Saturday, July 22, 2017

ஆண்தன்மை : ஆண்பால் பெண்பால் அன்பால் - ஆனந்த விகடன் தொடர்

ஆண்தன்மை : அமுதன் ஆர்.பி.

ஆண்பால் பெண்பால் அன்பால்  என்கிற தலைப்பில் ஆனந்த விகடனில் வரும் தொடருக்காக எழுதிய கட்டுரை

26 July 2017

ண்-பெண் சமத்துவம் வரவேண்டும் என்று உழைப்பவர்கள் மத்தியில், கடந்த 20 ஆண்டுகளாகச் சர்வதேச அளவில் பல சிந்தனை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாகப் பல சர்வதேச அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை, அதற்கு உட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி நிறுவனங்கள் முன்வைக்கிற சில பார்வைகள் கவனிக்கத்தக்கவை.

ஆண் பெண் சமத்துவம் வேண்டுவோர் வழக்கமாகப் பெண்களை மையப்படுத்தி வேலை செய்வார்கள். பெண்களை ஒருங்கிணைப்பார்கள். அவர்களை வலுவூட்டி அவர்களுக்கான கல்வி, வேலை, தொழில், அரசியல் வாய்ப்புகளை, பங்கேற்பை உறுதிப்படுத்துவார்கள்.  பெண்களுக்கு எதிரான வன்முறை, அத்துமீறல், பாகுபாடு இவற்றுக்கு எதிராகப் போராடுவது, அவற்றைத் தடுக்க சட்டங்கள் இயற்றுவது, அதை அமல்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்துவார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக உலக அளவில் பெண்களோடு சேர்த்து ஆண்களையும் கவனப்படுத்தவேண்டும் என்கிற சிந்தனை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு ஆண்- பெண் சமத்துவம் பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படுத்துவது, பெண்ணியச் சிந்தனை கொண்ட ஆண்களை ஊக்குவித்து பயிற்சிகள் கொடுப்பது, பாலியல் விதிகள், நடைமுறைகளைப் பற்றி விவாதிப்பது, பாலியல் சிறுபான்மையினருடன் வேலை செய்வது போன்ற விஷயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. முக்கியமாக ஆணாதிக்கம் மட்டுமல்லாது ஆண்மை அல்லது ஆண்தன்மை (MASCULINITY)யை விமர்சனத்திற்கு உள்ளாக்குவது, விவாதிப்பது, அதற்கு எதிராகப் போராடுவது ஆகியன முக்கியம் என்று ஆண்-பெண்  சமத்துவத்திற்காகப் போராடும் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
இதில் ஆண்மை அல்லது ஆண்தன்மை என்பது எது, அதை ஏன் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்,  ஆண்-பெண் உறவில் அதன் முக்கியத்துவம் என்ன? என்கிற கேள்விகள் மிகமிக முக்கியமானவை.

சரியான ஆண் அல்லது சிறுவனுக்கென்று சில வரையறைகள், குணங்கள், வழக்கங்கள், தகுதிகள், வசதிகள், உரிமைகள் வகுக்கப்பட்டு அவை ஆண்மை அல்லது ஆண்தன்மை என்று அழைக்கப்படுகின்றன. இந்த வரையறைகள் குடும்பங்களினாலும், சமூகத்தினாலும், மதங் களினாலும், பொதுவெளியிலும் ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் தொடர்ச்சியாகக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அவை தொடர்ந்து தலைமுறைகளாகப் பெற்றோர்களின் வழி, சமூகத்தின் வழி கடத்தப்பட்டு, வலியுறுத்தப்படுகின்றன.  

இந்த வரையறையின்படி, ஓர் ஆண் எப்போதும் வெற்றி பெற வேண்டும். அவனே தலைமைப் பொறுப்பினை வகிக்கவேண்டும். எதற்கும் அவன் உறுதியாக இருக்க வேண்டும், அழக் கூடாது, வீரனாக இருக்க வேண்டும். அவனுடைய ஆண் குறி பெரிதாக இருக்க வேண்டும். அவன் மலடாக இருந்துவிடக் கூடாது. கண்டிப்பாகப் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும். பெண்களை மயக்குவது, அவர்களை வெல்வது, ஆள்வது, அவர்களைக் காப்பாற்றுவது, அவர்களிடம் எவ்வகையிலும் விட்டுக்கொடுக்காமல் வாழ்வது, யாரிடமும் சமாதானமாகப் போகாமல் இருப்பது முதலானவை ஆண்தன்மையின் அடிப்படையான குணங்களாகக் கருதப்படுகின்றன. மேலும் அவர்கள் நன்றாகச் சம்பாதிக்க வேண்டும், முதலிரவிலேயே `கதையை’ முடித்துவிட வேண்டும், வீட்டுவேலை செய்யக் கூடாது, வீட்டிலேயே எப்போதும் இருக்கக் கூடாது, வெளியில் நாலு இடத்திற்குப் போக வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகின்றன. 

தொடர்ச்சியாக இந்தக் கற்பிதங்கள் எதிர்பார்ப்புகளாக ஆண்கள்மீது திணிக்கப் படுகின்றன. இவற்றை அடைய முடியாமல் அல்லது பின்பற்ற முடியாமல் போகிற ஆணைத் தோல்வியடைந்தவன், கையாலாகாதவன், பொட்டை என்று அழைத்து அவனை அவமானங்களுக்கு உள்ளாக்குவதைச் சமூகம் தொடர்ச்சியாக நிகழ்த்துகிறது. 

ஆண்களுக்கு அவர்கள் தகுதிக்கு மீறி பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றன. இதனால், அவர்கள் கடும் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக நிறைய ஆண்கள் தங்களது தங்கைகளுக்கும் அக்காக் களுக்கும் திருமணம் முடித்து வைத்துவிட்டுத் திரும்பிப்பார்க்கும் போது வயது 40-ஐ நெருங்கிவிடுகிறது. அப்புறம்தான் அவர்கள் கல்யாணத்தைப் பற்றி சிந்திக்கவே முடியும். காதல், பெண் நட்பு என்பதெல்லாம் கடமைக்கு பிறகுதான்!

அதுவரை பாலுறவு என்பது வெறும் போர்னோ படங்களுடன் முடிந்துவிடும் அவலநிலை. வாழ்வின் பெரும்பகுதி நல்ல வேலை கிடைத்து, சம்பாதித்து, வீட்டில் இருப்போரைக் கரையேற்றுவதில் விழிப் பிதுங்கிவிடுகிறது. இன்றுவரை போர்களில் ஆண்களே அதிகம் சாகின்றனர். ஏனெனில், ஆண்கள் போரிட வேண்டும். பெண்களை, குழந்தைகளை அவர்கள் பாதுகாக்க வேண்டும். காரணம் அவனே வலிமையானவன். காப்பது ஆண்தன்மைக்கு அழகு, காக்கப்படுதல் பெண்மையின் குறியீடு என்று நம்பப்படுகிறது.

ஆண்களின் பாலியல் உறுப்பு தொடர்பான குழப்பங்களையும் சந்தேகங்களையும் நம்பி ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் லேகியங்கள் விற்கின்றனர். காரணம், ஆண் என்பவனுக்கு ஆணுறுப்பு என்பதும், அதன் அளவு என்பதும்கூட ஆண்தன்மையின் அடையாளங்களாக இருக்கிறது. அதனால்தான், தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது உலகெங்கும் கோடிக்கணக்கான போலி பாலியல் மருத்துவர்கள் பெருகியுள்ளனர். தொலைக்காட்சிகள் நடத்திவரும் பாலியல் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் குறிகளின் நீளம் பற்றியும் சுய இன்பம் அனுபவிப்பது குறித்தும் புலம்புகிற ஆண்கள் எவ்வளவு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பதையும் நாம் கண்கூடாகக் காணமுடியும்.

