Tuesday, July 5, 2016

பெருமாள் முருகனுக்கு ஆதரவான போராட்டத்திற்கு வெற்றி!

கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு


மாதொருபாகன் நாவலை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு எதிராக இந்து முன்னணியும் சாதிய சக்திகளும் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் பொய்ப் பிரச்சாரம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல் ஆகிய செயல்களில் ஈடுபட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்ததை ஒட்டி 2015 டிசம்பரில் பனுவல் புத்தக நிலையத்தில் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தோம்.
சிறிய கூட்டம் தான். ஆனால் பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
எதிர்பாராதவிதமாக பெருமாள் முருகனே வந்திருந்து அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அன்று நடந்த கலந்துரையாடலின் இறுதியில் கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்கிற ஒரு அமைப்பைத் தொடங்கினோம்.
இரண்டு நாட்களில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தோம். தோழர்கள் திருமாவளவன், நல்லக்கண்ணு, அ.மார்க்ஸ். வ.கீதா, வசந்திதேவி மற்றும் பெருமாள் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக ஒரு அடையாளப் போராட்டத்தை நடத்தினோம். பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் கலந்து கொண்டனர். காவல்துறை அதிகாரிகள் வந்து தள்ளுமுள்ளு ஏற்படுத்த முயன்றனர். என்னை இழுத்துப்போக முயன்றனர். தோழர்கள் வீ.அரசு. பிரின்ஸ் கஜேந்திரபாபு, மயிலை பாலு ஆகியோர் தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக நான் விடுவிக்கப்பட்டேன்.
அதன் தொடர்ச்சியாக வள்ளுவர் கோட்டம் அருகே தமுஎகச மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியோருடன் இணைந்து கண்டனக் கூட்டத்தை நடத்தினோம்.
பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராடத்தை நடத்தினர். கூட்டங்களை நடத்தினர்.
தமுஎகச சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமுகஎகசவின் முன் முயற்சியில் சரிநிகர் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் மூலமாகவும் கருத்துரிமையைப் பாதுகாப்போம் என்கிற முழக்கம் வலுவாக முன்வைக்கப்பட்டது. கவிக்கோ அரங்கில் எதிர்ப்புக் கூட்டமும் நடத்தப்பட்டது.
பியூசிஎல் சுரேஷ் அவர்களும் காலச்சுவடு சார்பாக வாதாடினார் என்பதை அறிகிறோம்.
ஒரு வருடத்திற்கு மேலான போராட்டத்தின் விளைவாக இன்று ஒரு அரிய தீர்ப்பு வந்திருக்கிறது.
எல்லோருக்கும் வாழ்த்துகள்.
கருத்துரிமையைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடுவோம்.
பின்குறிப்பு :
இந்தப் போராட்டமும் தமிழ் கூறும் நல்லுலகின் அவதூறுகளில் இருந்து தப்பிக்கவில்லை.பெருமாள் முருகனுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காலச்சுவடு பதிப்பகத்தின் வியாபார உத்தி என்றும் அதைப் புரிந்து கொள்ளாமல் நாங்கள் அப்பாவிகளாக போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றும் எங்களைப் பலர் எள்ளி நகையாடினர்.
பெருமாள் முருகனைப் பயந்தாங்கொள்ள்ளி என்றும் கோழை என்றும் ஏளனம் செயதனர்.
பலர் அவரது "எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்துவிட்டான்" என்கிற அறிக்கையின் முக்கியத்துவத்தை உணர மறுத்தனர். சக எழுத்தாளர்கள் பலர் அவருக்குக் கிடைத்த கவனத்தைப் பார்த்து பொறாமை கொண்டனர்.
சென்னைப் புத்தக கண்காட்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா பெருமாள் முருகனுக்கு எதிராக நஞ்சைக் கக்கினார். அவர் எழுத்து குப்பை என்றார். அதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்த தோழர் மயிலை பாலு தன்னைக் கொல்ல வந்தார் என்று பொய்ப் பிரச்சாரத்தை இன்னும் செய்கிறார்.
பெருமாள் முருகன் இன்னும் போராடியிருக்க வேண்டும் என்றனர் பல போராளிகள். கொங்கு பகுதியில் நிகழும் வன்முறையின் உக்கிரத்தை யுவராஜ் போன்றவர்களின் வளர்ச்சிக்குப் பிறகே பலர் அறிந்து கொண்டனர்.
இதே திருச்செங்கோடு கோவிலில் ஒரு கவுண்டர் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த காரணத்திற்காகக் தான் கோகுல்ராஜ் எனும் தலித் இளைஞர் சாதி வெறியர்களால் கொலை செய்ய்யப்பட்டார் என்பதை அந்த சந்தேகப் பிராணிகள் புரிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
பெருமாள் முருகன் எப்படிப்பட்ட ஆபத்தான சூழலில் வேலை செய்து வந்தார் என்பதையும் அவரது இக்கட்டான நிலையையும் இப்போதாவது அவர்கள் புரிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment