Tuesday, December 22, 2020

ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் பேட்டி : 01

"18 ஆண்டுகள் தொடர்ச்சியாக சர்வதேச ஆவண மற்றும் குறும்பட விழா நடத்தி வருவதே ஒரு சாதனைதான்" - ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் பேட்டி
===============================

2017 / Peter Durairaj 
அமுதன் ராமலிங்கம் புஷ்பம் ( 46 வயது ) பரவலாக அறியப்பட்ட ஆவணப்பட இயக்குனர்களில் ஒருவர். ஆவணப்படங்களை இயக்குதல், திரையிடுதல் , கல்லூரிகளில் வகுப்பு எடுத்தல் ,பயிலரங்குகள் நடத்துதல் என்பதை முழுநேரப் பணியாக செய்துவருபவர்.மதுரையைச் சார்ந்த இவர் இப்போது சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். 

timestamil.com ற்காக பீட்டருக்கு கொடுத்த பேட்டி இது.

கேள்வி: ஆவணப்படங்கள் மீது உங்களுக்கு ஆர்வம் வந்த்து எப்படி ?

பதில்: என் அப்பா ஒரு கம்யூனிஸ்டு , அம்மா தீவிர எம்ஜிஆர் ரசிகை. இது போதாதா ? இரண்டு பேரின் கலவைதான் நான். என் வீட்டில் தோழர்கள் எதைப் பற்றியாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். எட்டாவது படிக்கும் போதே நான் சினிமா இயக்குநராவேன் என்றுதான் சொன்னேன் . 1994 ல் நான் கல்லூரியில் எம்.ஏ. படிக்கும்போது BBC எடுத்த Children of Chernobyl என்ற படத்தை திரையிட்டேன்.

கே: உங்களுக்கு முன்னோடி என்று யாராவது இருக்கிறார்கள் ?

பதில் : தில்லியில் செண்டிட் என்ற அரசு சார்ந்த அமைப்பு 5 நாட்கள் ஆவணப்பட பயிலரங்கம் நடத்தியது..அதில் 25 ஆவணப்படங்கள் திரையிட்டனர்; விவாதித்தோம். பிறகு இரண்டு ஆண்டுகள் தில்லியில் பயிற்சி எடுத்தேன்.இதுதான் நான் ஆவணப்படம் எடுக்கக் காரணமாயிற்று.

கே: நீங்கள் இயக்கியுள்ள ஆவணப்படங்கள் பற்றி சொல்லுங்களேன் !

ப: மார்க்சிஸ்டு கட்சி மாமன்ற உறுப்பினர் படுகொலையை மையப்படுத்தி லீலாவதி என்ற ஆவணப்படத்தை நான் முதலில் 1997 ல் இயக்கினேன்.அடுத்த ஆண்டு குண்டுப்பட்டி தலித்துக்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையை பற்றி " தீவிரவாதிகள் " என்ற படம் இயக்கினேன்.மரணதண்டனைக்கு எதிரான " தொடரும் நீதிக் கொலைகள் " , திருப்பூர் நகரைப்பற்றி கடந்த ஆண்டு " டாலர் சிட்டி "என 19 ஆவணப்படங்கள் இதுவரை இயக்கி உள்ளேன். இப்போது " என்ற சாதி " என்ற படம் எடுத்துவருகிறேன். இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் இந்த துறையில் நான் ஒரு முக்கியமான முன்னோடி என்று சொல்லலாம்.
கே: ஆவணப்படங்கள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்புகிறீர்ரகளா ?

