Tuesday, May 7, 2013

"பீ" ஆவணப்படம் பற்றி "பேசாமொழி" இணைய இதழுக்காக எனது பேட்டி

சாதியடுக்கை விசாரணைக்குட்படுத்தும்

 பீ, மயானக்குறிப்புகள் & செருப்பு 

இயக்கம்: அமுதன் ஆர்.பி.



1.                   எல்லா இயக்குநர்களும் தங்கள் படங்களுக்கு அட்ராக்டிவ்வான ஒரு தலைப்பை வைக்க விரும்புவர். இந்த படத்திற்கு நீங்கள் வைத்திருக்கும் தலைப்பு ‘பீ’. ஏன்?

பீ எனும் பெயர் தான் அந்தப்படத்திற்குப் பொருத்தமானது. அதை விட வேறு எதுவும் அட்ராக்டிவாகவும் இருக்காது. மேலும் அந்தப்படத்தின் ட்ரீட்மென்ட்டே முகத்தில் அறைகிற பாணி தான். பெயரும் முகத்தில் அறைகிற மாதிரி இருக்கவேண்டும். மேலும் எந்தவிதமான சமரசமும் இல்லாத பெயரும் பீ தான். எனக்குத் தெரிந்து பலர் அதை உச்சரிக்கத் தயங்கினர். அதுவே பாதி வெற்றி தான். பலருக்கு இந்தப்படமே ஒரு பரீட்சை தான். பெயரை எப்படி உச்சரிப்பது, அதைப்பற்றி எப்படிக் குறிப்பிடுவது, இந்தப்படத்தை எப்படிப் பார்ப்பது, திரையிடுவது, விவாதிப்பது எல்லாமே நமது எல்லைகளை சோதித்துப் பார்ப்பது தான்.

2.                   நம் சமூகத்தில் எல்லா வார்த்தைகளையும் நாம் நம் அனுபவத்தின், நம்முன் எழுப்பப்பட்டிருக்கும் பிம்பங்களின் ஊடாகத்தான் பார்க்கிறோம். உதாரணம் சேரி, அக்ரஹாரம். இந்நிலையில் பீ என்னும் தலைப்பு பார்வையாளர்கள் மனத்தில் ஒரு நெருடலை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?

பீ எனும் வார்த்தை அந்தத் தொழிலைப் போல இழிவான வார்த்தையாகக் கருதப்படுகிறது. அதனோடு அந்த வேலை பார்ப்பவர்களையும் இணைத்தும் பார்க்கின்றனர். ஒருவித அருவருப்பு இருக்கிறது மக்கள் மத்தியில். அவ்வளவு அருவருப்பு உச்சரிக்கும் போதே வந்தால், அதை அன்றாடம் கையாளும் மக்களின் நிலை என்ன என்பது தான் எனது கேள்வி. மலம் அள்ளும் வேலை செய்பவர்களுக்கு ஆதரவாக, அதை கண்டும் காணாதும் இருப்பவருக்கு எதிராக எடுத்த நிலைப்பாடே இந்தப்பெயர். ஆங்கிலத்தில் ஷிட் எனும் பெயர் தான் வைத்திருக்கிறேன். அதுவும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களுக்கு தீண்டத்தகாத சொல். ஒருவித எள்ளலுடன் தான் அலட்சியத்துடன் தான் படத்தின் பெயரை உச்சரிப்பர். ஆனால் அது உள்ளே முள்ளைப்போல தைக்கும் என்பது எனக்குத் தெரியும்.



3.                   பீ என்று சொன்னாலே முகம் சுழிக்கும் ஒரு புரிதல் நிறைந்த சமூகத்தில் அதை ஒரு ஆவணப்படத்தின் தலைப்பாக வைத்தால், அதுவே பார்வையாளர்களை படத்திலிருந்து தூரம் கட்டி விடுமா?

