Friday, June 22, 2018

தமிழகத்தில் சூத்திரன் வீழ்ந்தான்!

படிப்பு இல்லாதவன் செய்யும் வேலை!

தமிழ்நாட்டில் சூத்திரர்கள், பார்ப்பனர்களுடன் சமரசம் செய்து கொண்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. ஜெயா காலில் எல்லா சூத்திரர்களும் விழுந்து எழுந்து தமது விசுவாசத்தைக் காட்டியதை மறக்கலாமா? தமது குலதெய்வத்தை விட பெருஞ்சாமிகளுடன் தான் தினசரி டச்சில் இருக்கின்றனர். போதாதற்கு இப்போது சீரடி சாய்பாபா போன்ற டீசண்ட் சாமிகள் வேறு. குறையேதுமில்லை. 

தமது வீரத்தை / பெருமையை / சுயமரியாதையை தலித்துகளின் மீது வன்கொடுமையாக வெளிப்படுத்துவதே போதும் இந்த "ஆதிக்க சாதியினருக்கு". நீட் மட்டுமல்ல, எந்தப்படிப்பும் இவர்களுக்குத் தேவையில்லை. அதெல்லாம் எதுவும் இல்லாதவன் செய்கிற வேலை. இவர்களுக்குத் தான் கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம், கஞ்சா, அடிதடி, போலீஸ், வக்கீல், சினிமா என பல துறைகள் இருக்கின்றனவே! நிலம் இருக்கு, விவசாயம் பண்ணுவோம், கம்பெனி ஆரம்பிப்போம், மொதலாளி வம்சம் அல்லவா! நீட்டைப் பற்றி எதுக்கு இப்போது வெட்டிப் பேச்சு! 

ஒருவகையில் நீட்டினால் தலித்துகளுக்கும் சீட்டு கிடைக்கவில்லை என்பது சூத்திரர்களுக்கு ஒரு ஆறுதல் தானே! (தாம் படிக்கவில்லை என்பது முக்கியமில்லை, தலித்துகளும் படிக்ககூடாது). பஜ்ரங் தள், விநாயக சதுர்த்தி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக என பல ப்ளாட்பாரம்கள் இருக்கின்றன, தேசிய உணர்வை வெளிப்படுத்த! இது போதாதா? மோடி வாழ்க! பாரத் மாதா கீ ஜெய்!

போராடும் தமிழ்நாடு!

ஏன் போராடுகிறோம்?
இப்படியே போராடிக்கொண்டிருந்தால் தமிழ்நாடு மேற்குவங்கம் மாதிரி சீரழிந்துவிடும் என்று ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையாளர் சொன்னார்.
1) மேற்குவங்காளம் சீரழிந்ததா, இல்லையா என்பதைப் பற்றி சிபிஎம் மற்றும் பிற இடதுசாரித் தோழர்கள் பதில் சொல்லட்டும்.
2) தமிழ்நாடு வளர்ந்த மாநிலங்களில் ஒன்று (இதை இடதுசாரிகள், தமிழ்தேசவாதிகள், பாமக மற்றும் பாஜகவினர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்). தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, கல்வி, பொது சுகாதாரம், மனிதவளம், பொதுவிநியோகம் போன்ற துறைகளில் முதல் 4-5 இடங்களில் இருந்து வருகிற மாநிலம்.
இந்துத்துவ எதிர்ப்பு, சமூகநீதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றில் முன்னணியில் இருக்கும் மாநிலம்.
பெண் விடுதலையை நோக்கிய போராட்டத்தில் முன்னேறியபடி இருக்கிறோம். சிரிப்பு நடிகர் தலைமறைவு, ஆளுநர் மன்னிப்பு கேட்டது போன்றவை சிறந்த அறிகுறிகள். பெண் கல்வியில் முன்னேறியிருக்கிறோம்.
3) நாம் பின்தங்கி இருக்கும் இரண்டு துறைகள் : சாதிவெறி / தலித் வெறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு.
4) சாதி வெறி / தலித் வெறுப்பு எப்போது தீரும் என்று தெரியவில்லை. புதிய சிந்தனைப்போக்குகள் வந்தால் ஒழிய இதில் முன்னேற்றத்துக்கு வழி இல்லை. அதை நோக்கி நாம் கண்டிப்பாக உழைக்க வேண்டும்.
5) சுற்றுச்சூழல் பாதிப்பு என்பதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு வந்திருக்கிறது. இது நாம் அடைந்திருக்கும் பொருளாதார வளர்ச்சிக்குக் கொடுத்திருக்கும் விலை என்கிற பார்வை உருவாகியிருக்கிறது. அதனால் மக்கள் போராடுகின்றனர்.
இப்படி நான் பதில் சொன்னேன். பிறகு பேசலாம் என்று போய்விட்டார் அந்தப் பத்திரிக்கையாளர்.
பி.கு. அந்தப் பத்திரிக்கையாளர் ஒரு தமிழ் பார்ப்பனர். உடன் இருந்தவர் ஒரு மலையாளி. தமிழ்நாட்டில் இருந்து வரும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இவர்கள் தான் வேலை செய்கின்றனர்.

அம்பேத்கர் எனக்கு! பெரியார் உனக்கு!

தலித் பகுஜன் ஒற்றுமை சாத்தியமா?
நாங்கள் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தொடங்கிய போது தலித் தோழர்கள் பலர் கடுமையாக அதை எதிர்த்தனர். நீங்கள் எப்படி அம்பேத்கரையும் பெரியாரையும் சேர்க்கலாம் என்று வெளிப்படையாகக் கேட்டனர்.
சில தமிழ்தேசவாதிகள் இன்னுமா பெரியார், அம்பேத்கர்னு பேசிட்டிருக்கீங்க? காலம் மாறிப்போச்சு தோழர் என்று எங்களைப் பரிதாபமாகப் பார்த்தனர்.
நாங்கள் நடத்திய பல நிகழ்ச்சிகளில் பேசவந்த தலித் சிந்தனையாளர்கள் பலர் பெரியார் பெயரை உச்சரிக்கவே இல்லை.
பெரியாரை தலித் சிந்தனையாளர்கள், போராளிகள் புறக்கணிப்பது யதேச்சையானதல்ல.
பெரியாரைச் சேர்த்தால் இடைச்சாதிக்காரன் வருவான். நமக்கு யோசனை சொல்வான். ஏற்கனவே அவனிடம் பட்டது போதாதா என்கிற மனநிலை.
நீ பெரியாரை மட்டும் பேசு. அம்பேத்கரைப் பேசாதே என்கின்றனர்.
நானும் அம்பேத்கரை மட்டும் பேசுகிறேன். பெரியார் எங்களுக்கு வேண்டாம் என்கின்றனர்.
உங்க திருவிழாவும் வேண்டாம், உங்க பொங்கச்சோறும் வேண்டாம் என்கிற நிலை.
அதே போல பல பெரியார்வாதிகள் இன்னும் "அவுங்க அப்படித்தான்" என்கின்றனர். "நாங்க அவுங்களுக்குப் பண்ணாததா?" என்றும் மார் தட்டுகின்றனர்.
இதுக்கு என்ன தான் தீர்வு?

8 வழிச்சாலை : குஜராத் மாடலில் நில அபகரிப்பு மோசடி!

வளர்ச்சியின் காலம் முடிந்துவிட்டது!

