திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது?
அமுதன் ஆர்.பி.; ஆவணப்பட இயக்குனர், சென்னை
தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ் தான் ஆதரவு. இத்தனை வெற்றிகளை அக்கட்சி பெற்றதே அதிசயம் தான். அதன் பொருள் திமுக முன்வைக்கிற நவீனத்துவ சிந்தனையை (modernity) தமிழ்நாட்டில் 30 சதவீதம் பேர் தான் ஆதரிக்கின்றனர் என்பதாகும். அதாவது மீதமுள்ளோர் ஏதோ ஒரு வகையில் பிற்போக்குவாதிகள் அல்லது பழமைவாதிகள் அல்லது அடிப்படைவாதிகள் என்பதே கசப்பான உண்மை. இதற்குள் தான் திமுக அரசியல் செய்யவேண்டும்.
ஏனெனில் திமுக முன்மொழியும் அரசியல் சிக்கலானது. திமுகவை ஆதரிப்பது எளிதல்ல. இடதுசாரியாகவோ, தமிழ்த்தேசியவாதியாகவோ அம்பேத்கரியவாதியாகவோ இருந்துவிடலாம். அக்கொள்கைகளுக்கெல்லாம் எல்லோருக்கும் புரிய வைக்கும் எளிமை இருக்கிறது. ஆனால் திமுகவின் கொள்கை அப்படியல்ல.இந்தியாவிலேயே பார்ப்பனர் அல்லாதோர் அரசியல் நடத்தி வன்முறையைக் கையில் எடுக்காமல், அறவழியில், அறிவு வழியில். தேர்தலில் தொடர் வெற்றி கண்ட கட்சி திமுக மட்டும் தான். இந்தக்கொள்கையை எல்லோரும் எதிர்ப்பார்கள். ஏனெனில் இது எல்லாவற்றையும் மறுக்கிற கட்சி. புரட்டிப் போடுகிற கட்சி. இந்தியாவிலேயே அரியவகை ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை (EWS) நடைமுறைப்படுத்தாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அதற்குக் காரணம் திமுக தான். அதை மிகவும் எளிதாக வெறுப்பரசியல் என்று சொல்லிவிடலாம். அது பயன்படுத்தும் 'நடைமுறைவாதத்தை' (pragmatism) சமரசம் என்று எள்ளி நகையாடலாம். அதன் வெளிப்பாட்டுத் தன்மையை முரட்டுத்தனம் என்றோ, பண்ணையார்த்தனம் என்றோ சொல்லிவிடலாம். அதன் தன்னம்பிக்கையை, ஆணவம் என்று எல்லோரும் தவறாகக் குறிப்பிடுவர்.
திமுகவிற்கு நெருக்கடி எங்கிருந்தும் வரலாம். பார்ப்பனர் முதல் ஒடுக்கப்பட்டோர் வரை எல்லோருக்கும் திமுகவின் மீது விமர்சனம் இருக்கும். உயர்ஜாதியினர், திமுகவை தமது கட்சி என்று பார்ப்பதில்லை. சூத்திரர்கள் இதை தலித்துகளுக்கு ஆதரவான கட்சி என்பார்கள். தலித்துகள் இதை சூத்திரர்கள் கட்சி என்பார்கள். இந்துக்கள் திமுகவை சிறுபான்மையினர் கட்சி என்பார்கள். கடவுள் நம்பிக்கை கொண்டோர் நிந்திப்பார்கள். பெண்கள் இதை முரட்டு ஆண்களுக்கான கட்சி என்பார்கள். பிறமொழி பேசுவோர் இவர்களைத் தமிழின வெறியர்கள் என்பார்கள். தமிழ்த்தேசியர்கள் இதை தெலுங்கர் கட்சி என்பார்கள்.
அதே போல திமுகவை ஆதரிப்போருக்குக் குழப்பம் வரலாம், தடுமாற்றம் வரலாம். திமுகவை யாரும் வெளிப்படையாகச் சொந்தம் கொண்டாடுவதில்லை. ஒரு கள்ளக்காதலைப் போல இந்த உறவைப் பாவிப்பார்கள். இத்தனைக்கும் இது தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல.
