைஎன்ற தனது முதல் ஆவணப்படத்தை எடுத்தார். தனது முதல் படத்தைத் தொடர்ந்து பழங்குடி மக்களைப் பற்றிய தொடர்ச்சியாக படங்கள் எடுத்தார். டென்னிஸ் ரூர்க் அபாரிஜன் மக்களின் ஒடுக்குமுறை பற்றியும் அவர்களது பொருளாதார, சமூக, அரசியல் பிரச்சனைகளில் அக்கறை கொண்டிருந்தார்.

யாப்! 
© Copyright Camerawork Pty Ltd

யூமி யெட்டில் வெள்ளை அரசாங்கத்தின் காலனியாக இருந்து விடுதலை அடைந்த பாப்பு நியூ கினியாவின் கொண்டாட்டத்தை, அந்த நாடு விடுதலை அடைந்த நாளை பூர்வகுடி மக்களின் பூர்வீக பாடல்கள், நடனங்கள், பேட்டிகள் மூலமாகப் பதிவு செய்திருந்தார். எல்லாந்தெரிந்த வர்ணனை ஒன்று படம் முழுக்க நடத்திச்செல்லும் வகைமுறை இல்லாது பூர்வகுடியினரின் துண்டிக்கப்பட்ட தலைகளை சேகரித்த (HEAD COUNTING) வெள்ளையின வெறி தாண்டவம் ஆடிய பாப்பு நியூ கினியாவில் சுதந்தர காற்று வீசுவதை பாரம்பரியமான காமெரா உத்திகளை விலக்கிய, சிரத்தையான சத்தம் மற்றும் காட்சிப் படிவங்களை கூர்மைப்படுத்திய படத்தொகுப்பு உத்திகள், என அரசியல்மயப்படுத்தப்பட்ட வரலாற்றுப்படமாக அமைந்ததாக பல விமர்சகர்கள் பாராட்டியிருந்தனர். நூற்றுக்கணக்கான தீவுகளில் வாழ்கிற 700க்கும் மேற்பட்ட மொழி பேசுகிற 30 லட்சம் பேர் ஒரே நாடாக ஒன்று சேர்வதை ,ஒரு காலனி விடுதலை அடையும் நிகழ்ச்சி பற்றிய வழமையான பதிவாக இல்லாது கசப்பான பல வரலற்று உண்மைகளை நினைவூட்டுகிற படமாகவும்யூமி யெட்என்கிற ஆவணப்படம் அமைந்தாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

டென்னிஸ் ரூர்க்கின் அடுத்த முக்கியமான படமாகக் கருதப்படுவது 1980ல் அவர் எடுத்தயாப், நாங்கள் தொலைக்காட்சியை விரும்புவோம் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” (YAP... HOW DID YOU KNOW THAT WE’D LIKE TV?) என்கிற அவரது மூன்றாவது ஆவணப்படம். மேற்கு பசிபிக் கடலில் இருக்கும் யாப் அல்லது வாஅப் என்கிற குட்டித்தீவில் அமெரிக்காவுடனான விடுதலை ஒப்பந்தத்தின் பேரில் கிடைக்கிற பலசலுகைகளில்ஒன்றாக எட்டு மணி நேரம் இயங்குகிற தொலைக்காட்சி நிலையமும் தொடங்கப்படுகிறது. அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகள், விளம்பரங்கள், பாடல்கள் வந்து குவிகின்றன. யாப் தீவின் கிராமப்புற/காட்டுப்புற/நாட்டுப்புற வாழ்க்கைக்கு முற்றிலும் முரணான, அயலான, அமெரிக்காவின் பண்பாட்டு ஏகாதிபத்தியம் பறை சாட்டப்படுகிறதென யாப் தீவின் குடிமக்கள் பலர் இந்தத்தாக்குதலை எதிர்த்தனர்.

டென்னிஸ் ரூர்க் தனதுயாப்படத்தில் தகரக்கொட்டகையில் அடிப்படை வசதிகள் இன்றி யாப் மக்கள் பீர் குடித்துக்கொண்டு வேர்வை, வெக்கை, கொசுக்கடிக்கு மத்தியில் தொலைக்காட்சியில் மெக்டொனால்ட் துரித உணவு, கார்பெட்டுக்கான சாம்பூ, முடிநீக்கும் திரவம், மிட்டாய்கள், குளிரூட்டப்பட்ட படகுகள், யோனிக்கான வாசனைத் தைலம் ஆகிய விளம்பரங்கள் பார்க்க வைக்கப்படும் அப்பட்டமான பண்பாட்டு இனவெறியை எள்ளி நகையாடுகிறார். பார்வையாளர்களுக்கு சற்றும் தொடர்பே இல்லாத அவர்களது பண்பாட்டை, தேவைகளை முற்றிலும் புறக்கணிக்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிற்காலத்தில் உலகெங்கும் நடைபெறவிருந்த பண்பாட்டு காலனியமயமாதலைக் கோடிட்டுக் காட்டுகின்றன. அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின் கீழிருந்த பல தீவுகளில் பல விதமான சோதனைகள் செய்து பார்த்ததற்குயாப்என்கிற ஆவணப்படம் ஒரு சாட்சி.

'சுறா அழைப்பாளர்கள்' 
© Copyright Camerawork Pty Ltd 

டென்னிஸ் ரூர்க்கின் அடுத்த முக்கியமான ஆவணப்படம்கொண்டுவின் சுறா அழைப்பவர்கள்/பிடிப்பவர்கள்” (SHARK CALLERS OF KONTU). பாப்பு நியூ கினியாவின் கடற்கரையோர கிராமமான கொண்டுவில் வாழும் நூற்றைம்பது பேரில் வெகு சில ஆண்களுக்கு ஒரு சிறப்பான ஆற்றல் உண்டு. தமது படகில் தனியாய்க் கடலுக்குப் போய், கொட்டாங்குச்சிகளை ஒரு கோர்வையாய் தண்ணீருக்குள் அசைத்து ஒலி எழுப்புவதன் மூலம் சுறாக்களை அழைக்கவும், அவற்றை பிடிக்கவும், வெறும்கையால் கொல்லவும் கூடிய ஆற்றல் அது. சுறாக்களைப் பிடிப்பது ஒரு மந்திரசக்தி என்றும் அது அவர்களின் மூதாதயர்களின் பாரம்பரியத்தின் தொடர்ச்சி என்றும் கொண்டு அம்மக்கள் கருதுகின்றனர். ஆனால்வெள்ளை நாகரிகத்தின்வரவு காரணமாகவும், கிறிஸ்தவ மதம், மேற்கத்திய படிப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் தாக்கத்தினாலும் சுறாவை அழைப்பது படிப்படியாக மறைந்து போகிறது என்றும் அது கொண்டு கிராமத்தின் சமூகக் கட்டமைப்பின் மறைவின் அடையாளம் என்றும் கிராமத்தின் மூத்தவர்கள் கவலை கொள்கின்றனர்.

கொண்டுவின் சுறா அழைப்பாளர்கள்என்கிற இந்தப்படம் ஒரு இனவரை வியல் படமாக உருமாறுவதற்கு அனைத்துக் காரணங்களும் இருந்தாலும், டென்னிஸ் ரூர்க், இந்தப்படத்தை ஒரு அரசியல் இடையீட்டுப்படமாக, கொண்டு மக்களின் பாரம்பரியம் அழிக்கப்படுவதை ஒரு இனத்தாக்குதலாகச் சித்தரிக்கிறார். கொண்டு மக்களின் பேட்டிகள், அவர்களது வாழ்க்கை முறை, அவர்களது மந்திரசக்தி என நம்பப்படும் ஆற்றல் ஆகியவற்றைப் பதிவு செய்து மறுபடியும் வர்ணனை எதுவும் இல்லாமல், “சுறா அழைப்பாளர்கள்என்பதை வெறும் வறட்டு பாரம்பரிய அழகியல் என்று சுருக்காமல் டென்னிஸ் ரூர்க் தனது படத்தில் ஒரு அரசியல் உரையாடலே நடத்துகிறார். கிறிஸ்தவ மதமும் ஐரோப்பிய காலனிய ஆதிக்கமும் நாகரிகம், வளர்ச்சி, நவீனக் கல்வி, பொருளாதாரம் என்ற பெயரில் தூரத்து பூர்வகுடி மக்களின் வேர்களைத் துண்டித்து அவர்களை வெள்ளைச் சமூகத்தின் வேலிகளாக்குகின்றன என்பதையே டென்னிஸ் ரூர்க் தனதுகொண்டுவின் சுறா அழைப்பாளர்கள்படத்தில் வெளிப்படுத்துகிறார்.

'அரை ஆயுள்'
© Copyright Camerawork Pty Ltd

அடுத்து டென்னிஸ் ரூர்க் இயக்கிய மிக முக்கியமான ஆவணப்படம் HALF LIFE – A PARABLE FOR THE NUCLEAR AGE (அரை/பாதி ஆயுள்அணு யுகத்திற்கான நீதிக்கதை). 1985ல் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் நேரடியாக அமெரிக்க அரசின் அணுகுண்டு பரிசோதனைகளை விமர்சிக்கும் கேள்விக்கு உட்படுத்தும் ஒரு காட்சி ஆவணம். அமெரிக்கா, சோவியத் யூனியனுடனான பனிப்போர் காலத்தில் பசிபிக் கடலில் நூற்றுக்கணக்கான அணுகுண்டு வெடிப்பு சோதனைகளைச் செய்தது. (பொக்ரானில் இந்தியா வெடித்துச் சோதித்த இந்துமதவெறி/இந்தியவெறி கொண்ட அணுகுண்டுப் பரிசோதனைகளைப் போல) அப்படி மார்சல் தீவுகளில் உள்ள பிகினி தீவுகளில் 1954 மார்ச் 1ம் தேதி ஹைட்ரஜன் குண்டு ஒன்றை வெடித்துச் சோதனை செய்தது.

பிராவோ என்று அழைக்கப்பட்ட இந்தச்சோதனையினால் கதிர்வீச்சு நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவிற்குப் பரவியது. காற்றின் போக்கில் வெள்ளைப் பொடித்துகள்களாக பிகினி உட்பட்ட மூன்று குட்டித்தீவுகளிலும் படர்ந்தது. அமெரிக்காவின் இந்த அணு குண்டுச் சோதனையால் பாதிக்கப்பட்ட ராங்க்லாப், உதிரிக் ஆகிய தீவுகளில் வசித்த 236 பூர்வகுடி மக்களையும், பிராவோ சோதனையில் ஈடுபட்ட 28 அமெரிக்கப் படைவீரர்களையும் தூரத்தில் இந்தச்சோதனை பற்றித் தெரியாது பயணித்த ஜப்பானிய ஆழ்கடல் மீன்பிடிக்கப்பலின் 23 மீனவர்களையும் டென்னிஸ் ரூர்க் தனது ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்.

என்ன நடக்கிறது என்றோ எங்களுக்கு என்ன நோய்கள் வந்திருக்கிறது என்றோ தெரியவில்லை”, “கடல் நீர் மஞ்சள் நிறமானது, மீனும் இளநீரும் கசப்பாகின” “எனக்கு ஒரு குழந்தை போன்று ஒன்று பிறந்தது, அதை என்னவென்று என்னால் விவரிக்க முடியாதுஎன்று பூர்வகுடி மக்கள் கூறுகின்றனர். பூர்வகுடியினருக்கு மிகப்பெரிய தலையுடன் ஒரு குழந்தையும் தலை தொடர்ந்து ஆடிக்கொண்டேயிருக்கும் ஒரு குழந்தையும் கதிர்வீச்சின் விளைவாகப் பாதிக்கப்பட்டு பிறந்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் வெளியிடப்பட்ட செய்தியில்மார்சல் தீவுகளுக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஒன்றுமில்லை. அவர்கள் வழக்கம் போல வாழ்கின்றனர்என்று அறிக்கை வெளியிடப்பட்டதையும் அமெரிக்க ஜனாதிபதிமார்சல் தீவு மக்கள் நமது குடும்பத்தினரைப் போலஎன்று முழங்குவதையும் டென்னிஸ் ரூர்க் காண்பித்து அமெரிக்காவின் பித்தலாட்டத்தை தோலுரிக்கிறார்.

மேலும் இந்தப் பரிசோதனைகளினால் மார்சல் தீவு மக்களுக்கு பாதிப்பு வரும் என்று தெரிந்தும், அவர்களை சரியான நேரத்தில் அங்கிருந்து அமெரிக்கா அகற்றியிருக்க முடியும் என்ற போதும் அம்மக்கள் மீது வெடிகுண்டு வெடித்துச் சோதனை செய்து பார்த்தது என்கிறார் டென்னிஸ் ரூர்க். பூர்வகுடி மக்களை பரிசோதனைக் கூடத்து பன்றிகளாகவே எலிகளாகவே அமெரிக்கா பாவித்தது என்று இயக்குநர் குற்றம் சாட்டுகிறார்.