பார்வையாளனை சிரமத்திற்கும் சங்கடத்திற்கும் நெருக்கடிக்கும் உள்ளாக்க வேண்டும் என்பது தான் படத்தின் நோக்கமே. ஒரு படத்தின் தலைப்பு கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பது சரி தான். ஆனால் இது மாதிரியான படத்தில் பார்வையாளனோடு யுத்தம் செய்யவேண்டும் என்று வரும் போது தலைப்பு மட்டும் சுகமாக இருக்கவேண்டும் என்பது சரியாகாது. என்னப்பா சொல்ற என்கிற விதத்தில் சவால் விடும் படத்திற்கு தலைப்பும் சவால் விட வேண்டும்.

4.                   இந்த படத்தின் திரையிடல்களில், பீ என்னும் தலைப்பை உச்சரிக்கையில், ஏற்பாட்டாளர்களிடமோ, திரையிடல் ஒருங்கிணைப்பாளர்களிடமோ, பார்வையாளர்களிடமோ ஏதேனும் நெளிவைக் காண இயன்றதா?

ஆரம்பத்தில் இருந்தது உண்மை தான். ஆனால் பிறகு இந்தப்படத்தைப் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்தபின் அதைத் திரையிடவேண்டும் என்கிற எண்ணமே நீங்கள் சொன்ன ஆட்களுக்கு வந்தது என்று நினைக்கிறேன். அவர்களே விரும்பித் தான் படத்தை திரையிட்டனர். ஆனால் நான் குறிப்பிட்ட மாதிரி ஒரு நெருக்கடி இருந்ததை நான் உணரமுடிந்தது. இது ஒரு சோதனை தான். சாதி விளையாட்டில் நீ எங்கிருக்கிறாய் எனும் ஒரு சோதனை தான். இங்கு நடப்பது ஒரு சாதி விளையாட்டு தானே! சாதியினால் பலர் செளகரியங்களை அனுபவித்துக்கொண்டு வரும் விளையாட்டு. ஏதோ ஒரு வகையில் நாம் எல்லோருக்கும் சாதி ஒரு விதமான செளகரியத்தைக் கொடுத்திருக்கிறது. அதை விடுப்பது எல்லோருக்கும் எளிதல்ல. தலித் மக்களுக்கு வேண்டுமானால் சாதி சுமையாக இருக்கலாம். ஆனால் பிறருக்கு? சாதி ஒரு ஏணி தானே? அப்புறம் எப்படி பீ எனும் வார்த்தையை எளிதாக உச்சரிக்க முடியும்?  அதனால் என்னையும் ஒரு தீண்டத்தகாதவனாகத் தான் பார்த்தனர். என்னையும் என்று குறிப்பிடுவது இயக்குநர் அமுதனை. பீ படம் எடுத்த அமுதன் என்றே நான் இன்னும் குறிப்பிடப்படுகிறேன்.

இந்தியாவில் பெருவாரியான ஆவணப்பட இயக்குநர்கள் உயர்சாதிக்காரர்களே. அதனால் அவர்கள் எடுக்கும் ஆவணப்படங்களும் சாதிய மனோபாவம் கொண்டதாக அல்லது சாதியைப் பற்றி மெளனம் சாதிப்பதாகவே இருக்கின்றன. அதனால் பீ மாதிரியான தலைப்பில் படம் எடுத்தால் அதை ஒரு வட்டத்திற்குள் அடைக்கும் முயற்சி நடந்தது. என்னையும் அடைக்கும் முயற்சி நடந்தது. இன்னும் நடக்கிறது. சாதி பற்றி படங்களை தொடர்ந்து எடுத்ததால் என்னை விலக்கி வைக்கும் நிகழ்வுகளும் நடந்தன.

ஆனாலும் எல்லோருக்கும் நெருக்கடி கொடுக்கவேண்டும், மலம் அள்ளும் வேலை பற்றி விவாதம் எழுப்பவேண்டும் என்பது தான் நோக்கம் என்பதால் இந்த விஷயங்களை நான் எதிர்பார்த்தது தான்.



