Sunday, November 25, 2012

கோலார் பகுதியில் தேசவிரோதிகள்

தேசவிரோதச் செயல்கள் தொடருகின்றன!


கோலார் பகுதி மக்கள் கூடன்குளம் அணு உலையிலிருந்து அணுக்கழிவுகளை கோலார் தங்கச்சுரங்கத்தில் கொட்டக்கூடாது என்று போராடுவதை நினைத்து தேச பக்தனாகிய எனக்கு மனம் பதறுகிறது. தூங்க முடியவில்லை. உணவு அருந்த முடியவில்லை. மலம் கழிக்க முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டிய வண்ணம் இருக்கிறது. வாய் வேறு கோணிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை!

இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இந்த மக்களுக்கு என்ன ஆயிற்று? ஏன் எதற்கெடுத்தாலும் போராடுகின்றனர்? இவர்களுக்கு தேசபற்றே இல்லையா?

இவர்களுக்குப் பின்னால் இருக்கும் வெளிநாட்டு சதியைக் கண்டறிய வேண்டும். அதை வேரோடு கிள்ளி எறிய வேண்டும். இந்தப் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று புலன் விசாரணை செய்யவேண்டும். போராடிய மக்கள் மீது தலா 10 வழக்குகள் போட வேண்டும். குறிப்பாக தேசவிரோத வழக்குகள் போடவேண்டும்.

அந்தப் போராட்டத்திற்கு மைக் செட் கொடுத்தவனுக்கு, போஸ்டர் அடித்தவனுக்கு, அதை ஒட்டியவனுக்கு, அதை எட்டி நின்று எட்டிப் பார்த்தவனுக்கு, அங்கு இருந்தவர்களுக்கு தண்ணீர், தேநீர், சிகரெட், புகையிலை, பான் சப்ளை செய்தவனுக்கு, அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை பணம் கொடுத்து கூட்டிக்கொண்டு வந்தவனுக்கு (காசு வாங்காமல் இந்தக்காலத்தில் போராட்டத்திற்கு யார் வருவார்கள்?) அந்த ஊர்வலத்தில் போடப்பட்ட கோஷங்களைக் கேட்டவர்களுக்கு, இந்தப் போராட்டத்தை வேடிக்கை பார்த்தவர்களுக்கு, எதையோ நினைத்து அங்கு தலையாட்டியவர்களுக்கு, சிரித்தவர்களுக்கு, கொட்டாவி விட்டவர்களுக்கு எல்லார் மீதும் தேச விரோத வழக்குகள் போடவேண்டும்.

இதைப் பற்றி முகநூலில் எழுதுகிற, அதை "லைக்'குகிற ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், பூனைகள், நாய்கள், எலிகள், பாம்புகள், யானைகள், அந்தக்கம்ப்யூட்டர்கள் எல்லாவற்றையும் இந்த நாட்டை விட்டே ஒழிக்க வேண்டும்!


பவர் (?) வேண்டுமெனில் நாட்டுக்காக வீடு, வாசல், தோப்பு, துரவு, மானம், மரியாதை, பிள்ளை, குட்டி, மனைவி, மக்கள், கோயில் குளம், ஆடு, மாடு, துணி, மணி, மீதமிருந்தால் உயிர் எல்லாவற்றையும் தியாகம் பண்ண வேண்டாமா? அப்படி செய்ய மாட்டோம் என்று போராடும் கோலார் பகுதி மக்கள் தேச விரோதிகள் தானே? அவர்கள் மீது தேச துரோக வழக்குகள் தான் போடவேண்டும்.

நாம் அதைப் பற்றி கவலைப்படவேண்டியதில்லை. அதற்காகத் தானே ஐஏஎஸ் அய்யாக்களும் ஐபிஎஸ் மாமா(?)க்களும் இருக்கிறார்கள். மக்களை எப்படி "கவர்ன்" பண்ண வேண்டும் என்று அவர்கள் நவீன யோசனைகளை - புராண கால சாம,பேத, தண்டங்கள் உட்பட -அரசுக்குக் கொடுப்பார்கள்.

தேச பக்தர்களாகிய நாம் பதட்டமடைய வேண்டியதில்லை.

ஜெய் ஹிந்த்!

Sunday, November 11, 2012

கிறிஸ் மார்க்கரின் கட்டுரை சினிமா!


“வெகு தொலைவு நாட்டிலிருந்து
நான் உங்களுக்கு எழுதுகிறேன்” -– கிறிஸ் மார்க்கர்
அமுதன் ஆர்.பி.

பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கிறிஸ் மார்க்கரைப் பற்றி நான் கட்டுரை எழுதுவதற்கான வேலைகளைத் தொடங்கி சில நாட்களில் – 2012, ஜீலை 30ம் நாள் - அவர் இறந்து விட்டார். அவருக்கு அப்போது வயது 91.

கிறிஸ் மார்க்கர் ஒரு இடதுசாரி. ஆனால் கட்சிகளைக் கடந்தவர். சோவியத் யூனியனில் நடந்த ‘சினிமா ரயில்’ என்ற முயற்சிகளில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அலெக்சாண்டர் மெட்வட்கின் என்ற இயக்குநரைப் பற்றி இரண்டு ஆவணப்படங்கள் எடுத்தார். அகிரா குரோசாவா பற்றியும் அன்ட்ரே தார்கோவ்ஸ்கி பற்றியும் ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறார். இவற்றையெல்லாம் விட கிறிஸ் மார்க்கர் ஒரு பரிசோதனை ஆவணப்பட இயக்குநர். ஆனால் அவரை அப்படி மட்டும் சுருக்கிவிட முடியாது. பல் ஊடகக் கலைஞர் (multi media artist). எழுத்தாளர். பத்திரிக்கையாளர், கட்டுரையாளர். புகைப்படக்கலைஞர். ஆவணப்பட இயக்குநர். குறும்பட இயக்குநர். ஊடக ஆர்வலர். ஊடகக் களப்பணியாளர். ஊடகப்போராளி. 50க்கும் மேற்பட்ட சிறு, குறு, நெடும் ஆவணப்படங்களை இயக்கி இருக்கிறார். 90களில் சிடிரோம் (CD-Rom)களை வைத்து நிறையப் பரிசோதனைகள் செய்திருக்கிறார். இரண்டாயிரத்திற்கு பிறகு வீடியோ இன்ஸ்டலேசன் என்கிற புதிய ஊடக வடிவத்தின் மூலம் தனது ஆவணப்படங்களின் சாத்தியங்களை விஸ்தரித்தார்.