நில அபகரிப்பெல்லாம் குஜராத்தில் மிகவும் சாதாரணம். எந்தத் தடையும் இல்லை. யாரும் போராட முடியாது. போராடவும் மாட்டார்கள். ஏனெனில் மோடி அய்யா மேல் இருக்கும் பாசம். அது தான் குஜராத் மாடல். எல்லாவற்றையும் அரசுக்குக் கொடுத்துவிட்டு பிச்சை எடுப்பது ஒரு தியாகம் தானே!
சர்தார் சரோவர் அணை தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய நில / நீர் மோசடி. அதற்கு நிலத்தை, நீரை இழந்தவர்கள் இன்னும் எழுந்திருக்க வழியில்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர்.
பெரும் விவசாயிகளுக்கும், தனியார் கம்பெனிகளுக்கும் நீரை வழங்க காங்கிரஸ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சதி தான் அது. வறண்ட கட்ச், செளராஷ்றா பகுதிகளுக்கு தண்ணீர் கொடுக்க என்று சொல்லி உருவாக்கப்பட்ட திட்டம் இப்பொது யாருக்கோ பயனளித்துக்கொண்டிருக்கிறது. அதனால் வயிற்றில் அடிக்கப்பட்ட லட்சக்கணக்கான சிறு குறு விவசாயிகளுக்கு இன்னும் முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை.
அதில் நடந்த முறைகேட்டைக் கண்டித்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராகத் தான் பின்னாட்களில் பதவிக்கு வந்த முதல்வர் மோடி உண்ணாவிரதம் நாடகம் நடத்தி மக்களை உசுப்பி விட்டார்.
சுற்றுச்சூழல், பாதிக்கப்பட்டோர் இழப்பீடு & மறுவாழ்வு விதிமுறைகள் சரியாகக் கடைபிடிக்கப்படவில்லை என்று பலர் கதறிய போது அவர்களை குஜராத்தின் எதிரிகள் / துரோகிகள் என்று மோடி தூற்றினார்.
இப்போது அளவுக்கு அதிகமான தண்ணீரில் குஜராத் முதலாளிகள் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றனர். அதனால் நிலம் இழந்த குஜ்ராத், மத்தியபிரதேசம், மகராஷ்டர விவசாயிகள் இன்னும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
அகமதாபத் நகரின் சபர்மதி நதியை சர்தார் சரோவரிலிருந்து கொண்டு வரப்பட்ட நர்மதா நீரால் நிரப்பி, அதை ஒரு ஏரியாக்கிவிட்டார் மோடி. அங்கே எல்லோரும் உல்லாசப் படகு சவாரி போய்க் கொண்டிருக்கின்றனர். அது ஒரு பெரிய தீம் பார்க் ஆகிவிட்டது. தினசரி கொண்டாட்டம் தான். அதற்காக நிலம் கொடுத்தவன், நீர் கொடுத்தவன் கதி அதோ கதி தான். இன்று வரை விடிவு இல்லை அவர்களுக்கு.
நானோ கார் கம்பெனி மேற்கு வங்காளத்தில் எதிர்ப்பைச் சந்தித்த போது "எங்கள் மாநிலத்திற்கு வாருங்கள்" என்று மோடி அழைத்து இலவசமாக நிலம் கொடுத்து, அரசு பணத்தை முதலீடும் போட்டு ஹீரோயிசம் காட்டினார். இப்போது அந்தக் கம்பெனியே இல்லை. ஊத்தி மூடிவிட்டனர்.
முதலாளிகளுக்கு எல்லாவற்றையும் அள்ளிக் கொடுப்பது குஜராத் / மோடி மாடல். மக்களை, தொழிலார்களை தமது உரிமையை விட்டுக்கொடுக்க நிர்பந்திப்பது, மூளைச்சலவை செய்வது மோடி பாணி. அதைத்தான் 15 ஆண்டுகள் செய்தார். நெருக்கடி வரும்போதெல்லாம் முஸ்லீம்களுக்கு எதிராகக் கலவரம், இந்துத்வா என்று மக்களை மயக்கினார்.
இத்தகைய மோடி பிரதமரானால் நாடெங்கும் இது நடைமுறைக்கு வராதா என்ன?
நிலத்துக்கு நிலம் இழப்பீடு என்கிற திட்டம் இருந்தது. இப்போது பணம் கொடுக்கிறார்கள். பணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? கண்மூடித் திறப்பதற்குள் அது கரைந்துவிடும். பத்தை நூறாக்குவது ஒரு கலை. அது எல்லோருக்கும் வராது.
தில்லிக்கு அருகில் இருப்பதால் நிலத்தின் விலை மதிப்பேறிய குர்காவுன் பகுதியில் நிலத்தை பல கோடிக்கு விற்று பென்ஸ் கார் வாங்கியவர்கள் எல்லாம் இப்போது செலவுக்குக் காசில்லாமல் அதை விற்றுத் தின்கிறார்கள். ரியல் எஸ்டேட்காரர்கள் தான் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.
ஒரிசா, சத்திஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வளர்ச்சி என்கிற பெயரில் ஆதிவாசிகளில் நிலங்களை, காடுகளை, நதிகளை, மலைகளை முதலாளிகள் அரசுகளின் துணை கொண்டு கொள்ளை அடித்து வருகின்றனர். அவர்களை எல்லாம் மாவோயிஸ்ட் என்று சுட்டுக் கொல்கிறது அரசு.
வளர்ச்சியின் காலம் முடிவுக்கு வந்து விட்டது. கலாம் சொன்ன கனவு காணுங்கள் எனும் கோஷம் காலாவதி ஆகிவிட்டது. இனி எல்லாவற்றையும் நிறுத்துவதே உத்தமம்.
எல்லாவற்றையும் மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
வளர்ச்சி அத்தகைய வெள்ளந்தியான, அப்பாவியான, நடுநிலையான கோட்பாடு அல்ல.

பழைய மகாபலிபுரம் ரோடு எனும் மோசடி!

சென்னையின் வளர்ச்சி எவ்வளவு கொடுமையானது, இயற்கைக்கு எதிரானது, ஏழைகளுக்கு எதிரானது என்பதற்கு ஒரு உதாரணம், பழைய மகாபலிபுரம் ரோடு, அங்கிருந்து அகற்றப்பட்ட மரங்கள், அதற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட கண்ணாடி மூடிய ஏசி பொருத்தப்பட்ட கட்டடங்கள்.
சாலை விஸ்தரிப்பு, கட்டடங்கள் கட்டுதல், விரிவாக்கம், புதுப்பித்தல் என்ற பெயரில் ரோடு முழுக்க ஏற்கனவே இருந்த மரங்கள் வெட்டித்தள்ளப்பட்டுவிட்டன. சாலையே மொட்டையாகக் காட்சியளிக்கிறது.
மரத்தைப் பார்த்தால் அந்தத் தெருவே ஒன்றிணைந்து வெட்டித்தள்ளும் அளவுக்கு அவர்களுக்கு இயற்கையின் மீது வெறுப்பு. காசு இருக்கும் ஆணவம். பணம் இருந்தால் எதையும் வாங்கிவிட முடியும் என்கிற திமிர். ஏசியைக் கொண்டு எதையும் எதிர்கொள்ள முடியும் என்கிற மடமை.
அங்கு பகலில் மனிதர்கள் போகவே முடியாத அளவுக்கு கடும் வெயில். ஏசி காரில் பயணம் செய்வோர் தவிர எல்லோருக்கும் சிரமம் தான். கடும் வெயிலில் அவஸ்தைப் படுகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் புலம்புகிறார்கள். எங்குமே நிறுத்த முடியவில்லை என்று. ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். சவாரி இல்லையென்றால் எங்கும் நின்று காத்திருக்கமுடியாது. அவ்வளவு கொடுமையான வெயில்.
இருசக்கர வாகன ஓட்டிகள் நிலையும் அது தான். பேருந்தில் போனால் அடுப்பில் இருப்பது போன்ற வேதனை.
நிழல் வேண்டுமெனில் இறங்கி ஏதாவது ஏசி வைத்த கடைக்குள் போய் எதையாவது தின்று, வாங்கி இளைப்பாறலாம். அது தான் அவர்கள் சதித் திட்டம்.
வெயிலில் வெந்து போ, இல்லையென்றால் உள்ளே வந்து காசைக் கொட்டு, கரியாக்கு, நான் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற புரிதல்.
இது தான் பழைய மகாபலிபுரம் ரோட்டின் நிலை. இது தான் வளர்ச்சி.
அப்பட்டமான முட்டாள்த்தனம். மோசடி.