5.                   ஆவணப்படங்கள் என்பது சமூகத்தின் கண்ணாடி. ஆனால் அதுவும் கூட, ஒரு அறிவுசார், இன்டலெக்ட் சர்க்கிளாக, ஒரு கார்ப்பரேட் வியூவிங் போல் ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த தலைப்பினால் உங்களுக்கு அந்த வட்டங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் ஏதேனும் இருக்கின்றதா?

பீ எனும் ஆவணப்படத்தை அதன் வடிவத்திற்காகவும், அது எடுக்கப்பட்ட விதத்திற்காகவும் பார்ப்பவர்கள் உண்டு. திரைப்பட விழாவில் வடிவத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பர். பீ எனும் ஆவணப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை அவர் வேலை செய்யும் போது தொடர்ந்து நகர்ந்தபடி எடுத்த விதம், அதில் நான் கேட்ட கேள்விகள், அதற்கு மாரியம்மாள் சொன்ன பதில்கள், அவரது ஆளுமை, அதற்கு கேமராவும் எடிடிங்கும் கொடுத்த முக்கியத்துவம், அதில் இருக்கும் அரசியல் ஆகியன ஒரு இன்டெலக்சுவல் வட்டத்தில் நல்ல கவனத்திற்கு உள்ளாகின. உண்மையில் இந்தப்படத்தை முதலில் பாராட்டியது செளதாமினி எனும் சென்னை நகரத்தில் வாழும் ஒரு உயர்சாதி, திரைப்படக்கல்லூரி, திரைப்படவிழாக்கள் பின்னணியில் வந்த இயக்குநர் தான். நமது ஆக்டிவிஸ்ட், புரட்சிக்கார நண்பர்கள் யாருக்கும் இந்தப்படத்தை ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. இன்னும் பலருக்கு பல விமர்சனங்கள் இருக்கலாம்.

6.                   இந்த படத்தை எடுக்க உங்களை தூண்டியது எது?

குஜராத்தைச் சேர்ந்த எனது நண்பர், ஸ்டாலின் எனும் ஆவணப்பட இயக்குநர் லெஸ்ஸர் ஹ்யூமன்ஸ் எனும் குஜராத் மாநிலத்தில் நிலவிய, இன்னும் நிலவுகிற கையால் மலம் அள்ளும் வேலை பற்றி ஒரு முழு நீள ஆவணப்படம் ஒன்றை எடுத்திருந்தார். அதை தமிழாக்கம் செய்திருந்தார். ப்ரீதம் சக்ரவர்த்தி அவர்கள் தான் மொழிபெயர்ப்பு செய்தார். ஸ்டாலின் அந்தப் படத்தின் தமிழ் பிரதியை தமிழ் நாட்டில் திரையிட வேண்டும் என்று விரும்பினார். மதுரைக்கு வந்தார். அவருடன் நான் ஒரு சுற்றுப்பயணம் போனேன். நிறைய இடங்களில் திரையிட்டோம். நல்ல விவாதங்கள் நிகழ்ந்தன. ஆனால் பல இடங்களில் ஏன் குஜராத்தைப் பற்றி படம் காட்டுகிறீர்கள்? தமிழ்நாட்டில் இது நடக்கவில்லையா என்று பலர் கேட்டனர். அந்தக் கேள்விகள் தான் என்னை பீ படம் எடுக்கத்தூண்டின.

மேலும் 90களின் பின்பகுதியில் தலித் இலக்கியமும் தலித் அரசியலும் தலித் எழுச்சியும் தமிழ்நாட்டில் நிகழ்ந்த நேரம். எல்லா சுரணை உள்ளவர்களையும் அந்த அலை பாதித்தது போல என்னையும் அது தாக்கியது.  எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. நான் பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்தவன். அந்தசாதி எனக்கு பல வசதி வாய்ப்புகளை நான் கேட்காமலேயே தருகிறது. சாதி தரும் சொகுசுகளை அனுபவிக்கும் நான் சாதி இழைக்கும் அநீதிகளை எதிர்க்க வேண்டாமா? எனக்குத் தெரிந்தது ஆவணப்படம் எடுப்பது. எனக்குத் தொழில் ஆவணப்படம் எடுப்பது. வேறு எதுவும் தெரியாது. அதன் மூலம் சாதி பற்றிய, சாதிக்கு எதிரான விவாதத்தை உண்டாக்க நினைத்தேன். பீ தான் சாதிக்கு எதிரான போராட்டத்திற்கு நான் அளித்த சிறு பங்கு. உண்மையில் இந்தியாவில் சாதி பற்றி விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் படங்கள் உள்ளன. இன்னும் பல படங்கள் வரவேண்டும். என்னால் முடிந்தது நான்கு படங்கள் எடுத்திருக்கிறேன். அவற்றைத் தொடர்ந்து திரையிட்டும் வருகிறேன்.



