Friday, June 22, 2018

ஸ்டெரிலைட் ஆதரவு அறிவியல் ஆவணப்படம்!

அறிவியல் அப்பாவிகள்!
ஸ்டெரிலைட் போராட்டம் பற்றிய அறிவியல் ஆவணப்படம் (!) ஒன்று சமூகவலைத்தளங்களில் உலா வருகிறது. ஒருவர் பல தரவுகளைத் தந்தபடி உரைவீசிக்கொண்டு இருக்கிறார். இறுதியில் ஸ்டெரிலைட்டை விட வைகுண்டராஜன் நடத்தும் வி வி மினரெல்ஸ் தான் அதிகம் சூழல் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது, அதைப் பற்றிப் போராடாமல் ஸ்டெரிலைட்டை எதிர்க்கிறீர்களே என்றும் ஏசி அறையில் அமர்ந்தபடி நித்யானந்த் ஜெயராமன் மற்றும் பாத்திமா பாபு போன்றவர்கள் மக்களைத் தூண்டி விடுகின்றனர் என்றும் உளறிக்கொட்டுகிறது இந்த வீடியோ. பாதிக்கப்பட்ட மக்களைப் பேசவிடாமல், தொகுத்தளிப்பவரே பேசி தீர்ப்பும் வழங்குகிறார்.
1) விவி மினரல்ஸ்க்கு எதிராக மக்கள் போராடிக்கொண்டு தான் இருக்கின்றனர். 1997-98ல் இடிந்தகரை அருகே கூட்டப்புளி மற்றும் பெருமணல் ஆகிய கிராமங்களில் விவி மினரல்ஸ் நடத்தும் கார்னட் மணல் கொள்ளைக்கு எதிராக பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் உட்பட பொதுமக்கள் போராடியதும், அதை அப்போதைய காவல்துறை (ஜான்கிட் தலைமையில்) அமைதியாகப் போராடியவர்களை அடித்து நொறுக்கியதும் எனக்குத்தெரியும்.
விவி மினரல்ஸின் அராஜகம் பற்றி "சாமி" எனும் வெகுசன சினிமாவிலேயே அந்த வில்லன் கதாபாத்திரத்தின் மூலமாக அப்போதே பேசப்பட்டுவிட்டது. இந்த ஆவணப்படக்குழுவினர் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஊருக்கே தெரியும் அவர்களின் அட்டகாசம். அந்தக் கம்பெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தபடி தான் இருக்கின்றன.
2) ஸ்டெரிலைட்டை விட விவி என்ன இன்னும் பல கம்பெனிகள் பாதிப்புகள் ஏற்படுத்தலாம். அதற்காக ஸ்டெரிலைட் போராட்டம் தவறா? முக்கியத்தவம் இல்லாததா? ஸ்டெரிலைட்டைக் காப்பாற்ற ஏன் முயல்கிறார் இந்த இயக்குனர்?
3) ஸ்டெரிலைட் போராட்டம் அந்தக் கம்பெனி தொடங்கிய நாள் முதல் நடக்கிறது. இப்பொழுது தான் தமிழ்நாடு விழித்துக்கொண்டிருக்கிறது. கூடன்குளம் போராடத்திற்குப் பிறகு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. சாதாரண மக்களும், அறவழியில் போராட முடியும் என்று நம்பிக்கை உருவாகியிருக்கிறது. சூழலைக் கெடுத்து உருவாகும் வளர்ச்சி தேவையில்லை என்கிற அறிவு தமிழருக்கு வந்திருக்கிறது. அது தவறா? முன்பு ஏன் வரவில்லை கேட்க முடியுமா?
ஒரு போராட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் முக்கியத்துவம் பெறுவதற்கு பல வரலாற்றுக்காரணிகள் இருக்கின்றன. கூடன்குளம் போராட்டம் கூட புகுஷிமா பேரிடருக்குப் பிறகு தான் பேரெழுச்சி பெற்றது. அதற்காக முன்பு இங்கு மக்கள் போராடவில்லை என்று சொல்ல முடியுமா? முன்பு ஏன் இந்த எழுச்சி வரவில்லை என்று கேட்க முடியுமா? என்ன அபத்தம்?
ஜல்லிக்கட்டுப்போராட்டம் தந்த வெற்றி தமக்கு உந்துதலாக இருந்ததாக போராடும் மக்கள் பலர் சொல்லியிருக்கின்றனர்.
4) வெளியாட்கள் மக்களைத் தவறாகத் தூண்டி விடுகின்றனர் என்று பாஜக, ஸ்டெரிலைட் மற்றும் மாநில / மத்திய அரசாங்கங்களின் மொழியில் ஒரு ஆவணப்படம் பேசலாமா? நடுநிலை எடுக்கிறாரோ இயக்குனர்? நடுநிலை என்று யாருமே இவ்வுலகில் இல்லை என்பது அவருக்குத் தெரியாதா? இது பாதிக்கப்பட்ட மக்களை, போராடுவோரை சிறுமைப் படுத்துவது போல் இல்லையா? இந்தப் படத்தின் உள்நோக்கம் என்ன?
5) ஸ்டெரிலைட் மட்டுமல்ல, இன்னொரு நிறுவனமும் தவறு செய்கிறது, அதை எதிர்த்தும் போராடுங்கள், நாங்கள் ஆதாரம் தருகிறோம் என்று சொல்லியிருந்தால் அது நியாயமான வாதம். அதை விடுத்து ஸ்டெரிலைட்டை ஏன் எதிர்க்கிறீர்கள், மக்களை ஏன் தூண்டிவிடுகின்றனர் என்று கேட்பது நேர்மையற்ற செயலாகவே எனக்குப் படுகிறது.

No comments:

Post a Comment