Saturday, July 22, 2017

ஆண்தன்மை : ஆண்பால் பெண்பால் அன்பால் - ஆனந்த விகடன் தொடர்

ஆண்தன்மை : அமுதன் ஆர்.பி.

ஆண்பால் பெண்பால் அன்பால்  என்கிற தலைப்பில் ஆனந்த விகடனில் வரும் தொடருக்காக எழுதிய கட்டுரை

26 July 2017

ண்-பெண் சமத்துவம் வரவேண்டும் என்று உழைப்பவர்கள் மத்தியில், கடந்த 20 ஆண்டுகளாகச் சர்வதேச அளவில் பல சிந்தனை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாகப் பல சர்வதேச அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை, அதற்கு உட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி நிறுவனங்கள் முன்வைக்கிற சில பார்வைகள் கவனிக்கத்தக்கவை.

ஆண் பெண் சமத்துவம் வேண்டுவோர் வழக்கமாகப் பெண்களை மையப்படுத்தி வேலை செய்வார்கள். பெண்களை ஒருங்கிணைப்பார்கள். அவர்களை வலுவூட்டி அவர்களுக்கான கல்வி, வேலை, தொழில், அரசியல் வாய்ப்புகளை, பங்கேற்பை உறுதிப்படுத்துவார்கள்.  பெண்களுக்கு எதிரான வன்முறை, அத்துமீறல், பாகுபாடு இவற்றுக்கு எதிராகப் போராடுவது, அவற்றைத் தடுக்க சட்டங்கள் இயற்றுவது, அதை அமல்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்துவார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக உலக அளவில் பெண்களோடு சேர்த்து ஆண்களையும் கவனப்படுத்தவேண்டும் என்கிற சிந்தனை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு ஆண்- பெண் சமத்துவம் பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படுத்துவது, பெண்ணியச் சிந்தனை கொண்ட ஆண்களை ஊக்குவித்து பயிற்சிகள் கொடுப்பது, பாலியல் விதிகள், நடைமுறைகளைப் பற்றி விவாதிப்பது, பாலியல் சிறுபான்மையினருடன் வேலை செய்வது போன்ற விஷயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. முக்கியமாக ஆணாதிக்கம் மட்டுமல்லாது ஆண்மை அல்லது ஆண்தன்மை (MASCULINITY)யை விமர்சனத்திற்கு உள்ளாக்குவது, விவாதிப்பது, அதற்கு எதிராகப் போராடுவது ஆகியன முக்கியம் என்று ஆண்-பெண்  சமத்துவத்திற்காகப் போராடும் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
இதில் ஆண்மை அல்லது ஆண்தன்மை என்பது எது, அதை ஏன் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்,  ஆண்-பெண் உறவில் அதன் முக்கியத்துவம் என்ன? என்கிற கேள்விகள் மிகமிக முக்கியமானவை.

சரியான ஆண் அல்லது சிறுவனுக்கென்று சில வரையறைகள், குணங்கள், வழக்கங்கள், தகுதிகள், வசதிகள், உரிமைகள் வகுக்கப்பட்டு அவை ஆண்மை அல்லது ஆண்தன்மை என்று அழைக்கப்படுகின்றன. இந்த வரையறைகள் குடும்பங்களினாலும், சமூகத்தினாலும், மதங் களினாலும், பொதுவெளியிலும் ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் தொடர்ச்சியாகக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அவை தொடர்ந்து தலைமுறைகளாகப் பெற்றோர்களின் வழி, சமூகத்தின் வழி கடத்தப்பட்டு, வலியுறுத்தப்படுகின்றன.  

இந்த வரையறையின்படி, ஓர் ஆண் எப்போதும் வெற்றி பெற வேண்டும். அவனே தலைமைப் பொறுப்பினை வகிக்கவேண்டும். எதற்கும் அவன் உறுதியாக இருக்க வேண்டும், அழக் கூடாது, வீரனாக இருக்க வேண்டும். அவனுடைய ஆண் குறி பெரிதாக இருக்க வேண்டும். அவன் மலடாக இருந்துவிடக் கூடாது. கண்டிப்பாகப் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும். பெண்களை மயக்குவது, அவர்களை வெல்வது, ஆள்வது, அவர்களைக் காப்பாற்றுவது, அவர்களிடம் எவ்வகையிலும் விட்டுக்கொடுக்காமல் வாழ்வது, யாரிடமும் சமாதானமாகப் போகாமல் இருப்பது முதலானவை ஆண்தன்மையின் அடிப்படையான குணங்களாகக் கருதப்படுகின்றன. மேலும் அவர்கள் நன்றாகச் சம்பாதிக்க வேண்டும், முதலிரவிலேயே `கதையை’ முடித்துவிட வேண்டும், வீட்டுவேலை செய்யக் கூடாது, வீட்டிலேயே எப்போதும் இருக்கக் கூடாது, வெளியில் நாலு இடத்திற்குப் போக வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகின்றன. 

தொடர்ச்சியாக இந்தக் கற்பிதங்கள் எதிர்பார்ப்புகளாக ஆண்கள்மீது திணிக்கப் படுகின்றன. இவற்றை அடைய முடியாமல் அல்லது பின்பற்ற முடியாமல் போகிற ஆணைத் தோல்வியடைந்தவன், கையாலாகாதவன், பொட்டை என்று அழைத்து அவனை அவமானங்களுக்கு உள்ளாக்குவதைச் சமூகம் தொடர்ச்சியாக நிகழ்த்துகிறது. 

ஆண்களுக்கு அவர்கள் தகுதிக்கு மீறி பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றன. இதனால், அவர்கள் கடும் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக நிறைய ஆண்கள் தங்களது தங்கைகளுக்கும் அக்காக் களுக்கும் திருமணம் முடித்து வைத்துவிட்டுத் திரும்பிப்பார்க்கும் போது வயது 40-ஐ நெருங்கிவிடுகிறது. அப்புறம்தான் அவர்கள் கல்யாணத்தைப் பற்றி சிந்திக்கவே முடியும். காதல், பெண் நட்பு என்பதெல்லாம் கடமைக்கு பிறகுதான்!

