Tuesday, December 17, 2019

மாற்று கலை உலகில் நிலவும் திராவிட எதிர்ப்பு மனநிலை!

மாற்று கலை உலகில் நிலவும் திராவிட எதிர்ப்பு மனநிலை! 
- அமுதன் ஆர்.பி.


சமீபத்தில் இறந்து போன ஒரு நண்பர். மாற்று சினிமா, நாடகம் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியவர். இடது சாரி சிந்தனையாளர்.
ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு உரையாடலில் ரவி சுப்ரமணியன், எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றி எடுத்த ஒரு ஆவணப்படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது....
நான் : வழக்கமான ஆளுமைகள் பற்றிய படம் போல வெறும் பேட்டிகளாக இல்லாமல் பயணங்கள், சுவாரஸ்மான பதிவுகள் இந்தப்படத்தில் உண்டு. ஜெயகாந்தனும் ஆசிரியர் வீரமணியும் தாம் ஒன்றாய்ப் படித்த பள்ளிக்குப் போவது போல ஒரு காட்சி உண்டு. செழியன் மிகவும் அழகாகப் பதிவு செய்திருப்பார்.
அவர்: வீரமணி, ஜெயகாந்தன் கதையெல்லாம் படித்திருக்கமாட்டார். படித்திருந்தால் அந்தக்கட்சியில் இருந்து விலகியிருப்பார்.
இந்தக் கருத்தைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன்.
அதற்குக் காரணங்கள் பின்வருமாறு:
1) ஆசிரியர் வீரமணி ஜெயகாந்தன் கதைகளைப் படித்திருக்க மாட்டாரா? அவர் சிறந்த படிப்பாளி இல்லையா? அவரே நிறையப் புத்தகங்களை எழுதியவர். அவரைப் பற்றி ஏன் இந்தப் போராளி இப்படி அவதூறு பரப்புகிறார்?
2) ஜெயகாந்தன் அற்புதமான கதைகளை எழுதியிருக்கிறார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அவரது கதைகளைப் படிப்பது தான் உன்னத அறிவுச்செயல்பாடா? அது தான் அளவுகோலா?
3) ஆசிரியர் வீரமணிக்கென்று ஒரு சமூக, அரசியல் முக்கியத்துவம் இல்லையா? அவர் ஆற்றிவரும் பங்களிப்பை இப்படித் தான் அளவிடுவதா?
4) அதென்னா "அந்தக் கட்சி?" திராவிடக் கழகம் தமிழக, இந்திய அரசியலுக்கு ஆற்றிய பங்களிப்பை அப்படிக் குறைத்து மதிப்பிடமுடியுமா? 
இந்தப்போராளி எந்நேரமும் இளைஞர்களுடன் சுற்றிக்கொண்டிருந்தவர். என்ன வகையான அவதூறுகளை அவர்களிடம் இப்படி விதைத்திருப்பார் என்பதை நினைத்தால் அதிர்ச்சியாகவே இருக்கிறது. இவரிடம் பாடம் கற்றவர்கள் இந்த திராவிட அரசியலுக்கு எதிரான வெறுப்பையும் சேர்த்துத் தான் கற்றுக்கொண்டனரா?
இதெல்லாம் எங்கிருந்து வருகிறது?
தமிழகத்தில் அறிவு, கலை, பண்பாட்டுச் செயல்பாட்டில் ஈடுபடவேண்டுமெனில் பார்ப்பன சார்பு மற்றும் திராவிட எதிர்ப்பு மனநிலை தேவைப்படுகிறது. அதை எல்லாக் கட்டங்களிலும் பலர் நம்மைச் சோதிக்கின்றனர். இதைக் கடந்து தான் தமிழ்நாட்டில் குறிப்பாக மாற்று சினிமா, இலக்கிய, பண்பாட்டு செயல்பாடுகளில் ஈடுபடமுடியும்.
இதை நான் நேரடியாக ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டிருயிருக்கிறேன். இந்த அளவுகோலுக்குள் நான் அடங்காததால் இழந்த தொடர்புகள் மற்றும் வாய்ப்புகள் அதிகம்.
இத்தனைக்கும் இது கார்பரேட், அரசாங்க சட்டகங்களுக்கு வெளியே அவற்றுக்கு மாற்றாக நடப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தளங்களில் நடப்பது.


No comments:

Post a Comment