ஆண்தன்மையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று வெற்றி. இங்கே எல்லா ஆண்களும் வெற்றி பெற்று விடுவதில்லை. வெற்றிபெற முடியாத ஆண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். அதிகம் குடிக்கின்றனர். ஆண்கள் குடிக்கலாம் என்கிற உரிமை இங்கு ஆண்களுக்கு எதிராக வேலை செய்கிறது. வெற்றிபெற முடியாத ஆண்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்; குறிப்பாகக் குடும்பங்களுக்குள். வெளியில் போய் அதிகம் அடி, உதையும் வாங்குகின்றனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அடிபட்டுச் சாகின்றனர். பிறரையும் கொல்கின்றனர்.

 ஆண்தன்மையின் இன்னொரு குணம், தன் உடல் வேதனையைப் பொறுத்துக்கொள்வது, அலட்சியப்படுத்துவது, கண்டும் காணாமல் இருப்பது. தனக்கு வலிக்கிறது என்றால், தன்னை மென்மையானவன் என்று சமூகமும், குடும்பமும் என்ன சொல்லுமோ? என்கிற பிரமையில் தன் உடல் ஆரோக்கியத்தைப் பல ஆண்கள் கண்டுகொள்வதில்லை. இதனால், நோய் முற்றிப்போய் அவர்களும் பாதிக்கப்பட்டு, அவர்களின் குடும்பமும் நஷ்டப்படுகிறது.

மகாராஷ்ட்ராவிலும் ஆந்திராவிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும்கூட கடன் சுமையினால் விவசாயிகள் (படிக்கவும் ஆண் விவசாயிகள்) தற்கொலை செய்து கொள்வதுபற்றி நாம் அறிவோம். குடும்பத்தினரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சாகும் மனநிலை எப்படி உருவாகிறது ஒருவருக்கு? அந்தக் கடனை யார் கட்டுவது? மனைவியா? குழந்தைகளா? விவசாயிகள் பிரச்னைக்கு அரசின் கொள்கைகளும் சுற்றுச்சூழல் மாசுபடுதலும் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றோடு குடும்பத்தலைவர் என்ற முறையில் தோல்வியும் அவமானமும் ஆண்களுக்கு அதிக மன அழுத்தத்தைக் கொடுக்கின்றன.

மேலும் வங்கிகளும் ஆண்களுக்கே அதிகம் கடன் கொடுக்கின்றன. அவர்கள்மீது மிகுந்த பொறுப்பை ஏற்றுகின்றன. தான் எல்லாம் செய்துவிட முடியும் என்று நினைக்கிற சூழலில் விளைச்சல் இல்லை, மழை இல்லை, விலை கிடைக்கவில்லை எனும் இக்கட்டு, எல்லாவற்றையும் விட்டு ஓடிவிட வேண்டும் என்று நினைக்க வைக்கிறது. தன் ஆண்தன்மைக்கு, தன் தலைமைப் பண்புக்கு ஏற்பட்ட தோல்வியாக நினைக்கும் ஆண் தற்கொலை செய்துகொள்கிறான்.

பெரும் நகரங்களில் காதலிக்க மறுத்த பெண்கள்மீது திராவகம் ஊற்றும் ஆண்களும், ஆண் தன்மையினால் பாதிக்கப்பட்டவர்களே. அவர்களால் ஒரு பெண் `இல்லை’, ‘வேண்டாம்’ என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. கோபம் வருகிறது. வன்முறையில் இறங்குகின்றனர். தனக்கு எடுத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது என்று நினைப்பில் வளர்ந்தவன்,  ஒரு பெண் தன்னை நிராகரிக்கும்போது வரும் ஆத்திரம், புத்தியைப் பேதலிக்க வைக்கிறது. இந்தியாவில் நிறைய இளைஞர்கள் இப்படிப்பட்ட குற்றங்களுக்காகக் கைதாகிச் சிறையில் இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் இந்த ஆண்தன்மையின் மோசமான பிரதிகளைத் திரைப்படமாக்குகின்றனர். தங்கள் சினிமாக்களில் காதலிக்கிறேன் என்கிற பெயரில் பெண்களைச் சபிக்கின்றனர்; மிரட்டுகின்றனர்; அச்சுறுத்துகின்றனர்; பாலியல் தொந்தரவு செய்கின்றனர். இதெல்லாம் ஆண்தன்மை கொடுக்கும் உற்சாகமான பொழுதுபோக்கு மனநிலை. எனக்கு இல்லாதது யாருக்குமே கிடைக்கக் கூடாது, நான் கேட்டு எப்படி ஒரு பெண் மறுக்கலாம் என்கிற எண்ணங்கள் எல்லாம் ஆண்தன்மையின் மனப்பிறழ்வுகளே!

இங்கே ஆண்களும் விடுதிகளில், சிறைகளில், ராணுவத்தில், வீடுகளில், பொது இடங்களில் சக ஆண்களால் பாலியல் தொந்தரவுகளுக்கு, பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாகச் சிறுவர்கள் சித்தப்பாக்களாலும், மாமாக்களாலும், தாத்தாக்களாலும், பிற உறவினர்களாலும் வீடுகளுக்கு உள்ளேயும் ஆசிரியர்களாலும், அதிகாரிகளாலும், காப்பாளர்களாலும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். வேலை செய்யும் இடங்களில் தங்கியிருக்கும் சிறுவர்கள் கடும் வன்முறை நிறைந்த பலாத்காரத்தை சக ஆண்களிடம் இருந்து எதிர்கொள்கின்றனர். தெருவில் வசிக்கும் சிறுவர்களின் நிலை இன்னும் பரிதாபம். உலகில் ஆறில் ஓர் ஆண், சக ஆண்களால பலாத்காரத்திற்கு உட்படுத்தப் படுவதாகப்  புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கலவரங்களில் ஆண்களே ஆண்களால் வன்முறைக்கு ஆயுதமாகப் பயன்படுத்தப் படுகின்றனர். ஆண்களே ஆண்களால் கொலை செய்யப்படுகின்றனர். மிகைப்படுத்தப்பட்ட, வீங்கிய ஆண் திமிர் ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. சண்டைக்கும், வன்முறைக்கும் ஆண்கள் முன்னுக்கு நிற்கின்றனர். அதிகம் அடி, உதை வாங்குகின்றனர். சாகின்றனர். அதிகமாக லாக்அப் கொலைகளுக்குப் பலியாவதும் ஆண்களே. அவர்களை அடித்துக்கொல்வதும் ஆண்களே.

வயதான கிழவர், மனைவி இறந்துவிட்டால் வாழத்தெரியாமல் திண்டாடுகிறார். சிரமப்படுகிறார். ஆனால், இங்கே வயதான காலத்தில் கணவன் இறந்தபிறகும் கிராமத்திலும்கூட தன்னந்தனியாகத் தைரியமாக வாழ்கிற எத்தனையோ பாட்டிகள் இருக்கிறார்கள். காரணம், பொறுப்பாகக் குடும்பத்தையும் தன்னையும் பார்த்துக்கொண்ட அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது. சீராட்டி, பாராட்டி, கவனிப்புக்கு உள்ளாகும் ஆணோ, துணை போனதும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போகிறான்.