அதுவரை பாலுறவு என்பது வெறும் போர்னோ படங்களுடன் முடிந்துவிடும் அவலநிலை. வாழ்வின் பெரும்பகுதி நல்ல வேலை கிடைத்து, சம்பாதித்து, வீட்டில் இருப்போரைக் கரையேற்றுவதில் விழிப் பிதுங்கிவிடுகிறது. இன்றுவரை போர்களில் ஆண்களே அதிகம் சாகின்றனர். ஏனெனில், ஆண்கள் போரிட வேண்டும். பெண்களை, குழந்தைகளை அவர்கள் பாதுகாக்க வேண்டும். காரணம் அவனே வலிமையானவன். காப்பது ஆண்தன்மைக்கு அழகு, காக்கப்படுதல் பெண்மையின் குறியீடு என்று நம்பப்படுகிறது.

ஆண்களின் பாலியல் உறுப்பு தொடர்பான குழப்பங்களையும் சந்தேகங்களையும் நம்பி ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் லேகியங்கள் விற்கின்றனர். காரணம், ஆண் என்பவனுக்கு ஆணுறுப்பு என்பதும், அதன் அளவு என்பதும்கூட ஆண்தன்மையின் அடையாளங்களாக இருக்கிறது. அதனால்தான், தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது உலகெங்கும் கோடிக்கணக்கான போலி பாலியல் மருத்துவர்கள் பெருகியுள்ளனர். தொலைக்காட்சிகள் நடத்திவரும் பாலியல் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் குறிகளின் நீளம் பற்றியும் சுய இன்பம் அனுபவிப்பது குறித்தும் புலம்புகிற ஆண்கள் எவ்வளவு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பதையும் நாம் கண்கூடாகக் காணமுடியும்.

ஆண்தன்மையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று வெற்றி. இங்கே எல்லா ஆண்களும் வெற்றி பெற்று விடுவதில்லை. வெற்றிபெற முடியாத ஆண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். அதிகம் குடிக்கின்றனர். ஆண்கள் குடிக்கலாம் என்கிற உரிமை இங்கு ஆண்களுக்கு எதிராக வேலை செய்கிறது. வெற்றிபெற முடியாத ஆண்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்; குறிப்பாகக் குடும்பங்களுக்குள். வெளியில் போய் அதிகம் அடி, உதையும் வாங்குகின்றனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அடிபட்டுச் சாகின்றனர். பிறரையும் கொல்கின்றனர்.

 ஆண்தன்மையின் இன்னொரு குணம், தன் உடல் வேதனையைப் பொறுத்துக்கொள்வது, அலட்சியப்படுத்துவது, கண்டும் காணாமல் இருப்பது. தனக்கு வலிக்கிறது என்றால், தன்னை மென்மையானவன் என்று சமூகமும், குடும்பமும் என்ன சொல்லுமோ? என்கிற பிரமையில் தன் உடல் ஆரோக்கியத்தைப் பல ஆண்கள் கண்டுகொள்வதில்லை. இதனால், நோய் முற்றிப்போய் அவர்களும் பாதிக்கப்பட்டு, அவர்களின் குடும்பமும் நஷ்டப்படுகிறது.

மகாராஷ்ட்ராவிலும் ஆந்திராவிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும்கூட கடன் சுமையினால் விவசாயிகள் (படிக்கவும் ஆண் விவசாயிகள்) தற்கொலை செய்து கொள்வதுபற்றி நாம் அறிவோம். குடும்பத்தினரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சாகும் மனநிலை எப்படி உருவாகிறது ஒருவருக்கு? அந்தக் கடனை யார் கட்டுவது? மனைவியா? குழந்தைகளா? விவசாயிகள் பிரச்னைக்கு அரசின் கொள்கைகளும் சுற்றுச்சூழல் மாசுபடுதலும் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றோடு குடும்பத்தலைவர் என்ற முறையில் தோல்வியும் அவமானமும் ஆண்களுக்கு அதிக மன அழுத்தத்தைக் கொடுக்கின்றன.

மேலும் வங்கிகளும் ஆண்களுக்கே அதிகம் கடன் கொடுக்கின்றன. அவர்கள்மீது மிகுந்த பொறுப்பை ஏற்றுகின்றன. தான் எல்லாம் செய்துவிட முடியும் என்று நினைக்கிற சூழலில் விளைச்சல் இல்லை, மழை இல்லை, விலை கிடைக்கவில்லை எனும் இக்கட்டு, எல்லாவற்றையும் விட்டு ஓடிவிட வேண்டும் என்று நினைக்க வைக்கிறது. தன் ஆண்தன்மைக்கு, தன் தலைமைப் பண்புக்கு ஏற்பட்ட தோல்வியாக நினைக்கும் ஆண் தற்கொலை செய்துகொள்கிறான்.

பெரும் நகரங்களில் காதலிக்க மறுத்த பெண்கள்மீது திராவகம் ஊற்றும் ஆண்களும், ஆண் தன்மையினால் பாதிக்கப்பட்டவர்களே. அவர்களால் ஒரு பெண் `இல்லை’, ‘வேண்டாம்’ என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. கோபம் வருகிறது. வன்முறையில் இறங்குகின்றனர். தனக்கு எடுத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது என்று நினைப்பில் வளர்ந்தவன்,  ஒரு பெண் தன்னை நிராகரிக்கும்போது வரும் ஆத்திரம், புத்தியைப் பேதலிக்க வைக்கிறது. இந்தியாவில் நிறைய இளைஞர்கள் இப்படிப்பட்ட குற்றங்களுக்காகக் கைதாகிச் சிறையில் இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் இந்த ஆண்தன்மையின் மோசமான பிரதிகளைத் திரைப்படமாக்குகின்றனர். தங்கள் சினிமாக்களில் காதலிக்கிறேன் என்கிற பெயரில் பெண்களைச் சபிக்கின்றனர்; மிரட்டுகின்றனர்; அச்சுறுத்துகின்றனர்; பாலியல் தொந்தரவு செய்கின்றனர். இதெல்லாம் ஆண்தன்மை கொடுக்கும் உற்சாகமான பொழுதுபோக்கு மனநிலை. எனக்கு இல்லாதது யாருக்குமே கிடைக்கக் கூடாது, நான் கேட்டு எப்படி ஒரு பெண் மறுக்கலாம் என்கிற எண்ணங்கள் எல்லாம் ஆண்தன்மையின் மனப்பிறழ்வுகளே!

இங்கே ஆண்களும் விடுதிகளில், சிறைகளில், ராணுவத்தில், வீடுகளில், பொது இடங்களில் சக ஆண்களால் பாலியல் தொந்தரவுகளுக்கு, பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாகச் சிறுவர்கள் சித்தப்பாக்களாலும், மாமாக்களாலும், தாத்தாக்களாலும், பிற உறவினர்களாலும் வீடுகளுக்கு உள்ளேயும் ஆசிரியர்களாலும், அதிகாரிகளாலும், காப்பாளர்களாலும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். வேலை செய்யும் இடங்களில் தங்கியிருக்கும் சிறுவர்கள் கடும் வன்முறை நிறைந்த பலாத்காரத்தை சக ஆண்களிடம் இருந்து எதிர்கொள்கின்றனர். தெருவில் வசிக்கும் சிறுவர்களின் நிலை இன்னும் பரிதாபம். உலகில் ஆறில் ஓர் ஆண், சக ஆண்களால பலாத்காரத்திற்கு உட்படுத்தப் படுவதாகப்  புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கலவரங்களில் ஆண்களே ஆண்களால் வன்முறைக்கு ஆயுதமாகப் பயன்படுத்தப் படுகின்றனர். ஆண்களே ஆண்களால் கொலை செய்யப்படுகின்றனர். மிகைப்படுத்தப்பட்ட, வீங்கிய ஆண் திமிர் ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. சண்டைக்கும், வன்முறைக்கும் ஆண்கள் முன்னுக்கு நிற்கின்றனர். அதிகம் அடி, உதை வாங்குகின்றனர். சாகின்றனர். அதிகமாக லாக்அப் கொலைகளுக்குப் பலியாவதும் ஆண்களே. அவர்களை அடித்துக்கொல்வதும் ஆண்களே.