7.                   ஆவணப்படங்களில் அழகியல் சேர்க்கும் காலத்தில் பீ என்ற இப்படத்தில் அதை உடைக்கும் விதமாக செயல்பட்டிருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்து இந்த படத்திலும் இதற்கேற்ற அழகியல் உள்ளது. அதைக் குறித்து...

பீ படத்தில் நான் பயன்படுத்தியிருக்கும் சினிமா வகைமுறையை சினிமா வெரிடே எனும் வகையில் சேர்க்கலாம். அமெரிக்காவில் கறுப்பின மக்களின் சினிமா வகையான டிரைக்ட் சினிமா, மற்றும் தென் அமெரிக்க சினிமாவின் கொரில்லா சினிமா ஆகிய சினிமா பாணிகளின் தொடர்ச்சியாக பீ படத்தை சேர்க்கலாம். இதற்கென்று சில இலக்கணங்கள் இருக்கின்றன. அவை மண்ணிலிருந்து உருவானவை. நான் பார்த்து சினிமா படித்த இயக்குநர்களான பேட்ரிசியோ குஸ்மான், டென்னிஸ் ஓ ரூர்க், ஆனந்த் பட்வர்த்தன் ஆகியோர் இந்தப் பாணிகளை தங்களுக்கு ஏற்ற வகையில் உள்வாங்கியிருக்கின்றனர். அதை அவர்களின் படங்களில் பார்க்கலாம்.

ஒருவர் தாம் தேர்ந்தெடுக்கும் வகைமுறை, அழகியல் ஆகியன அவரது தனிப்பட்ட ஆளுமை சார்ந்தது மட்டுமல்லாது, அவர் சினிமா எடுக்கும் சூழல், அவர் எடுத்திருக்கும் கதைக்களம், அவர் அதை எங்கு பயன்படுத்துவார் ஆகியன சார்ந்தும் இருக்கின்றன. ஏனெனில் நீங்கள் படம் எடுத்தால் யார் பார்ப்பது என்பது முதல் கேள்வி? இப்படி ஒரு படம் எடுத்தால் யார் திரையிடுவார்கள்? அதற்கு என்ன செலவு? யார் தருவார்? அதை எப்படி உருவாக்குவது? என பல கேள்விகள் இருக்கின்றன.

நான் கம்யூனிஸ்ட் பின்னணியில் இருந்து வந்தவன். என் அப்பா மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மேலூர் பகுதியில் அதிகம் வேலை செய்தவர். களப்பணி என்பது எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும்.

மார்க்ஸ், ரவிக்குமார், வேல்சாமி ஆகியோர் நடத்திய நிறப்பிரிகை பத்திரிக்கை, அவர்கள் நடத்திய கூட்டங்கள், மதுரை படிப்பு வட்டத்து நண்பர்களான சுந்தர், பாபு, லோகு, சுபகுணராஜன் ஆகியோரது நட்பு, மதுரையில் நண்பர்கள் நடத்திய கருத்தரங்குகள், திரையிடல்கள், அதில் நிகழ்ந்த விவாதங்கள், யதார்த்த திரைப்பட இயக்கத்தில் நண்பர் ராஜன் திரையிட்ட படங்கள், அங்கு இருந்த அறிவுச்சூழல் ஆகியன என்னை வெகுவாகப் பாதித்தன.

