Thursday, November 8, 2012

ஆண்மை அல்லது ஆண் தன்மை

ஆண் பெண் சமத்துவம் வரவேண்டும் என்று உழைப்பவர்கள் மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச அளவில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, அதற்கு உட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி நிறுவனங்கள் ஆகியன மற்றும் சர்வதேச பெண்ணுரிமை அமைப்புகள் முன் வைக்கிற சில சிந்தனைகள் கவனிக்கத்தக்கவை.

ராகுல் ராயின் When Four Friends Meet என்கிற
 ஆவணப்படத்திலிருந்து ஒரு காட்சித்துண்டு

ஆண் பெண் சமத்துவம் வரவேண்டும் எனில் பெண்களை ஒருங்கிணைப்பது, பெண்ணுரிமையை வலியுறுத்துவது, பெண்களுக்கு எதிரான வன்முறை, அத்துமீறல், ஒடுக்குமுறை இவற்றிக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்லாது ஆண்களின் மத்தியில் வேலை செய்வது, பெண்ணிய சிந்தனை கொண்ட ஆண்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு பயற்சிகள் கொடுப்பது, ஆணாதிக்கம் மட்டுமல்லாது ஆண்மை அல்லது ஆண் தன்மை (MASCULINITY)க்கு எதிராக போராடுவது அல்லது ஆண் தன்மையை விமர்சனத்திற்கு உள்ளாக்குவது, பாலியல் விதிகளை, வரையறைகளைப் பற்றி விவாதிப்பது, பாலியல் சிறுபான்மையினருடன் வேலை செய்வது ஆகிய திட்டங்கள் வந்துள்ளன.

எல்லா ஆண்களும் சமமில்லை. எல்லா ஆண் தன்மைகளும் ஒன்றல்ல. வர்க்கம், சாதி, மொழி, இனம், மதம் ஆகியன சார்ந்து ஆண் தன்மை மாறுபடுகிறது. ஒரு ஆண்மை அல்லது ஆண் தன்மை இன்னொரு ஆண்மையை அல்லது ஆண் தன்மையை ஒடுக்குகிறது, சுரண்டுகிறது.

ஒரு இஸ்லாமிய ஆண் நள்ளிரவில் இந்தியாவின் எந்த நகரத்திலும் காவலர்களின் நெருக்கடியைச் சந்திக்காது பயணிக்க முடியாது என்பதை இங்கே நினைவூட்டுகிறேன். இஸ்லாமிய ஆண் தன்மை இஸ்லாமிய பெண்களை ஒடுக்கினாலும் இந்து ஆண் தன்மையால் அதுவும் ஒடுக்கப்படுகிறது என்பது நாம் அறிந்ததே.

பார்ப்பன ஆண் தன்மை அல்லது இடைச்சாதி ஆண் தன்மை வேறு தலித் ஆண் தன்மை வேறு. பார்ப்பன ஆணுக்கு அல்லது இடைச்சாதி ஆணுக்கு இருக்கிற வசதி வாய்ப்புகள் தலித் ஆணுக்கு இல்லை என்பது நமக்குத் தெரியும். (அதே நேரத்தில் தலித் பெண்ணியம் என்கிற கருத்தாக்கம் கடந்த இருபது ஆண்டுகளாகப் பேசப்படுகிறது. தலித் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையும் பிற சாதிப் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையும் வேறு பட்டவை என்பதும் தலித் பெண்கள் அதை எதிர்கொள்ளும் விதமும் வேறு என்பதும் குறிப்பிடத்தக்கது.)

ராகுல் ராயின் "மஜ்மா" 
என்கிற ஆவணப்படத்திலிருந்து ஒரு காட்சித்துண்டு


ஆண்களுக்கு இருக்கிற எதிர்ப்பார்ப்பு தொடர்பான சிக்கல்கள்:

