Friday, June 22, 2018

ஸ்டெரிலைட் ஆதரவு அறிவியல் ஆவணப்படம்!

அறிவியல் அப்பாவிகள்!
ஸ்டெரிலைட் போராட்டம் பற்றிய அறிவியல் ஆவணப்படம் (!) ஒன்று சமூகவலைத்தளங்களில் உலா வருகிறது. ஒருவர் பல தரவுகளைத் தந்தபடி உரைவீசிக்கொண்டு இருக்கிறார். இறுதியில் ஸ்டெரிலைட்டை விட வைகுண்டராஜன் நடத்தும் வி வி மினரெல்ஸ் தான் அதிகம் சூழல் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது, அதைப் பற்றிப் போராடாமல் ஸ்டெரிலைட்டை எதிர்க்கிறீர்களே என்றும் ஏசி அறையில் அமர்ந்தபடி நித்யானந்த் ஜெயராமன் மற்றும் பாத்திமா பாபு போன்றவர்கள் மக்களைத் தூண்டி விடுகின்றனர் என்றும் உளறிக்கொட்டுகிறது இந்த வீடியோ. பாதிக்கப்பட்ட மக்களைப் பேசவிடாமல், தொகுத்தளிப்பவரே பேசி தீர்ப்பும் வழங்குகிறார்.
1) விவி மினரல்ஸ்க்கு எதிராக மக்கள் போராடிக்கொண்டு தான் இருக்கின்றனர். 1997-98ல் இடிந்தகரை அருகே கூட்டப்புளி மற்றும் பெருமணல் ஆகிய கிராமங்களில் விவி மினரல்ஸ் நடத்தும் கார்னட் மணல் கொள்ளைக்கு எதிராக பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் உட்பட பொதுமக்கள் போராடியதும், அதை அப்போதைய காவல்துறை (ஜான்கிட் தலைமையில்) அமைதியாகப் போராடியவர்களை அடித்து நொறுக்கியதும் எனக்குத்தெரியும்.
விவி மினரல்ஸின் அராஜகம் பற்றி "சாமி" எனும் வெகுசன சினிமாவிலேயே அந்த வில்லன் கதாபாத்திரத்தின் மூலமாக அப்போதே பேசப்பட்டுவிட்டது. இந்த ஆவணப்படக்குழுவினர் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஊருக்கே தெரியும் அவர்களின் அட்டகாசம். அந்தக் கம்பெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தபடி தான் இருக்கின்றன.
2) ஸ்டெரிலைட்டை விட விவி என்ன இன்னும் பல கம்பெனிகள் பாதிப்புகள் ஏற்படுத்தலாம். அதற்காக ஸ்டெரிலைட் போராட்டம் தவறா? முக்கியத்தவம் இல்லாததா? ஸ்டெரிலைட்டைக் காப்பாற்ற ஏன் முயல்கிறார் இந்த இயக்குனர்?
3) ஸ்டெரிலைட் போராட்டம் அந்தக் கம்பெனி தொடங்கிய நாள் முதல் நடக்கிறது. இப்பொழுது தான் தமிழ்நாடு விழித்துக்கொண்டிருக்கிறது. கூடன்குளம் போராடத்திற்குப் பிறகு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. சாதாரண மக்களும், அறவழியில் போராட முடியும் என்று நம்பிக்கை உருவாகியிருக்கிறது. சூழலைக் கெடுத்து உருவாகும் வளர்ச்சி தேவையில்லை என்கிற அறிவு தமிழருக்கு வந்திருக்கிறது. அது தவறா? முன்பு ஏன் வரவில்லை கேட்க முடியுமா?
ஒரு போராட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் முக்கியத்துவம் பெறுவதற்கு பல வரலாற்றுக்காரணிகள் இருக்கின்றன. கூடன்குளம் போராட்டம் கூட புகுஷிமா பேரிடருக்குப் பிறகு தான் பேரெழுச்சி பெற்றது. அதற்காக முன்பு இங்கு மக்கள் போராடவில்லை என்று சொல்ல முடியுமா? முன்பு ஏன் இந்த எழுச்சி வரவில்லை என்று கேட்க முடியுமா? என்ன அபத்தம்?
ஜல்லிக்கட்டுப்போராட்டம் தந்த வெற்றி தமக்கு உந்துதலாக இருந்ததாக போராடும் மக்கள் பலர் சொல்லியிருக்கின்றனர்.
4) வெளியாட்கள் மக்களைத் தவறாகத் தூண்டி விடுகின்றனர் என்று பாஜக, ஸ்டெரிலைட் மற்றும் மாநில / மத்திய அரசாங்கங்களின் மொழியில் ஒரு ஆவணப்படம் பேசலாமா? நடுநிலை எடுக்கிறாரோ இயக்குனர்? நடுநிலை என்று யாருமே இவ்வுலகில் இல்லை என்பது அவருக்குத் தெரியாதா? இது பாதிக்கப்பட்ட மக்களை, போராடுவோரை சிறுமைப் படுத்துவது போல் இல்லையா? இந்தப் படத்தின் உள்நோக்கம் என்ன?
5) ஸ்டெரிலைட் மட்டுமல்ல, இன்னொரு நிறுவனமும் தவறு செய்கிறது, அதை எதிர்த்தும் போராடுங்கள், நாங்கள் ஆதாரம் தருகிறோம் என்று சொல்லியிருந்தால் அது நியாயமான வாதம். அதை விடுத்து ஸ்டெரிலைட்டை ஏன் எதிர்க்கிறீர்கள், மக்களை ஏன் தூண்டிவிடுகின்றனர் என்று கேட்பது நேர்மையற்ற செயலாகவே எனக்குப் படுகிறது.