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களில் ஆண் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் கரடு முரடானவையாக, வன்முறையைக் கொண்டாடு வதாக இருப்பதையும், பெண் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் மென்மையை, அமைதியைக் கொண்டாடுவதாக இருப்பதையும் நாம் கவனிக்கலாம். ஆண்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே வன்முறையைக் கொண்டாடும் வலியுறுத்தும் ஆண்தன்மைக்குப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். அதுவே அவர்களின் சுமையாகவும் பழியாகவும் சாகும்வரை தொடர்கிறது. அவர்கள் அதிலிருந்து வெளிவர முயற்சித்தால் அன்றி ஆண்தன்மையின் சிக்கல்களில் இருந்து தப்பவே முடியாது.
சாலைகளில் வேகமாக வண்டி ஓட்டுவதுகூட ஆண் தன்மையின் அடையாளம்தான். நமது குடும்பம் அல்லது நட்பு வட்டாரத்தில் இப்படிக் கண்மூடித்தனமான வேகத்தில் வண்டி ஓட்டி விபத்துக்கு உள்ளானவர் பலர் உண்டு. நிரந்தர ஊனம் அல்லது மரணம் அல்லது பொருளாதார அழிவு இவைதான் இதற்குக் கிடைக்கும் பரிசு. பெண்கள் மெதுவாக வண்டி ஓட்டினால், கேலி செய்யப்படுவதும் அவர்கள் ஓட்டும் வாகனங்களை இடிப்பதுபோல ஓட்டிப் பயமுறுத்துவதும் இதன் தொடர்புடையதுதான். ஆண்கள் மெதுவாக வண்டி ஓட்டினால், `பொம்பள மாதிரி ஓட்டுகிறாயே’ என்று பலர் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம்.

பாலின சிறுபான்மையினர் அல்லது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவர்களின் பாலியல் தேர்வு இந்த ஆண்தன்மையின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. அதனால்தான், இன்னும் பல நாடுகளில் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் கடும் வன்முறைக்கு ஆளாகின்றனர். பல நாடுகளில் தன்பால் சேர்க்கை சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது.  பாலியல் சிறுபான்மையினர் ஆண்மை அல்லது பெண்மை என்கிற கறாரான வரையறையை இவர்கள் கலைத்து எறிகின்றனர். ஓர் ஆணுக்குள் பெண்மையும் ஒரு பெண்ணுக்குள் ஆண்மையும் இருக்க முடியும் என்கிற வாதம் பேராண்மை என்கிற பேருண்மையைத் தவிடு பொடியாக்குகிறது.

பெண்களுக்கும் ஆண்தன்மை உண்டு. அத்தகையவர்கள் பிற பெண்களையும் ஆண்களையும் ஒடுக்குகின்றனர். ஜெயலலிதா, மந்திரிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் தனது காலில் விழ வைத்துப் பார்ப்பதும் ஒருவித ஆண் தன்மையின் வெளிப்பாடுதான். பெண்களும் தங்களது பிள்ளைகளுக்கு ஆண்தன்மைகளைக்    கற்றுக் கொடுக் கின்றனர். பெண்களும் ஆண்தன்மை சரியென்று நம்புகின்றனர். தம்மையும் சக பெண்களையும் அது அதிகம் பாதிக்கிறது என்பது தெரியாமல் இது நடக்கிறது. பெண் காவல்துறை உயர் அதிகாரிகளை சார் என்றே அவருக்குக் கீழே வேலை செய்வோர் அழைக்கும் வழக்கம் பல காலம் இங்கிருந்தது!

நகர்புறத்துப் பெண்களின் ஆண்தன்மை, கிராமப்புற ஆண்களின் ஆண்தன்மையை விட வன்மமானதாக இருப்பதையும் உயர் சாதிப் பெண் களின் ஆண்தன்மை, ஒடுக்கப்பட்ட சாதி ஆண்களின் ஆண்தன்மையை விட மிகுந்த அழுத்தமானதாக இருப்பதையும் நாம் பார்க்கலாம். ஆண்தன்மை ஆண் உடலின் வழியாக மட்டும் செயல்பட வேண்டியதில்லை. ஆண்தன்மை ஓர் அரசியல். அது பல உடல்களின் வழியாகப் பல அளவுகளில் நேரத்திற்கு ஏற்றவாறு வெளிப்படுத்தப்படுகிறது.

இப்போது இந்த ஆண் தன்மைக்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கல், வளர்ந்துவரும் பெண்கள், அவர்கள் அடைந்திருக்கும் வெற்றி ஆகியன. முன்புபோல பெண்கள் குறிப்பாகப் படித்த பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள் ஆண்களின் தலைமையைக் கண்மூடித்தனமாக ஏற்பதில்லை. குடும்பங்களில், வேலை செய்யும் இடங்களில் பெண்கள் முன்முயற்சி எடுப்பதும், தலைமைப் பொறுப்பிற்கு வருவதும் எப்போதும் கவனமும் முக்கியத்துவமும் பெற்றுப் பழகிய ஆண்களுக்கு, சிக்கலை ஏற்படுத்துகிறது. கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தமது ஆண்தன்மை அல்லது ஆண்மை, நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதாக உணர்கின்றனர். சிறு வயதிலிருந்தே கடும் கட்டுப்பாடுகளுக்குள்ளான (அது அநீதியானதுதான் என்றாலும்) பெண்கள் பிற்காலத்தில் வரும் நெருக்கடிகளைத் தாங்கி அதைக் கடந்து பிழைத்துக் கொள்கின்றனர். எப்போதும் தேவையற்ற, அளவுக்கு மீறிய முக்கியத்துவம் பெற்ற ஆண்கள் பின்னாள்களில் வாழ்க்கை கொடுக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறு கின்றனர். அவர்களை எது கொண்டாடியதோ, அதுவே சுமையாகப் பின்னால் வதைக்கிறது. 

எல்லா ஆண்களும் சமமில்லை. எல்லா ஆண்தன்மைகளும் ஒன்றல்ல. இங்கு பல ஆண்தன்மைகள் நிலவுகின்றன. ஆதிக்கம் செலுத்துகிற ஆண்தன்மை, ஆதிக்கம் செலுத்தப்படுகிற ஆண்தன்மை, எதிர்மறையான ஆண்தன்மை, நேர்மறையான ஆண்தன்மை என ஆண்தன்மைகள் பலவகைப்பட்டவை. வர்க்கம், சாதி, மொழி, இனம், மதம் ஆகியன சார்ந்து ஆண்தன்மை மாறுபடுகிறது. ஒன்று இன்னொன்றை ஒடுக்குகிறது, சுரண்டுகிறது. முதலாளியின் ஆண்தன்மை வேறு. தொழிலாளியின் ஆண்தன்மை வேறு. இருவருக்கும் வெவ்வேறு விதமான அதிகாரங்கள் இருக்கின்றன. இருவரும் எதிர்கொள்ளும் நெருக்கடி வேறு.

திருப்பூரில் சிறிய பனியன் கம்பெனி வைத்திருக்கும் ஒரு நபர் இரவுபகல் தூங்காது வெளிநாட்டு Buyer (வாங்குபவர்) கொடுக்கும் நெருக்கடிக்குக் கட்டுப்பட்டு வேலை செய்கிறார். தன் தொழிலாளிகளிடம் வேலை வாங்குகிறார். அவரை Buyer விரட்டுவார். உருட்டுவார். அதே முதலாளி தன் தொழிலாளியை உருட்டுவார், மிரட்டுவார். Buyer, முதலாளி, தொழிலாளி என இங்கு மூன்று நிலைகளில் ஆண்தன்மைகள் செயல்படுவதைக் காணமுடியும். அதேபோல பனியன் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளி வீட்டுக்கு வந்து குளித்துச் சாப்பிடத் தயாராவார். அவருடன் பனியன் கம்பெனியில் வேலை செய்த அவரது மனைவி அப்படி இருக்க முடியாது. வீட்டுக்கு வந்ததும் சமைத்து எல்லோருக்கும் சோறும் போட வேண்டும். தொழிலாளியின் ஆண்தன்மை முதலாளியின் ஆண்தன்மையால் ஒடுக்கப்பட்டாலும், வீட்டில் தொழிலாளியின் ஆண்தன்மை ஆதிக்க ஆண்தன்மையாக உருவெடுக்கிறது.