1) வெற்றி பெற வேண்டும்
2) அழக்கூடாது
3) ஆண் குறி போதுமான அளவில் இருக்கிறதா? விரைக்குமா? சுயமைதுனம் செய்யலாமா? கூடாதா?
4) பெண்களை திருப்தி படுத்தமுடியுமா?
5) வீரம் கொண்டவனாக இருக்க வேண்டும்
6) சமாதானமாகப் போகக்கூடாது; போனால் நீ பொட்டை
7) நன்றாக சம்பாதிக்க வேண்டும்
8) முதல் இரவிலேயே "கதை"யை முடித்துவிட வேண்டும்
9) வீட்டு வேலை செய்யக்கூடாது
10) வீட்டிலேயே இருக்கக்கூடாது. வெளியில் நாலு இடத்திற்குப் போகவேண்டும்

இப்படிப் பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. நிறைய ஆண்கள் தங்களது தங்கைகளுக்கும் அக்காக்களுக்கும் திருமணம் முடித்து வைத்துவிட்டு திரும்பிப்பார்க்கும் போது வயது 40யை நெருங்கி விடுகிறது. போரில் ஆண்களே அதிகம் சாகின்றனர். ஏனெனில் ஆண்கள் போரிட வேண்டும். பெண்களை, குழந்தைகளை அவர்கள் பாதுகாக்க வேண்டும்.

ஆண்களின் தங்கள் குறி தொடர்பான சந்தேகங்களை நம்பி ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் தமிழகமெங்கும் லேகியங்கள் விற்கின்றனர். மாத்ருபூதம் தொடங்கி பலர் தொலைக் காட்சிகளில் நடத்திய பாலியல் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் குறிகளின் நீளம் பற்றியும் விந்துவை வீணாக்குவது பற்றியும் புழுங்கி புழுங்கி ஆண்கள் எவ்வளவு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பது தெரியவருகிறது.

ஆனந்த் பட்வரத்தனின் "Father, Son & Holy War" 

எல்லா ஆண்களும் வெற்றி பெற்று விடுவதில்லை. வெற்றி பெற முடியாத ஆண்கள் மிகுந்த மன உளச்சலுக்கு உள்ளாகின்றனர். அதிகம் குடிக்கின்றனர். ஆண்கள் குடிக்கலாம் என்கிற உரிமை இங்கு ஆண்களுக்கு எதிராக வேலை செய்கிறது.

மகாராஷ்ட்ராவிலும் ஆந்திராவிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கடன் சுமையினால் விவசாயிகள் (படிக்கவும் ஆண் விவசாயிகள்) தற்கொலை செய்து கொள்வது பற்றி நாம் அறிவோம். குடும்பத்தினரையும் குழந்தைகளையும் விட்டு விட்டு சாகும் மனநிலை எப்படி உருவாகிறது ஒருவருக்கு? அந்தக்கடனை யார் கட்டுவது? மனைவியா? குழந்தைகளா?விவசாயிகள் பிரச்சனைக்கு அரசின் கொள்கைகளும் சுற்றுச்சூழல் மாசுபடுதலும் காரணம் என்றாலும் குடும்பத்தலைவர் என்ற முறையில் தோல்வியும் அவமானமும் ஆண்களுக்கு அதிக மன அழுத்தத்தைக் கொடுக்கின்றன. வங்கிகளும் ஆண்களுக்கே கடன் கொடுக்கின்றன. அவர்கள் மீது மிகுந்த பொறுப்பை ஏற்றுகின்றன. தான் எல்லாம் செய்து விட முடியும் என்று நினைக்கிற சூழலில் விளைச்சல் இல்லை, மழை இல்லை, விலை கிடைக்க வில்லை எனும் இக்கட்டு எல்லாவற்றையும் விட்டு ஓடி விட வேண்டும் என்று நினைக்க வைக்கிறது.

பெரும் நகரங்களில் காதலிக்க மறுத்த பெண்கள் மீது திராவகம் ஊற்றும் ஆண்களும் ஆண் தன்மையினால் பாதிக்கப்பட்டவர்களே. அவர்களுக்கு "இல்லை" என்ற சொல் ஆகாது. கோபம் வருகிறது. வன்முறையில் இறங்குகின்றனர். தனக்கு எடுத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது என்று நினைப்பில் வளர்ந்தவன்  ஒரு பெண் தன்னை நிராகரிக்கும் போது ஆத்திரம் புத்தியை பேதலிக்க வைக்கிறது. இந்தியாவில் நிறைய இளைஞர்கள் இப்படிப் பட்ட குற்றங்களுக்காக கைதாகி சிறையில் இருக்கின்றனர்.