கிறிஸ் மார்க்கரைப் பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன? ஆவணப்பட வரலாற்றில் புதிய பரிசோதனை முயற்சிகளை எல்லோருக்கும் முன்பே எடுத்திருக்கிறார். அவரது  சினிமாக்கட்டுரை அல்லது ESSAY FILM என்ற வடிவம் ஆவணப்பட ஏன் சினிமா வரலாற்றிலேயே மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சினிமாக்கட்டுரை என்றால் சினிமாவைப் பற்றிய கட்டுரை அல்ல. சினிமாக்கவிதை போல சினிமாக்கட்டுரை. சினிமாவில் கட்டுரை எழுதுவது. ஆவணப்படம் மற்றும் இயக்குநரின் தனிப்பட்ட மனப்பதிவுகள் ஆகிய இரண்டையும் இணைத்த ஒரு வடிவம் இது. ஒரு ஆவணப்படத்தின் சப்தம், காட்சிகள், எழுத்துக்கள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி கவித்துவமாக, அரசியல் விவாதமாக, தத்துவார்த்த விசாரணையாக இயக்குநர் பார்வையாளரோடு உரையாடுவது இந்த வடிவத்தின் ஒரு முக்கிய அம்சம். இவ்வகை பின்னாட்களில் பிரபலமான சினிமாக்காரர்களான கொதார்ட், ஆர்சன் வெல்ஸ், ஃபெட்ரிக்கோ ஃபெலினி, பசோலினி, ஹெர்ஜாக், அப்பாஸ் கைரஸ்டமி ஆகியோரால் செழுமைப்படுத்தப்பட்டது. சினிமாப்பார்வையில் ஒரு சார்புத்தன்மை குறிப்பாக இயக்குநரின் சார்புத்தன்மை கொண்ட கதை சொல்லும் முறையை இந்த வடிவம் கையாழுகிறது. இப்போது இது வெகுவாக கடைபிடிக்கப்படுகிற ஒரு வடிவமாகவும் விளங்குகிறது.
ரேனேயுடன் மார்கர் (இடது)

ஆரம்பகால புனுவல், ரேனே, ஜார்ஜ் மிலீஸ் ஆகியோர் மார்க்கருக்கு முன்பே இம்முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் இந்த வகைப்படத்தை தொடர்ந்து எடுத்து அதை தனக்கென்ற ஒரு தனி வடிவமாக்கிக் கொண்டார் கிறிஸ் மார்க்கர். மைக்கேல் மூர் என்கிற அமெரிக்க ஆவணப்பட இயக்குநர் இந்த வடிவத்துடன் அரசியல் பிரச்சனைகள் பற்றி புலன்விசாரணை படங்கள் எடுத்து பிரபலமானவர். இந்தியாவில் அமர் கன்வர் எனும் புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் இந்த வடிவத்தில் மிக அற்புதமான காவியங்களைப் படைத்திருக்கிறார்.

அதே போல கிறிஸ் மார்க்கர் ஊடகக்களப்பணிகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டார். அரசியல் சினிமாவுக்கான ஸ்லான் (SLON) என்ற சினிமாக்குழுவை, சினிமா கூட்டுறவுக் களங்களை அமைத்தது, அதன் மூலம் அரசியல் சினிமாக்களைத் தயாரித்தது, அமெரிக்காவின் வியட்நாம் உடனான போரை எதிர்த்து படங்கள் எடுத்தது, போராட்டங்களில் ஈடுபட்டது, தன்னை அதிகம் முன்னிறுத்தாமல் வேலைகள் செய்வது போன்ற சிறப்பான வரலாறு கொண்டவர் கிறிஸ் மார்க்கர்.

கிறிஸ் மார்க்கர் என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர் அல்ல. கிறிஸ்டியன் ஃப்ரான்சுவா பூஷ் விலுனுவ் என்பதே அவரது பெற்றோர் வைத்த பெயர். தான் ஒரு ஊர் சுற்றி என்றும் எல்லோருக்கும் எளிதாக புரிகிற பெயராக இருக்க வேண்டும் என்றும் மார்க்கர் பேனா பிரபலமானதால் அந்தப் பெயரை தனக்கு சூட்டிக் கொண்டதாகவும் ஒரு பேட்டியில் கூறினார் கிறிஸ் மார்க்கர். அதிகம் பேட்டி கொடுக்க மாட்டார். அவரது புகைப்படங்கள் அதிகம் கிடையாது. அவர் எங்கு பிறந்தார்? என்ன படித்தார் எங்கு வளர்ந்தார் என்பதே யாருக்கும் தெரியாது. பல கதைகள் உலாவுகின்றன. ஒரு முறை ஒரு பத்திரிக்கையில் அவரது புகைப்படத்தைக் கேட்ட போது அவர் ஒரு பூனையின் படத்தை அனுப்பிவைத்தார். தன் படங்களும் தனது வேலைகளும் போதும் தன் புகைப்படம் யாருக்கும் அவசியம் இல்லை என்பார்.
லா ஜெத்தெ

ஒரு புகைப்படக் கலைஞராக, எழுத்தாளராக, பத்திரிக்கையாளராக தனது படைப்பு வாழ்க்கையை 1940களில் தொடங்கிய மார்க்கர், 1949ல் தனது “லெ கூர் நெட்” என்கிற வான்வழிப்பயணம் பற்றிய தனது முதல் நாவலை எழுதினார். பிரெஞ்சு புதிய அலையைச் சேர்ந்தவர்களான் ரேனே, வார்தா, கால்பி, காட்டி ஆகியோருடன் பழகத்தொடங்கினார். அதுவே இடதுகரை சினிமாகாரர்கள் – Left Bank Movement -எனும் சினிமா இயக்கத்திற்கு வித்திட்டது.  ஃப்ரெஞ்சு புதிய அலை சினிமா இயக்கத்திற்கு வெளியேயும் சில சமயம் அவர்களுடன் இணைந்தும் இடது கரை சினிமா இயக்கத்தினர் வேலை செய்தனர். தீவிர இடது சாரிகளான இடதுகரை சினிமா இயக்கத்தினர் ஒரு பரதேசி வாழ்க்கை வாழ்ந்தனர். இலக்கியம், கலை இவற்றில் அதீத நம்பிக்கை வைத்திருந்தனர். ஃப்ரெஞ்சு புதிய அலை இயக்குநர்களான (வலது கரை இயக்கத்தினர்) கொதார்டும் ட்ரூஃபோவும் சோப்ராலும் ரோமரும் அரசுடன் அமைப்புடன் சமரசம் செய்து கொண்டதாக இடதுகரை இயக்கத்தினர் குற்றம் சாட்டினர். அவர்களுக்கு கிடைக்கும் பொருளாதார வசதியும் வாய்ப்புகளும் தங்களுக்கு தர்மசங்கடத்தைக் கொடுப்பதாகக்கூறினர். அறுபதுகளில் இவ்விரு இயக்கத்தினரிடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. இத்தகைய அரசியல் பின்னணி கொண்டவர் கிறிஸ் மார்க்கர்.
சினிமாக் கட்டுரை சினிமாக்கள்:

1952ல் கிறிஸ் மார்க்கர் ஒலிம்பியா 52 என்கிற ஹெல்சின்கி 1952 ஒலிம்பிக் பந்தயம் பற்றி தனது முதல் ஆவணப்படத்தை எடுத்தார். 1953ல் ரெனேயுடன் இணைந்து சிலைகளும் சாகும் – Statues Also Die – என்றொரு படம் எடுத்தார். அதில் தான் கிறிச் மார்க்கரின் புகழ்பெற்ற வர்ணனை உத்தி முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. பிரெஞ்சு காலனிய ஆதிக்கத்தினால் ஆப்ரிக்க கலைகள் அழிந்து போவதைப்பற்றி எடுக்கப்பட்ட படத்தை பிரெஞ்சு அரசு தடை செய்தது. 1955ம் ஆண்டு ரெனேயின் NIGHT AND FOG என்கிற புகழ்பெற்ற படத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

அதே ஆண்டு தனது Sunday in Peking என்கிற குறும் ஆவணப்படத்தை எடுத்தார். அதுவே அவரது சினிமாக் கட்டுரை தொடக்கமாகும். காட்சிகளை இயக்குநரின் வர்ணனைக்குரல் வர்ணித்தபடி, வியாக்கியானம் செய்தபடி, ஓங்கி ஒலித்தபடி இருக்கிற சினிமா. காட்சிகளை விட வர்ணனையாளரின் குரல், அதை ஒட்டிய காட்சிகள், காட்சிகளுக்காக வர்ணனை என்பது போல் அல்லாமல் வர்ணனைக்காக காட்சிகள் என்பதாய் அரசியல் விமர்சனத்துடன் அமைந்தது அந்தப்படம். செப்டம்பர் 1955ல் சீனாவில் இரண்டு வாரங்கள் சக இடதுகரைக்காரர் அர்மாண்ட் காட்டியுடன் பயணித்தபடி எடுக்கப்பட்ட ஆவணப்படம் அது. சீனாவைப்பற்றிய ஐரோப்பியர்களிடம் இருக்கிற கட்டுக்கதைகளை விமர்சிக்கிற படம் அது.
1957ல் LETTER FROM SIBERIA என்றொரு நீண்ட ஆவணப்படத்தை தனது சினிமாக்கட்டுரை மொழியில் சைபீரியாவில் மார்க்கர் தானே படம் பிடித்த காட்சிகள், பழைய கோப்புக்காட்சிகள், பத்திரிக்கைப் புகைப்படங்கள், பிரபல பத்திரிக்கையான MAD Magazine என்ற பத்திரிக்கையிலிருந்து ஒரு கார்டூன் ஆகியவற்றைப் பயன்படுத்தி சைபீரியாவின் பண்பாடும் தனித்துவமும் சோவியத் யூனியனின் ஆதிக்கத்தின் கீழ் அழிந்து போவதைப்பற்றி படம் எடுத்திருந்தார். பார்வையாளருக்கு படத்தின் இயக்குநர் எழுதிய கடிதம் போல வர்ணனைக்குரல் காட்சிகளை வழிநடத்தியபடி செல்கிறது. இந்த முயற்சியை சினிமா விமர்சகர் அன்ந்ரே பசின், “சினிமாவில் ஆவணப்படுத்தப்பட்ட கட்டுரை” என்று குறிப்பிட்டார். “தொலைதூரத்திலிருந்து நான் உங்களுக்கு எழுதுகிறேன்” என்று தொடங்கும் வர்ணனை ஒரு வெளிநாட்டு பத்திரிக்கையாளருக்கு உரிய உந்துதலுடன் அதே நேரத்தில் ஒரு பயணக்கட்டுரை போலவும் படம் முழுக்க விரிந்து செல்லும்.

சைபீரியாவிலிருந்து கடிதம் என்கிற இந்தப்படத்தின் இன்னொரு முக்கிய அம்சமாக சினிமா விமர்சகர்கள் குறிப்பிடுவது பின்வருமாறு: சர்ஜய் ஐசன்ஸ்டைனின் பிரபலமான சினிமாவான BATTLESHIP POTEMKIN என்கிற படத்தின் ஒடேசா படிக்கட்டு காட்சியை மூன்று முறை தொடர்ச்சியாக தனது படத்தில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினார் கிறிஸ் மார்க்கர். ஆனால் முதல் முறை கிறிஸ் மார்க்கரின் வர்ணனை சோவியத் யூனியனை விமர்சனம் செய்தும், இரண்டாவது முறை சோவியத் யூனியனை பாராட்டியும் மூன்றாவது முறை நடுநிலையாகவும் ஒலிக்கும்படி பயன்படுத்தினார். அது சினிமாவையும், சினிமா எடுக்கப்பட்டுவரும் விதத்தையும் சோவியத் யூனியனின் பலத்தையும் விமர்சனம் செய்தது.


லா ஜெத்தெ

1963ல் ‘லெ ஜொலி மே’ என்று மார்க்கர் எடுத்த மற்றொரு ஆவணப்படத்தில் அல்ஜீரியாவுடனான ஃப்ரான்ஸ் நாட்டின் போரைப்பற்றியும் அதைப் பற்றி ஃப்ரான்ஸ் நாட்டு மக்கள் கொண்டிருந்த அக்கறையற்ற நிலைப்பாட்டையும் வெளிக்கொணரும் வகையில் தெருக்களில் 50 மணி நேரம் பேட்டிகளை எடுத்து அதை தொகுத்திருந்தார். சினிமா வெரிதெ என்கிற ஆவணப்பட முறைக்கு ஆரம்பமாக இப்படம் இருந்ததாக இந்தப் படம் கருதப்படுகிறது. சினிமா வெரிதெ எனில் கிடைக்கிற ஒளியில் கிடைக்கிற சூழலில் காமெரவை கையால் தூக்கி இயக்கியபடி, காட்சிகளை சம்பந்தப்பட்ட இடங்களுக்கே போய் எடுத்து, பேட்டிகளையும் கிடைக்கிற இடங்களில் பதிவு செய்து, வர்ணனை அல்லது ஜோடனை இல்லாது இசை இல்லாது கிடைக்கிற ஒலியை மட்டுமே கிடைக்கிற சூழலில் பதிவு செய்து அதையும் அழகு படுத்தாது பயன்படுத்தி படத்தொகுப்பு செய்து படத்தை தயாரிக்கும் முறையாக்கும். ஆனால் கிறிஸ் மார்க்கர் சினிமா வெரிதெ எனும் பதத்தை மறுத்தார். பேட்டிகளின் போது மக்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களைப் பற்றி அவரது நகைமுரணான, விமர்சிக்கும் தொனியுடனான வர்ணனை கருத்து சொன்னபடியே தொடரும். இது எனது உண்மையைச்சொல்லும் சினிமாவே ஒழிய சினிமா வெரிதெ அல்ல என்று மறுத்தார்  அதாவது அவர் சொல்லவிரும்பும் உண்மையை அவர் விரும்பியபடி சொல்லும் சினிமா என்கிறார் கிறிஸ் மார்க்கர்.