மணவாளக்குறிச்சி பற்றிய எனது ஆவணப்படம்!

கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 1 : மணவாளக்குறிச்சி
இயக்கம்: அமுதன் ஆர்.பி. ; 54 நிமிடங்கள்; 2010; ஆவணப்படம்
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியில் இந்திய அரசின் அணுசக்தித்துறை நடத்தும் இந்திய அருமணல் ஆலை கதிர்வீச்சு ஆற்றல் கொண்ட மணலை அள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய ஆவணப்படம்.
குறிப்பாக மோனசைட் (கதிர்வீச்சுத் தன்மை கொண்ட தோரியம் உள்ளடக்கியது) எனும் கனிமத்தை கடற்கரை மணலில் இருந்து பிரித்து எடுக்கும் வேலை இந்த ஆலையில் நடைபெறுவதால் இப்பகுதியில் இயற்கைக்கும் மீறிய கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக முனைவர் லால் மோகன் நடத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
இப்பகுதியில் உள்ள கடலோர கிராமங்களில் குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், நடுத்தர மற்றும் வயதான ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் புற்றுநோய், உடல் ஊனம், மூளை வளர்ச்சி அற்ற குழந்தைகள் பிறப்பு, கருச்சிதைவு, உடலின் முக்கிய உறுப்புகள் சேதமடைதல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதைப் விரிவாகப் பதிவு செய்கிறது இந்தப்படம்.
அரசு நிறுவனம் மணல் அள்ளுவதை எதிர்த்த மீனவர்களைக் கொண்டே மணல் அள்ளி அவர்களையும் இதற்குப் பங்குதாரர்களாக்கி அழகு பார்த்தது அதிகார வர்க்கம்.
வளர்ச்சி வேண்டும், இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என்று துடிப்போருக்கு இந்தப்படம் சமர்ப்பணம்.
அப்சர்வேஷன் மற்றும் சினிமா வெரிடே ஆகிய பாணியில் இயக்குநரின் இடையீடு இல்லாமல், வர்ணனை இல்லாமல், மக்களின் அனுபவங்களை, நின்று நிதானமாகப் பதிவு செய்திருக்கும் படம்.

தமிழகத்தில் சூத்திரன் வீழ்ந்தான்!

படிப்பு இல்லாதவன் செய்யும் வேலை!