வயதான கிழவர், மனைவி இறந்துவிட்டால் வாழத்தெரியாமல் திண்டாடுகிறார். சிரமப்படுகிறார். ஆனால், இங்கே வயதான காலத்தில் கணவன் இறந்தபிறகும் கிராமத்திலும்கூட தன்னந்தனியாகத் தைரியமாக வாழ்கிற எத்தனையோ பாட்டிகள் இருக்கிறார்கள். காரணம், பொறுப்பாகக் குடும்பத்தையும் தன்னையும் பார்த்துக்கொண்ட அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது. சீராட்டி, பாராட்டி, கவனிப்புக்கு உள்ளாகும் ஆணோ, துணை போனதும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போகிறான்.

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களில் ஆண் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் கரடு முரடானவையாக, வன்முறையைக் கொண்டாடு வதாக இருப்பதையும், பெண் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் மென்மையை, அமைதியைக் கொண்டாடுவதாக இருப்பதையும் நாம் கவனிக்கலாம். ஆண்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே வன்முறையைக் கொண்டாடும் வலியுறுத்தும் ஆண்தன்மைக்குப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். அதுவே அவர்களின் சுமையாகவும் பழியாகவும் சாகும்வரை தொடர்கிறது. அவர்கள் அதிலிருந்து வெளிவர முயற்சித்தால் அன்றி ஆண்தன்மையின் சிக்கல்களில் இருந்து தப்பவே முடியாது.
சாலைகளில் வேகமாக வண்டி ஓட்டுவதுகூட ஆண் தன்மையின் அடையாளம்தான். நமது குடும்பம் அல்லது நட்பு வட்டாரத்தில் இப்படிக் கண்மூடித்தனமான வேகத்தில் வண்டி ஓட்டி விபத்துக்கு உள்ளானவர் பலர் உண்டு. நிரந்தர ஊனம் அல்லது மரணம் அல்லது பொருளாதார அழிவு இவைதான் இதற்குக் கிடைக்கும் பரிசு. பெண்கள் மெதுவாக வண்டி ஓட்டினால், கேலி செய்யப்படுவதும் அவர்கள் ஓட்டும் வாகனங்களை இடிப்பதுபோல ஓட்டிப் பயமுறுத்துவதும் இதன் தொடர்புடையதுதான். ஆண்கள் மெதுவாக வண்டி ஓட்டினால், `பொம்பள மாதிரி ஓட்டுகிறாயே’ என்று பலர் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம்.

பாலின சிறுபான்மையினர் அல்லது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவர்களின் பாலியல் தேர்வு இந்த ஆண்தன்மையின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. அதனால்தான், இன்னும் பல நாடுகளில் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் கடும் வன்முறைக்கு ஆளாகின்றனர். பல நாடுகளில் தன்பால் சேர்க்கை சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது.  பாலியல் சிறுபான்மையினர் ஆண்மை அல்லது பெண்மை என்கிற கறாரான வரையறையை இவர்கள் கலைத்து எறிகின்றனர். ஓர் ஆணுக்குள் பெண்மையும் ஒரு பெண்ணுக்குள் ஆண்மையும் இருக்க முடியும் என்கிற வாதம் பேராண்மை என்கிற பேருண்மையைத் தவிடு பொடியாக்குகிறது.

பெண்களுக்கும் ஆண்தன்மை உண்டு. அத்தகையவர்கள் பிற பெண்களையும் ஆண்களையும் ஒடுக்குகின்றனர். ஜெயலலிதா, மந்திரிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் தனது காலில் விழ வைத்துப் பார்ப்பதும் ஒருவித ஆண் தன்மையின் வெளிப்பாடுதான். பெண்களும் தங்களது பிள்ளைகளுக்கு ஆண்தன்மைகளைக்    கற்றுக் கொடுக் கின்றனர். பெண்களும் ஆண்தன்மை சரியென்று நம்புகின்றனர். தம்மையும் சக பெண்களையும் அது அதிகம் பாதிக்கிறது என்பது தெரியாமல் இது நடக்கிறது. பெண் காவல்துறை உயர் அதிகாரிகளை சார் என்றே அவருக்குக் கீழே வேலை செய்வோர் அழைக்கும் வழக்கம் பல காலம் இங்கிருந்தது!

நகர்புறத்துப் பெண்களின் ஆண்தன்மை, கிராமப்புற ஆண்களின் ஆண்தன்மையை விட வன்மமானதாக இருப்பதையும் உயர் சாதிப் பெண் களின் ஆண்தன்மை, ஒடுக்கப்பட்ட சாதி ஆண்களின் ஆண்தன்மையை விட மிகுந்த அழுத்தமானதாக இருப்பதையும் நாம் பார்க்கலாம். ஆண்தன்மை ஆண் உடலின் வழியாக மட்டும் செயல்பட வேண்டியதில்லை. ஆண்தன்மை ஓர் அரசியல். அது பல உடல்களின் வழியாகப் பல அளவுகளில் நேரத்திற்கு ஏற்றவாறு வெளிப்படுத்தப்படுகிறது.

இப்போது இந்த ஆண் தன்மைக்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கல், வளர்ந்துவரும் பெண்கள், அவர்கள் அடைந்திருக்கும் வெற்றி ஆகியன. முன்புபோல பெண்கள் குறிப்பாகப் படித்த பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள் ஆண்களின் தலைமையைக் கண்மூடித்தனமாக ஏற்பதில்லை. குடும்பங்களில், வேலை செய்யும் இடங்களில் பெண்கள் முன்முயற்சி எடுப்பதும், தலைமைப் பொறுப்பிற்கு வருவதும் எப்போதும் கவனமும் முக்கியத்துவமும் பெற்றுப் பழகிய ஆண்களுக்கு, சிக்கலை ஏற்படுத்துகிறது. கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தமது ஆண்தன்மை அல்லது ஆண்மை, நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதாக உணர்கின்றனர். சிறு வயதிலிருந்தே கடும் கட்டுப்பாடுகளுக்குள்ளான (அது அநீதியானதுதான் என்றாலும்) பெண்கள் பிற்காலத்தில் வரும் நெருக்கடிகளைத் தாங்கி அதைக் கடந்து பிழைத்துக் கொள்கின்றனர். எப்போதும் தேவையற்ற, அளவுக்கு மீறிய முக்கியத்துவம் பெற்ற ஆண்கள் பின்னாள்களில் வாழ்க்கை கொடுக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறு கின்றனர். அவர்களை எது கொண்டாடியதோ, அதுவே சுமையாகப் பின்னால் வதைக்கிறது. 