1961ல் கியூபா சி என்றொரு ஆவணப்படத்தை இயக்கினார் கிறிஸ் மார்க்கர். அது கியூபாவின் புரட்சியைக்கொண்டாடியும், அமெரிக்காவை சாடியும் வெளிப்படையாக எடுக்கப்பட்டிருந்ததால் ஃப்ரான்ஸ் அரசாங்கம் அந்தப்படத்தைத் தடை செய்தது. கியூபாவின் தலைநகரான ஹவானாவில் சில மாத காலம் தங்கியிருந்து அந்தப்படத்தைத் தயாரித்தார். ஃபிடல் காஸ்ட்ரோவின் இரண்டு நீண்ட பேட்டிகள் படையெடுத்து வந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான பாட்டாளி மக்களின் வெற்றியை பறை சாற்றின. இந்த ஆவணப்படம் தடை செய்யப்பட்டதால் இதன் மூலம் தான் சொல்ல வந்த செய்திகளை புகைப்படங்கள் மூலமாகவும் புத்தகங்கள் மூலமாகவும் வெளியிட்டார் கிறிஸ் மார்க்கர். ஆனால் அது போதுமான விளைவை ஏற்படுத்தவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.


லா ஜெத்தெ

1962ம் ஆண்டு கிறிஸ் மார்க்கரின் தலை சிறந்த படைப்புகளில் ஒன்றான “லா ஜெத்தெ”  வெளியானது. முழுக்க முழுக்க புகைப்படங்களைக்கொண்டே உருவான 29 நிமிடங்கள் ஓடக்கூடிய கறுப்பு வெள்ளை குறும்படம் அது. ஒரே ஒரு காட்சி துண்டில் மட்டும் ஒரு பெண் கண்ணைத் திறந்து பார்க்கிறாள். அப்போது மட்டும் அசைகிறது சினிமா. மனதை உலுக்கும் இசையுடன் கலந்த கதை சொல்லும் ஒரு வர்ணனை படம் முழுக்க நம்மை வழிநடத்திச்செல்லும். மூன்றாம் உலகப்போர் நடந்து அணு ஆயுதங்களினால் பாரிஸ் நகரமே அழிந்து போன ஒரு சூழலில் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட உடைந்த கட்டடங்கள் நிறைந்திருக்கின்றன. ஏறக்குறைய எல்லோரும் இறந்து அல்லது காணாமல் போயிருக்கின்றனர். வெகு சிலர் பாதாளச்சாக்கடைகளில் பதுங்கி இருக்கின்றனர். அதில் ஒருவரை அவரது நினைவுகளில் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பயணம் செய்ய வைத்து நிகழ்காலத்தைக் காக்க முடியுமா என்று பரிசோதித்து பார்ப்பது தான் கதை. பல அறிவியல் புனைவுப் படங்களுக்கு முன்னோடியாக இருந்ததாக “லா ஜெத்தெ” கருதப்படுகிறது. சினிமாவை ஒரு கால எந்திரமாகப் பார்க்க எத்தனிக்கும் தனது சுயதேடல் முயற்சியாகவும் தனக்கு பிடித்த படமான ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் “வெர்டிகோ” வை கொண்டாடுவதாகவும் இந்த ‘லா ஜெத்தெ”யை எடுத்திருந்தார் கிறிஸ் மார்க்கர்.

சினிமா என்றால் என்ன என்பதையே கேள்விக்குள்ளாக்கியது ‘லா ஜெத்தெ’. ஹாலிவுட் சினிமா சொல்லும் சினிமா முறை தான் சினிமாவா? இல்லை அதைத் தாண்டி ஏதும் உண்டா? படத்தொகுப்பும், கோணங்களின் தேர்வும், சத்தமும் ஒரு கதையும் போதாதா? கட்டாயம் காட்சிகளில் மனிதர்களும் கேமராவும் நகரத்தான் வேண்டுமா? என்கிற பல கேள்விகளைக் கேட்டது ‘லா ஜெத்தெ’. கிறிஸ் மார்க்கர் இந்தப்படத்தை ஒரு ஃபோட்டோ நாவல் என்று அழைத்தார்.

ஆனால் எடிடிங் முடியும் வரை ‘லா ஜெத்தெ’ என்ன வடிவம் எடுக்கும் என்று தனக்கே தெரியாது என்கிறார் மார்க்கர். அந்தப்படத்தை தான் கடினமாக உழைத்து உருவாக்கினேன் என்று சொல்லமாட்டேன். அது தானாகவே நிகழ்ந்தது என்றும் அது தானியங்கி எழுத்தால் ஒருவான ஒரு படைப்பு என்றும் கிறிஸ் மார்க்கர் கூறினார். முப்பது ஆண்டுகள் கழித்து இந்தப்படத்தின் கதைக்கருவை, சிந்தனையைத் தழுவி ஹாலிவுட் இயக்குநர் டெர்ரி ஜில்லியம் ’12 குரங்குகள்’ என்ற ஒரு அறிவியல் புனைவு படம் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் உள்ள ஒரு பிரபலமான ஊரான கோல்டன் காய் மாவட்டத்தில் உள்ள மதுபானவிடுதிக்கு லா ஜெத்தெ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அங்கீகாரம் பல விருதுகளுக்கு சமம் என்கிறார் கிறிஸ் மார்க்கர்.



1964 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தைப் பின்புலமாக வைத்து எடுக்கப்பட்ட கிறிஸ் மார்க்கரின் இன்னொரு ஆவணப்படம் ‘Le Mystere Koumiko’ (கொமிகோ மர்மம்). இந்தப்படத்தில் டோக்கியோ நகரத்தைச் சேர்ந்த அழகான, படித்த, ஃப்ரெஞ்சு மொழி பேசத்தெரிந்த கொமிகோ முராகா என்கிற பெண்ணுடன் மார்க்கர் நடத்தும் பல உரையாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப்பெண் மூலமாகவும் நவீன டோக்கியோ மூலமாகவும் உலகமயமாதலினால் ஏற்படும் அடையாள இழப்பைப் பற்றி தனது விமர்சனத்தை வெளிப்படுத்துகிறார் கிறிஸ் மார்க்கர். கொமிகோ தனக்கு மிகுந்த ஜப்பானிய அடையாளம் இருப்பதாக கவலைப்படுகிறார். ஆனால் நவீன ஜப்பானிய உடையலங்காரம் ஆசிய அடையாளங்களை அழிக்க முனைவதையும் தனது மற்றமை குணத்தை அல்லது வித்தியாசத்தை கடக்க எத்தனிப்பதையும் கிறிஸ் மார்க்கர் தனது வர்ணனை மூலமாகவும் படத்தொகுப்பு மூலமாகவும் விமர்சிக்கிறார்.