ப : ஆவணப்படம் சொல்லும் செய்தி என்பது எளிமையானது; ஆழமானது; தல மட்டத்தோடு தொடர்பு கொண்டது( local ness) ;நேரடியானது;நாணயமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழில் சுயாதீனமான அரசியல் படங்கள் வெளிவரத் தொடங்கி விட்டன என்பது ஆரோக்கியமானது.2003 ல் நான் எடுத்த " பீ " ஆவணப் படத்திற்கு மதுரை மாநகராட்சி நல்ல எதிர்வினை ஆற்றியது.ஆணையாளராக இருந்த கார்த்திக் பொதுக் கழிப்பிடங்களின் பாராமரிப்பை சுய உதவிக் குழுக்களிடம் கொடுத்தார்.பல இடங்களில் தமுஎச இதனை திரையிட்டது; அப்படி திரையிட்டதே சில சமயங்களில் பின்னர்தான் எனக்கு தெரியவரும். இந்தப்படத்தினால் துப்புரவு தொழிலாளர்களின் நிலை குறித்த விவாதம் நடைபெற்றது.அந்த சமயத்தில் இது ஒரு முன்முயற்சி என்று சொல்லாம்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 80 ம் ஆண்டு விழா பம்பாயில் நடைபெற்ற போது அதில் அரைநாள் நிகழ்வை திரைப்படங்களிற்காக ஒதுக்கி இருந்தார்கள். அதில் இந்தப்படத்தையும் ஆனந்த் பட்வர்தன் பரிந்துரையின்பேரில் திரையிட்டார்கள். நான் இயக்கிய " தொடரும் நீதிக் கொலைகள் " மரண தண்டனைக்கு எதிராக சலனத்தை ஏற்படுத்திய படம்.

கே: வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் திரைப்படம் இயக்குவீர்களா ?

பதில்: நிச்சயமாக மாட்டேன்.ஏனெனில் திரைப்படம் என்பது தனி துறை. அதற்கும் ஆவணப்படத்திற்கும் சம்மந்தமே கிடையாது .

கே: நீங்கள் ஆவணபடம் திரையிடுவது குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.

ப: வெள்ளைச் சுவர் அல்லது வெள்ளை வேட்டி இருந்தால் போதும். என்னிடம் புராஜெக்ட்டரும் ,லேப் டாப்பும் எப்போதும் இருக்கும்.நாங்கள் 10 பேர் சேர்ந்து மறுபக்கம் என்ற அமைப்பை 1994 ல் ஏற்படுத்தினோம்.இதுவரை 1000 திரையிடல்களுக்கு மேல் செய்துள்ளோம். 1998 முதல் மதுரையில் 18 ஆண்டுகளாக , தொடர்ச்சியாக ஆண்டுதோறும் " சர்வதேச திரைப்பட மற்றும ஆவணப்பட விழா " நடத்தி வருகிறோம். அரசு சாராத மூத்த திரைப்பட விழா இது. இதுவே ஒரு பெரிய சாதனைதான்.சென்னையிலும் 6 ஆண்டுகளாக இந்த திரைப்பட விழாவை மறுபக்கம் நடத்தி வருகிறது. இது தவிர ,கல்லூரிகள் , சங்கங்கள் ,பல அமைப்புக்கள் , நண்பர்கள் என எல்லா இடங்களிலும் திரையிட்டு வருகிறோம்.

கே: நீங்கள் திரையிடுகிற படங்களுக்கு எத்தனை பேர் சாதாரணமாக வருவார்கள் ?

ப: எண்ணிக்கை என்பது எனக்கு ஒரு பிரச்சினையே அல்ல. 10 பேருக்கு கூட நான் திரையிட்டுள்ளேன்; பெரிய அரங்குகளிலும் திரையிட்டுள்ளேன்.மற்ற இயக்குநர்களின் படங்களையும் நாங்கள் திரையிட்டு வருகிறோம். என்னைப் பொறுத்தவரை திரையிடலுக்குப் பின்பு விவாதம் நடத்துவோம்.வந்தவர்கள் தங்கள் கருத்தைச் சொல்லுவார்கள். வந்தவர்களிடம் ஒரு intellectual stimulation நடந்தால் அதுவே எனக்கு போதுமானது.கே: தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஆவணப்பட இயக்குநர்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?

ப: ரவி சுப்பிரமணியம் ( ஜெயகாந்தன் ) , அம்ஷன் குமார் , ப்ரசன்னா ராமசாமி ( அடூர் கோபாலகிருஷ்ணன் ) போன்றோர் ஆளுமைகள் குறித்து படம் எடுத்துள்ளனர்.சமூகம் சார்ந்து கீதா இளங்கோவன் ( மாதவிடாய்) படங்கள் எடுத்து வருகிறார்.பாரதி கிருஷ்ணகுமார் , ஆர்.வி.ரமணி போன்றோரும் படம் எடுத்து வருகின்றனர்.ஆர். ஆர். சீனிவாசன் , லீனா மணிமேகலை போன்றோர் அரசியல் படம் எடுத்து வருகின்றனர்.தமிழ் இசுலாமியர்கள் பற்றி கோம்பை எஸ்.அன்வர் " யாதும்" என்ற படம் எடுத்துள்ளார்.
திவ்யபாரதி எம்.எல். தோழர்கள் உதவியோடு " கக்கூஸ் " படம் எடுத்துள்ளார். பூவுலகின் நண்பர்கள் , மே 17 இயக்கம் , மகஇக போன்ற அமைப்புகளும் படம் எடுத்து வருகின்றன.