எல்லா ஆண்களும் சமமில்லை. எல்லா ஆண்தன்மைகளும் ஒன்றல்ல. இங்கு பல ஆண்தன்மைகள் நிலவுகின்றன. ஆதிக்கம் செலுத்துகிற ஆண்தன்மை, ஆதிக்கம் செலுத்தப்படுகிற ஆண்தன்மை, எதிர்மறையான ஆண்தன்மை, நேர்மறையான ஆண்தன்மை என ஆண்தன்மைகள் பலவகைப்பட்டவை. வர்க்கம், சாதி, மொழி, இனம், மதம் ஆகியன சார்ந்து ஆண்தன்மை மாறுபடுகிறது. ஒன்று இன்னொன்றை ஒடுக்குகிறது, சுரண்டுகிறது. முதலாளியின் ஆண்தன்மை வேறு. தொழிலாளியின் ஆண்தன்மை வேறு. இருவருக்கும் வெவ்வேறு விதமான அதிகாரங்கள் இருக்கின்றன. இருவரும் எதிர்கொள்ளும் நெருக்கடி வேறு.

திருப்பூரில் சிறிய பனியன் கம்பெனி வைத்திருக்கும் ஒரு நபர் இரவுபகல் தூங்காது வெளிநாட்டு Buyer (வாங்குபவர்) கொடுக்கும் நெருக்கடிக்குக் கட்டுப்பட்டு வேலை செய்கிறார். தன் தொழிலாளிகளிடம் வேலை வாங்குகிறார். அவரை Buyer விரட்டுவார். உருட்டுவார். அதே முதலாளி தன் தொழிலாளியை உருட்டுவார், மிரட்டுவார். Buyer, முதலாளி, தொழிலாளி என இங்கு மூன்று நிலைகளில் ஆண்தன்மைகள் செயல்படுவதைக் காணமுடியும். அதேபோல பனியன் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளி வீட்டுக்கு வந்து குளித்துச் சாப்பிடத் தயாராவார். அவருடன் பனியன் கம்பெனியில் வேலை செய்த அவரது மனைவி அப்படி இருக்க முடியாது. வீட்டுக்கு வந்ததும் சமைத்து எல்லோருக்கும் சோறும் போட வேண்டும். தொழிலாளியின் ஆண்தன்மை முதலாளியின் ஆண்தன்மையால் ஒடுக்கப்பட்டாலும், வீட்டில் தொழிலாளியின் ஆண்தன்மை ஆதிக்க ஆண்தன்மையாக உருவெடுக்கிறது.

ஓர் இஸ்லாமிய ஆண் இந்தியாவின் எந்த நகரத்திலும் நள்ளிரவில் காவலர்களின் நெருக்கடியைச் சந்திக்காது பயணிக்க முடியாது என்பதை  இங்கே  நாம்  நினைவு கொள்ள வேண்டும்.  இந்து மத ஆண்தன்மைகளுக்குக் கிடைக்கிற அங்கீகாரம் அவருக்குக் கிடைப்பதில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதேபோல அவருக்கு இருக்கிற உரிமை ஓர் இஸ்லாமியப் பெண்ணிற்கு இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

மேலும் ஆதிக்கசாதிக்கான ஆண்தன்மை வேறு, தலித் ஆண்தன்மை வேறு. ஆதிக்கசாதி ஆணுக்கு இருக்கிற வசதி வாய்ப்புகள் தலித் ஆணுக்கோ பிற இடைச்சாதி ஆணுக்கோ இல்லை என்பதும் ஆண்தன்மைகளில் இருக்கிற வேறுபாடுகளை நமக்கு உணர்த்தும். அதேபோல தலித் ஆண்தன்மையும் கூட, தன் வீட்டிற்குள் பல சமயங்களில் ஆதிக்க ஆண்தன்மையாக வெளிப்படுகிறது.

இப்படித் தன் குடும்பத்திற்குள் ஆதிக்கம் செலுத்தும் ஆண்தன்மை, தெருவில், பொதுவெளியில் தன் சாதி, வர்க்க, மத, நிற, உருவ அடையாளங்களின் காரணமாகச் சிக்கிச் சீரழிவதை நாம் கண்டிருக்கக்கூடும்.

அரசியல் தலைவர்கள் சமாதான விரும்பிகளாக இருந்தால், அவர்களது ஆண்தன்மை கேலிக்குள்ளாகிறது. போர், வன்முறை, முரட்டுத்தனம் எல்லாம் வசீகர ஆண்தன்மையாகக் கருதப்படுகிறது. மோடியின் 55 இன்ச் மார்பு என்கிற தேர்தல் பிரசாரம்கூட ஓர் ஆதிக்க ஆண்தன்மையின் வெளிப்பாடு தான்.  மோடி வண்ண வண்ண உடைகளை அணிவது, அசைந்து அசைந்து நடப்பது, முழக்கமிட்டுப் பேசுவது, துள்ளிக் குதித்து விமானத்தில் ஏறுவது எல்லாம் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஆதிக்க, ஆக்ரோஷ, வீர ஆண்தன்மையாகக் கருதலாம். இவர் பிரதமராக வந்தால் பாகிஸ்தானை, சீனாவை, தீவிரவாதிகளை என எல்லோரையும் துவம்சம் செய்துவிடுவார் என்று மோடியின் பக்தர்கள் முழங்கியதுகூட இன்னொரு அளவிலான ரசிக ஆண்தன்மையின் அறிகுறி. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவின் (ஒரு பெண்ணின்) பேச்சைக்கேட்டு நடந்தார் என்றும் மோடி சுதந்தரமாகச் (ஆண்மையோடு) செயல்படுவார் என்றும் இருவரது ஆண்தன்மைகள் தேர்தலின்போதும் அதற்கு முன்பும் ஒப்பீடு செய்யப்பட்டன.

பராக் ஒபாமா தனது பிரசாரக் காலங்களில் தன்னைச் சமாதான விரும்பியாகவும், நீதிமானாகவும் காட்டிக்கொண்டார். (அவரே அதிபரானதும் பல தாக்குதல்களை நடத்தினார் என்பது வேறு சமாசாரம்). அதே அமெரிக்கத் தேர்தலில் பின்னாள்களில் டொனால்ட் ட்ரம்ப் பெண்களை வெளிப்படையாக, அவதூறாகப் பேசுவது, போரை முன்னிறுத்தியது எனத் தலைகீழாக, வேறுவிதமான முரட்டு எதிர்மறை ஆண்தன்மையை வெளிப்படுத்தினார்.

இறுதியாக நேர்மறையான ஆண்தன்மை என்பது  நமக்கு  உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. பெண்ணியவாதியாக ஆண் இருப்பது, பெண்களின் உரிமையை மதிக்கிற ஆணாக இருப்பது, அவனுக்குக் கிடைக்கிற அதிகாரத்தை அவன் நேர்மறையாகப் பயன்படுத்துவது என இதைப் புரிந்துகொள்ளலாம். நமக்குத் தெரிந்து நிறைய அப்பாக்கள் தங்கள் பெண் பிள்ளைகளைப் படிக்கவைக்க கடும் முயற்சி எடுக்கின்றனர். நமக்குத் தெரிந்து நிறைய அண்ணன்கள் தங்களது சகோதரிகளின் சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரிக்கின்றனர். நமக்குத் தெரிந்து நிறைய கணவன்மார்கள் வீட்டில் தினசரி சமைப்பதைப் பார்க்க முடிகிறது. பொது இடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும்போது குறிப்பாக அதில் ஈடுபடுவது தம் நண்பர்களாக இருந்தாலும் அதை எதிர்க்கும் ஆண்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதெல்லாம் நேர்மறையான ஆண்தன்மைக்கு உதாரணங்களாகும்.