ஓர் இஸ்லாமிய ஆண் இந்தியாவின் எந்த நகரத்திலும் நள்ளிரவில் காவலர்களின் நெருக்கடியைச் சந்திக்காது பயணிக்க முடியாது என்பதை  இங்கே  நாம்  நினைவு கொள்ள வேண்டும்.  இந்து மத ஆண்தன்மைகளுக்குக் கிடைக்கிற அங்கீகாரம் அவருக்குக் கிடைப்பதில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதேபோல அவருக்கு இருக்கிற உரிமை ஓர் இஸ்லாமியப் பெண்ணிற்கு இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

மேலும் ஆதிக்கசாதிக்கான ஆண்தன்மை வேறு, தலித் ஆண்தன்மை வேறு. ஆதிக்கசாதி ஆணுக்கு இருக்கிற வசதி வாய்ப்புகள் தலித் ஆணுக்கோ பிற இடைச்சாதி ஆணுக்கோ இல்லை என்பதும் ஆண்தன்மைகளில் இருக்கிற வேறுபாடுகளை நமக்கு உணர்த்தும். அதேபோல தலித் ஆண்தன்மையும் கூட, தன் வீட்டிற்குள் பல சமயங்களில் ஆதிக்க ஆண்தன்மையாக வெளிப்படுகிறது.

இப்படித் தன் குடும்பத்திற்குள் ஆதிக்கம் செலுத்தும் ஆண்தன்மை, தெருவில், பொதுவெளியில் தன் சாதி, வர்க்க, மத, நிற, உருவ அடையாளங்களின் காரணமாகச் சிக்கிச் சீரழிவதை நாம் கண்டிருக்கக்கூடும்.

அரசியல் தலைவர்கள் சமாதான விரும்பிகளாக இருந்தால், அவர்களது ஆண்தன்மை கேலிக்குள்ளாகிறது. போர், வன்முறை, முரட்டுத்தனம் எல்லாம் வசீகர ஆண்தன்மையாகக் கருதப்படுகிறது. மோடியின் 55 இன்ச் மார்பு என்கிற தேர்தல் பிரசாரம்கூட ஓர் ஆதிக்க ஆண்தன்மையின் வெளிப்பாடு தான்.  மோடி வண்ண வண்ண உடைகளை அணிவது, அசைந்து அசைந்து நடப்பது, முழக்கமிட்டுப் பேசுவது, துள்ளிக் குதித்து விமானத்தில் ஏறுவது எல்லாம் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஆதிக்க, ஆக்ரோஷ, வீர ஆண்தன்மையாகக் கருதலாம். இவர் பிரதமராக வந்தால் பாகிஸ்தானை, சீனாவை, தீவிரவாதிகளை என எல்லோரையும் துவம்சம் செய்துவிடுவார் என்று மோடியின் பக்தர்கள் முழங்கியதுகூட இன்னொரு அளவிலான ரசிக ஆண்தன்மையின் அறிகுறி. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவின் (ஒரு பெண்ணின்) பேச்சைக்கேட்டு நடந்தார் என்றும் மோடி சுதந்தரமாகச் (ஆண்மையோடு) செயல்படுவார் என்றும் இருவரது ஆண்தன்மைகள் தேர்தலின்போதும் அதற்கு முன்பும் ஒப்பீடு செய்யப்பட்டன.

பராக் ஒபாமா தனது பிரசாரக் காலங்களில் தன்னைச் சமாதான விரும்பியாகவும், நீதிமானாகவும் காட்டிக்கொண்டார். (அவரே அதிபரானதும் பல தாக்குதல்களை நடத்தினார் என்பது வேறு சமாசாரம்). அதே அமெரிக்கத் தேர்தலில் பின்னாள்களில் டொனால்ட் ட்ரம்ப் பெண்களை வெளிப்படையாக, அவதூறாகப் பேசுவது, போரை முன்னிறுத்தியது எனத் தலைகீழாக, வேறுவிதமான முரட்டு எதிர்மறை ஆண்தன்மையை வெளிப்படுத்தினார்.

இறுதியாக நேர்மறையான ஆண்தன்மை என்பது  நமக்கு  உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. பெண்ணியவாதியாக ஆண் இருப்பது, பெண்களின் உரிமையை மதிக்கிற ஆணாக இருப்பது, அவனுக்குக் கிடைக்கிற அதிகாரத்தை அவன் நேர்மறையாகப் பயன்படுத்துவது என இதைப் புரிந்துகொள்ளலாம். நமக்குத் தெரிந்து நிறைய அப்பாக்கள் தங்கள் பெண் பிள்ளைகளைப் படிக்கவைக்க கடும் முயற்சி எடுக்கின்றனர். நமக்குத் தெரிந்து நிறைய அண்ணன்கள் தங்களது சகோதரிகளின் சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரிக்கின்றனர். நமக்குத் தெரிந்து நிறைய கணவன்மார்கள் வீட்டில் தினசரி சமைப்பதைப் பார்க்க முடிகிறது. பொது இடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும்போது குறிப்பாக அதில் ஈடுபடுவது தம் நண்பர்களாக இருந்தாலும் அதை எதிர்க்கும் ஆண்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதெல்லாம் நேர்மறையான ஆண்தன்மைக்கு உதாரணங்களாகும்.

பெண்களுக்கு எதிராக வன்முறை நிகழும் போது அதைப் பெண்கள் அமைப்புகள்தான் கண்டிக்க வேண்டும் என்பதில்லை. ஆண்களும் கண்டிக்கலாம். கண்டிக்க வேண்டும். அதுவும் ஒரு நேர்மறையான ஆண்தன்மைதான். சமூக ஊடகங்களில் பெண்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும்போது அவர்களுக்கு ஆதரவாக ஆண்கள் வந்து சக ஆண்களுக்குப் புரிய வைப்பதும் சக ஆண்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் நேர்மறையான ஆண்தன்மையின் வெளிப்பாடுதான்.

ஓர் ஆண், பல ஆண்தன்மைகளைக் கொண்டவராக இருக்கிறார். நேர்மறையான ஆண்தன்மையுடன் இருப்பது எப்போது என்பதுதான் இங்கே கேள்வி!

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

Wednesday, June 21, 2017

விட்ட குறை தொட்ட குறை – அமுதன் ஆர்.பி.

விட்ட குறை தொட்ட குறை – அமுதன் ஆர்.பி. 

ஒரு பள்ளி மாணவனின் விடுதி காதல் அனுபவங்கள்


நான் உயர்நிலைப்பள்ளிப் படிப்பு படித்தது ஒரு கத்தோலிக்க பள்ளியில் . அதுவும் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டும் வசிக்கும் விடுதியில் தங்கிப் படித்தேன். அங்கு மாணவர்களுக்குள் காதல் கொடி கட்டிப் பறக்கும். கொஞ்சம் பெண்மை கலந்த உடல் மொழி கொண்ட மாணவர்களுக்கு எப்போதும் கவனம் அதிகம் கிடைக்கும். அன்பும் கிடைக்கும். அவர்களின் கண் பார்வை கிடைக்க பிற மாணவர்களுக்குள் போட்டி நடக்கும். போதாக்குறைக்கு கத்தோலிக்க சாமியார்கள் வேறு. அவர்களுக்கு யாரையாவது பிடித்து விட்டால் அம்மாணவர்களை  யாரும் கை வைக்க முடியாது.  நெருங்கவே முடியாது. அவர்கள் சாமியார் சொத்து.