கே: கருத்துரிமைப் பாதுகாப்பு இயக்கம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?

ப: பெருமாள் முருகனின் நாவலுக்கு தடை என்ற போது இதை ஆரம்பித்து இயக்கம் நடத்தினோம்.பாடகர் கோவன் கைதை எதிர்து இயக்கம் நடத்தினோம். இதில் என் பங்களிப்பு என்று தனியாக சொல்ல முடியாது ; கூட்டு முயற்சிதான்.

கே: அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் பற்றி சொல்லுங்களேன் ?

ப :சென்னை ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கு தடை என்று வந்தபோது அதற்கு எதிர் வினையாக .அம்பேத்கர் அய்யங்காளி வட்டம் ( கேரளா ) ,அம்பேத்கர் மார்க்சு வட்டம் , அம்பேத்கர் பூலே வட்டம் ( மகாராஷ்டிரா ) அம்பேத்கர் சிங்காரவேலர் வட்டம் போன்ற பல அமைப்புகள் நாடெங்கும் தோன்றின.அதில் ஒன்றுதான் இது. மதுரை, திருச்சி, கோவை, சென்னை நகரங்களில் இவை தோன்றின.இதன் மூலம் பல நிகழ்ச்சிகள் நடத்தினோம்.

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சொல்லி அக்கலாக் முகமது , தாத்ரியில் படுகொலை செய்யபட்ட போது மாட்டிறைச்சி திருவிழா நடத்தினோம்.ஏறக்குறைய தமிழ்நாட்டில் நடந்த முதல் மாட்டிறைச்சி விழா இதுதான்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சொந்தமான அம்பேத்கர் திடலில் நடத்தினோம்.

பெரியார், அம்பேத்கர் , மார்க்ஸ் பற்றி தொடர் வகுப்புகள் எடுத்தோம். திராவிட ஆட்சியின் கீழ் நடைபெற்ற நற்செயல்கள் குறித்து பேச " எது வளர்ச்சி ? " என்ற முழுநாள் கருத்தரங்கு நடத்தினோம்.பூனா திரைப்பட கல்லூரி மாணவர்களின் 100 ம் நாள் போராட்ட நாளன்று முழுநாள் கலைவிழா நடத்தினோம்.இத்தகைய நிகழ்வுகளில் ஏறக்குறைய எல்லா அமைப்புகளிலிருந்தும் கலந்து கொண்டனர் என்பதுதான் சிறப்புச் செய்தி.மகளிருக்கான தனியான மகளிர் விழா நடத்தினோம்.
மத்திய அரசினை எதிர்த்து சாகித்திய அகாதமி விருதுகளைத் திருப்பி அளித்த கர்நாடகா எழுத்தாளர்களுக்கு பாராட்டுவிழா நடத்தினோம்.ரோகித் வெமுலா , நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்காக கூட்டம் நடத்தினோம்.கே : முசாபர் நகர் பாகி ஹை - ஆவணப் படம் திரையிடல் குறித்து ?

ப:ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி தூண்டுதலின் பேரில் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திரையிடுவதாக இருந்த இந்த படத்தை திரையிட கடைசி நேரத்தில் மறுத்து விட்டது நிர்வாகம். எனவே கல்லூரி மாணவர்கள் தங்கள் உணவுக்கூடத்தில் வேட்டியை திரையாக கட்டி திரையிட்டனர்.இதனையொட்டி நாடு முழவதும் 50 இடங்களில் இதே படத்தை ஒரே நாளில் திரையிட முடிவுசெய்தார்கள்.தமிழ் நாட்டில் நான்கு இடங்களில் திரையிட முடிவு செய்தோம்.திருச்சி , மதுரையில் காவல்துறை தடுத்து விட்டது. கோவையில் பொது நிகழ்வாக இல்லாமல் நடத்தி விட்டார்கள். இங்கு சென்னையில் ஸ்பேசஸ் அரங்கில் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. பின்னர் நுங்கம்பாக்கம் காயிதே அரங்கில் நடத்திக் கொள்ள அதன் இயக்குனர் அனுமதி அளித்தார். எதிர்ப்பினை எதிர்த்து வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.