பெண்களுக்கு எதிராக வன்முறை நிகழும் போது அதைப் பெண்கள் அமைப்புகள்தான் கண்டிக்க வேண்டும் என்பதில்லை. ஆண்களும் கண்டிக்கலாம். கண்டிக்க வேண்டும். அதுவும் ஒரு நேர்மறையான ஆண்தன்மைதான். சமூக ஊடகங்களில் பெண்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும்போது அவர்களுக்கு ஆதரவாக ஆண்கள் வந்து சக ஆண்களுக்குப் புரிய வைப்பதும் சக ஆண்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் நேர்மறையான ஆண்தன்மையின் வெளிப்பாடுதான்.

ஓர் ஆண், பல ஆண்தன்மைகளைக் கொண்டவராக இருக்கிறார். நேர்மறையான ஆண்தன்மையுடன் இருப்பது எப்போது என்பதுதான் இங்கே கேள்வி!

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

Wednesday, June 21, 2017

விட்ட குறை தொட்ட குறை – அமுதன் ஆர்.பி.

விட்ட குறை தொட்ட குறை – அமுதன் ஆர்.பி. 

ஒரு பள்ளி மாணவனின் விடுதி காதல் அனுபவங்கள்


நான் உயர்நிலைப்பள்ளிப் படிப்பு படித்தது ஒரு கத்தோலிக்க பள்ளியில் . அதுவும் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டும் வசிக்கும் விடுதியில் தங்கிப் படித்தேன். அங்கு மாணவர்களுக்குள் காதல் கொடி கட்டிப் பறக்கும். கொஞ்சம் பெண்மை கலந்த உடல் மொழி கொண்ட மாணவர்களுக்கு எப்போதும் கவனம் அதிகம் கிடைக்கும். அன்பும் கிடைக்கும். அவர்களின் கண் பார்வை கிடைக்க பிற மாணவர்களுக்குள் போட்டி நடக்கும். போதாக்குறைக்கு கத்தோலிக்க சாமியார்கள் வேறு. அவர்களுக்கு யாரையாவது பிடித்து விட்டால் அம்மாணவர்களை  யாரும் கை வைக்க முடியாது.  நெருங்கவே முடியாது. அவர்கள் சாமியார் சொத்து.

விடுதிகளில் படிக்கும் மாணவர்கள் கடும் மன உளைச்சலையும் தனிமையையும் உணர்வார்கள். பெற்றோர்கள், தாத்தா பாட்டி,  அண்ணன் தம்பி, அக்கா தங்கை, குடும்பம், நட்பு, சொந்தம், ஊர், தெரு, குளம், மரம், கோயில், திருவிழா ஆகியவற்றை பிரிய முடியாமல் ஏங்கியபடி இருப்பார்கள்.  வந்த இடத்தில் கிடைக்கும் நட்பு, காதல், அரவணைப்பு, கவனம், சுகம் ஆகியன ஆறுதலாக இருக்கும். மேலும் பாலியல் ரீதியான தேடல் பதின் வயதில் தொடங்குவதால் பரிசோதனை, ஆர்வம், விளையாட்டு ஆகிய கூறுகளும் நடக்கும் நாடகத்தின் எல்லையை அதிகரிக்கும்.

என் உடன் படித்த மாணவர்களில் ஒருவன் இன்னொரு மாணவன் மீது கடும் காதல் கொண்டிருந்தான்.  அவன் பின்னால் சுற்றியபடியே இருப்பான். சாப்பாடு வாங்கி வைப்பான். துணி துவைத்துக்கொடுப்பான். படிக்க, எழுத  உதவுவான். பேனா நோட்டு வாங்கிக்கொடுப்பான்.  ஏதாவது தவறு செய்து மாட்டிக்கொண்டால் தப்பிக்க உதவி செய்வான். எப்படியாவது அவனை அடையவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். காதல் கடிதம் கொடுத்தபடி இருந்தான். என்ன எதிர்பார்த்தான் என்று தெரியவில்லை. புனிதமான காதல் கோஷ்டி என்று நினைக்கிறேன்.  கடும் முயற்சிக்குப் பிறகும் காதல் படியாததால் கழிப்பறை கழுவ வைத்திருந்த பினாயிலைக் குடித்துவிட்டான். பெற்றோர் பதறி அடித்த படி வர விடுதிக் காப்பாளர் பினாயில் குடித்தவனை இடை நீக்கம் செய்தார். அவன் திரும்ப வந்தானா இல்லையா என்று எனக்கு நினைவில்லை. சிலர் காதலுக்காக கைகளைக் கீறிக் கொள்வார்கள். சாப்பிடாமல் போராட்டம் நடத்துவார்கள். ஒரே இடத்தில் நின்றபடி இருப்பார்கள்.

சில சீனியர் மாணவர்கள் தாதாக்கள் போல செயல்படுவார்கள். அடி, உதை, விளையாட்டில் முதலிடம், மானிடர் பொறுப்புகளுடன் உலா வருவார்கள். அவர்களுக்கு காதலிகள் (மாணவர்கள்) இருப்பார்கள். ஓரினச்சேர்க்கை மிகவும் சாதரணமாக நடக்கும். எல்லோரும் ஒன்றாகப் படுக்கும் ஹாலிலேயே நடக்கும். சில சமயம் குளிக்கும் அறையில். யாரும் இல்லாத சாப்பாட்டு அறையில்.

எங்களைப் போன்றவர்கள் (உருப்படாதவர்கள்)  என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க 
போய் உதை வாங்கியிருக்கிறோம்.  ஒருவனது காதலியை  இன்னொருவன் கைப்பற்ற முயற்சித்து சண்டைகள் நடக்கும். சில சமயம் ஒருவனுடைய காதலியுடன் ரெண்டு வார்த்தை அதிகமாகப் பேசினாலே அறைவிழும்.  அந்தக்காதலிகள் மின்னுவார்கள்.  மணப்பார்கள்.  நல்ல செருப்பு அணிந்திருப்பார்கள். ஊக்குக் குத்திய ரப்பர்  செருப்புடன், லைபாய் சோப்பை இரண்டாய் வெட்டிக் குளிக்கும், கதர் வாரிய மஞ்சள் சோப்புப் போட்டுத் துவைக்கும் என்னைப் போன்றோருக்கு எல்லாமே வேடிக்கை தான்.

ஒரு முறை தேர்வு முடிந்த கடைசி நாள். காதலி மாணவன் ஊருக்குப் போகவேண்டும். அவனது அப்பா அழைத்துப்போக  வந்து விடுவார். காதலன் பெரிய வகுப்பு மாணவன்.  காதலி மாணவனை அவசர அவசரமாக  கலவி புரிந்தான். குதப்புனர்ச்சி தான். வலி தாங்க முடியாமல் சிறுவன் கத்துகிறான்.  பலாத்காரம் என்றே சொல்லலாம். எல்லாம் முடிந்து அவர்கள் எழுந்து போகையில்  சிறியவன் – காதலி மாணவன் - தொடையில்  ரத்தம் வழிந்து ஓடியது. நாங்கள் மிரண்டு போனோம்.