கலை கலைக்கானது மற்றும் கலை ஒரு போர்க்கருவி ஆகிய இரண்டு நிலப்பாடுகளுக்கிடையே ஒரு மையப்பகுதி எனக்கு பிடித்திருந்தது. மதுரையில் கேப்ரியெல் டீட்ரிச் மற்றும் பாஸ் விலங்கா ஆகிய மார்க்சிய சிந்தனையாளர்களுடான நட்பும் அவர்கள் நூலகத்தில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நான் படித்த புத்தகங்கள் எல்லாமே என்னை செதுக்கியவை.

பின்னாட்களில் நான் மேதா பாட்கர் அவர்களுடன் நர்மதா அணைத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறேன். ஆகவே நான் முதலில் ஒரு களப்பணியாளர். சினிமா எனக்கு ஒரு கருவி.

இந்தப்பின்னணி தான் என் அழகியலைத் தீர்மானித்தது. எதிர் அரசியலுக்கான சினிமா எனது அழகியல்.



8.                   இந்த படத்தின் வடிவத்தை, follow up வடிவத்தை எப்போது தீர்மானித்தீர்கள்?

துப்புரவுப்பணி பற்றி நான் ஒரு ஆவணப்படம் எடுக்க முனைந்த போது ஸ்டாலினைப் போல நானும் ஒரு முழுநீள ஆவணப்படம் தான் எடுக்க நினைத்தேன். மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் 20 நாட்கள் படம் பிடித்திருப்பேன். 50 கேசட்டுகளுக்கு மேல் சுட்டுத் தள்ளியிருப்பேன். அப்போது தான் இந்தப்படத்தின் கதாநாயகி மாரியம்மாளை சந்தித்தேன். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகப் படம் பிடித்தேன். எனக்கு இன்ட்யூசன்படி படம் எடுக்கவே பிடிக்கும். அதுதான் ஆவணப்படத்திற்கு நல்லது என்பது எனது கருத்து. ஆவணப்படம் கொடுக்கும் அனைத்து சாத்தியங்களையும் நீங்கள் பயன்படுத்தவேண்டுமெனில் கடைசி நிமிடம் வரை காத்திருந்து முடிவு எடுப்பது நல்லது. திறந்த மனதோடு, நடக்கிற விஷயங்களை ஒரு தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொண்டு அவற்றின் போக்கில் போய் பதிவு செய்தால் தான் ஆவணப்படம் உயிர் பெறும். அதில் பல வெளிச்சங்கள் நிறைந்திருக்கும். அதில் பல சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும். இல்லையென்றால் உங்கள் மொழி தட்டையாகிவிடும். அதில் சுவாசம் இருக்காது. இடைவெளி இருக்காது. உயிர் இருக்காது.

உங்கள் அரசியல், அழகியல் சார்ந்து நீங்கள் களத்தில் எடுக்கும் சில முடிவுகள் தான் ஆவணப்படம். ஆனால் அந்த முடிவுகளை கடைசி நிமிடம் வரை தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்து அந்தச் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வதே என் ஸ்டைல்.

மாரியம்மாளை முந்திய நாள் காலையில் 8 மணிக்குப் பார்த்தேன். அவர் வேலை செய்யும் விதம் பற்றி கவனித்தேன். ஏற்கனவே 10 நாட்களுக்கு மேல் பல கழிப்பறைகளை, பல தொழிலாளர்களை, பல துப்புரவுப் பணியை நான் படம் பிடித்திருந்ததால் அந்த அனுபவம் எனக்குள் பல படிமங்களாக பதிந்தபடியே இருந்தன. அந்த தெருவின் நீளமும் அவரது வேகமும் பேச்சும் எனக்குள் பதிந்தன. அதற்குள் வேலையை முடித்துவிட்டார். வேறோரு தெருவில் வேறொரு தொழிலாளி எங்களுக்காகக் காத்திருந்தார். மறுநாள் காலையில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.