1960களில் ஐரோப்பாவின் எல்லா சமூக அக்கறையுள்ள கலைஞர்களைப் போலவும் கிறிஸ் மார்க்கர் நேரடி அரசியல் களப்பணிகளில் இறங்குகிறார். அதன் விளைவு, 1967ல் அவர் தொடங்கிய SLON என்கிற திரைப்படக்குழுமம். ரஸ்ய மொழியில் அதற்கு யானை என்று அர்த்தம். புதிய படைப்புகளுக்கான சங்கம் என்ற ஃப்ரெஞ்சு வாக்கியத்தின் சுருக்கம் ஸ்லான். கிறிஸ் மார்க்கர் தனது ஆவணப்படப் படைப்பு பணிகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு கூட்டு முயற்சியாக அரசியல் படங்கள் தயாரிக்க இந்தக்குழுமத்தைத் தொடங்கினார். இந்த அமைப்பின் மூலமாக அரசியல் ரீதியான களப்பணிக்கான ஆவணப்படங்களை தயாரித்தார் கிறிஸ் மார்க்கர். தொழிலாளர்கள் தங்களுக்கான சினிமாவை தாங்களே தயாரித்துக்கொள்வது என்பதும் அவர்களுக்கான சினிமா கூட்டுறவு அமைப்புகளை உருவாக்குவதும் ஸ்லான் அமைப்பின் நோக்கமாக இருந்தது. ஒரு ஃப்ரெஞ்சு பஞ்சாலையில் நடைபெற்ற ஒரு வேலை நிறுத்தம் தொடர்பாக ஒரு படம், போருக்கு எதிரான ஒரு பாதயாத்திரை பற்றிய ஒரு படம் என்று பல படங்கள் ஸ்லான் அமைப்பிலிருந்து தயாராகின. பல படங்களுக்கு கிறிஸ் மார்க்கரின் பெயர் இணை இயக்குநர் என்று வந்தாலும் அவை கூட்டு முயற்சியால் உருவான படங்களே. அதில் ஒரு முக்கியமான ஆவணப்படம், FAR FROM VIETNAM (1967). வியட்நாம் போரை ஒட்டி அமெரிக்காவைக் கண்டித்து கிறிஸ் மார்க்கர், ரேனெ, கொதார்ட், வார்தா போன்ற பல முக்கிய ஃப்ரெஞ்சு இயக்குநர்கள் தனித்தனியாக இயக்கிய பல துண்டுப் படங்களைத் தொகுத்து ஸ்லான் மூலமாக வெளியிடப்பட்டது. அதில் ஏறக்குறைய 150 தொழில்நுட்பக்கலைஞர்கள் இலவசமாக வேலை செய்திருந்தனர்.


லா ஜெத்தெ

1972ல் கிறிஸ் மார்க்கர் செய்த மற்றொரு முக்கியமான படம் LE TRAIN EN MARCHE (ரயில் கிளம்புகிறது). சோவியத் யூனியனில் 1930களில் தீவிரமாக இயங்கிய ஆவணப்பட இயக்குநர் அலெக்சாண்டர் இவானோவிச் மெட்வட்கின் மற்றும் அவரது சினிமா ரயில் பரிசோதனைகளைப் பற்றிய படம் அது, மெட்வட்கின் மற்றும் அவரது குழுவினர் அதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரயிலில் சோவியத் ரஷ்யாவின் கிராமப்புறங்களுக்கு பயணம் செய்து ஆவணப்படங்கள் எடுத்தனர். ஒரு கிராமத்திற்கு அல்லது ஊருக்குப் போய் அந்த ஊரில் படப்பிடிப்பு நடத்தி அன்றே படத்தை எடிட்டிங் செய்து மறுநாள் அதே ஊரில் திரையிடல் செய்தனர். அன்றைய காலகட்டத்தில் 16 எம் எம் ரோலில் தான் ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றை அன்றே “கழுவி” “பிரிண்ட்” போட்டு சுடச்சுட படங்கள் திரையிடப்பட்டன.

1930களில் நடந்த அந்த முயற்சி பற்றி “ரயில் கிளம்புகிறது” என்ற பெயரில் 1971ல் ஒரு ஆவணப்படத்தை கிறிஸ் மார்க்கர் இயக்கி வெளியிட்டார். சோவியத் யூனியன் பற்றியும் புரட்சி பற்றியும் மக்களுக்கு பிரச்சாரம் செய்வதற்கும் அவர்களை சோவியத் யூனியனுக்குள் இணைப்பதற்கும் சினிமா ரயில் தயாரித்த படங்கள் கருவியாக செயல்பட்டன என்பதை தனது ஆவணப்படம் மூலமாக வெளிப்படுத்தினார். கோப்பு காட்சிகளையும் புகைப்படங்களையும் நேரடியாகப் பதிவு செய்த காட்சிகள், பேட்டிகளையும் பயன்படுத்தி இந்தப் படத்தை கிறிஸ் மார்க்கர் தயாரித்தார்.

இருபது வருடங்கள் கழித்து 1992ல் LE TOMBEAU D’ALEXANDRE (கடைசி கம்யூனிஸ்ட்) என்ற ஒரு ஆவணப்படத்தை சோவியத் யூனியன் உடைந்த பிறகு மெட்வட்கின் பற்றி கிறிஸ் மார்க்கர் இயக்கி வெளியிட்டார்.  மெட்வட்கின் 1989ல் இறந்து விட்டார். இறந்த மெட்வட்கின்னுக்கு எழுதுகிற வீடியோக் கடிதங்களாக தத்துவ உரையாடலாக, உண்மையின் இயல்பு, கற்பனை, கலை, கொள்கை மற்றும் வரலாறு ஆகியன பற்றி ஒரு தியானம் போல அமைகிறது இந்தப்படம். இதுவும் கிறிஸ் மார்க்கரின் புகழ்பெற்ற சினிமாக்கட்டுரை பாணியில் எடுக்கப்பட்டிருந்தது.



1977ல் கிறிஸ் மார்க்கர் 1968ல் ஃப்ரான்சில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டம் பற்றி Le Fond de l’Air est Rouge (The Grin Without a Cat) என்ற தலா 90நிமிடங்கள் ஓடக்கூடிய இரண்டு பாகங்கள் கொண்ட ஒரு ஆவணப்படத்தை எடுத்தார். வியட்நாம் போருக்கு எதிரான அந்த புதிய இடதுசாரி போராட்ட இயக்கத்தைப் பற்றியும் அது எழுப்பிய நம்பிக்கைகளைப் பற்றியும் சிலியில் சல்வடார் அலண்டேயின் இடதுசாரி அரசு அமெரிக்காவால் தூக்கி எறியப்பட்ட பின் ஏற்பட்ட சோர்வு நிலை பற்றியும் பேசியது அந்தப்படம். கிறிஸ் மார்க்கரைப் பொறுத்தவரை உண்மை என்பது ஒரு தனிப்பட்ட நபரின் பார்வை தான். ஒருவரின் தனிப்பட்ட அனுபவம் மற்றும் அதைப் பற்றிய வியாக்கியானம் இவற்றை மீறி வரலாறு எங்கேயும் இல்லை என்கிறார் மார்க்கர்.

