Tuesday, July 28, 2026

நோய்க்கு மருந்தா அல்லது மருந்துக்கு நோயா?

நோய்க்கு மருந்தா அல்லது மருந்துக்கு நோயா?

ஒரு அரசியல் கோட்பாடு என்பது முதலில் சமுதாயத்தில் இருக்கும் பிரச்சனைகளைப் பேசும். அதன் ஆழத்தைப் பேசும். அதன் வரலாற்றைப் பேசும். அதற்கான காரணிகளை ஆராயும். பிறகு அதற்கானத் தீர்வைப் பேசும். இது தான் பொலிடகல் ஐடியாலஜி.

தமிழ்நாட்டில் நாம் சமூகநீதி என்று பேசுவது இருப்பவற்றை எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பது அல்ல. அல்லது ஒடுக்கப்பட்டோருக்கு வாய்ப்பளிப்பது மட்டுமல்ல.

அங்கு தான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் தான் நாம் இந்த அரசியலினால் பலன் அடைந்திருக்கிறோம். மற்ற மாநிலங்களிலும் சமூகநீதி என்றொரு வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மாற்றம் ஏதும் நடக்கவில்லை. பொருளாதார, சமூக மாற்றம் எல்லோருக்கும் போய்ச் சேரவில்லை.

பாஜகவினர் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீமுக்கும், தலித்துக்கும், பெண்களுக்கும் உயர் பொறுப்பில் வாய்ப்பளிப்பத்தால் சமூகநீதி காப்பாற்றப்படுமா? ஆகாது. ஏனெனில் அவர்களின் அரசியல் கோட்பாடு தான் அவர்களை வழிநடத்தும். மனிதர்கள் வெறும் கருவிகள். அவர்களால் தனித்து இயங்க முடியாது.

இதை இன்னும் விளக்கினால், மதச்சார்பின்மை என்று சர்வதேச அளவில் பேசப்படுவதும் மகாத்மா காந்தி பேச முற்பட்டதும் ஒன்றல்ல.

ஐரோப்பாவில் அமெரிக்காவில் செக்யூலரிசம் என்பது மதத்தை ஒரு செயல்பாட்டிலிருந்து அகற்றுவது தான். ஆனால் காந்தியார் வழியில் நாம் பயன்படுத்தும் மதச்சார்பின்மை இந்தியாவில் மதச்சிறுபான்மையினருக்கு பாதுகாப்பும் முக்கியத்துவமும் கொடுப்பது.
அது போல ஒரு வார்த்தைக்கு, எவ்வளவு அரசியல் முக்கியத்துவமான வார்த்தையாக இருந்தாலும் அதன் காண்டெக்ஸ்ட் (context) முக்கியம்.

இப்போது சமூகநீதிக்கு வருவோம்.

திராவிட அரசியல் இந்தியாவின் தலையாயப் பிரச்சனையாக சனாதனத்தைப் பார்க்கிறது. அதனால் தான் தனது அரசியல் வாழ்க்கைக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் என்கிறார்.

பிறப்பால் நம்மிடையே ஏற்றத் தாழ்வு பார்க்க வைப்பது பார்ப்பனியம். அது தான் சனாதனத்தின் ஆணிவேர். இங்கிருக்கும் ஜாதிகளிடையே வேறுபாடுகள் இருக்கலாம். ஒவ்வொருவரும் வெவ்வேறு சாமிகளைக் கும்பிடலாம், அவரவர்க்கென்று குறிப்பிட்ட பண்பாடுகள் இருக்கலாம். இதை நீங்கள் வட கிழக்கு இந்தியாவில் இருக்கும் நூற்றுக்கணக்கான பழங்குடியினரிடையே காணமுடியும். அவர்களிடையே வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் நிரந்தரமான ஏற்றத்தாழ்வுகள் (constant hierarchies) இருக்காது.

ஆனால் 'மெயின்லேண்ட் இந்தியாவில்' பரவியிருக்கும் ஆயிரக்கணக்கான ஜாதிகளுக்கிடையே நிரந்தரமான ஏற்றத்தாழ்வுகளைப் புகுத்தி அவர்களை 'வெப்பனைஸ்' (weaponise) செய்வது பார்ப்பனியமே. எல்லா ஜாதியினரும் இந்த ஏற்றத்தாழ்வைப் பாதுகாக்கப் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதை அடையாளம் கண்டு பார்ப்பனியத்திற்கு எதிராக, அதற்கானத் தீர்வை உருவாக்குவதே சமூகநீதி அரசியல்.

ஏழு தலித்துகளையும் இரண்டு பார்ப்பனர்களயும் தவெக மந்திரிசபையில் இணைத்திருப்பது இந்த சமூகநீதி அரசியலை மறுதலிப்பது தான்.

இதை மூன்று விதமாகப் புரிந்து கொள்ளலாம்.

நடந்து முடிந்த தேர்தலில் தலித்துகள் கணிசமாக தவெகவுக்கு வாக்களித்திருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது. அவர்கள் ஏற்கனவே இருக்கிற கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்து, தவெகவிற்கு அக்கட்சி தமது வளர்ச்சிக்கு தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்று எண்ணி வாக்களித்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டால், அந்த வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாகவும், கைமாறாகவும், அந்த வாக்கு வங்கியை நிரந்தரமாக தன் வசப்படுத்தவும் தவெக முடிவெடுத்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

இரண்டாவதாக, திமுக அல்லது திராவிட அரசியலின் மீதான தலித் அறிவுஜீவிகளின், களப்பணியாளர்களின் அதிருப்தியை, கோபத்தை, விமர்சனத்தை, அவர்கள் கடந்த பல பத்தாண்டுகளாக திராவிட அரசியல் சூத்திரர்களுக்கானது, அது தலித் விரோத சித்தாந்தம் என்று கட்டமைத்து வந்திருக்கும் வாதத்தைப் பிரதிபலிக்கும் வகையில் - பாஜக சோசியல் எஞ்சினியரிங் (social engineering) மூலம், பட்டியிலின வெளியேற்ற வாதத்தை முன்வைத்தது போல - இந்த அமைச்சரவை துறை ஒதுக்கீடு நடந்திருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

மூன்றாவதாக, மாயாவதியைப் போல பார்ப்பனர்களையும், தலித்துகளையும் கொண்ட அரசியலைக் கட்டமைப்பது. அதன் மூலம் பதட்டம் அடையும் சூத்திர ஜாதி தலைவர்களை அதிமுகவின் பக்கம் ஓரங்கட்டுவது. இது பாஜகவின் யோசனையாகவே தெரிகிறது.

இதன் படி, சமூகநீதி என்பது இடங்களைப் பகிர்ந்து கொள்வது தானே ஒழிய, அதற்குப் பின்னால் இருக்கும் பார்ப்பன எதிர்ப்புக் கோட்பாட்டை நிராகரிப்பது என்று தவெகவின் இந்த அமைச்சரவை முடிவு நமக்கு உணர்த்துகிறது.

இந்து அறநிலையத்துறைக்கு ஒரு பார்ப்பனரை அமைச்சராக நியமித்தது, அந்தத் துறை உருவாக்கப்பட்டதற்கான வரலாற்றையே அவமானப்படுத்துவதாகும். இங்கிருக்கும் இந்து ஆலயங்கள், சனாதனத்தின் கூடாரங்களாக இருக்கின்றன என்றும் அவற்றை எல்லோருக்குமான இடமாக மாற்ற வேண்டும் என்றும் தான் திராவிட அரசியல் போராடிக்கொண்டிருக்கிறது. அதன் உச்சபட்ச கோரிக்கையாகத் தான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கவேண்டும் என்ற முழக்கம் வைக்கப்படுகிறது. அதற்கான கல்லூரிகளை உருவாக்கி, பார்ப்பனர் அல்லதோர் வகுப்பிலிருந்து அர்ச்சகர்களை உருவாக்கி, அவர்களை பல கோயில்களில் பொறுப்புகளைக் கொடுத்து, அதற்கான பல சட்டப்போராட்டங்களை நடத்தி வருகிறது திராவிட அரசியல்.

அதே போல இந்து அறநிலையத்துறையைத் திட்டமிட்டு ஒரு செக்யூலர் அமைப்பாக, அதன் பணத்தைக் கொண்டே கல்லூரிகள் நடத்துவது, அதை எல்லோருக்குமான இடமாக மாற்றுவது ஆகிய வேலைகளை கடந்த திமுக அரசு செய்து வந்தது. இதை சனாதனவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்து ஆலயங்கள் இந்துக்களுக்கே சொந்தமானவை என்று ஆக்ரோஷமாக முழங்கினார்கள். ஆனால் எந்த இந்துக்கள் என்று கேட்டால் மெளனமாகிவிடுவார்கள். அதற்கு தவகெ அரசு தெளிவான பதிலைக் கொடுத்திருக்கிறது. கோயில் எல்லோருக்குமானது அல்ல. அது ஒரு குறிப்பிட்ட அரியவகை இந்துக்களுக்கே என்பது அந்த பதில்.

அதே போல் இரண்டு பார்ப்பனர்களை அமைச்சர்களாக்குவதும், திமுகவிடம் இருந்து தாம் மாறுபட்ட அரசியலைப் பின்பற்றப் போகிறோம் என்பதையும் தவெக நிரூபித்திருக்கிறது.

அரசியல் என்பது பங்கேற்பு என்றால், அதற்கான சித்தாந்தக் காரணங்கள் வேண்டும். டோகனிச / சம்பிரதாய வெளிப்பாடு அரசியல் பங்கேற்பையே கேலிக்கூத்தாக்கும்.

இதையே தான் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் பல சித்துவிளையாட்டுக்களை நடத்தியிருக்கின்றனர். எம்ஜிஆர் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றார். ஜெயா மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

இவற்றை நாம் வெறும் அரசியல் முதிர்ச்சி அற்றத் தன்மை என்றோ, அனுபவமின்மை என்றோ பார்க்காமல், தமிழ்நாட்டு அரசியலை நீர்த்துப் போகச் செய்யும் தந்திரக்கார நடவடிக்கை என்று பார்க்கவேண்டும்.

அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை

21 மே 2026

No comments:

Post a Comment

திமுகவின் அறிவுச்சூழல்!

  திமுக ஆட்சி காலத்தில் அரசு சார்பாக நடத்தப்பட்ட இலக்கியத் திருவிழாக்களில் இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள், தமிழ்த்தேசியவாதிகள், பெண்ணியவாதி...