ஆண்களும் விடுதிகளில், சிறைகளில், ராணுவத்தில், வீடுகளில், பொது இடங்களில் சக ஆண்களால் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் சித்தப்பாக்களாலும், மாமாக்களாலும், தாத்தாக்களாலும், பிற உறவினர்களாலும் வீடுகளுக்கு உள்ளேயும் ஆசிரியர்களாலும், அதிகாரிகளாலும், காப்பாளர்களாலும்  பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

புடைக்கும் புஜங்களும் தெரிக்கும் நரம்புகளும்: 
ஆண் தன்மையின் தமிழ் சினிமா பிரதி

கலவரங்களில் ஆண்களே ஆண்களால் வன்முறைக்கு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். ஆண்களே ஆண்களால் கொலை செய்யப்படுகின்றனர். காவல்துறையினர் ஆண்களைப் பிடித்துப்போய் அடித்து நொறுக்குவது நெருக்கடிக்கு உள்ளான வடகிழக்கு இந்தியாவிலும், காஷ்மீரிலும் சத்திஸ்கரிலும் ஜார்கண்டிலும் ஒரிசாவிலும் நடந்துள்ளது.

மிகைப்படுத்தப்பட்ட, வீங்கிய ஆண் திமிர் ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. சண்டைக்கும், வன்முறைக்கும் ஆண்கள் முன்னுக்கு நிற்கின்றனர். அதிகம் அடி, உதை வாங்குகின்றனர். சாகின்றனர்.

வயதான கிழவன் மனைவி இறந்தால் அவனுக்கு வாழத்தெரிவதில்லை. சிரமப்படுகிறான். கிழவிக்கு கணவன் இறந்தால் வாழத்தெரியும். பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாள். பொறுப்பாக குடும்பத்தையும் தன்னையும் பார்த்துக்கொண்ட அனுபவம் அவளுக்கு இருக்கிறது. சீராட்டி, பாராட்டி, கவனிப்புக்கு உள்ளாகும் ஆண் மனைவி போனதும் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறான்.

குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்களில் ஆண் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் கரடு முரடானவையாகவும், வன்முறையைக் கொண்டாடுவதாகவும் இருப்பதையும், பெண் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் மென்மையை, அமைதியைக் கொண்டாடுவதாக இருப்பதையும் நாம் கவனிக்கலாம். ஆண்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே வன்முறையைக் கொண்டாடும் வலியுறுத்தும் ஆண் தன்மைக்கு பழக்கப்படுத்தப்படுகின்றனர். அதுவே அவர்களின் சுமையாகவும் பழியாகவும் சாகும் வரை தொடர்கிறது. அவர்கள் அதிலிருந்து வெளிவர முயற்சித்தால் அன்றி.

கிரேக்க ஆண்மகன் ஹெராக்லீஸ்; ஆண் தன்மையின் அடையாளம்

பெண்களுக்கும் ஆண் தன்மை இருக்கிறது. அவர்களும் பிற பெண்களையும் ஆண்களையும் ஒடுக்குகின்றனர். ஜெயலலிதா எல்லா மந்திரிகளையும் தனது காலில் விழ வைத்துப் பார்ப்பதும் ஒருவித ஆண் தன்மை தான். பெண்களும் தங்களது பிள்ளைகளுக்கு ஆண் தன்மைகளைக் கற்றுக்கொடுக்கின்றனர். பெண்களும் ஆண் தன்மை சரியென்று நம்புகின்றனர். சக பெண்களையே அது அதிகம் பாதிக்கிறது என்பது தெரியாமல் நடக்கிறது.

நகர்புறத்துப் பெண்களின் ஆண் தன்மை, கிராமப்புற ஆண்களின் ஆண் தன்மையை விட வன்மமானதாக இருப்பதையும் உயர் சாதி பெண்களின் ஆண் தன்மை, ஒடுக்கப்பட்ட சாதி ஆண்களின் ஆண் தன்மையை விட மிகுந்த அழுத்தமானதாக இருப்பதையும் நாம் பார்க்கலாம்.  ஆண் தன்மை ஆண் உடலின் வழியாக மட்டும் செயல்பட வேண்டியதில்லை. ஆண் தன்மை ஒரு அரசியல். அது பல உடல்களின் வழியாக பல அளவுகளில் நேரத்திற்கு ஏற்றவாறு வெளிப்படுத்தப்படுகிறது.