விடுதிகளில் படிக்கும் மாணவர்கள் கடும் மன உளைச்சலையும் தனிமையையும் உணர்வார்கள். பெற்றோர்கள், தாத்தா பாட்டி,  அண்ணன் தம்பி, அக்கா தங்கை, குடும்பம், நட்பு, சொந்தம், ஊர், தெரு, குளம், மரம், கோயில், திருவிழா ஆகியவற்றை பிரிய முடியாமல் ஏங்கியபடி இருப்பார்கள்.  வந்த இடத்தில் கிடைக்கும் நட்பு, காதல், அரவணைப்பு, கவனம், சுகம் ஆகியன ஆறுதலாக இருக்கும். மேலும் பாலியல் ரீதியான தேடல் பதின் வயதில் தொடங்குவதால் பரிசோதனை, ஆர்வம், விளையாட்டு ஆகிய கூறுகளும் நடக்கும் நாடகத்தின் எல்லையை அதிகரிக்கும்.

என் உடன் படித்த மாணவர்களில் ஒருவன் இன்னொரு மாணவன் மீது கடும் காதல் கொண்டிருந்தான்.  அவன் பின்னால் சுற்றியபடியே இருப்பான். சாப்பாடு வாங்கி வைப்பான். துணி துவைத்துக்கொடுப்பான். படிக்க, எழுத  உதவுவான். பேனா நோட்டு வாங்கிக்கொடுப்பான்.  ஏதாவது தவறு செய்து மாட்டிக்கொண்டால் தப்பிக்க உதவி செய்வான். எப்படியாவது அவனை அடையவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். காதல் கடிதம் கொடுத்தபடி இருந்தான். என்ன எதிர்பார்த்தான் என்று தெரியவில்லை. புனிதமான காதல் கோஷ்டி என்று நினைக்கிறேன்.  கடும் முயற்சிக்குப் பிறகும் காதல் படியாததால் கழிப்பறை கழுவ வைத்திருந்த பினாயிலைக் குடித்துவிட்டான். பெற்றோர் பதறி அடித்த படி வர விடுதிக் காப்பாளர் பினாயில் குடித்தவனை இடை நீக்கம் செய்தார். அவன் திரும்ப வந்தானா இல்லையா என்று எனக்கு நினைவில்லை. சிலர் காதலுக்காக கைகளைக் கீறிக் கொள்வார்கள். சாப்பிடாமல் போராட்டம் நடத்துவார்கள். ஒரே இடத்தில் நின்றபடி இருப்பார்கள்.

சில சீனியர் மாணவர்கள் தாதாக்கள் போல செயல்படுவார்கள். அடி, உதை, விளையாட்டில் முதலிடம், மானிடர் பொறுப்புகளுடன் உலா வருவார்கள். அவர்களுக்கு காதலிகள் (மாணவர்கள்) இருப்பார்கள். ஓரினச்சேர்க்கை மிகவும் சாதரணமாக நடக்கும். எல்லோரும் ஒன்றாகப் படுக்கும் ஹாலிலேயே நடக்கும். சில சமயம் குளிக்கும் அறையில். யாரும் இல்லாத சாப்பாட்டு அறையில்.

எங்களைப் போன்றவர்கள் (உருப்படாதவர்கள்)  என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க 
போய் உதை வாங்கியிருக்கிறோம்.  ஒருவனது காதலியை  இன்னொருவன் கைப்பற்ற முயற்சித்து சண்டைகள் நடக்கும். சில சமயம் ஒருவனுடைய காதலியுடன் ரெண்டு வார்த்தை அதிகமாகப் பேசினாலே அறைவிழும்.  அந்தக்காதலிகள் மின்னுவார்கள்.  மணப்பார்கள்.  நல்ல செருப்பு அணிந்திருப்பார்கள். ஊக்குக் குத்திய ரப்பர்  செருப்புடன், லைபாய் சோப்பை இரண்டாய் வெட்டிக் குளிக்கும், கதர் வாரிய மஞ்சள் சோப்புப் போட்டுத் துவைக்கும் என்னைப் போன்றோருக்கு எல்லாமே வேடிக்கை தான்.

ஒரு முறை தேர்வு முடிந்த கடைசி நாள். காதலி மாணவன் ஊருக்குப் போகவேண்டும். அவனது அப்பா அழைத்துப்போக  வந்து விடுவார். காதலன் பெரிய வகுப்பு மாணவன்.  காதலி மாணவனை அவசர அவசரமாக  கலவி புரிந்தான். குதப்புனர்ச்சி தான். வலி தாங்க முடியாமல் சிறுவன் கத்துகிறான்.  பலாத்காரம் என்றே சொல்லலாம். எல்லாம் முடிந்து அவர்கள் எழுந்து போகையில்  சிறியவன் – காதலி மாணவன் - தொடையில்  ரத்தம் வழிந்து ஓடியது. நாங்கள் மிரண்டு போனோம்.

பாதிரியார்களின் காதல் கதைகள் வேறு ரகம். அவற்றை காதல் வகையில் சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை.  பாதிரியார்கள் வசீகரமானவர்கள். சுத்தமானவர்கள். இனிப்பாகப் பேசுவார்கள். அதிகாரம் மிக்கவர்கள். அவர்களின் கனிவுக்கு பலம் அதிகம். அவர்களுக்கென்று தனி அறைகள் இருக்கும். யாரும் உள்ளே நுழைய முடியாது. உள்ளே என்ன நடக்கிறது என்றும் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரு பாதிரியார் பக்கத்தில் போனால் இடுப்பில் கை வைப்பார், தடவுவார், மேலும் கீழும் கை பரவும். முதுகில் படம் வரைவார் விரல்களால். கால்சட்டைக்குள் கை நுழையும். நாங்கள் சிறுவர்கள். தடுமாறுவோம். நெளிவோம். கண்கள் சொருகும். சிறிது நேரத்தில் அவரது கை முன் பகுதிக்கு நகர்ந்து விடும். அதில் மயங்கின மாணவர்கள் அதிகம். அந்த சுகத்திற்கு அடிமையானவர்களும் உண்டு.  ஓடி வந்தவர்களும் உண்டு.

சில மாணவர்கள்  பாதிரியார் பின்னால் சுற்றியபடியே இருப்பார்கள்.  அன்புக்கு கட்டுப்பட்டு சிலர். அதிகாரத்திற்குக் கட்டுபட்டு சிலர்.  அவருடைய கருணை கிடைத்தால் பல சலுகைகள் கிடைக்கும். அடி குறைவாகக்கிடைக்கும். தண்டனைகளில் இருந்து தப்பிக்கலாம். கத்தொலிக்க சாமியார்கள் அடி / தண்டனை கொடுப்பதில் மன்னர்கள். பெற்றோர்களே அதற்குத்தான் சாமியார் பள்ளிக்கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்புவார்கள். நல்லா அடிங்க பாதர், முகத்தில மட்டும் அடிக்காதிங்க என்று பெற்றோர்கள் சொல்ல நானே கேட்டிருக்கிறேன். என் அப்பாவே அப்படித்தான் சொன்னார். அதே சமயம் சாமியாருக்கு நெருக்கமான மாணவர்கள் கேலிக்கு ஆளாவர்கள்.  இருட்டில் அடி விழும். கழிப்பறை சுவர்களில் பெயர் இடம் பெறும். யாரும் உதவி செய்ய மாட்டார்கள். சாமியாருக்கு நெருக்கமானவர்களை, அவர்களின் ரகசியங்களைக் கண்டு கொண்ட பல சீனியர் மாணவர்கள்  வாய் புணர்ச்சிக்கு கட்டாயப்படுத்துவார்கள். மறுத்தால் உதை விழும். பாதிரியார்கள் மாற்றலாகிப் போய் விட்டால் வருகிறவன் போகிறவனுக்கு எல்லாம் சேவை செய்ய வேண்டும்.