மறுநாள் காலையில் 5:30 மணிக்கே போய்விட்டேன். மாரியம்மாள் எனக்கு முன்பே வந்துவிட்டார். விடிந்தும் விடியாமலும் ஒளி நன்றாக இருந்தது. வேலையை தொடங்கிவிட்டார். அவர் பின்னாடியே நான் ஓடினேன். அன்று மாரியம்மாள் பற்றி நான் எடுத்தது வெறும் 60 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் மொத்த ஃபுட்டேஜ் 50 மணி நேரம். பல கழிப்பறைகள், பல சந்துகள், பல குப்பை மேடுகள், பல கிராமங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என பல நிலைகளில் படம் எடுத்திருந்தேன்.

50 மணி நேரம் ஃபுட்டேஜ்ஜைப் போட்டுப் போட்டுப் பார்த்தேன். ஆறுமாத காலம் கழித்து ஒவ்வொரு கேசட்டாக எடுத்து எடிடிங் செய்யத் தொடங்கினேன். அப்போது மாரிம்மாளின் பகுதி மட்டும் தனியாக ஒரு படம் போல இருந்ததை நான் கவனித்தேன். ஒரு எடிட்டராக ஏற்கனவே எடிட் பண்ணப்பட்டது போல இருந்ததையும் உணர்ந்தேன். வேறு எதையும் சேர்க்காது அதை மட்டும் சீர்படுத்திவிட்டு ஒரு வாரம் கழித்துப் பார்த்தால் அதுவே தனிப்படமாக இருந்தது. பீ தானாக, சுயம்பாக இப்படித் தான் உருவானது.



9.                   இந்த வடிவம் இப்படத்திற்கு எந்தளவிற்கு உதவியது என்று நினைக்கிறீர்கள்?

இந்தப்படத்திற்கு வடிவம் தான் பலம். ஒரு பெண்மணி. அவரது ஆளுமை தான் இதன் உந்து சக்தி. தெரு நிறைய மலம் இருந்தது எனக்கே மலைப்பாக இருந்தது. அதை அப்படியே கொண்டு வந்தால் போதும். ஏறக்குறைய ஒரு ஓபரா போல என் கண் முன்னே ஒரு துயர நாடகம் நடந்தேறியது. அதில் என்னை மூழ்கடித்தபடி படம் பிடித்தேன்.

பலர் பல கதாபாத்திரங்கள் போல வந்து போனார்கள். பள்ளி மாணவி, சைக்கிளில் வரும் பையன், கறிவேப்பலை வாங்கியபடி மூக்கைப் பொத்தியபடி போன பெண், ஒரு பெரியவர், மலம் கழிக்கும் சிறுவர்கள், புளியமரம், கோயில் சுவர், அதன் சிவப்புக்கோடுகள், அரிசி ஆலையின் சுவரில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எல்லாமே என்னை உனக்காகத் தான் காத்திருக்கிறோம். எங்களை எடுத்துக்கொண்டு போ என்பது போல ஆரத்தழுவிக்கொண்டனர்/ன. கொடுமை ஒரு புறம். ஆனால் உணர்ச்சி வசப்பட்டு விட்டால் அதை அப்படியே பதிவு செய்ய முடியாது. அதன் உக்கிரத்தைக் கொண்டு வரமுடியாது.

மேலும் எந்த இடத்திலும் மாரியம்மாளை தொந்தரவு செய்துவிடவும் கூடாது. சீரியசான கேள்விகள், அரசியல் கேள்விகள், ஆன்மிக தத்துவக்கேள்விகள் இல்லாமல் அதனால் தான் உரையாடல் கூட இரு மனிதர்களுக்கிடையே நிகழும் சாதாரண, இயல்பாக அமைந்தது. மினிமலிஸ்டிக்காக இருப்பது இது போன்ற கனமான கதைக்களனுக்கு முக்கியம். அதிகம் நீங்கள் உங்கள் அறிவுஜீவித்தனத்தைக் காட்டினால் சூழலின் உக்கிரத்தை அதன் வலியோடு பதிவு செய்ய முடியாது.

மேலும் மாரியம்மாளின் வேகம், அவரது துயரம், கோபம், நகைச்சுவை ஆகியனவும், அன்றாடம் வந்து வேலையை ஒரு எந்திரம் போல உணர்வற்று செய்யும் முரண் ஆகியன தான் வடிவத்தைத் தீர்மானித்தன.

