பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் வளர்ச்சி மாடல் பற்றி ஒத்தக் கருத்துள்ள தோழர்கள் இணைந்து சில உரையாடல்களைத் தொடங்கினோம்.
அப்படி நடத்திய தொடரில் ஒரு முறை மருத்துவத்துறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றிப் பேச இடதுசாரிப் பேச்சாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாகப் பேச அழைத்திருந்தோம்.அந்த உரையாடல்களின் நோக்கம், தமிழ்நாட்டின் வளர்ச்சி அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறதே, அதைப்பற்றி யாரும் பேசுவதில்லையே என்ற ஆதங்கத்தில் தான்.
தமிழ்நாட்டில் மருத்துவக்கட்டமைப்பு, மருத்துவக்கல்லூரிகள், சிறிய, பெரிய பொது மருத்துவமனைகள், அதனால் உருவாகியிருக்கும் தனியார் மருத்துவமனைகள், அதனால் உருவாகியிருக்கும் 'மருத்துவச் சுற்றுலா' (மெடிகல் டூரிசம் / medical tourism) என்ற போக்கு, சென்னை, இந்தியாவின் மருத்துவத் தலைநகரானது (medical capital of India) ஆகியவை பற்றி துறை விற்பன்னர்கள் விளக்கிப் பேசுவார்கள் என்று நினைத்தோம்.
ஆனால் வந்திருந்த அனைத்து முற்போக்குவாதிகளும் தமிழ்நாட்டில் எப்படி எதுவும் சரியில்லை என்ற வழக்கமான பட்டியலை வாசிக்கத் தொடங்கிவிட்டனர்.
தவெகவிற்கு இளைஞர்கள் கொத்துக் கொத்தாய்ப் போனதற்கு இது மாதிரியான எப்போதும் விமர்சனம் என்ற பெயரில் இடதுசாரி தோழர்கள் நடத்தும் எதிர்மறை அரசியலும் தான் காரணம்.
குறைகள் சொல்வது தவறில்லை, ஆனால் நாம் ஒரு மாநிலமாக எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்பதை ஜெயரஞ்சன் அவர்கள் பேசும் வரை யாரும் பேசவேயில்லை. நமது சாதனைகளைப் பேசுவது திமுகவின் வேலை என்று நாம் நினைக்கிறோம். அவர்கள் ஏன் இதை வெளியில் சொல்லவில்லை என்கிறோம்.
தமிழ்நாடு ஒரு மாநிலமாகத் தொடர்ந்து படிப்படியாக வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. அதில் குறைந்த காலமே ஆட்சியிலிருந்திருந்தாலும் திமுக பெரும் பங்காற்றியிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் அது ஒரு உச்சத்தை அடைந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டேன். அங்கே பேசிய மருத்துவர்கள் சென்னையில் இருக்கும் மருத்துவ வசதிகள் பற்றிப் பெருமையாகப் பேசுகின்றனர்.
ஆனால் இடதுசாரிகள், அம்பேத்கர்வாதிகள், தமிழ்த்தேசவாதிகள் திராவிட அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நடத்திய தொடர் எதிர்மறை பிரச்சாரம், நமது மாநில சாதனைகளை இருட்டடிப்பு செய்து இன்று தவெகவின் வெற்றி வரை வந்திருக்கிறது.
தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றது தோழமைக் கட்சியினர் ஓடிப்போய் ஆதரவு கொடுத்ததும் ஜனநாயகத்தைக் காப்பாற்றவோ, எதேச்சையானதோ அல்ல என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை
19 மே 2026
No comments:
Post a Comment