பாதிரியார்களின் காதல் கதைகள் வேறு ரகம். அவற்றை காதல் வகையில் சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை.  பாதிரியார்கள் வசீகரமானவர்கள். சுத்தமானவர்கள். இனிப்பாகப் பேசுவார்கள். அதிகாரம் மிக்கவர்கள். அவர்களின் கனிவுக்கு பலம் அதிகம். அவர்களுக்கென்று தனி அறைகள் இருக்கும். யாரும் உள்ளே நுழைய முடியாது. உள்ளே என்ன நடக்கிறது என்றும் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரு பாதிரியார் பக்கத்தில் போனால் இடுப்பில் கை வைப்பார், தடவுவார், மேலும் கீழும் கை பரவும். முதுகில் படம் வரைவார் விரல்களால். கால்சட்டைக்குள் கை நுழையும். நாங்கள் சிறுவர்கள். தடுமாறுவோம். நெளிவோம். கண்கள் சொருகும். சிறிது நேரத்தில் அவரது கை முன் பகுதிக்கு நகர்ந்து விடும். அதில் மயங்கின மாணவர்கள் அதிகம். அந்த சுகத்திற்கு அடிமையானவர்களும் உண்டு.  ஓடி வந்தவர்களும் உண்டு.

சில மாணவர்கள்  பாதிரியார் பின்னால் சுற்றியபடியே இருப்பார்கள்.  அன்புக்கு கட்டுப்பட்டு சிலர். அதிகாரத்திற்குக் கட்டுபட்டு சிலர்.  அவருடைய கருணை கிடைத்தால் பல சலுகைகள் கிடைக்கும். அடி குறைவாகக்கிடைக்கும். தண்டனைகளில் இருந்து தப்பிக்கலாம். கத்தொலிக்க சாமியார்கள் அடி / தண்டனை கொடுப்பதில் மன்னர்கள். பெற்றோர்களே அதற்குத்தான் சாமியார் பள்ளிக்கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்புவார்கள். நல்லா அடிங்க பாதர், முகத்தில மட்டும் அடிக்காதிங்க என்று பெற்றோர்கள் சொல்ல நானே கேட்டிருக்கிறேன். என் அப்பாவே அப்படித்தான் சொன்னார். அதே சமயம் சாமியாருக்கு நெருக்கமான மாணவர்கள் கேலிக்கு ஆளாவர்கள்.  இருட்டில் அடி விழும். கழிப்பறை சுவர்களில் பெயர் இடம் பெறும். யாரும் உதவி செய்ய மாட்டார்கள். சாமியாருக்கு நெருக்கமானவர்களை, அவர்களின் ரகசியங்களைக் கண்டு கொண்ட பல சீனியர் மாணவர்கள்  வாய் புணர்ச்சிக்கு கட்டாயப்படுத்துவார்கள். மறுத்தால் உதை விழும். பாதிரியார்கள் மாற்றலாகிப் போய் விட்டால் வருகிறவன் போகிறவனுக்கு எல்லாம் சேவை செய்ய வேண்டும்.

எனக்கும் காதல் அனுபவங்கள் உண்டு. ஒருவன் என் மீது பிரியமாக இருந்தான். அவன் பெண்மை கலந்த பாவனைகள் கொண்டவன். அவனை பலர் சுற்றி வந்தனர். அவனுக்கோ என் மீது நட்பு. அவனது இருக்கை மற்றும் மேசை  எங்கோ இருக்கும். சாப்பிட என் உடன் வருவான். என் உடன் குளிப்பான். படுக்கை மட்டும் தனித்தனி.  எல்லோரும் என்னைப் பொறாமையுடன் பார்ப்பார்கள்.  அவனுக்கு காதல் கடிதம் கொடுப்பார்கள். அவன் யாருக்கும் மடியவில்லை. சில மாணவர்கள் நீயாவது அவனை சோலியை முடித்து விடு என்று ஏற்றி விடுவார்கள். நான் பல முயற்சிகள் எடுத்தேன். அவன் தட்டிக்கழித்து விடுவான். அவன் நன்றாகப் படிப்பான். என்னையும் படிக்க வைத்தான். அவன் வசீகரத்தில் மயங்கி நானும் ஒழுங்காகப் படித்து பத்தாவது இறுதித்தேர்வில் கணக்கில் 95 மதிப்பெண் வாங்கினேன் . அவன் இல்லையென்றால் நான் பத்தாவது முடித்திருக்க மாட்டேன்.

பதினோராம் வகுப்பு படிக்கும் போது இரண்டு மாணவர்களுடன் படிப்பு தாண்டி நட்பு ஏற்பட்டது. ஒருவன் கால் பந்தாட்ட வீரன். ஒன்னொருவன் மெல்லிய அழகன். அவர்கள் என்னைக் குழப்பி விட்டதோடு சரி. அவர்களுக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. என் நிலை அவர்களுக்குப் புரியவில்லை.

ஓரினச்சேர்க்கையில் பலருக்கு தான் காதலனா, காதலியா என்று புரிபடாது. ஆணாக இருப்பதாலேயே ஒருவர் ஆணாக / காதலனாக  இருக்க வேண்டியதில்லை. எனக்கு நான் யார் என்றே இன்னும் தெரியவில்லை. பல ஆண்கள் எனக்கு வலை வீசியிருகின்றனர். அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்றே எனக்குத் தெரியாது

பள்ளிக்காலங்களில் என்னை சுற்றி பலர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்தாலும் எனக்கு ஒன்றும் வாய்க்கவில்லை. வேடிக்கை பார்த்தது, தூது போனது, அரைகுறையாய் சூடு போட்டுக்கொண்டதோடு முடிந்தது எனது தன்பால் காதல் வாழ்க்கை.

ஓரினச்சேர்க்கை சிறுவயதில் ஒருவருக்கு அறிமுகமானதாலேயே ஒருவர் அதைத் தொடரவேண்டியதில்லை. தொடரலாம். தொடராமல் போகலாம். அது அவரவர் விருப்பம். மேலும் நம்மில் பலர் கறாரான ஹெட்ரோ செக்சுவல் இல்லை. வேறு வழியில்லாமல் எதிர்பால் இனத்தினருடன் மட்டுமே வாழ்கிறோம். அது தான் இயல்பு என்று நினைக்கிறோம். பலர் அதில்  ஒழுங்காக வாழமுடியாமல் போவதற்கு தமது பாலியல் தேவைப் பற்றி அறியாததால் இருக்கலாம். எனக்கு இன்னும் சில ஆண்களைப் பார்த்தால் தடுமாறும். அவர்கள் கண்களைப் பார்க்க முடியாது. விட்ட குறை தொட்ட குறையாக இருக்கலாம்.

பின்குறிப்பு அ)  கத்தோலிக்கப் பள்ளிகள் / கல்லூரிகள் தமிழ் சமூகத்தை விடுவித்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்களின் சேவை அளவிடமுடியாதது. ஆனால் திருமணம் செய்யாத சாமியார்கள் உலகம் முழுக்க  மாணவர்களை பலாத்காரம் செய்கிறனர் என்பது போப் ஆண்டவரே ஒத்துக்கொண்ட செய்தி.

பின்குறிப்பு ஆ) குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல்  பலாத்காரம் என்பதும் அவர்களுக்குள் நிகழும் பாலியல் தேடல்கள், பரிசோதனைகள் மற்றும் விளையாட்டுகள் என்பதும் ஒன்றல்ல. ஒருவர் பலாத்காரம் காரணமாக தனது பாலியல் பாதையைத் தேர்வு செய்வதில்லை.

பின்குறிப்பு இ) நான் இந்த விஷயத்தில் எக்ச்பெர்ர்டும் அல்ல. இது என் அனுபவம், எனது புரிதல். தவறாகவும் இருக்கலாம். சரியாகவும் இருக்கலாம்.


திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது?

திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது? அமுதன் ஆர்.பி.; ஆவணப்பட இயக்குனர், சென்னை தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ் தான் ஆ...