Monday, June 25, 2018

வி பி சிங் - இரண்டாம் அம்பேத்கர்!


சமூகநீதிப் பாதையே விடுதலை!

வி பி சிங் பிரதமராக இருந்த போது மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு / சூத்திரர்களுக்கும் / ஆண்ட பரம்பரைகளுக்கு / ஆதிக்க சாதியினருக்கு வழங்க முற்பட்டார். அதை எதிர்த்து நாடெங்கும் உயர்சாதி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்படியென்றால் நாங்கள் செருப்புத் தைக்கப் போக வேண்டுமா என்று கூறி இந்தியாவில் பல இடங்களில் செருப்புத் தைக்கும் போராட்டத்தை நடத்தினர். சிலர் தீக்குளித்தனர். உயர்சாதி இந்துக்களின் கட்சியான பாஜக, இந்துக்களின் ஒற்றுமையைப் பாதுகாக்க(!) பாபர் மசூதி பிரச்சனையைக் கையில் எடுத்தது.

அத்வானி எனும் பார்ப்பனர் பாபர் மசூதி இடிப்புப் போராடத்தைத் தொடங்கினார். இந்தியாவின் பல நகரங்களில் டயோட்டா ஏசி காரில் ரத யாத்திரை நடத்தினார்.

படித்து, வேலைக்குப்போய் தனது உரிமைக்குப் போராட வேண்டிய சூத்திரர்களைக் கொண்டு பஜ்ரங் தள் (வானரப்படை) என்ற அமைப்பை உருவாக்கி பாபர் மசூதியை இடிக்க முற்பட்டது சங் பரிவாரின் ஒரு அமைப்பான விஷ்வஹிந்த் பரிஷத். பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட வேண்டிய சூத்திரர்களை பார்ப்பனர்களின் தலைமையின் கீழ் தந்திரமாக முஸ்லீம்களோடு மோதவிட்டது. முஸ்லீம்களும் சூத்திரர்களும் மோதிக்கொண்டனர். ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர். அத்வானியின் ரதயாத்திரையை இடதுசாரிகள், திமுக, ஜனதாதளம், காங்கிரஸ், பிற பிராந்தியக் கட்சிகள் எதிர்த்தன.

அத்வானியின் ஊர்வலம் பீகாருக்குள் நுழைந்ததும் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், சட்ட ஒழுங்கு, கலவரம், சமூகங்களிடையே வெறுப்பை விதைத்த காரணங்களுக்காக அத்வானியைக் கைது செய்தார். அப்போது பிரதமர் விபி சிங் அவர்கள் பாஜகவின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார். தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள விபி சிங், அத்வானியை விடுவிக்கச் செய்திருக்கலாம். ஏனெனில் லல்லுவும் விபி சிங்கும் ஒரே கட்சி தான் அப்போது. தனது ஆட்சியைக் காப்பாற்ற மண்டல் கமிஷன் பரிந்துரையைத் தள்ளிப்போட்டிருக்கலாம். ஏனெனில் பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் ஆகியோர் மறைமுகமாகவும் நேரடியாகவும் அதை எதிர்த்தனர்.

பிரதமர் விபி சிங் இரண்டையும் செய்யவில்லை. பாஜக தனது ஆதரவைத் திரும்பப் பெறப்போவதாக மிரட்டியது.

அடிபணியவில்லை பிரதமர். ஆட்சி கவிழ்ந்தது. மகிழ்ச்சியோடு, பெருமையோடு வெளியேறினார் விபி சிங்.

அரசியல் தரகர் சோ, திமுக தலைவர் கலைஞரை அடுத்து அதிகம் வெறுத்த நபர் விபி சிங். துக்ளக் ஆசிரியர் கடைசி வரை அவரைத் தூற்றியபடி இருந்தார். கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர் விபி சிங். அம்பேத்கரையும் பெரியாரையும் கொண்டாடியவர் விபி சிங். அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கினார்.