எனக்கும் காதல் அனுபவங்கள் உண்டு. ஒருவன் என் மீது பிரியமாக இருந்தான். அவன் பெண்மை கலந்த பாவனைகள் கொண்டவன். அவனை பலர் சுற்றி வந்தனர். அவனுக்கோ என் மீது நட்பு. அவனது இருக்கை மற்றும் மேசை  எங்கோ இருக்கும். சாப்பிட என் உடன் வருவான். என் உடன் குளிப்பான். படுக்கை மட்டும் தனித்தனி.  எல்லோரும் என்னைப் பொறாமையுடன் பார்ப்பார்கள்.  அவனுக்கு காதல் கடிதம் கொடுப்பார்கள். அவன் யாருக்கும் மடியவில்லை. சில மாணவர்கள் நீயாவது அவனை சோலியை முடித்து விடு என்று ஏற்றி விடுவார்கள். நான் பல முயற்சிகள் எடுத்தேன். அவன் தட்டிக்கழித்து விடுவான். அவன் நன்றாகப் படிப்பான். என்னையும் படிக்க வைத்தான். அவன் வசீகரத்தில் மயங்கி நானும் ஒழுங்காகப் படித்து பத்தாவது இறுதித்தேர்வில் கணக்கில் 95 மதிப்பெண் வாங்கினேன் . அவன் இல்லையென்றால் நான் பத்தாவது முடித்திருக்க மாட்டேன்.

பதினோராம் வகுப்பு படிக்கும் போது இரண்டு மாணவர்களுடன் படிப்பு தாண்டி நட்பு ஏற்பட்டது. ஒருவன் கால் பந்தாட்ட வீரன். ஒன்னொருவன் மெல்லிய அழகன். அவர்கள் என்னைக் குழப்பி விட்டதோடு சரி. அவர்களுக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. என் நிலை அவர்களுக்குப் புரியவில்லை.

ஓரினச்சேர்க்கையில் பலருக்கு தான் காதலனா, காதலியா என்று புரிபடாது. ஆணாக இருப்பதாலேயே ஒருவர் ஆணாக / காதலனாக  இருக்க வேண்டியதில்லை. எனக்கு நான் யார் என்றே இன்னும் தெரியவில்லை. பல ஆண்கள் எனக்கு வலை வீசியிருகின்றனர். அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்றே எனக்குத் தெரியாது

பள்ளிக்காலங்களில் என்னை சுற்றி பலர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்தாலும் எனக்கு ஒன்றும் வாய்க்கவில்லை. வேடிக்கை பார்த்தது, தூது போனது, அரைகுறையாய் சூடு போட்டுக்கொண்டதோடு முடிந்தது எனது தன்பால் காதல் வாழ்க்கை.

ஓரினச்சேர்க்கை சிறுவயதில் ஒருவருக்கு அறிமுகமானதாலேயே ஒருவர் அதைத் தொடரவேண்டியதில்லை. தொடரலாம். தொடராமல் போகலாம். அது அவரவர் விருப்பம். மேலும் நம்மில் பலர் கறாரான ஹெட்ரோ செக்சுவல் இல்லை. வேறு வழியில்லாமல் எதிர்பால் இனத்தினருடன் மட்டுமே வாழ்கிறோம். அது தான் இயல்பு என்று நினைக்கிறோம். பலர் அதில்  ஒழுங்காக வாழமுடியாமல் போவதற்கு தமது பாலியல் தேவைப் பற்றி அறியாததால் இருக்கலாம். எனக்கு இன்னும் சில ஆண்களைப் பார்த்தால் தடுமாறும். அவர்கள் கண்களைப் பார்க்க முடியாது. விட்ட குறை தொட்ட குறையாக இருக்கலாம்.

பின்குறிப்பு அ)  கத்தோலிக்கப் பள்ளிகள் / கல்லூரிகள் தமிழ் சமூகத்தை விடுவித்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்களின் சேவை அளவிடமுடியாதது. ஆனால் திருமணம் செய்யாத சாமியார்கள் உலகம் முழுக்க  மாணவர்களை பலாத்காரம் செய்கிறனர் என்பது போப் ஆண்டவரே ஒத்துக்கொண்ட செய்தி.

பின்குறிப்பு ஆ) குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல்  பலாத்காரம் என்பதும் அவர்களுக்குள் நிகழும் பாலியல் தேடல்கள், பரிசோதனைகள் மற்றும் விளையாட்டுகள் என்பதும் ஒன்றல்ல. ஒருவர் பலாத்காரம் காரணமாக தனது பாலியல் பாதையைத் தேர்வு செய்வதில்லை.

பின்குறிப்பு இ) நான் இந்த விஷயத்தில் எக்ச்பெர்ர்டும் அல்ல. இது என் அனுபவம், எனது புரிதல். தவறாகவும் இருக்கலாம். சரியாகவும் இருக்கலாம்.


Saturday, July 16, 2016

டாலர் சிட்டி எனும் எனது ஆவணப்படம்

டாலர் சிட்டி எனும் எனது ஆவணப்படம் 
- அமுதன் ஆர்.பி.




 இயக்கியிருக்கும் டாலர் சிட்டி எனும் ஆவணப்படம், திருப்பூர் நகரை கதைக் களமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக பனியன் தொழிலைப் பின்புலமாகக் கொண்டுள்ளது.

இந்தப் படம் பல சரடுகளைக் கொண்டது. 

படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள், பேட்டிகள் அவரவர் பின்னணியை, புரிதலை, வாழ்க்கையை, ஆசைகளை மட்டுமே வெளிப்படுத்தும். யாரும் யாரையும் குறை சொல்ல மாட்டார்கள். அவரவர் நியாயத்தைச் சொல்வர்.

திருப்பூரில் நடைமுறையில் இருக்கும் வளர்ச்சி மாதிரியை அதன் உளவியலை வெளிக்கொணர முயலும் படம் என்று சொல்லலாம்.

இந்த மாதிரியை எல்லோரும் எப்படி நடைமுறைப்படுத்துகின்றனர், அதற்கு எப்படி தமது பங்கைச் செலுத்துகின்றனர் என்று தமது வாழ்க்கைக் கதைகள் மூலமாக வெளிப்படுத்துகின்றனர்.

இதற்காக தாம் செய்து கொண்ட சமரசங்களை மறைத்தும் மறைக்காமலும் சொல்கின்றனர்.

என்ன ஆனாலும் பனியன் தொழில் வளரவேண்டும் என்கின்றனர்.

திருப்பூருக்கு வந்ததினால் தாமும் தம் சந்ததியும் பிழைத்தோம் என்கிறார் ஒரு தலித் பெண்மணி.

அரசு பனியன் தொழிலுக்கு பல சலுகைகள் கொடுத்தது என்றும் இப்போது இல்லை என்றும் கவலைப் படுகிறார் ஒரு சிறு முதலாளி.

நான் பிழைக்க வந்து இப்போது ஒரு சிறிய முதலாளி ஆகிவிட்டேன் என்றும் பல சர்வதேச ப்ராண்டுகளுக்கு உற்பத்தி செய்கிறேன் என்றும் எதிர்காலத்தில் இன்னும் வளரவேண்டும் என்றும் பெருமைப்படுகிறார் ஒரு சிறு முதலாளி.

என் முதலாளி ஒரு சகோதரன் போல என்னைக் காக்கிறார் என்றும் அவருக்காக இரவு பகலாக உழைத்தால் தான் நல்லது என்கிறார் ஒரு தொழிலாளி.

என் கணவன் சம்பாதிப்பது பற்றாமல் நானும் வீட்டில் இருந்தே உழைக்கிறேன் என்கிறார் ஒரு பெண்.

இன்னும் பலர் பனியன் தொழிலைக் கொண்டாடுகின்றனர்.