தமிழ்நாட்டில் சூத்திரர்கள், பார்ப்பனர்களுடன் சமரசம் செய்து கொண்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. ஜெயா காலில் எல்லா சூத்திரர்களும் விழுந்து எழுந்து தமது விசுவாசத்தைக் காட்டியதை மறக்கலாமா? தமது குலதெய்வத்தை விட பெருஞ்சாமிகளுடன் தான் தினசரி டச்சில் இருக்கின்றனர். போதாதற்கு இப்போது சீரடி சாய்பாபா போன்ற டீசண்ட் சாமிகள் வேறு. குறையேதுமில்லை. 

தமது வீரத்தை / பெருமையை / சுயமரியாதையை தலித்துகளின் மீது வன்கொடுமையாக வெளிப்படுத்துவதே போதும் இந்த "ஆதிக்க சாதியினருக்கு". நீட் மட்டுமல்ல, எந்தப்படிப்பும் இவர்களுக்குத் தேவையில்லை. அதெல்லாம் எதுவும் இல்லாதவன் செய்கிற வேலை. இவர்களுக்குத் தான் கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம், கஞ்சா, அடிதடி, போலீஸ், வக்கீல், சினிமா என பல துறைகள் இருக்கின்றனவே! நிலம் இருக்கு, விவசாயம் பண்ணுவோம், கம்பெனி ஆரம்பிப்போம், மொதலாளி வம்சம் அல்லவா! நீட்டைப் பற்றி எதுக்கு இப்போது வெட்டிப் பேச்சு! 

ஒருவகையில் நீட்டினால் தலித்துகளுக்கும் சீட்டு கிடைக்கவில்லை என்பது சூத்திரர்களுக்கு ஒரு ஆறுதல் தானே! (தாம் படிக்கவில்லை என்பது முக்கியமில்லை, தலித்துகளும் படிக்ககூடாது). பஜ்ரங் தள், விநாயக சதுர்த்தி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக என பல ப்ளாட்பாரம்கள் இருக்கின்றன, தேசிய உணர்வை வெளிப்படுத்த! இது போதாதா? மோடி வாழ்க! பாரத் மாதா கீ ஜெய்!

போராடும் தமிழ்நாடு!

ஏன் போராடுகிறோம்?
இப்படியே போராடிக்கொண்டிருந்தால் தமிழ்நாடு மேற்குவங்கம் மாதிரி சீரழிந்துவிடும் என்று ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையாளர் சொன்னார்.
1) மேற்குவங்காளம் சீரழிந்ததா, இல்லையா என்பதைப் பற்றி சிபிஎம் மற்றும் பிற இடதுசாரித் தோழர்கள் பதில் சொல்லட்டும்.
2) தமிழ்நாடு வளர்ந்த மாநிலங்களில் ஒன்று (இதை இடதுசாரிகள், தமிழ்தேசவாதிகள், பாமக மற்றும் பாஜகவினர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்). தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, கல்வி, பொது சுகாதாரம், மனிதவளம், பொதுவிநியோகம் போன்ற துறைகளில் முதல் 4-5 இடங்களில் இருந்து வருகிற மாநிலம்.
இந்துத்துவ எதிர்ப்பு, சமூகநீதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றில் முன்னணியில் இருக்கும் மாநிலம்.
பெண் விடுதலையை நோக்கிய போராட்டத்தில் முன்னேறியபடி இருக்கிறோம். சிரிப்பு நடிகர் தலைமறைவு, ஆளுநர் மன்னிப்பு கேட்டது போன்றவை சிறந்த அறிகுறிகள். பெண் கல்வியில் முன்னேறியிருக்கிறோம்.
3) நாம் பின்தங்கி இருக்கும் இரண்டு துறைகள் : சாதிவெறி / தலித் வெறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு.
4) சாதி வெறி / தலித் வெறுப்பு எப்போது தீரும் என்று தெரியவில்லை. புதிய சிந்தனைப்போக்குகள் வந்தால் ஒழிய இதில் முன்னேற்றத்துக்கு வழி இல்லை. அதை நோக்கி நாம் கண்டிப்பாக உழைக்க வேண்டும்.
5) சுற்றுச்சூழல் பாதிப்பு என்பதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு வந்திருக்கிறது. இது நாம் அடைந்திருக்கும் பொருளாதார வளர்ச்சிக்குக் கொடுத்திருக்கும் விலை என்கிற பார்வை உருவாகியிருக்கிறது. அதனால் மக்கள் போராடுகின்றனர்.
இப்படி நான் பதில் சொன்னேன். பிறகு பேசலாம் என்று போய்விட்டார் அந்தப் பத்திரிக்கையாளர்.
பி.கு. அந்தப் பத்திரிக்கையாளர் ஒரு தமிழ் பார்ப்பனர். உடன் இருந்தவர் ஒரு மலையாளி. தமிழ்நாட்டில் இருந்து வரும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இவர்கள் தான் வேலை செய்கின்றனர்.

அம்பேத்கர் எனக்கு! பெரியார் உனக்கு!

தலித் பகுஜன் ஒற்றுமை சாத்தியமா?
நாங்கள் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தொடங்கிய போது தலித் தோழர்கள் பலர் கடுமையாக அதை எதிர்த்தனர். நீங்கள் எப்படி அம்பேத்கரையும் பெரியாரையும் சேர்க்கலாம் என்று வெளிப்படையாகக் கேட்டனர்.
சில தமிழ்தேசவாதிகள் இன்னுமா பெரியார், அம்பேத்கர்னு பேசிட்டிருக்கீங்க? காலம் மாறிப்போச்சு தோழர் என்று எங்களைப் பரிதாபமாகப் பார்த்தனர்.
நாங்கள் நடத்திய பல நிகழ்ச்சிகளில் பேசவந்த தலித் சிந்தனையாளர்கள் பலர் பெரியார் பெயரை உச்சரிக்கவே இல்லை.
பெரியாரை தலித் சிந்தனையாளர்கள், போராளிகள் புறக்கணிப்பது யதேச்சையானதல்ல.
பெரியாரைச் சேர்த்தால் இடைச்சாதிக்காரன் வருவான். நமக்கு யோசனை சொல்வான். ஏற்கனவே அவனிடம் பட்டது போதாதா என்கிற மனநிலை.
நீ பெரியாரை மட்டும் பேசு. அம்பேத்கரைப் பேசாதே என்கின்றனர்.
நானும் அம்பேத்கரை மட்டும் பேசுகிறேன். பெரியார் எங்களுக்கு வேண்டாம் என்கின்றனர்.
உங்க திருவிழாவும் வேண்டாம், உங்க பொங்கச்சோறும் வேண்டாம் என்கிற நிலை.
அதே போல பல பெரியார்வாதிகள் இன்னும் "அவுங்க அப்படித்தான்" என்கின்றனர். "நாங்க அவுங்களுக்குப் பண்ணாததா?" என்றும் மார் தட்டுகின்றனர்.
இதுக்கு என்ன தான் தீர்வு?

8 வழிச்சாலை : குஜராத் மாடலில் நில அபகரிப்பு மோசடி!

வளர்ச்சியின் காலம் முடிந்துவிட்டது!

