Monday, October 7, 2024

போர் விமானங்களின் சாகசங்களும் அது தந்த சங்கடங்களும்!

ஏன் இந்த கூட்டம்?

- அமுதன் ஆர்.பி.

போர் விமானங்களைப் பார்க்கத் திரண்ட கூட்டம், நெரிசல், பதட்டம் ஆகியவற்றை வெறும் சிவிக் (பொது வசதிக் குறைபாடு) பிரச்சனையாக மட்டும் நான் பார்க்க மறுக்கிறேன். பாதுகாப்பு நடவடிக்கைகள் போதவில்லை என்று திமுக அரசைப் பழிப்போரின் விமர்சனங்களையும் நான் நிராகரிக்கிறேன்.

நேற்று நிகழ்வில் போலி தேசப்பற்று, போர் மோகம், கேளிக்கை தேடல், அறிவியல் / தொழில்நுட்ப ஆர்வம் என பல கூறுகள் இணைந்துள்ளன. ஏதோ ஒரு விசேஷம் என்றதும் கூட்டம் கூட்டமாய் ஓடும் பொதுமக்களின் ஆட்டு மந்தை மனநிலையும் வெளிப்பட்டது.
பிற நாட்டு மக்களை அல்லது மக்களை, காடுகளை, நாடுகளை, ஆறுகளை, வீடுகளை, வயல்களை அழிக்கும் ஆயுதங்களை நாம் ரசிப்பது எப்படி பொழுதுபோக்காகும்? நம்மிடம் ஒளிந்திருக்கும் பாசிசத்தின் ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு தான் இந்தக் கொண்டாட்டம். ஒவ்வொரு விமானமும் கோடிக்கணக்கான ரூபாய் பெருமானவை. அதைத் தயாரிப்பது எல்லாமே ஐரோப்பிய ஆயுத வியாபாரிகள் தான். அவர்கள் தான் நாடுகளுக்கு இடையே போர்களை உண்டாக்குவது, ஆயுதங்களை பரவலாக்குவது போன்ற சதிகளில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் இன்னும் பல பகுதிகளில் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் போது, அடிப்படை வசதிகளே இல்லாது இருக்கும் போது இத்தகைய கொண்டாட்டங்கள் கொடூரமானவை, இரக்கமற்றவை, பொறுப்பற்றவை.
அது ஒரு புறம் இருக்க, நம் மக்கள் ஏன் இப்படித் திடீரென்று லட்சக்கணக்கில் கூடினார்கள்?
இதன் பண்பாட்டுக் காரணங்களும் கவனிக்கத்தக்கவை.
சென்னை நகரத்திற்கென்று பொதுவான நகரத்திருவிழா (city festival) என்ற கலாச்சாரம் இல்லை. மேட்டுக்குடியினர் மார்கழித் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். அல்லது கோயில் திருவிழாக்கள் அந்தந்த பகுதிகளில் நடக்கின்றன. ஆனால் வெகுமக்களுக்கான பொதுத் திருவிழா நம்மிடமில்லை. இசைஞானியின் கச்சேரிகள், ஐபிஎல், புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்கள் என எங்கும் கூட்டம் தான். அவை எல்லாம் குறிப்பிட்ட காலத்தில் தான் நடக்கின்றன. மக்களிடம் மனிதவள ஆற்றல், ஆர்வம், உற்சாகம் மிகுதியாக, மீதமாக இன்னும் இருக்கிறது.
இரண்டாயிரத்திற்குப் பிறகு மக்களிடம் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலேயே இரண்டாவது பணக்கார மாநிலம் தமிழ்நாடு. இருந்தாலும் ஏதோ ஒரு கொண்டாட்ட வறட்சியும் இருக்கிறது. கோவில் திருவிழாக்களின், கோயில்களின், போலிச்சாமியார்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதையும் நாம் கவனிக்கலாம்.
சென்னைவாசிகள் நன்றாகக் குடிக்கிறார்கள் (அதையும் நல்லொழுக்கவாதிகள் கெடுக்கப்பார்க்கிறார்கள்), சாப்பிடுகிறார்கள், ஊர் சுற்றுகிறார்கள், பொருட்களை வாங்குகிறார்கள், பணத்தைச் செலவழிக்கிறார்கள், சமூக ஊடகங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர்.
ஆனாலும் போதவில்லை. அதன் வெளிப்பாடே நேற்று போர் விமானங்களைப் பார்க்க லட்சணக்கணக்கானோர் கூடியது. போர் விமானங்களை ரசிப்பது கெடுதல் இல்லை என்றாலும் அதில் வன்முறை, அழிவு, யுத்தம் ஆகியவற்றின் மீதான அவா வெளிப்படுகிறது.
இந்த இடைவெளியை தமிழ்நாடு அரசு நேர்மறையாக விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், விவாதங்கள் மூலம் நிரப்பலாம். கிண்டியில் மாபெரும் பூங்கா ஒன்றை குதிரைப் பந்தயம் நடந்த இடத்தில் உருவாக்கப்போவதாய் செய்திகள் வருகின்றன. அதே போன்று நிறைய பொது வெளிகள், பொது நிகழ்ச்சிகள், கூடுகைகளை நமது அரசு மக்களுக்காக இலவசமாக அளிக்கவேண்டும். இதுவே இந்த போதாமையைப் போக்க சிறந்த வழியாக இருக்கும்.
ஏற்கனவே திமுக அரசு சென்னை, மதுரை போன்ற நகரங்களில் பெரிய நூலகங்களையும், கத்திப்பாரா போன்ற இடங்களில் வணிக வளாகங்களையும் உருவாக்கியிருப்பதும் கவனத்திற்குரியது. இத்தகைய முன்னெடுப்புகள் பாராட்டத்தக்கவை.
மேலும் நேற்று நடந்ததைப் போல இவ்வளவு பெரிய, ஒரு செக்யூலரான, பொதுவான, அரசியலற்ற கூடுகை இதற்கு முன்பு நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. இது ஒரு புதிய பிரச்சனை. மேலும் திடீர் (acute) பிரச்சனை. பெசண்ட் நகர் வேளாங்கண்ணி திருவிழவோ காணும் பொங்கலோ வருடா வருடம் நடப்பது. ஜல்லிக்கட்டுப் போராட்டம் படிப்படியாகக் கூடியது. அத்தி வரதருக்கும் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் கூடினார்கள். ஆனால் நேற்றைய நிகழ்வு வித்தியாசமானது. திடீரென்று பல லட்சம் பேர் ஒரு பெருவெள்ளத்தைப்போலக் கூடிவிட்டனர். மிகப்பெரிய விபத்து ஏதும் நடக்காமல் இருந்ததே நற்பயன் தான்.
எனவே நமது மாநில அரசு பல கூடுகைகளை வருடம் முழுக்க நடத்துவதன் மூலம் தான் இந்த அலைபாய்தலையும் அதன் மூலம் ஏற்படும் பதட்டத்தையும் குறைக்க முடியும். (காவல்துறையினரை அதிகரிப்பது, தண்ணீர் பந்தல் அமைப்பது, கழிப்பறைகள் அமைப்பது, ஆம்புலன்ஸுகளை தயார் படுத்துவது, போக்குவரத்தை நெறிப்படுத்துவது என்பதெல்லாம் தற்காலிகத் தீர்வு தான்).
போர், பக்தி, ஆட்டு மந்தை மனநிலை போன்ற மூடப்பழக்கவழக்கங்களிலிருந்தும் மக்களைக் காக்க முடியும்.

No comments:

Post a Comment