20 ஆண்டுகளாக வேலை நிறுத்தமே இல்லை என்கிறார் முதலாளிகளின் சங்கத் தலைவர்.

தொழிற்சங்கம் தொழிலாளர்களுக்காக நிறைய உழைத்திருக்கிறது என்றும் இப்போது பல தொழிலாளர் நல விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்கிறார் ஒரு தொழிற்சங்கத் தலைவர்.

இவர்கள் எல்லோரும் பனியன் தொழிலை ஆதரிக்கும் போது விசைத்தறி தொழிலாளர்கள் தமக்கு சம்பளம் போதவில்லை என்று வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த நெசவாளர் பெண் ஒருவர் எனக்கு பனியன் தொழில் வேண்டாம் என்கிறார். 

நெசவில் எனக்கு சுதந்தரம் இருக்கிறது. உரிமை இருக்கிறது என்கிறார். யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை என்கிறார்.

இதற்கிடையில் தொழிலாளர்களுக்காகப் போராடும் இடது சாரிக் கட்சிகள் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைகின்றனர்.

அவர்கள் எதிர்க்கும் மோடி வெற்றி பெறுகிறார்.



Tuesday, July 5, 2016

பெருமாள் முருகனுக்கு ஆதரவான போராட்டத்திற்கு வெற்றி!

கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு


மாதொருபாகன் நாவலை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு எதிராக இந்து முன்னணியும் சாதிய சக்திகளும் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் பொய்ப் பிரச்சாரம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல் ஆகிய செயல்களில் ஈடுபட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்ததை ஒட்டி 2015 டிசம்பரில் பனுவல் புத்தக நிலையத்தில் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தோம்.
சிறிய கூட்டம் தான். ஆனால் பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
எதிர்பாராதவிதமாக பெருமாள் முருகனே வந்திருந்து அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அன்று நடந்த கலந்துரையாடலின் இறுதியில் கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்கிற ஒரு அமைப்பைத் தொடங்கினோம்.
இரண்டு நாட்களில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தோம். தோழர்கள் திருமாவளவன், நல்லக்கண்ணு, அ.மார்க்ஸ். வ.கீதா, வசந்திதேவி மற்றும் பெருமாள் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக ஒரு அடையாளப் போராட்டத்தை நடத்தினோம். பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் கலந்து கொண்டனர். காவல்துறை அதிகாரிகள் வந்து தள்ளுமுள்ளு ஏற்படுத்த முயன்றனர். என்னை இழுத்துப்போக முயன்றனர். தோழர்கள் வீ.அரசு. பிரின்ஸ் கஜேந்திரபாபு, மயிலை பாலு ஆகியோர் தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக நான் விடுவிக்கப்பட்டேன்.
அதன் தொடர்ச்சியாக வள்ளுவர் கோட்டம் அருகே தமுஎகச மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியோருடன் இணைந்து கண்டனக் கூட்டத்தை நடத்தினோம்.
பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராடத்தை நடத்தினர். கூட்டங்களை நடத்தினர்.
தமுஎகச சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமுகஎகசவின் முன் முயற்சியில் சரிநிகர் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் மூலமாகவும் கருத்துரிமையைப் பாதுகாப்போம் என்கிற முழக்கம் வலுவாக முன்வைக்கப்பட்டது. கவிக்கோ அரங்கில் எதிர்ப்புக் கூட்டமும் நடத்தப்பட்டது.
பியூசிஎல் சுரேஷ் அவர்களும் காலச்சுவடு சார்பாக வாதாடினார் என்பதை அறிகிறோம்.
ஒரு வருடத்திற்கு மேலான போராட்டத்தின் விளைவாக இன்று ஒரு அரிய தீர்ப்பு வந்திருக்கிறது.
எல்லோருக்கும் வாழ்த்துகள்.
கருத்துரிமையைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடுவோம்.
பின்குறிப்பு :
இந்தப் போராட்டமும் தமிழ் கூறும் நல்லுலகின் அவதூறுகளில் இருந்து தப்பிக்கவில்லை.பெருமாள் முருகனுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காலச்சுவடு பதிப்பகத்தின் வியாபார உத்தி என்றும் அதைப் புரிந்து கொள்ளாமல் நாங்கள் அப்பாவிகளாக போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றும் எங்களைப் பலர் எள்ளி நகையாடினர்.
பெருமாள் முருகனைப் பயந்தாங்கொள்ள்ளி என்றும் கோழை என்றும் ஏளனம் செயதனர்.
பலர் அவரது "எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்துவிட்டான்" என்கிற அறிக்கையின் முக்கியத்துவத்தை உணர மறுத்தனர். சக எழுத்தாளர்கள் பலர் அவருக்குக் கிடைத்த கவனத்தைப் பார்த்து பொறாமை கொண்டனர்.
சென்னைப் புத்தக கண்காட்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா பெருமாள் முருகனுக்கு எதிராக நஞ்சைக் கக்கினார். அவர் எழுத்து குப்பை என்றார். அதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்த தோழர் மயிலை பாலு தன்னைக் கொல்ல வந்தார் என்று பொய்ப் பிரச்சாரத்தை இன்னும் செய்கிறார்.
பெருமாள் முருகன் இன்னும் போராடியிருக்க வேண்டும் என்றனர் பல போராளிகள். கொங்கு பகுதியில் நிகழும் வன்முறையின் உக்கிரத்தை யுவராஜ் போன்றவர்களின் வளர்ச்சிக்குப் பிறகே பலர் அறிந்து கொண்டனர்.
இதே திருச்செங்கோடு கோவிலில் ஒரு கவுண்டர் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த காரணத்திற்காகக் தான் கோகுல்ராஜ் எனும் தலித் இளைஞர் சாதி வெறியர்களால் கொலை செய்ய்யப்பட்டார் என்பதை அந்த சந்தேகப் பிராணிகள் புரிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
பெருமாள் முருகன் எப்படிப்பட்ட ஆபத்தான சூழலில் வேலை செய்து வந்தார் என்பதையும் அவரது இக்கட்டான நிலையையும் இப்போதாவது அவர்கள் புரிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

Thursday, June 2, 2016

குஜராத் 2002 படுகொலை - குல்பர்க் சொசைட்டி வழக்கில் தீர்ப்பு!

24 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு!



குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் 2002ம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவெறித்தாக்குதல் நடத்தப்பட்டது.
முதல்வர் மோடியின் ஆதரவுடன் பாஜக, வி.எச்.பி.யினர் முன்னின்று காவல்துறையின் ஒத்துழைப்புடன் நடத்திய கொடூரப் படுகொலைகள் குஜராத்தில் பல்வேறு இடங்களில் நடந்தன.
அதில் ஒன்று குல்பர்க் சொசைட்டி படுகொலை. 69 பேர் கொல்லப்பட்டார்கள். அந்த சொசைட்டியே எரித்து சாம்பலாக்கப்பட்டது.
அந்த வழக்கு ஏறக்குறைய 14 ஆண்டுகள் நடந்தது.
இன்று அந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
24 பேருக்குத் தான் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.
அதில் 11 பேர் மீது தான் கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
யார் மீதும் சதித் திட்டம் திட்டியதாக குற்றம் சாட்டப்படவில்லை.
2000 பேர் கூடி நடத்திய கொலைத் தாக்குதல் இது.
வி.எச்.பி.தலைவர் அதுல் வேத் எனும் ஒரு அரசியல்வாதி மட்டும் தான் குற்றவாளி என்று தீர்ப்பு வந்துள்ளது.
பாஜகவினர் எல்லோரும் தப்பிவிட்டனர்.
இது தான் நீதி.