இன்று மண்டல் கமிஷன் பரிந்துரை நடைமுறையில் இருக்கிறது. மத்திய அரசு நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு / சூத்திரர்களுக்கு / ஆண்ட பரம்பரைக்கு / ஆதிக்க சாதியினருக்கு இப்போது 27% இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது. இதற்கு முன்பு ஏன் இன்னும் கூட ஒரு மத்திய அரசு நிறுவனத்திற்குப் போய்ப் பாருங்கள். உயர்சாதி இந்துக்கள் பணியில் பெருத்த எண்ணிக்கையில் இருப்பார்கள். அல்லது படித்துக்கொண்டிருப்பர்கள்.

தலித்துகளும், ஆதிவாசிகளும் இருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தொடக்கத்திலிருந்தே முறையே 18%, 12% இடஒதுக்கீடு அந்நிறுவனங்களில் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்களைப் பார்ப்பது அரிது. ஏனெனில் அவர்கள் பொதுப் பிரிவில் பார்ப்பனர்களோடு, பிற உயர்சாதி இந்துக்களோடு போட்டி போடவேண்டும். அதில் அவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்? இப்போது அவர்களுக்கும் 27% இடஒதுக்கீடு இருக்கிறது. அவர்களும் படிக்கலாம், வேலைக்குப் போகலாம்.

வட்டிக்கு விடுதல், கஞ்சா விற்றல், சாராயம் காய்ச்சுதல், சங்கிலிப் பறிப்பு, ஆடு / மோட்டார் திருடுதல், கலவரம் செய்தல், தலையை அறுத்தல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். அதைத் தான் பாஜக எதிர்த்தது. அப்படி அவர்கள் விடுபட்டுவிடக் கூடாது என்று தான் தவித்தது. பார்ப்பனர்களுக்கு அவர்கள் என்று அடியாட்களாக இருப்பதையே விரும்பியது / விரும்புகிறது.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் துணையுடன் 69% இடஒதுக்கீடு தமிழக அரசு நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கடைபிடிக்கப்படுகிறது. தலித்துகள், ஆதிவாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மதச்சிறுபான்மையினர் என எல்லோரும் பயன் அடைகின்றனர். அதனால் தான் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது. வளர்ச்சி என்பது எல்லோருக்கும் வாய்ப்பளிப்பது. எல்லோரையும் சேர்த்துக்கொள்வது. எல்லோரது குரலையும் பிரதிபலிப்பது.

குஜராத் போல வெறும் தொழிற்சாலைகள் அல்ல வளர்ச்சி. அதில் ஒரு சிலர் எல்லா வசதிகளை பெறுவார்கள். பிறர் எல்லோரும் விடுபட்டுப் போவார்கள். அது தான் அங்கு நடக்கிறது. வடமாநிலங்களில் பலவற்றில் அது தான் நிலை.

சமூக நீதிக்காக தனது ஆட்சியைத் துறந்தவர் விபி சிங். மதச்சார்பின்மைக்காக, மதநல்லிணக்கத்திற்காக தனது பதவியை இழந்தவர் அவர். இரண்டாம் அம்பேத்கர் என்று அவரை பெருமையுடன் அழைக்கலாம்.

பின்குறிப்பு: தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் துணையுடன் அரசியல், பொருளாதார, சமூக விடுதலை பெற்ற சூத்திரர்கள் இப்போது ஆண்ட பரம்பரை என்றும் ஆதிக்கசாதியினர் என்றும் பொய் வேடமிட்டுக்கொண்டிருக்கின்றனர். தலித்துகளை ஒடுக்குவதும் பார்ப்பனர்களுடன் சமரசம் செய்வதுமாய் தம்மையே அழித்துக்கொண்டிருக்கின்றனர். தாம் வந்த பாதையை மறந்து காவிக் கூட்டத்திற்கு கொடி பிடிக்கின்றனர்.

சமூகநீதிப் பாதையே எல்லோருக்கும் விடுதலை! பார்ப்பனர்களுக்கும்!

No comments:

Post a Comment