Sans Soliel (சூரியன் இல்லாத)எனும் பெயரில் கிறிஸ் மார்க்கர் 1982ல் இயக்கிய மற்றொரு படம் அவரது படைப்பில் மிகவும் முக்கியமானவற்றில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இனவரைவியல், தத்துவம் மற்றும் கவிதை ஆகியவற்றை தாராளமாகக் கலந்து கற்பனையான ஒரு ஒளிப்பதிவாளரின் கற்பனையான கடிதம் ஒரு பெயரற்ற பெண்ணுக்கு எழுதப்பட்டது போல அமைந்திருந்தது அந்த ஆவணப்படம். ஐஸ்லாந்து நாட்டிலிருந்து மேற்கு ஆப்ரிக்கா வழியாக ஜப்பான் வரை பயணம் செய்கிறது அந்தப்படம். உலகவரலாற்றை உருவாக்குவதில் மனித ஞாபகசக்தி தோற்றுவிட்டதை தத்துவார்த்த உரையாடலாக நடத்திச்செல்கிறது இப்படம். பலவிதமான பிம்பங்கள், கடிதங்கள், கூற்றுக்கள், வியாக்கியானங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி ஆவணப்படத்தின் எல்லைகளை விரித்தபடியே, புதிய வீடியோ தொழில்நுட்பத்தை, பிம்பம் செதுக்கும் கலையை, ஹாயோ யமனெகோவின் சிறப்பு வரைகலையின் துணையுடன் இன்னுமொரு சினிமாக்கட்டுரையை எழுதிச்செல்கிறார் கிறிஸ் மார்க்கர். திரும்பத் திரும்ப வரும் இசை வடிவத்துடன், எதிர்வாதங்களுடன், கண்ணாடி போன்ற உருவங்களுடன் ஒரு இசை கோர்ப்பாக இந்தப் படம் அமைந்துள்ளதாக கிறிஸ் மார்க்கரே சொல்கிறார்.


லா ஜெத்தெ

“டோக்கியோவின் அந்த ஜனவரி மாதத்தை நான் நினைவு கூர்கிறேன். இல்லை. அந்த ஜனவரியில் டோக்கியோவில் நான் படம் பிடித்த பிம்பங்களை நினைவு கூர்கிறேன். அவை எனது நினைவின் இடத்தைப் பிடித்துவிட்டன. அந்த பிம்பங்களே எனது நினைவுகள்; நினைவு கூர்வது என்பது மறப்பது என்பதற்கான எதிர்நிலை அல்ல” என்றெல்லாம் வியாக்கியானம் செய்தபடி போகிறது இந்தப் படத்தின் வர்ணனை.

அகிரா குரோசாவைப் பற்றி AK என்றொரு ஆவணப்படமும், ஆந்த்ரே தார்கோவ்ஸ்கியைப் பற்றி ONE DAY IN THE LIFE OF ANDREI ARSENEVICH என்ற ஆவணப்படமும் எடுத்தார். அவற்றில் இவ்விரு இயக்குநர்கள் இயங்கும் விதம், இவர்களின் சினிமாக்களின் மொழி, அதன் பின்னால் இருக்கும் வழிநடத்தும் தத்துவம் ஆகியன பற்றி காட்சிப் பூர்வமாகவும் வர்ணனை மூலமாகவும் ஒரு பாட நூல் போல வியாக்கியானம் செய்கிறார் கிறிஸ் மார்க்கர்.

1990களில் கிறிஸ் மார்க்கர் வீடியோ தொழில்நுட்பத்தில் மல்டி மீடியா படைப்புகளில் பல பரிசோதனைகள் செய்தார். ரெனேயின் நினைவுகள் மற்றும் நினைவு இழந்த கணங்களைப் பற்றிய படங்களுக்கு சமர்ப்பணம் செய்வது போல LEVEL FIVE என்ற படத்தை 1997ல் எடுத்தார்.

கிறிஸ் மார்க்கர் ஒரு திரைப்பட இயக்குநராகத் தனக்கென ஒரு பாதையை அமைத்திருந்தார். மற்ற எந்த படைப்பாளியை விடவும் அலெக்சண்டரெ அஸ்த்ரூ என்கிற சினிமா கருத்தியலாளர் சொன்னது போல சினிமாவை CAMERA STYLO என்ற நிலைக்கு –  பேனாவைக் கொண்டு எழுதுவதைப் போல ஒரு படைப்பாளி கேமராவைக் கொண்டு எழுதும் நிலைக்கு – கொண்டு போனது கிறிஸ் மார்க்கர் தான்.

அமுதன் இராமலிங்கம் புஷ்பம்

Thursday, November 8, 2012

ஆண்மை அல்லது ஆண் தன்மை

ஆண் பெண் சமத்துவம் வரவேண்டும் என்று உழைப்பவர்கள் மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச அளவில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, அதற்கு உட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி நிறுவனங்கள் ஆகியன மற்றும் சர்வதேச பெண்ணுரிமை அமைப்புகள் முன் வைக்கிற சில சிந்தனைகள் கவனிக்கத்தக்கவை.

ராகுல் ராயின் When Four Friends Meet என்கிற
 ஆவணப்படத்திலிருந்து ஒரு காட்சித்துண்டு

ஆண் பெண் சமத்துவம் வரவேண்டும் எனில் பெண்களை ஒருங்கிணைப்பது, பெண்ணுரிமையை வலியுறுத்துவது, பெண்களுக்கு எதிரான வன்முறை, அத்துமீறல், ஒடுக்குமுறை இவற்றிக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்லாது ஆண்களின் மத்தியில் வேலை செய்வது, பெண்ணிய சிந்தனை கொண்ட ஆண்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு பயற்சிகள் கொடுப்பது, ஆணாதிக்கம் மட்டுமல்லாது ஆண்மை அல்லது ஆண் தன்மை (MASCULINITY)க்கு எதிராக போராடுவது அல்லது ஆண் தன்மையை விமர்சனத்திற்கு உள்ளாக்குவது, பாலியல் விதிகளை, வரையறைகளைப் பற்றி விவாதிப்பது, பாலியல் சிறுபான்மையினருடன் வேலை செய்வது ஆகிய திட்டங்கள் வந்துள்ளன.

எல்லா ஆண்களும் சமமில்லை. எல்லா ஆண் தன்மைகளும் ஒன்றல்ல. வர்க்கம், சாதி, மொழி, இனம், மதம் ஆகியன சார்ந்து ஆண் தன்மை மாறுபடுகிறது. ஒரு ஆண்மை அல்லது ஆண் தன்மை இன்னொரு ஆண்மையை அல்லது ஆண் தன்மையை ஒடுக்குகிறது, சுரண்டுகிறது.

ஒரு இஸ்லாமிய ஆண் நள்ளிரவில் இந்தியாவின் எந்த நகரத்திலும் காவலர்களின் நெருக்கடியைச் சந்திக்காது பயணிக்க முடியாது என்பதை இங்கே நினைவூட்டுகிறேன். இஸ்லாமிய ஆண் தன்மை இஸ்லாமிய பெண்களை ஒடுக்கினாலும் இந்து ஆண் தன்மையால் அதுவும் ஒடுக்கப்படுகிறது என்பது நாம் அறிந்ததே.

