Wednesday, September 26, 2012

கூடன்குளம் போராட்டம்: சில மனப்பதிவுகள்!

ஒரு வரலாறு உருவாகிறது!



கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கட்டங்களில், பல்வேறு வடிவங்களில், பல்வேறு பெயர்களில் கூடன்குள்ம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரையை மையமாக வைத்து ஒய்.டேவிட் தலைமையில் தொடர்ந்து பல போராட்டங்கள் மதுரையிலும், திருநெல்வேலியிலும், நாகர்கோவிலும், தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் நடைபெற்றன. நாகார்ஜுனன், ஞாநி போன்ற எழுத்தாளர்களும் அணு சக்தி எதிர்ப்பு பற்றி தொடர்ந்து எழுதி வந்தனர். வைகோ 80களில் நாடாளுமன்றத்தில் கூடன்குளத்தில் அணு உலை வரக்கூடாது என்று பேசியிருப்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. கன்னியாகுமரியில்90களில் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் இடிந்தகரையைச் சேர்ந்த ஒருவர் இறந்திருக்கிறார்.

இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல் உட்பட்ட மீனவ கிராமங்களில் தொடர்ந்து அணு உலையை எதிர்த்து வந்திருக்கின்றனர். தூத்துக்குடியில் அன்டன் கோமஸ் போன்ற தலைவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மீனவர்கள் அணு உலை எதிர்ப்பில் எந்த தடுமாற்றமும் இன்றி உறுதியாகவே இருந்து வந்துள்ளனர்.

ஆனால் அணு உலை கட்டப்பட்டு  இருப்பதோ இடிந்தகரைக்கும் கூடன்குளத்திற்கும் நடுவில். இடிந்தகரைக்கும் கூடன்குளத்திற்க்கும் நடுவில் வைராவிக்கிணறு எனும் ஒரு கிராமமும் (விவசாய உள்நாட்டு) இருக்கிறது. இந்த மூன்று கிராமங்களைச் சேர்ந்தவர்களின் நிலங்கள் தான் அணு உலை வளாகத்திற்கு அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் எந்த ஒரு "வளர்ச்சித் திட்டம்" வந்தாலும் அரசாங்கம்  வழக்கம் போல என்ன செய்யுமோ அதையே இத்திட்டதிலும் செய்தது.


1) கூடன்குளத்திலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மக்களிடையே கறுப்பு ஆடுகளை உருவாக்கி, நிலங்களை கையகப்படுத்துவதற்கு ஏதுவான சூழ்லை உருவாக்கியது. உள்ளூரில் இருக்கிற சிலருக்கு கட்டுமானப்பணிக்கு ஒப்பந்த பணி உரிமையை லஞ்சமாகக் கொடுத்து இழுத்துக்கொண்டது. அப்படி அணு உலைக்கு நிலம் வாங்கிக்கொடுத்த ஒரு கூடன்குளம் விவசாயியே என்னிடம் அதைப் பற்றி வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார். அரசும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், காவல்துறையும், ஊடகமும்,  சினிமா நடிகர்களும், பணக்காரர்களும் ஒரு தொழிற்சாலை வந்தால் ஊருக்கு நல்லது என்று சொல்லும் போது விவசாயிகளும், தொழிலாளர்களும் குழம்பித்தான் போவார்கள். அணு உலையால் ஒரு ஆபத்தும் இல்லை என்று இப்போதும் சொல்லி வரும் அணு உலை நிர்வாகம் அன்று மட்டும் உண்மைகளை மக்களிடம் சொல்லியிருக்குமா என்ன? அப்போதும் உண்மைகள் மறைக்கப்பட்டன். பொய்யான பிரச்சாரங்கள் செய்யப்பட்டன். அதிகார துஷ்பிரயோகம் நடந்தது. விதிகள் மீறப்பட்டன. மக்கள் மீது மிகுந்த அழுத்தத்தைச் செலுத்தி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

2) காவல்துறையைக் கொண்டு போராட்டம் நடத்தும் பலர் மீது பொய் வழக்கு போட்டு அவர்களை மிரட்டியது. 2007ல் நான் கூடன்குளம் பற்றிய ஆவணப்படம் எடுக்க அங்கு போன போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் திறந்த வெளியில் என்னைச் சந்திக்கத் தயங்கினர். அவர்கள் மீது வழக்குகள் இருந்ததே காரணம். நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் அஞ்சுகிராமம் பேருந்திற்காக நின்றிருந்த போது கூடன்குளம் நண்பர் ஒருவர் (போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்) என்னுடன் பேச மறுத்துவிட்டார். காரணம் ஒரு உளவுத்துறைக் காவலர் அவரைக் கண்காணித்துக் கொண்டு இருந்ததே. அது எனக்குப் பிறகு தான் தெரியும். 2012ல் எப்படி காவல்துறை பலர் மீது வழக்குப் போட்டு மிரட்டி வருகிறதோ அது போல தொடர்ந்து ஆரம்பத்தில் இருந்து காவல்துறையின் நெருக்கடி இருந்து வந்திருக்கிறது. இதில் கூடன்குளம் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