முன் மாதிரிகள், உதாரணங்கள் இல்லாத அரசியலை இந்த இயக்கம் கடைபிடிக்கிறது. மாநில உரிமை பேசும் (ஆனால் பிரிவினை பேசாது), மொழி உரிமை பேசும் (ஆனால் மொழி வெறி இல்லை), பெண்ணுரிமை பேசும் (ஆனால் பெண்கள் ஆதரவு இருக்காது), ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதை வெளியே சொல்ல முடியாது, ஏனெனில் யாராவது ஒருவர் நீதிமன்றத்திற்குப் போய் அதைத் தடுத்துவிடுவர்கள். நீதிமன்றம், ஊடகம், அதிகாரிகள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், படைப்பாளிகள் என எதிரிகளை எங்கும் கொண்டிருக்கும் கட்சி இது.
திமுக 2026 மாநில சட்டசபைத்தேர்தலில் தோற்றதற்கு வெளியே சொல்லப்படும் காரணங்கள் நிறைய இருக்கலாம். ஊழல், போதை, பெண் பாதுகாப்பு என்பன யாவும் ஆதாரமற்றவை என்று ஏற்கனவே பலர் நிரூபித்துவிட்டனர். இந்தக் குற்றங்கள் இல்லாத நாடோ மாநிலமோ இல்லை. இவை எல்லாம் நிர்வாகக் காரணங்கள். அவற்றை வெளியில் சொல்லிவிடலாம். வெளியில் சொல்லப்படாதது அரசியல் காரணங்கள் தான்.
கடந்த ஆட்சியில் நாம் பயன்படுத்திய திராவிட மாடல் என்ற சொல் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிற அனைத்து எதிரிகளையும் ஒன்றிணைத்துவிட்டது. தமிழ்நாடு தவிர இந்த வார்த்தை இந்த அர்த்தத்தில் எங்கும் புழக்கத்தில் இல்லை. ஒரு எல்லை மாநிலம் இப்படியான ஒரு உறுதியான கொள்கையுடன் வளர்ச்சி பெறுவது இந்தி, இந்து, இந்தியா என்று பேசுவோரைப் பயமுறுத்திவிட்டது.
பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் அனைவரையும் சங்கடப்படுத்திவிட்டது. குடும்ப அமைப்பே கேள்விக்குள்ளாகும் என்ற கிலி (paranoia) ஆண்களையும் ஆணாதிக்கத்தை உள்வாங்கிய பெண்களையும் உலுக்கிவிட்டது. மகளிர் விடியல் பயணமும், கலைஞர் உரிமைத் தொகையயும் ஆணாதிக்கத்திற்கு விடப்பட்ட பெரும் சவாலாகும். இதற்கு முன்பு ஆண்கள் மட்டுமே அனுபவித்து வந்த எந்தக் காரணமும் இன்றி ஊர் சுற்றும் (loitering) உரிமையை விடியல் பயணம் பெண்களுக்கும் கொடுத்தது. அதனால் அவர்களால் பல இடங்களுக்கு சுதந்தரமாகப் போக முடிந்தது. பல நண்பர்களை, உறவினர்களைச் சந்திக்க முடிந்தது. பொருளாதாரச் சுமையின்றி வேலைக்குப் போக முடிந்தது.
கலைஞர் உரிமைத் தொகை இன்னும் கூடுதலாக எளிய பெண்களுக்கு பொருளாதார விடுதலையைக் கொடுத்தது. தமது குடும்பத்தினருக்காக கடன் வாங்கும், சேமிக்கும், கடுமையாக உழைக்கும் பெண்களை இந்தத் திட்டம் வலுவூட்டியது. அவர்கள் கையில் மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் உறுதியாக வருவதால், அவர்களால் சிறிய பொருளாதார முடிவுகளை எடுக்க முடிந்தது. இதுவும் நமது குடும்பங்களுக்கு விடப்பட்ட சவாலாக அமைந்தது. பிற மாநிலங்களிலும் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியக் குடும்பங்கள் என்னாகும்?
தமிழ்நாட்டில் தான் பெண்கள் வேலைக்குப் போகின்றனரா? இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று நினைப்போர், இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்குப் போகும் பெண்களில் 40 சதவீததிற்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற புள்ளிவிபரத்தைக் கவனிக்கவும். அதாவது இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்குப் போகும் நூறு பெண்களில் 40 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றால் நாம் பெண்கள் முன்னேற்றத்தில் எவ்வளவு முன்னணியில் இருக்கிறோம் என்பதும், இந்தியாவின் பிற மாநிலங்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கின்றனர் என்பதும் புரியும்.