பார்ப்பன ஆண் தன்மை அல்லது இடைச்சாதி ஆண் தன்மை வேறு தலித் ஆண் தன்மை வேறு. பார்ப்பன ஆணுக்கு அல்லது இடைச்சாதி ஆணுக்கு இருக்கிற வசதி வாய்ப்புகள் தலித் ஆணுக்கு இல்லை என்பது நமக்குத் தெரியும். (அதே நேரத்தில் தலித் பெண்ணியம் என்கிற கருத்தாக்கம் கடந்த இருபது ஆண்டுகளாகப் பேசப்படுகிறது. தலித் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையும் பிற சாதிப் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையும் வேறு பட்டவை என்பதும் தலித் பெண்கள் அதை எதிர்கொள்ளும் விதமும் வேறு என்பதும் குறிப்பிடத்தக்கது.)

ராகுல் ராயின் "மஜ்மா" 
என்கிற ஆவணப்படத்திலிருந்து ஒரு காட்சித்துண்டு


ஆண்களுக்கு இருக்கிற எதிர்ப்பார்ப்பு தொடர்பான சிக்கல்கள்:

1) வெற்றி பெற வேண்டும்
2) அழக்கூடாது
3) ஆண் குறி போதுமான அளவில் இருக்கிறதா? விரைக்குமா? சுயமைதுனம் செய்யலாமா? கூடாதா?
4) பெண்களை திருப்தி படுத்தமுடியுமா?
5) வீரம் கொண்டவனாக இருக்க வேண்டும்
6) சமாதானமாகப் போகக்கூடாது; போனால் நீ பொட்டை
7) நன்றாக சம்பாதிக்க வேண்டும்
8) முதல் இரவிலேயே "கதை"யை முடித்துவிட வேண்டும்
9) வீட்டு வேலை செய்யக்கூடாது
10) வீட்டிலேயே இருக்கக்கூடாது. வெளியில் நாலு இடத்திற்குப் போகவேண்டும்

இப்படிப் பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. நிறைய ஆண்கள் தங்களது தங்கைகளுக்கும் அக்காக்களுக்கும் திருமணம் முடித்து வைத்துவிட்டு திரும்பிப்பார்க்கும் போது வயது 40யை நெருங்கி விடுகிறது. போரில் ஆண்களே அதிகம் சாகின்றனர். ஏனெனில் ஆண்கள் போரிட வேண்டும். பெண்களை, குழந்தைகளை அவர்கள் பாதுகாக்க வேண்டும்.

ஆண்களின் தங்கள் குறி தொடர்பான சந்தேகங்களை நம்பி ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் தமிழகமெங்கும் லேகியங்கள் விற்கின்றனர். மாத்ருபூதம் தொடங்கி பலர் தொலைக் காட்சிகளில் நடத்திய பாலியல் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் குறிகளின் நீளம் பற்றியும் விந்துவை வீணாக்குவது பற்றியும் புழுங்கி புழுங்கி ஆண்கள் எவ்வளவு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பது தெரியவருகிறது.

ஆனந்த் பட்வரத்தனின் "Father, Son & Holy War" 

எல்லா ஆண்களும் வெற்றி பெற்று விடுவதில்லை. வெற்றி பெற முடியாத ஆண்கள் மிகுந்த மன உளச்சலுக்கு உள்ளாகின்றனர். அதிகம் குடிக்கின்றனர். ஆண்கள் குடிக்கலாம் என்கிற உரிமை இங்கு ஆண்களுக்கு எதிராக வேலை செய்கிறது.

மகாராஷ்ட்ராவிலும் ஆந்திராவிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கடன் சுமையினால் விவசாயிகள் (படிக்கவும் ஆண் விவசாயிகள்) தற்கொலை செய்து கொள்வது பற்றி நாம் அறிவோம். குடும்பத்தினரையும் குழந்தைகளையும் விட்டு விட்டு சாகும் மனநிலை எப்படி உருவாகிறது ஒருவருக்கு? அந்தக்கடனை யார் கட்டுவது? மனைவியா? குழந்தைகளா?விவசாயிகள் பிரச்சனைக்கு அரசின் கொள்கைகளும் சுற்றுச்சூழல் மாசுபடுதலும் காரணம் என்றாலும் குடும்பத்தலைவர் என்ற முறையில் தோல்வியும் அவமானமும் ஆண்களுக்கு அதிக மன அழுத்தத்தைக் கொடுக்கின்றன. வங்கிகளும் ஆண்களுக்கே கடன் கொடுக்கின்றன. அவர்கள் மீது மிகுந்த பொறுப்பை ஏற்றுகின்றன. தான் எல்லாம் செய்து விட முடியும் என்று நினைக்கிற சூழலில் விளைச்சல் இல்லை, மழை இல்லை, விலை கிடைக்க வில்லை எனும் இக்கட்டு எல்லாவற்றையும் விட்டு ஓடி விட வேண்டும் என்று நினைக்க வைக்கிறது.

பெரும் நகரங்களில் காதலிக்க மறுத்த பெண்கள் மீது திராவகம் ஊற்றும் ஆண்களும் ஆண் தன்மையினால் பாதிக்கப்பட்டவர்களே. அவர்களுக்கு "இல்லை" என்ற சொல் ஆகாது. கோபம் வருகிறது. வன்முறையில் இறங்குகின்றனர். தனக்கு எடுத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது என்று நினைப்பில் வளர்ந்தவன்  ஒரு பெண் தன்னை நிராகரிக்கும் போது ஆத்திரம் புத்தியை பேதலிக்க வைக்கிறது. இந்தியாவில் நிறைய இளைஞர்கள் இப்படிப் பட்ட குற்றங்களுக்காக கைதாகி சிறையில் இருக்கின்றனர்.

ஆண்களும் விடுதிகளில், சிறைகளில், ராணுவத்தில், வீடுகளில், பொது இடங்களில் சக ஆண்களால் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் சித்தப்பாக்களாலும், மாமாக்களாலும், தாத்தாக்களாலும், பிற உறவினர்களாலும் வீடுகளுக்கு உள்ளேயும் ஆசிரியர்களாலும், அதிகாரிகளாலும், காப்பாளர்களாலும்  பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

புடைக்கும் புஜங்களும் தெரிக்கும் நரம்புகளும்: 
ஆண் தன்மையின் தமிழ் சினிமா பிரதி

கலவரங்களில் ஆண்களே ஆண்களால் வன்முறைக்கு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். ஆண்களே ஆண்களால் கொலை செய்யப்படுகின்றனர். காவல்துறையினர் ஆண்களைப் பிடித்துப்போய் அடித்து நொறுக்குவது நெருக்கடிக்கு உள்ளான வடகிழக்கு இந்தியாவிலும், காஷ்மீரிலும் சத்திஸ்கரிலும் ஜார்கண்டிலும் ஒரிசாவிலும் நடந்துள்ளது.

