Saturday, July 16, 2016

டாலர் சிட்டி எனும் எனது ஆவணப்படம்

டாலர் சிட்டி எனும் எனது ஆவணப்படம் 
- அமுதன் ஆர்.பி.




 இயக்கியிருக்கும் டாலர் சிட்டி எனும் ஆவணப்படம், திருப்பூர் நகரை கதைக் களமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக பனியன் தொழிலைப் பின்புலமாகக் கொண்டுள்ளது.

இந்தப் படம் பல சரடுகளைக் கொண்டது. 

படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள், பேட்டிகள் அவரவர் பின்னணியை, புரிதலை, வாழ்க்கையை, ஆசைகளை மட்டுமே வெளிப்படுத்தும். யாரும் யாரையும் குறை சொல்ல மாட்டார்கள். அவரவர் நியாயத்தைச் சொல்வர்.

திருப்பூரில் நடைமுறையில் இருக்கும் வளர்ச்சி மாதிரியை அதன் உளவியலை வெளிக்கொணர முயலும் படம் என்று சொல்லலாம்.

இந்த மாதிரியை எல்லோரும் எப்படி நடைமுறைப்படுத்துகின்றனர், அதற்கு எப்படி தமது பங்கைச் செலுத்துகின்றனர் என்று தமது வாழ்க்கைக் கதைகள் மூலமாக வெளிப்படுத்துகின்றனர்.

இதற்காக தாம் செய்து கொண்ட சமரசங்களை மறைத்தும் மறைக்காமலும் சொல்கின்றனர்.

என்ன ஆனாலும் பனியன் தொழில் வளரவேண்டும் என்கின்றனர்.

திருப்பூருக்கு வந்ததினால் தாமும் தம் சந்ததியும் பிழைத்தோம் என்கிறார் ஒரு தலித் பெண்மணி.

அரசு பனியன் தொழிலுக்கு பல சலுகைகள் கொடுத்தது என்றும் இப்போது இல்லை என்றும் கவலைப் படுகிறார் ஒரு சிறு முதலாளி.

நான் பிழைக்க வந்து இப்போது ஒரு சிறிய முதலாளி ஆகிவிட்டேன் என்றும் பல சர்வதேச ப்ராண்டுகளுக்கு உற்பத்தி செய்கிறேன் என்றும் எதிர்காலத்தில் இன்னும் வளரவேண்டும் என்றும் பெருமைப்படுகிறார் ஒரு சிறு முதலாளி.

என் முதலாளி ஒரு சகோதரன் போல என்னைக் காக்கிறார் என்றும் அவருக்காக இரவு பகலாக உழைத்தால் தான் நல்லது என்கிறார் ஒரு தொழிலாளி.

என் கணவன் சம்பாதிப்பது பற்றாமல் நானும் வீட்டில் இருந்தே உழைக்கிறேன் என்கிறார் ஒரு பெண்.

இன்னும் பலர் பனியன் தொழிலைக் கொண்டாடுகின்றனர்.

20 ஆண்டுகளாக வேலை நிறுத்தமே இல்லை என்கிறார் முதலாளிகளின் சங்கத் தலைவர்.

தொழிற்சங்கம் தொழிலாளர்களுக்காக நிறைய உழைத்திருக்கிறது என்றும் இப்போது பல தொழிலாளர் நல விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்கிறார் ஒரு தொழிற்சங்கத் தலைவர்.

இவர்கள் எல்லோரும் பனியன் தொழிலை ஆதரிக்கும் போது விசைத்தறி தொழிலாளர்கள் தமக்கு சம்பளம் போதவில்லை என்று வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த நெசவாளர் பெண் ஒருவர் எனக்கு பனியன் தொழில் வேண்டாம் என்கிறார். 

நெசவில் எனக்கு சுதந்தரம் இருக்கிறது. உரிமை இருக்கிறது என்கிறார். யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை என்கிறார்.

இதற்கிடையில் தொழிலாளர்களுக்காகப் போராடும் இடது சாரிக் கட்சிகள் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைகின்றனர்.

அவர்கள் எதிர்க்கும் மோடி வெற்றி பெறுகிறார்.



No comments:

Post a Comment