கல்விக்குக் கொடுக்கப்பட்ட கூடுதல் முக்கியத்துவம் படிப்பில் அக்கறை இல்லாதோருக்கும், முறையான கல்வியில் தோல்வி அடைந்தோருக்கும், படிப்பில் வெற்றி பெற்ற உயர்ஜாதியினருக்கும் சங்கடத்தைக் கொடுத்துவிட்டது. காலை உணவுத்திட்டம், எல்லோரையும் படிக்கவைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. அதிகப் பொருட்செலவில் கட்டப்பட்ட குளிரூட்டப்பட்ட அடுக்குமாடி நூலகங்கள் நம்மில் பலரை அதிரவைத்தன (அதனால் தான் கலைஞர் கட்டிய நூலகத்தை ஜெயலலிதா கல்யாண மண்டபமாக்கி, எச்சில் இலைகளைக் கொட்டிவைக்கவைத்தார். கலைஞர் கொண்டு வந்த மெட்ரோ திட்டத்தை முடக்கிவைத்தார்).
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டிய பெரும் நூலகங்கள், பேருந்து நிலையங்கள், படிப்பகங்கள், பாலங்கள், மருத்துவமனைகள் இது எங்கு கொண்டு போய் முடியுமோ என்ற எண்ணத்தையே எதிரிகளுக்குக் கொடுத்தது. அவர் கொண்டு வந்த பொருளாதார முதலீடுகள் எல்லோரது கண்ணையும் உறுத்த ஆரம்பித்தன.
உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராக முன்னெடுத்தவை இன்னும் கூடுதல் பதட்டத்தைக் கொடுத்தன. அவர்கள் கட்டிய மைதானங்கள், நடத்திய சர்வதேசப் போட்டிகள், வளர்த்தெடுத்த விளையாட்டு வீரர்கள் இந்தியாவிற்கே சவாலாக அமைந்தனர்.
(மோடி பிரதமராக வருவதற்கு முன்பு வரை சென்னை ஓபன் என்ற பெயரில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்து வந்தது. இதற்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்த விஜய் அமிர்தராஜ், ஆனந்த அமிர்தராஜ், லியாண்டர் பேஸ் ஆகியோர் காரணமாக அந்தப் போட்டி சென்னையில் நடப்பது பொருத்தமாக இருந்தது. ஆனால் மோடி வந்த பின் அது பூனாவிற்கு மாற்றப்பட்டது. அந்த வாய்ப்பு சென்னைக்கு மறுக்கப்பட்டது. ஒரே நாடு என்றாலும் பாரபட்சம் இருக்கிறது என்பதற்கு இது மாதிரி ஆயிரம் உதாரணங்களைச் சொல்லலாம்.)
தமிழ்நாடு அடைந்திருக்கும் மிதமிஞ்சிய வளர்ச்சி எல்லோருக்கும் அச்சத்தைக் கொடுத்துவிட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு வரை தமிழர்கள் தான் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குப் போனார்கள். இப்போது வடமாநிலத்தவர் இங்கு பணிபுரிகின்றனர். கல்வியில், மருத்துவத்தில், தொழிலில், வேலைவாய்ப்பில், பொதுக்கட்டமைப்பில் நாம் அடைந்திருக்கும் பிரமாண்டமான வளர்ச்சி திராவிட மாடல் அரசியல் இந்தியா முழுக்கப் பரவிவிடுமோ என்ற பயமும் எல்லோரையும் தொற்றிக்கொண்டது.
கர்நாடகத்திலும், ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும், மகராஷ்றத்திலும் குஜராத்திலும் பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் அவை வெறும் லாப நோக்கில் நடத்தப்படும் முதலாளித்துவ முயற்சிகளே. தமிழ்நாட்டைப் போல சமூகநீதி, எல்லோரையும் உள்ளடக்கிய முன்னேற்றம், அதற்குப் பின்னால் இருக்கும் திராவிட மாடல் எனும் தொலைநோக்குப் பார்வை அங்கு இல்லை.
எல்லாவற்றையும் விட, இந்த வெற்றிகளைக் கொண்டுவந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் உறுதியும் அணுகுமுறையும், புகழும் இந்த ஆட்சியை முறியடித்தே ஆகவேண்டும் என்று வெறியை எல்லோரிடத்திலும் உண்டாக்கிவிட்டது. எதிரி அகோரமாகத்தான் இருக்கவேண்டும் என்பது சனாதனம். ஆனால் இப்படி அன்பானவராக இருந்தால் என்ன செய்வது?
பீகாருக்கும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றிருந்த போது அவருக்குக் கிடைத்த வரவேற்பு, ராகுல் காந்தியையே கலங்கவைத்ததோடு, அவர்கள் உறவையே முறிக்கவைத்தது. இப்படிப்பட்ட ஒரு பார்ப்பன எதிர்ப்பு கொண்ட முதல்வர் இந்தியாவிற்குத் தேவையா என்ற எண்ணம் காங்கிரசில் பலருக்கும் உண்டு.
தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று காங்கிரஸ் கட்சி எழுப்பிய 'எண்ணிக்கை' பிரச்சனை திமுகவின் தோல்விக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்ததை நாம் கவனிக்கவேண்டும்.
இது தவெகவின் வெற்றி அல்ல. இது திராவிட அரசியலின் எதிரிகளின் வெற்றி. அண்ணாமலை அரசியலில் இருந்து ஒதுங்கியதும், விஜய் கட்சி ஆரம்பித்ததும் ஒரே நேரத்தில் நடந்தது எதேச்சையானதல்ல.
அண்ணாமலை இருந்திருந்தால், விஜய்க்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்காது.
அதிமுகவைச் சிதைத்து, அண்ணாமலையை ஒதுக்கி, விஜய்க்கு வழிவிட்டிருக்கிறது இந்து, இந்தி, இந்திய அரசியல்.
முன்பு கலைஞருக்கு எதிராக காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும், உளவுத்துறையும், பார்ப்பனர்களும், கலைஞர் எதிரிகளும் இணைந்து உருவாக்கிய எம்ஜிஆர் எனும் பிம்பத்தைப் போல, இப்போது விஜய் எனும் பிம்பம் உருவாக்கப்பட்டு, அது விற்கப்பட்டிருக்கிறது.
மீண்டும், தமிழ்நாட்டு அரசியல், பிம்ப அரசியல் தான், அதைப் பார்த்து யாரும் உற்சாகமோ, பெருமையோ, பின்பற்றவோ வேண்டியதில்லை என்று இந்தியா நிரூபித்திருக்கிறது.
இதனால் தமிழர்களுக்கும் மேலும் தாழ்வு மனப்பான்மை கூடும். நம்மால் நம்மைப் பற்றி பெருமையாக வெளியே பேசமுடியாது. நம்மை இழித்துப் பேசிய பிற மாநிலத்தவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.
இப்போது திமுக ஆதரவாளர்கள் சோர்வு அடைந்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இந்தச் சதியை முறியடிக்கவேண்டிய தேவை இருக்கிறது. நவீன தமிழ்நாட்டைக் கட்டிய இயக்கம் இது. இதற்கென்ற கடமை இன்னும் இருக்கிறது.
இந்தியாவை பார்ப்பனிய ஆதிக்கத்திலிருந்து தேர்தல் வழியில் மீட்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக பாஜகவைத் தோற்கடிக்க முடியாமல் இந்தியா தடுமாறிக்கொண்டிருக்கும் போது திமுக தான் பிற கட்சிகளை வழிநடத்தவேண்டும். மு.க. ஸ்டாலின் அவர்கள் தேசிய அரசியலில் கவனம் செலுத்தவேண்டும். கலைஞரைப் போல காங்கிரஸ் அல்லாத தேசிய முன்னணியைக் கட்டவேண்டும். அதன் மூலம் பாஜகவைத் தோற்கடிப்பதற்கான வேலைகளில் இறங்கவேண்டும். இது ஒரு நல்வாய்ப்பு.
திமுகவின் சேவை இந்த நாட்டுக்குத் தேவை.
அமுதன் ஆர்.பி
ஆவணப்பட இயக்குனர்
சென்னை

No comments:
Post a Comment