நில அபகரிப்பெல்லாம் குஜராத்தில் மிகவும் சாதாரணம். எந்தத் தடையும் இல்லை. யாரும் போராட முடியாது. போராடவும் மாட்டார்கள். ஏனெனில் மோடி அய்யா மேல் இருக்கும் பாசம். அது தான் குஜராத் மாடல். எல்லாவற்றையும் அரசுக்குக் கொடுத்துவிட்டு பிச்சை எடுப்பது ஒரு தியாகம் தானே!
சர்தார் சரோவர் அணை தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய நில / நீர் மோசடி. அதற்கு நிலத்தை, நீரை இழந்தவர்கள் இன்னும் எழுந்திருக்க வழியில்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர்.
பெரும் விவசாயிகளுக்கும், தனியார் கம்பெனிகளுக்கும் நீரை வழங்க காங்கிரஸ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சதி தான் அது. வறண்ட கட்ச், செளராஷ்றா பகுதிகளுக்கு தண்ணீர் கொடுக்க என்று சொல்லி உருவாக்கப்பட்ட திட்டம் இப்பொது யாருக்கோ பயனளித்துக்கொண்டிருக்கிறது. அதனால் வயிற்றில் அடிக்கப்பட்ட லட்சக்கணக்கான சிறு குறு விவசாயிகளுக்கு இன்னும் முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை.
அதில் நடந்த முறைகேட்டைக் கண்டித்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராகத் தான் பின்னாட்களில் பதவிக்கு வந்த முதல்வர் மோடி உண்ணாவிரதம் நாடகம் நடத்தி மக்களை உசுப்பி விட்டார்.
சுற்றுச்சூழல், பாதிக்கப்பட்டோர் இழப்பீடு & மறுவாழ்வு விதிமுறைகள் சரியாகக் கடைபிடிக்கப்படவில்லை என்று பலர் கதறிய போது அவர்களை குஜராத்தின் எதிரிகள் / துரோகிகள் என்று மோடி தூற்றினார்.
இப்போது அளவுக்கு அதிகமான தண்ணீரில் குஜராத் முதலாளிகள் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றனர். அதனால் நிலம் இழந்த குஜ்ராத், மத்தியபிரதேசம், மகராஷ்டர விவசாயிகள் இன்னும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
அகமதாபத் நகரின் சபர்மதி நதியை சர்தார் சரோவரிலிருந்து கொண்டு வரப்பட்ட நர்மதா நீரால் நிரப்பி, அதை ஒரு ஏரியாக்கிவிட்டார் மோடி. அங்கே எல்லோரும் உல்லாசப் படகு சவாரி போய்க் கொண்டிருக்கின்றனர். அது ஒரு பெரிய தீம் பார்க் ஆகிவிட்டது. தினசரி கொண்டாட்டம் தான். அதற்காக நிலம் கொடுத்தவன், நீர் கொடுத்தவன் கதி அதோ கதி தான். இன்று வரை விடிவு இல்லை அவர்களுக்கு.
நானோ கார் கம்பெனி மேற்கு வங்காளத்தில் எதிர்ப்பைச் சந்தித்த போது "எங்கள் மாநிலத்திற்கு வாருங்கள்" என்று மோடி அழைத்து இலவசமாக நிலம் கொடுத்து, அரசு பணத்தை முதலீடும் போட்டு ஹீரோயிசம் காட்டினார். இப்போது அந்தக் கம்பெனியே இல்லை. ஊத்தி மூடிவிட்டனர்.
முதலாளிகளுக்கு எல்லாவற்றையும் அள்ளிக் கொடுப்பது குஜராத் / மோடி மாடல். மக்களை, தொழிலார்களை தமது உரிமையை விட்டுக்கொடுக்க நிர்பந்திப்பது, மூளைச்சலவை செய்வது மோடி பாணி. அதைத்தான் 15 ஆண்டுகள் செய்தார். நெருக்கடி வரும்போதெல்லாம் முஸ்லீம்களுக்கு எதிராகக் கலவரம், இந்துத்வா என்று மக்களை மயக்கினார்.
இத்தகைய மோடி பிரதமரானால் நாடெங்கும் இது நடைமுறைக்கு வராதா என்ன?
நிலத்துக்கு நிலம் இழப்பீடு என்கிற திட்டம் இருந்தது. இப்போது பணம் கொடுக்கிறார்கள். பணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? கண்மூடித் திறப்பதற்குள் அது கரைந்துவிடும். பத்தை நூறாக்குவது ஒரு கலை. அது எல்லோருக்கும் வராது.
தில்லிக்கு அருகில் இருப்பதால் நிலத்தின் விலை மதிப்பேறிய குர்காவுன் பகுதியில் நிலத்தை பல கோடிக்கு விற்று பென்ஸ் கார் வாங்கியவர்கள் எல்லாம் இப்போது செலவுக்குக் காசில்லாமல் அதை விற்றுத் தின்கிறார்கள். ரியல் எஸ்டேட்காரர்கள் தான் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.
ஒரிசா, சத்திஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வளர்ச்சி என்கிற பெயரில் ஆதிவாசிகளில் நிலங்களை, காடுகளை, நதிகளை, மலைகளை முதலாளிகள் அரசுகளின் துணை கொண்டு கொள்ளை அடித்து வருகின்றனர். அவர்களை எல்லாம் மாவோயிஸ்ட் என்று சுட்டுக் கொல்கிறது அரசு.
வளர்ச்சியின் காலம் முடிவுக்கு வந்து விட்டது. கலாம் சொன்ன கனவு காணுங்கள் எனும் கோஷம் காலாவதி ஆகிவிட்டது. இனி எல்லாவற்றையும் நிறுத்துவதே உத்தமம்.
எல்லாவற்றையும் மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
வளர்ச்சி அத்தகைய வெள்ளந்தியான, அப்பாவியான, நடுநிலையான கோட்பாடு அல்ல.

பழைய மகாபலிபுரம் ரோடு எனும் மோசடி!

சென்னையின் வளர்ச்சி எவ்வளவு கொடுமையானது, இயற்கைக்கு எதிரானது, ஏழைகளுக்கு எதிரானது என்பதற்கு ஒரு உதாரணம், பழைய மகாபலிபுரம் ரோடு, அங்கிருந்து அகற்றப்பட்ட மரங்கள், அதற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட கண்ணாடி மூடிய ஏசி பொருத்தப்பட்ட கட்டடங்கள்.
சாலை விஸ்தரிப்பு, கட்டடங்கள் கட்டுதல், விரிவாக்கம், புதுப்பித்தல் என்ற பெயரில் ரோடு முழுக்க ஏற்கனவே இருந்த மரங்கள் வெட்டித்தள்ளப்பட்டுவிட்டன. சாலையே மொட்டையாகக் காட்சியளிக்கிறது.
மரத்தைப் பார்த்தால் அந்தத் தெருவே ஒன்றிணைந்து வெட்டித்தள்ளும் அளவுக்கு அவர்களுக்கு இயற்கையின் மீது வெறுப்பு. காசு இருக்கும் ஆணவம். பணம் இருந்தால் எதையும் வாங்கிவிட முடியும் என்கிற திமிர். ஏசியைக் கொண்டு எதையும் எதிர்கொள்ள முடியும் என்கிற மடமை.
அங்கு பகலில் மனிதர்கள் போகவே முடியாத அளவுக்கு கடும் வெயில். ஏசி காரில் பயணம் செய்வோர் தவிர எல்லோருக்கும் சிரமம் தான். கடும் வெயிலில் அவஸ்தைப் படுகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் புலம்புகிறார்கள். எங்குமே நிறுத்த முடியவில்லை என்று. ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். சவாரி இல்லையென்றால் எங்கும் நின்று காத்திருக்கமுடியாது. அவ்வளவு கொடுமையான வெயில்.
இருசக்கர வாகன ஓட்டிகள் நிலையும் அது தான். பேருந்தில் போனால் அடுப்பில் இருப்பது போன்ற வேதனை.
நிழல் வேண்டுமெனில் இறங்கி ஏதாவது ஏசி வைத்த கடைக்குள் போய் எதையாவது தின்று, வாங்கி இளைப்பாறலாம். அது தான் அவர்கள் சதித் திட்டம்.
வெயிலில் வெந்து போ, இல்லையென்றால் உள்ளே வந்து காசைக் கொட்டு, கரியாக்கு, நான் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற புரிதல்.
இது தான் பழைய மகாபலிபுரம் ரோட்டின் நிலை. இது தான் வளர்ச்சி.
அப்பட்டமான முட்டாள்த்தனம். மோசடி.

திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது?

திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது? அமுதன் ஆர்.பி.; ஆவணப்பட இயக்குனர், சென்னை தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ் தான் ஆ...