3) இந்து முன்னணி போன்ற மதவாத அமைப்புகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தபடியே இருந்து வந்துள்ளனர். அவர்கள் கூடன்குளத்தில் அணு உலை வரவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வந்துள்ளனர். நான் 90களில் இறுதியில் பங்கேற்ற ஒரு கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு ஊர்வலத்தில் கூடன்குளத்தில் இந்து முன்னணியினர் எங்கள் மீது கற்கள் எறிந்து தாக்குதல் நடத்தினர். அப்போதும் இடிந்தகரை பெண்களே முன் நின்று போராடி இந்து முன்னணியினரை அடித்து விரட்டினர். இந்து முன்னணி போன்ற அமைப்புகளை அரசாங்கமும் அணு உலை நிர்வாகமும் ஊக்குவித்தது. அவர்களுக்கு கட்டுமானப்பணிக்கான ஒப்பந்த உரிமைகளில் முக்கியத்துவம் கொடுத்தது.


பின்னாட்களில் கூடன்குளம் மக்களில் பலர் குழம்பிப் போய் வெளியூரில் வந்து அணு உலை வளாகக் கட்டுமானப் பணியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வீடுகளை, அறைகளை வாடகைக்குக் கொடுத்தனர். அத்தொழிலாளர்களுக்கென்று பலசரக்குக் கடைகளும், மருந்துக்கடைகளும், உணவுக்கடைகளும், சலூன்களும், துணிக்கடைகளும் கூடன்குளத்தில் உருவாகின. இது போராட்டத்திற்கு கூடன்குளத்தில் ஒரு பின்னடைவைக் கொடுத்தது. நான் 2007ல், 2008ல் படம் பிடிக்கப் போன போது பலர் அணு உலை எதிர்ப்பில் உறுதியாக இல்லை. அல்லது வெளிப்படையாக இல்லை. யாரும் என்னிடம் பேச வரவில்லை. ஆனாலும் பரவலாக, அமைதியான எதிர்ப்பு உணர்வு இருந்தது.

ஆனால் பக்கத்தில் இருக்கும் கடற்கரையோர கிராமங்களான இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளியில் மக்கள் அணு உலைத் திட்டத்தை எதிர்த்தே வந்தனர். இவை எல்லாம் கத்தோலிக்க மீனவ கிராமங்கள். இங்கு பங்குச் சாமியார்கள் தான் ஏறக்குறைய ஊர்த் தலைவர்கள். ஊர்க்கமிட்டியினர் இருந்தாலும் பங்குச் சாமியார் மிகவும் முக்கியமானவர். 2008ல் நான் போன போது இடிந்தகரை பங்குச் சாமியார் அணு உலை நிர்வாகத்துடன் இணக்கமாக இருந்தார். அதனால் அந்த ஊரில் கூட்டங்கள் போடுவது சிரமமாக இருந்தது. இப்போது இருக்கும் பங்குச் சாமியார் இளைஞர், முற்போக்கு சிந்தனை உடையவர், தைரியமானவர். இவரது இல்லத்தில் தான் உதயக்குமாரும் மற்ற தலைவர்களும் தங்கியிருக்கின்றனர். பங்குச் சாமியாரின் இல்லத்திற்கு எதிரே தான் தேவாலயம். அங்கு தான் போராட்டம் நடக்கிறது.  இது தான் பலருக்குக் குழப்பத்தை விளைவிக்கிறது. மதச்சார்பின்மை அரசியல் தான் இங்கு தடையாக இருக்கிறது.

ஒரு கிராமம் இறை நம்பிக்கையுள்ள கிராமம் எனில், அது ஒரு போராட்டத்தில் கலந்து கொள்கிறது எனில் அக்கிராம மக்கள் கோவிலில் இருந்து போராட்டத்தைத் தொடங்கினால் என்ன தவறு? போராட்டம் ஏன் செகூலராக இருக்க வேண்டும்? இடிந்தகரை மக்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால், அந்தக் கிராமத்தில் பங்குத் தந்தை ஊர்த்தலைவருக்குச் சமமாகக் கருதப்படுவதால், அவரும் அந்தப் போராட்டத்தில் பங்கு கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? அவர் கோவிலில் மணி அடிப்பதற்கு மட்டும் என்று யார் சொன்னது? அவரே கிராமத் தலைவர் எனில், தேவாலயமே அவர்களின் மையம் எனில் அங்கு போராட்டம் நடத்துவது என்ன தவறு? அது தான் நடக்கிறது இடிந்தகரையில்.  தமிழ்நாட்டில் நிறைய பாதிரியார்கள் சமூக விடுதலைக்காகப் போராடியிருக்கின்றனர். புஷ்பராயன் ஒரு முன்னாள் பாதிரியார். அவர் உவரியில் பங்குத் தந்தையாக இருந்த போது 90களில் இறுதியில் நடைபெற்ற பெருமணல் போராட்டத்தில் கலந்து கொண்டு காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவருடன் நிறைய கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் கடுமையானத் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். தென் அமெரிக்காவில் பாதிரியார்கள் ஒடுக்கும் அரசுகளுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்திருக்கிறார்கள். விடுதலை இறையியல் எனும் சிந்தனை இதற்கு துணை நின்றது.


ஆக, கடற்கரையோர கிராமங்கள் அணு உலைத் திட்டத்தை 1980களில் இருந்தே எதிர்த்து வந்திருக்கின்றன. கூடன்குளம் மக்களும் எதிர்த்து வந்திருக்கின்றனர். அரசாங்கம் பல உத்திகளைக் கொண்டு அந்த எதிர்ப்பை ஒடுக்கியே வந்திருக்கிறது என்பதற்கு நான் சில உதாரணங்களைக் குறிப்பிட்டேன்.

ஃபுகுசிமா அணு உலை விபத்திற்கு பிறகும், 2011 ஜூலையில் நடந்த சோதனை ஓட்டத்தின் போது ஏற்பட்ட சத்தம், கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு சக்தி நிர்வாகம் வெளியிட்ட விளம்பரம் (விபத்து ஏற்பட்டால் எப்படித் தப்பிக்க வேண்டும் என விளக்கமளிக்கும்) ஆகியன எல்லோரையும் விழிப்படையச் செய்தது.  உதயக்குமார், புஷ்பராயன், சேசுராஜ் ஆகியோரின் தலைமைப் பண்பு, மக்களை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளது.

2011 ஆகஸ்ட் தொடங்கிய புதிய போராட்டம் ஒரு வருடத்திற்கு மேலாக வீறு கொண்டு முன்னேறிக்கொண்டிருக்கிறது. பல எதிர்ப்புகள், பல தாக்குதல்கள், பல துரோகங்கள், பல தடைகள்,  உயிர் இழப்புகள், பொருட் சேதங்கள், தியாகங்கள் என இன்னும் போராடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள். தினமலர், சன் டிவி, தினகரன், ஹிந்து போன்ற ஊடகங்கள் அணு உலை ஆதரவு மட்டுமின்றி அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை முடக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். இன்னும் வருகின்றனர். தினமலர் பத்திரிக்கையில் உதயக்குமார் உள்ளிட்ட தலைவர்களில் முகவரிகள், தொலைபேசி எண்களை வெளியிட்டு வாசகர்கள் அவர்களை தூற்றச்சொல்லி ஊக்குவித்தது. இது என்ன பத்திரிக்கை தர்மம் என்று தெரியவில்லை. தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்கின பல ஊடகங்கள். இதுவும் என்ன தர்மம் என்று தெரியவில்லை. தீக்கதிர் கூட 'உதயக்குமார் தப்பி ஓட்டம்' என்று குறிப்பிட்டது.


ஒரு கிராமத்தில் ஒரு அரசு ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறது. அதில் அக்கிராம மக்களுக்கு திருப்தி இல்லை. ஒப்புதல் இல்லை. அதனால் அம்மக்கள் அத்திட்டத்தை எதிர்த்து போராடுகின்றனர். அவர்களிடம் நிறைய சந்தேகங்களும், கருத்துக்களும், கேள்விகளும் இருக்கின்றன. இதைத் தெளிவு படுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதிகாரிகளும், விஞ்ஞானிகளும், தலைவர்களும் சொல்லி விட்டால் மக்கள் வாயை மூடிக்கொண்டு கேட்க வேண்டுமா? அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்லி விட்டால் அது தான் இறுதியா? இந்த அரசும் அதிகாரிகளும் தலைவர்களும் அப்பழுக்கற்றவர்களா? அப்படிப்பட்ட வரலாறு கொண்டவர்களா? எல்லாக்கணங்களிலும் நேர்மையாக, மக்கள் நலனுக்காக சிந்திப்பவர்களா? தியாகம் செய்பவர்களா? அவர்கள் எவ்வளவு  ஊழல் நிறைந்தவர்கள் என்பதற்கு எத்தனை சாட்சியங்கள் நம்மிடையே உள்ளன. அவர்கள் செய்யும் அத்துமீறல்கள் எத்தனை இழப்புகளை இது வரை இந்நாட்டுக்கு கொடுத்திருக்கின்றன? இது எல்லாம் இந்தப் பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் தெரியாதா? ஏன் இவர்கள் இப்படி தனிமனித தாக்குதல்களில் இறங்கினார்கள்? இவர்களுக்கு இந்தப் போராட்டம் பற்றிய தவறான புரிதலா? இல்லை மக்கள் அடிமைகள் தான். அவர்கள் எதிர்ப்புக் காட்டக் கூடாது என்று நினைக்கின்றனரா? இனிமேல் நியாயம், நீதி எல்லாம் கிடையாது. அல்லது எப்போதுமே கிடையாது  என்று நினைக்கின்றனரா?

தொடரும்

No comments:

Post a Comment