மாரியம்மாள் தான் கதாநாயகி. நான் ஒரு ஒளிப்பதிவாளர், இயக்குநர், எடிட்டர் அவ்வளவே! அவரது ஆளுமையை அதிக இடையீடு இல்லாமல் கொண்டு வந்தால் போதுமானது.

10.               படத்தை எடுக்க தீர்மானித்தவுடன் அதற்கு நீங்கள் மேற்கொண்ட களஆய்வினைக் குறித்து சொல்லுங்களேன்..

மதுரையில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி சார்பாக “துப்புரவுப் பணியாளர்கள் சங்கம் வைத்திருக்கின்றனர். அம்பேத்கரிய அரசியலைப் பின்பற்றும் இந்த சங்கம் தான் மதுரையில் அதிக துப்புரவுத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. நிறையப் போராட்டங்கள் நடத்தியபடி இருந்தனர். அவர்களைத் தான் நான் சந்தித்தேன். அவர்கள் தான் எனக்கு கள ஆய்வுக்கு உதவினர். ஏறக்குறைய ஒரு மாதம் பல தொழிலாளர்களுடன் பேட்டி எடுத்தோம். அவர்களிடம் இருந்த புத்தகங்கள், தினசரிகளின் சேகரிப்பு, தலித் ஆதார மையத்தில் வே.அலெக்ஸ், மற்றும் மோகன் லார்பீர் ஆகியோரின் ஆலோசனை ஆகியன எனக்குப் பெரிதும் உதவின.




11.               இப்படத்திற்காக உங்களை நீங்கள் எப்படி தயார்படுத்திக் கொண்டீர்கள்?

நான் எப்போதும் தனியாகவே வேலை செய்யக்கூடிய ஆள். நானே கேமரா, சவுண்ட், எடிடிங், இயக்கம் எல்லாம் செய்வேன். அதுவே எனக்கு பலம். ஏனெனில் ஆவணப்படம் எடுக்கும் போது உங்களது இருப்பு மிகவும் குறைவாக இருக்க வேண்டும். அப்போது தான் முடிந்த வரை இருக்கிற விஷயங்களை அதிகம் சேதாரம் இல்லாமல் பதிவு செய்ய முடியும். அதிக நபர்களுடன் போனால் களத்தில் ஆட்கள் மிரண்டு போவார்கள்.

குறிப்பாக இந்தப் படத்தில் ஏகப்பட்ட கழிப்பறைகளுக்குப் போனேன். தொழிலாளர்கள் வேலை செய்வதைப் படம் பிடித்தேன். வேறு ஆட்களுடன் போயிருந்தால் இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஏனெனில் கழிப்பறைகளுக்குள் நுழைய முடியாது. பாதையெங்கும் மலம் நிறைந்திருக்கும். அதில் ஒரு தொழிலாளி வேலை செய்து கொண்டிருப்பார். அதைப் பார்த்ததும் குமட்டும். தலை சுற்றும். கால்களில், கைகளில் மலம் ஒட்டிக்கொள்ளும். தொண்டைக்குழியில் அதன் மணம் தங்கிவிடும். எச்சிலைத்துப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

நீங்கள் தன்னை மறந்து சாமி வந்து இறங்கியது போல அல்லது பைத்தியம் பிடித்தது போல வேலை செய்தால் தான் மலம் அள்ளுவதை படம் பிடிக்க முடியும். எனக்கே அப்படி என்றால் துப்புரவு வேலை செய்கிறவர்கள் நிலை எப்படி என்று யூகித்துக்கொள்ளுங்கள். எனக்குத் தெரிய நிறையத் தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் கழிவிரக்கத்திற்கும் உள்ளாகியே இருந்தனர். இந்த அவல நிலையை, துயரத்தை, நாற்றத்தை, வலியை, வியாதியை மறக்கவே பலர் குடிக்கின்றனர். அவர்கள் எல்லாம் கடவுள் மாதிரி. அவர்களின் தியாகத்தில் தான் பிற சாதியினர் குளிர் காய்ந்துகொண்டிருக்கின்றனர். மற்றவரகள் எல்லாம் துப்புரவுப்பணியாளர்களின் காலில் விழுந்து தொழவேண்டும்.