டென்னிஸ் ரூர்க்கின் மிக முக்கியமான பலமே, அவர் தனது கதை மாந்தர்களிடம் காட்டும் நெருக்கம், அவர்களிடம் அவர் பெற்றிருந்த நம்பிக்கை ஆகியவை தான். அதுவே அவருக்கு நிறைய நெருக்கடிகளைக் கொடுத்திரு -க்கின்றன. ரூர்க்கின் அடுத்த முக்கியமான படமாகக் கருதப்படுகிற THE GOOD WOMAN OF BANGKOK (பாங்க்காக்கின் நல்ல பெண்) என்ற ஆவணப் படத்தில் ஏஒய் என்கிற ஒரு பெண் பாலியல் தொழிலாளியுடனான இயக்குநரின் உறவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பாங்காக்கின் நல்ல பெண்
© Copyright Camerawork Pty Ltd

ரூர்க் தனது கதாநாயகியிடம் பணம் கொடுத்து உடலுறவு வைத்துக் கொள்கிறார். அவருடன் நட்பு கொள்கிறார். அவருடன் காதல் கொள்கிறார். அவருடன் ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி விடுகிறார். அதன் பிறகு தனது படத்தைப் பதிவு செய்யத் தொடங்குகிறார். மிகுந்த சர்ச்சைக்கும் கண்டனத்திற்கும் கவனத்திற்கும் உள்ளான இந்த ஆவணப்படத்தில் தாய்லாந்து நாட்டில் பாலியல் தொழில் வளர்ச்சியை, அதன் சுரண்டலை வெள்ளைக்காரர்கள் எப்படி பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதை மூன்றாவது மனிதராக இருந்து பதிவு செய்வதற்குப் பதிலாக தன்னையே ஒரு கதாபாத்திரமாக்கி மிகுந்த மனதிடத்துடன், தைரியத்துடன் வெள்ளைத் திமிரை, ஆணாதிக்கத்தை வெளிக்கொணர்கிறார். பாலியல் தொழிலை ஒரு குறியீடாகக் கொண்டு இன ஒடுக்குமுறையையும், பாலின ஒடுக்குமுறையையும் விவாதப்பொருளாக்குகிறார் டென்னிஸ் ரூர்க். வாயரிசம் எனப்படும் சாவித்துவாரம் வழியாக அடுத்தவனின் படுக்கையறையை எட்டிப்பார்க்கும் உளவியல் ஆவணப்பட இயக்குநருக்கும், ஆவணப்படத்திற்கும் பார்வையாளருக்கு மறைமுக உந்துதலாக இருப்பதை அதன் கொடூர வடிவத்தில் விளக்குகிறார் டென்னிஸ் ரூர்க்.
பார்வையாளரும் ஆவணப்பட இயக்குநரும் ஒரே புள்ளியில் இருந்து இயங்கும் நகைமுரணை, கொடுப்பவன், பெறுபவன் என்ற பாரம்பரிய உறவு அறுந்து போய் இருவருக்கும் நிகழும் சாவித்துவார ஸ்கலிதத்தை - -- அது அரசியல், உண்மை, அறம் என்று பல வார்த்தைகளில் அலங்காரம் செய்யப்பட்டாலும் - அதிர்ச்சியூட்டும் இந்த ஆவணப்படத்தில் ஒரு வரலாற்று விவாதமாகவே வைக்கிறார்.

மிதி வெடி - ஒரு காதல் கதை
© Copyright Camerawork Pty Ltd
இதனைப் போன்று டென்னிஸ் ரூர்க் CANNIBAL TOURS (1984), CUNNAMULLA (1999), COULDN’T BE FAIRER (1984), LAND MINES – A LOVE STORY (2005) ஆகிய ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார். அவருடைய படங்கள் 35MM அல்லது 16MM வடிவத்தில் தொலைக்காட்சிகளுக்காக, திரையரங்குகளுக்காக எடுக்கப்பட்டவை. பல சர்வதேச, ஆஸ்திரேலிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். ரூர்க்கின் RETROSPECTIVE – சிறந்த/முக்கிய படங்களின்திரையிடல் நிறைய சர்வதேச திரைப்படவிழாக்களில் நிகழ்ந்துள்ளன.

பாப்பு நியூ கினியாவில் சமீபத்தில் புதிய தொலைக்காட்சி ஒன்றை அந்நாட்டுத் தலைவர் சர்.மைக்கெல் சொமாரே தொடங்கி வைத்த போது டென்னிஸ் ரூர்க் பாப்பு நியூ கினியாவின் விடுதலையைப் பற்றி 1976ல் எடுத்தயூமி யெட்தொடக்கப்படமாகத் திரையிடப்பட்டது. தற்போது டென்னிஸ் ரூர்க் ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையாக புதிய புதினப்படத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டபடி ஆஸ்திரேலியாவின் கெய்ன்ஸ் நகரத்தில் வாழ்ந்து வருகிறார்.