வீட்டுக்குள் ஆண்; வெளியில் பெண்

பாலின சிறுபான்மையினர் அல்லது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவர்களின் பாலியல் தேர்வு இந்த ஆண் தன்மையின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. அதனால் தான் இன்னும் பல நாடுகளில் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் கடும் வன்முறைக்கு ஆளாகின்றனர். ஆண்மை அல்லது பெண்மை என்கிற கறாரான வரையறையை இவர்கள் களைத்து எறிகின்றனர். ஒரு ஆணுக்குள் பெண்மையும் ஒரு பெண்ணுக்குள் ஆண்மையும் இருக்க முடியும் என்கிற வாதம் பேராண்மை என்கிற பேருண்மையை தவிடு பொடியாக்குகிறது.

வேகமாக வண்டி ஓட்டுவது கூட ஒரு ஆண் தன்மையின் அடையாளம் தான். நமது குடும்ப அல்லது நட்பு வட்டாரத்தில் இப்படி கண்மூடித்தனமான வேகத்தில் வண்டி ஓட்டி விபத்துக்கு உள்ளானவர் பலர் உண்டு. நிரந்தர ஊனம் அல்லது மரணம் அல்லது பொருளாதார அழிவு இவை தான் இதற்குக் கிடைக்கும் பரிசு. பெண்கள் மெதுவாக வண்டி ஓட்டினால் கேலி செய்யப்படுவதும் அவர்கள் ஓட்டும் வாகனங்களை இடிப்பது போல ஓட்டி பயமுறுத்துவதும் இதன் தொடர்புடையது தான். ஆண்கள் மெதுவாக வண்டி ஓட்டினால் பொம்பள மாதிரி ஓட்டுகிறாயே என்று பலர் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம்.

ஆண் தன்மைக்குள் இருக்கிற இந்த பிளவை, நெருக்கடியை, ஏற்ற தாழ்வை சிக்கலுக்குள்ளாக்குவது, வலியுறுத்துவது, விவாதிப்பது ஆண் பெண் சமத்துவத்தில் நம்பிக்கையுள்ள ஆண்களை அடையாளம் காண்பதற்கு, அங்கீகரிப்பதற்கு, ஊக்குவிப்பதற்கு உதவும் என்பதும் ஆண் பெண் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஆண்களும் பங்கேற்க முடியும் என்பதும் சாத்தியமாகிறது.

ஆண் தன்மை எனும் சுமை

கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்மை அல்லது ஆண் தன்மை (MASCULINITY) தொடர்பாக பல்வேறு விதமான ஆண்களுடன் பயிற்சிகள், திரையிடல்கள், கருத்தரங்குகள், பட்டறைகளில் கலந்து கொண்ட அனுபவமும் எனக்கு உண்டு. சென்ற ஆண்டு லயோலா கல்லூரியில் ஆண் தன்மை தொட்ர்பான ஒரு திரைப்படவிழாவும் நான் நடத்தினேன். ராகுல் ராய் என்கிற ஆவணப்பட இயக்குநர் ஆண் தன்மை தொடர்பாக சில முக்கியமான படங்களும் எடுத்துள்ளார்.

எஸ்.ஆனந்தி, ராஜன் குறை, ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் Economic and Political Weekly பத்திரிக்கையில் தலித் ஆண் தன்மை தொடர்பாக "Work, Caste and Competing Masculinities"  எனும் கட்டுரையை எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனந்த் பட்வர்த்தனின் 'Father, Son and Holy War' என்கிற ஆவணப்படமும் மத அடிப்படைவாதமும் ஆணாதிக்கமும் எப்படி கை கோர்த்து ஆண் தன்மையை முன்னிறுத்துகின்றன என வாதிடுகிறது. எழுத்தாளர் தமிழ்செல்வனின் "ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்" என்கிற புத்தகமும் ஆண் தன்மையை விவாதப் பொருளாக்குகிறது.

No comments:

Post a Comment