Friday, June 22, 2018

மணவாளக்குறிச்சி பற்றிய எனது ஆவணப்படம்!

கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 1 : மணவாளக்குறிச்சி
இயக்கம்: அமுதன் ஆர்.பி. ; 54 நிமிடங்கள்; 2010; ஆவணப்படம்
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியில் இந்திய அரசின் அணுசக்தித்துறை நடத்தும் இந்திய அருமணல் ஆலை கதிர்வீச்சு ஆற்றல் கொண்ட மணலை அள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய ஆவணப்படம்.
குறிப்பாக மோனசைட் (கதிர்வீச்சுத் தன்மை கொண்ட தோரியம் உள்ளடக்கியது) எனும் கனிமத்தை கடற்கரை மணலில் இருந்து பிரித்து எடுக்கும் வேலை இந்த ஆலையில் நடைபெறுவதால் இப்பகுதியில் இயற்கைக்கும் மீறிய கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக முனைவர் லால் மோகன் நடத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
இப்பகுதியில் உள்ள கடலோர கிராமங்களில் குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், நடுத்தர மற்றும் வயதான ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் புற்றுநோய், உடல் ஊனம், மூளை வளர்ச்சி அற்ற குழந்தைகள் பிறப்பு, கருச்சிதைவு, உடலின் முக்கிய உறுப்புகள் சேதமடைதல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதைப் விரிவாகப் பதிவு செய்கிறது இந்தப்படம்.
அரசு நிறுவனம் மணல் அள்ளுவதை எதிர்த்த மீனவர்களைக் கொண்டே மணல் அள்ளி அவர்களையும் இதற்குப் பங்குதாரர்களாக்கி அழகு பார்த்தது அதிகார வர்க்கம்.
வளர்ச்சி வேண்டும், இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என்று துடிப்போருக்கு இந்தப்படம் சமர்ப்பணம்.
அப்சர்வேஷன் மற்றும் சினிமா வெரிடே ஆகிய பாணியில் இயக்குநரின் இடையீடு இல்லாமல், வர்ணனை இல்லாமல், மக்களின் அனுபவங்களை, நின்று நிதானமாகப் பதிவு செய்திருக்கும் படம்.

No comments:

Post a Comment