மிகைப்படுத்தப்பட்ட, வீங்கிய ஆண் திமிர் ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. சண்டைக்கும், வன்முறைக்கும் ஆண்கள் முன்னுக்கு நிற்கின்றனர். அதிகம் அடி, உதை வாங்குகின்றனர். சாகின்றனர்.

வயதான கிழவன் மனைவி இறந்தால் அவனுக்கு வாழத்தெரிவதில்லை. சிரமப்படுகிறான். கிழவிக்கு கணவன் இறந்தால் வாழத்தெரியும். பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாள். பொறுப்பாக குடும்பத்தையும் தன்னையும் பார்த்துக்கொண்ட அனுபவம் அவளுக்கு இருக்கிறது. சீராட்டி, பாராட்டி, கவனிப்புக்கு உள்ளாகும் ஆண் மனைவி போனதும் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறான்.

குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்களில் ஆண் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் கரடு முரடானவையாகவும், வன்முறையைக் கொண்டாடுவதாகவும் இருப்பதையும், பெண் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் மென்மையை, அமைதியைக் கொண்டாடுவதாக இருப்பதையும் நாம் கவனிக்கலாம். ஆண்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே வன்முறையைக் கொண்டாடும் வலியுறுத்தும் ஆண் தன்மைக்கு பழக்கப்படுத்தப்படுகின்றனர். அதுவே அவர்களின் சுமையாகவும் பழியாகவும் சாகும் வரை தொடர்கிறது. அவர்கள் அதிலிருந்து வெளிவர முயற்சித்தால் அன்றி.

கிரேக்க ஆண்மகன் ஹெராக்லீஸ்; ஆண் தன்மையின் அடையாளம்

பெண்களுக்கும் ஆண் தன்மை இருக்கிறது. அவர்களும் பிற பெண்களையும் ஆண்களையும் ஒடுக்குகின்றனர். ஜெயலலிதா எல்லா மந்திரிகளையும் தனது காலில் விழ வைத்துப் பார்ப்பதும் ஒருவித ஆண் தன்மை தான். பெண்களும் தங்களது பிள்ளைகளுக்கு ஆண் தன்மைகளைக் கற்றுக்கொடுக்கின்றனர். பெண்களும் ஆண் தன்மை சரியென்று நம்புகின்றனர். சக பெண்களையே அது அதிகம் பாதிக்கிறது என்பது தெரியாமல் நடக்கிறது.

நகர்புறத்துப் பெண்களின் ஆண் தன்மை, கிராமப்புற ஆண்களின் ஆண் தன்மையை விட வன்மமானதாக இருப்பதையும் உயர் சாதி பெண்களின் ஆண் தன்மை, ஒடுக்கப்பட்ட சாதி ஆண்களின் ஆண் தன்மையை விட மிகுந்த அழுத்தமானதாக இருப்பதையும் நாம் பார்க்கலாம்.  ஆண் தன்மை ஆண் உடலின் வழியாக மட்டும் செயல்பட வேண்டியதில்லை. ஆண் தன்மை ஒரு அரசியல். அது பல உடல்களின் வழியாக பல அளவுகளில் நேரத்திற்கு ஏற்றவாறு வெளிப்படுத்தப்படுகிறது.

வீட்டுக்குள் ஆண்; வெளியில் பெண்

பாலின சிறுபான்மையினர் அல்லது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவர்களின் பாலியல் தேர்வு இந்த ஆண் தன்மையின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. அதனால் தான் இன்னும் பல நாடுகளில் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் கடும் வன்முறைக்கு ஆளாகின்றனர். ஆண்மை அல்லது பெண்மை என்கிற கறாரான வரையறையை இவர்கள் களைத்து எறிகின்றனர். ஒரு ஆணுக்குள் பெண்மையும் ஒரு பெண்ணுக்குள் ஆண்மையும் இருக்க முடியும் என்கிற வாதம் பேராண்மை என்கிற பேருண்மையை தவிடு பொடியாக்குகிறது.

வேகமாக வண்டி ஓட்டுவது கூட ஒரு ஆண் தன்மையின் அடையாளம் தான். நமது குடும்ப அல்லது நட்பு வட்டாரத்தில் இப்படி கண்மூடித்தனமான வேகத்தில் வண்டி ஓட்டி விபத்துக்கு உள்ளானவர் பலர் உண்டு. நிரந்தர ஊனம் அல்லது மரணம் அல்லது பொருளாதார அழிவு இவை தான் இதற்குக் கிடைக்கும் பரிசு. பெண்கள் மெதுவாக வண்டி ஓட்டினால் கேலி செய்யப்படுவதும் அவர்கள் ஓட்டும் வாகனங்களை இடிப்பது போல ஓட்டி பயமுறுத்துவதும் இதன் தொடர்புடையது தான். ஆண்கள் மெதுவாக வண்டி ஓட்டினால் பொம்பள மாதிரி ஓட்டுகிறாயே என்று பலர் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம்.

ஆண் தன்மைக்குள் இருக்கிற இந்த பிளவை, நெருக்கடியை, ஏற்ற தாழ்வை சிக்கலுக்குள்ளாக்குவது, வலியுறுத்துவது, விவாதிப்பது ஆண் பெண் சமத்துவத்தில் நம்பிக்கையுள்ள ஆண்களை அடையாளம் காண்பதற்கு, அங்கீகரிப்பதற்கு, ஊக்குவிப்பதற்கு உதவும் என்பதும் ஆண் பெண் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஆண்களும் பங்கேற்க முடியும் என்பதும் சாத்தியமாகிறது.

ஆண் தன்மை எனும் சுமை

கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்மை அல்லது ஆண் தன்மை (MASCULINITY) தொடர்பாக பல்வேறு விதமான ஆண்களுடன் பயிற்சிகள், திரையிடல்கள், கருத்தரங்குகள், பட்டறைகளில் கலந்து கொண்ட அனுபவமும் எனக்கு உண்டு. சென்ற ஆண்டு லயோலா கல்லூரியில் ஆண் தன்மை தொட்ர்பான ஒரு திரைப்படவிழாவும் நான் நடத்தினேன். ராகுல் ராய் என்கிற ஆவணப்பட இயக்குநர் ஆண் தன்மை தொடர்பாக சில முக்கியமான படங்களும் எடுத்துள்ளார்.

எஸ்.ஆனந்தி, ராஜன் குறை, ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் Economic and Political Weekly பத்திரிக்கையில் தலித் ஆண் தன்மை தொடர்பாக "Work, Caste and Competing Masculinities"  எனும் கட்டுரையை எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனந்த் பட்வர்த்தனின் 'Father, Son and Holy War' என்கிற ஆவணப்படமும் மத அடிப்படைவாதமும் ஆணாதிக்கமும் எப்படி கை கோர்த்து ஆண் தன்மையை முன்னிறுத்துகின்றன என வாதிடுகிறது. எழுத்தாளர் தமிழ்செல்வனின் "ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்" என்கிற புத்தகமும் ஆண் தன்மையை விவாதப் பொருளாக்குகிறது.