கே: இதுதான் உங்களுடைய முழுநேர வேலையா ? வருமானம் ?

ப: என் துணைவர் தாக்‌ஷா உடையலங்கார நிபுணர். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டார்.நான் கல்லூரிகளுக்கு வகுப்பு எடுக்கிறேன். நாடு முழுவதும் ஆவணப்பட பயிலரங்குகள் நடத்தி வருகிறேன்.இது தவிர ஒருசில நிறுவனங்களுக்கு in house படம் எடுக்கிறேன்; இது cooly films.

கே: உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் ?
ப: பியேதர் தஸ்தாயேவஸ்கி

கே: பிடித்த இயக்குனர் ?
ப: மகேந்திரன்

கே:பிடித்த படம் ?
ப: உதிரிப் பூக்கள்

கே: தற்போதைய அரசியல் சூழலை எப்படி பார்க்கிறீர்கள் ?
ப : வருகிற ஜூன் 16 முதல் 20 வரை சர்வதேச திரைப்பட மற்றும் குறும்பட விழா கேரளாவில் நடைபெற உள்ளது. கேரள அரசு இதனை நடத்துகிறது. இதில் திரையிடுவதற்காக 15 படங்கள் தேர்வு செய்யப்பட்டன.இதில் மூன்று படங்களை (ரோகித் வெமுலா , காஷ்மீர் ,நேரு பல்கலைக்கழகம் தொடர்பானது )திரையிட மத்திய அரசு மறுத்து விட்டது.இதுதான் மத்திய அரசு.

ஜனநாயக சக்திகளின் தோல்விதான் , முற்போக்கு சக்திகளின் தோல்வியில்தான் மோடியின வெற்றி என்று நான் நினைக்கிறேன். மக்களின் மனதில் மென்மையான மோடி இருக்கிறது.அதனால்தான் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஒவ்வொரு விலங்கிற்கும் உள்ள உணவு , கலவி ( இனப்பெருக்கம்) போல மற்றொரு அடிப்படையான உணர்வு ( basic instinct ) வன்முறை. மனிதர் மனதில் உள்ள வன்முறை கல்வி ,நாகரிகத்தால் ஆற்றுப் படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை உணர்வை தட்டி எழுப்பி மனிதர்களை மோதச் செய்வதில்தான் பாசிசச் சக்திகளின் வெற்றி இருக்கிறது. இப்போது அதைத்தான் செய்து வருகிறார்கள். இல்லையென்றால் காஷ்மீரில் இராணுவ ஜீப்பில் கட்டி வைக்கப்பட்ட இளஞைனுக்காக மக்கள் வெகுண்டு எழாமல் விவாதம் நடத்துவார்களா என்ன ?கே: உங்கள் உழைப்பிற்கேப்ப அங்கீகாரம் உங்களுக்கு கிடைத்து இருக்கிறதா ?

ப: நிச்சயமாக . இந்த ஆண்டு திராவிடர் கழகம் எனக்கு சமூக நிதிக்கான விருது வழங்கியுள்ளது. இதனை நான் பெருமையாக கருதுகிறேன்.எள்னுடைய பல ஆவணபபடங்களுக்கு விருதுகள் , பாராட்டுகள் கிடைத்து உள்ளன. கடந்த மாதம் கோழிக்கோடு நகரில் நடந்த Youth Spring Film Festival ல் honorary director ஆக என்னை தேர்ந்து எடுத்தார்கள்; ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்குவார்கள், இந்த ஆண்டு எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. என் படத்தை திரையிட்டார்கள் , அதைப்பற்றி பேசினார்கள்.இப்போது சென்னையில் பத்து இடங்களில் என்னால் படங்களை திரையிடச் செய்ய முடியும். இதைவிட என்ன அங்கீகாரம் வேண்டும் ?

பேட்டி: பீட்டர் துரைராஜ்.


2017

No comments:

Post a Comment