காலை 9மணிக்குத் தொடங்கிய தாக்குதல் பிற்பகல் 4 மணிக்கு நடந்து முடிந்து விட்டது.
இந்தப் படுகொலை நடக்கவிருப்பதற்கு சற்று முன்பு மோடி (அப்போதைய குஜராத் முதல்வர்) யிடம், கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாஃப்ரி தொலைபேசியில் பேசியிருக்கிறார். பாதுகாப்பு கேட்டிருக்கிறார். "நீங்கள் இன்னும் உயிரோடா இருக்கிறீர்கள்?" என்று மோடி கேட்டதாக ஜாஃப்ரி தன் மனைவியிட்ம் வருத்தப்பட்டிருக்கிறார்.
ஆனால் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரிடம் மோடி எனக்கு மாலை 8 மணிக்குத் தான் இது தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.
குஜராத் கலவரம் தான் இந்தியாவில் (1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு) இந்து மத்வெறி விஷ்வரூபம் எடுப்பதற்கு முக்கியக் காரணம்.
இந்தப் படுகொலைகள், பின்னாட்களில் மோடி பாஜகவில் பெரிய சக்தியாவதற்கும் அதன் பிறகு குஜ்ராத் ஒரு மதவெறிக்கூடாரம் ஆவதற்கும் காரணமாக இருந்தவை.
இதற்கு முன் இதே கலவரத்தின் போது படுக்கொலைகள் நடந்த நரோடா பாட்டியாவில் தீர்பு வந்து பாஜக மந்திரி உட்பட பலர் தண்டிக்கப்பட்டார்கள்.
இந்த வழக்குகளை நடத்த வேண்டிய குஜராத் போலீசும், அரசும், நீதிமன்றங்களும் நியாயமாக நடக்கவில்லை என்பதற்காக உயர்நீதிமன்றம் தலலியிட்டு இந்த வழக்குகளை சிறப்புப் புலானாய்வுப் படை ஒன்றை அமைத்து அதன் கையில் கொடுத்தது.
இந்த வழக்குகளை வீரத்துடன் தொடர்ந்து நடத்தி வரும் தோழர் தீஸ்தா செதால்வத் அவர்களுக்கும் அவரது வழக்கறிஞர் அணிக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

பின் குறிப்பு :

ஒரு குண்டு வெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்களை தண்டிக்க அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவு வழக்கறிஞர் காட்டும் ஆர்வம் அக்கறை குல்பர்க் சொசைட்டி வழக்கில் இல்லை என்பதை அவர் தொலைக்காட்சிக்கு அளிக்கும் பேட்டியில் தெரிகிறது.
24பேரை தண்டித்துவிட்டார்களே என்று தோற்றுப் போன வக்கீல் போல நிற்கிறார்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்காடி, குற்றம் சாட்டப்பட்வர்களுக்கு அதிக பட்ச தண்டனை வாங்கித் தருவது தான் அவர் வேலை.
என்ன அதிசயம் இது?
பாதிக்கப்படவரகள் இஸ்லாமியர்கள் என்பதாலும் குற்றம் சாட்டப்ப்பட்டவர்கள் இந்துக்கள் என்பதாலும் இந்துத்துவ சகிதிகள் வருத்தப்படுவார்கள் என்பதாலும் அப்படி நடந்து கொள்கிறாரா?
நீதிமன்றத்தில் அவர் எப்படிப் பம்மியிருப்பார் என்பதை உணரமுடிகிறது.

Tuesday, May 17, 2016

ஆவணப்படம் திரையிடல் - டாலர் சிட்டி

ஆவணப்படம் திரையிடல்

நாள் :18 மே; மாலை 6 மணி
இடம் : கலெடஸ்கோப், அய்யர் பங்களா பேருந்து நிறுத்தம், மதுரை

படம் : டாலர் சிட்டி
77 நிமிடங்கள்; தமிழ் (ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன்); 2015
இயக்கம்: அமுதன் ஆர்.பி.
தயாரிப்பு : ராஜ் கஜேந்த்ரா



கோடிக்கணக்கான டாலர் பெறுமானமுள்ள பின்னல் ஆடைகளை ஏற்றுமதி செய்யும் திருப்பூர் நகரம் டாலர் சிட்டி என்று அழைக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான பெரிய, சிறிய பின்னல் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் லட்சக்கணக்கான வெளிமாநில, வெளிமாவட்ட, உள்ளூர் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி, அந்நியச் செலாவணி என்பதை உறுதிப் படுத்தும் நோக்கில் தொழிலாளர் உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய கூறுகள் கைவிடப்பட்டு டாலர் சிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியை அடைய, நிலை நிறுத்த தொழிலாளர், இடைத்தரகர், முதலாளி, ஏற்றுமதியாளர், தொழிற்சங்கம், அரசு அதிகாரி, அரசாங்கம் என எல்லோரிடத்திலும் ஒரு ஒத்த கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.
அன்டோனியோ கிராம்ஷியின் கூற்றுப்படி ஒடுக்குமுறையும் சுரண்டலும் மன இசைவைக் கொண்டே திருப்பூரில் நடந்தேறுகின்றன.
பலர் பல விதமான புரிதல், லட்சியம், தேவை நிமித்தம் இந்த டாலர் சிட்டி எனும் கனவை அரங்கேற்றி வருகின்றனர்.
அவரவர் நியாயங்களுடன், இலக்கணங்களுடன் இந்தப் படம் பதிவாகியுள்ளது.
இது அமுதன் ஆர்.பி.யின் 19வது ஆவணப்படம்.

ஒளிப்பதிவு : அமுதன் ஆர்.பி.
படத்தொகுப்பு : அமுதன் ஆர்.பி & தங்கராஜ்
இசை : ராகா
ஆய்வு : புஷ்பா அசந்தா
புகைப்படம் : பாரதி வாசன்

மதுரை நண்பர்களை அன்போடு வரவேற்கிறோம்.

பேரா இரா ப்ரபாகர்
அமுதன் ஆர்.பி

Thursday, May 12, 2016

போ மோனே மோடி!

கேரளாவில் ஆதிவாசிகளில் நிலை கவலைக்கிடம் தான். மறுக்கவே முடியாது.
அதை யார் பேசுவது? மோடியா? அவருக்கென்ன தகுதி இருக்கிறது?
அவரிடம் ஆதிவாசிகளைக் காக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா? பாஜகவிடம் ஏதும் திட்டம் இருக்கிறதா?
அவரது ஆட்சியில் குஜராத்தில் ஆதிவாசிகள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். அவர் மட்டுமல்ல, இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஆதிவாசிகளில் நிலை படு பரிதாபம்.
யாரிடமும் அதற்கான கொள்கை இல்லை.
இடது, வலது, மத்திய என எந்தக் கட்சியிடமும் இல்லை.
எல்லோரும் ஆதிவாசியை விலக்கிய ஒரு வளர்ச்சிக் கொள்கையையே கடைபிடிக்கின்றனர்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா போல அவர்களது நிலங்களை, காடுகளை, நதிகளை, வீடுகளை, கடவுள்களை, மொழியை, பண்பாட்டை, கதைகளைக் கொன்றே தான் நவீன இந்தியா கட்டபட்டிருக்கிறது.
கேரள மக்கள், கேரளாவை மோடி அவமதித்தார் என்று ஒன்று கூடியதை நாம் வரவேற்போம்.
மோடிக்கு எதிராக கட்சி வித்தியாசம் இல்லாமல் மலையாளிகள் எல்லோரும் இணைந்ததை வரவேற்போம்.
அதே நேரத்தில் ஆதிவாசிகளை நாம் அழித்தோம், அழித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மனதில் இருத்திக்கொள்வோம்.
அதை மாற்றுவோம்!

திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது?

திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது? அமுதன் ஆர்.பி.; ஆவணப்பட இயக்குனர், சென்னை தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ் தான் ஆ...