எனது குரல் பேட்ரனைசிங் குரலாக ஒலித்தால் அதை நான் ஒத்துக்கொள்கிறேன். நான் புரட்சிக்காரன் இல்லை. சாதாரண மனிதன். எனக்கு ஏற்பட்ட வேதனையைச் சொல்கிறேன். இங்கிருக்கிற பல புரட்சிக்காரர்கள் கழிப்பறைக்குள் ஒரு நிமிடம் கூட நிற்க மாட்டார்கள்.


12.            90 சதவிகிதம் பேர் தலித்துகள் தான் இவ்வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றால், இதுவும் ஒருவகையான சாதிய வன்முறைதானே?

துப்புரவுப்பணி, கையால் மலம் அள்ளுதல், மனித மலத்தை மனிதனே அள்ளுதல் ஆகிய செயல்கள் கண்டிப்பாக சாதிய வன்முறைதான். 90 சதவீதம் என்பது மதுரை மாநகராட்சியில். மற்ற இடங்களில் 95க்கும் மேல் இருக்கும். மீதம் இருப்பவர்கள் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தான். சாதி தான் இங்கு முக்கிய அல்லது ஒரே அளவுகோல். சில வேலைகளை சில சாதிகளுக்கென்றே நாம் ஒதுக்கி வைத்திருக்கிறோம். பிற சாதியினர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த வேலையைச் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. பறையர்களும் அருந்ததியினரும் அதிகம் இந்த வேலைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதுவும் மலம் அள்ளுவதற்கு அருந்ததியினர் மட்டுமே. 100% இடஒதுக்கீடு அவர்களுக்குத் தான். நிரந்தர வேலை எனும் வலையை விரித்து அருந்ததிய மக்களை ஏமாற்றி வருகின்றனர். இப்போது அதிலும் மண் விழுந்து விட்டது. தனியார்மயமாக்கல் கொண்டு வந்து சம்பளக்குறைப்பு, வேலை அதிகம், நிரந்தரமின்மை, பாதுகாப்பு இன்மை என்று மறுபடியும் அருந்ததிய இன மக்களே இந்த வேலைக்கு வைக்கப்படுகின்றனர். இது சாதிய வன்முறை தான்.




13.            முக்கியமாக அதிக அளவில் தலித்துகள் மட்டும் இத்தொழிலில் ஈடுபட வேறு என்ன காரணம்? வறுமை தவிர்த்து?

கிராமங்களில் நிலம் இல்லாமல், வேறு கதி இல்லாமல், சுயமரியாதை இல்லாமல், நல்ல பெயர் கூட இல்லாமல், விதியே என்று தலித் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது. வேறு எந்த வேலையும் கிடையாது என்கிற சாதியக் கட்டுப்பாடு தான் இதற்குக்காரணம். மற்றவரைப் போல கடைகளில் எடுபிடியாகக்கூட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். மேற்கு மாவட்டங்களில் விவசாயத்தில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். பிறபகுதிகளில் அதுவும் இல்லை.

இந்த வேலையை இவர்கள் தான் செய்யவேண்டும் நிர்பந்திக்கப்படும் சூழல் தான் இதற்குக் காரணம். தலித்துகளை பிற சாதியினர் தமக்கு சமமில்லை என்று கருதும் மனோபாவமும் இதற்குக்காரணம்.

ஐரோப்பாவில் கறுப்பின மக்களும், நாடோடிகளும், அகதிகளும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள். இனவெறி மட்டும் இன்றி கதியின்றி வருகின்றான். செய்வான் என்று நினைக்கும் ஆதிக்க வெறியும் தான் காரணம். இந்தப்படத்தில் கூட “சம்பளம் வாங்கிறல்ல..எடு” என்று பிற பெண்கள் சொன்னதாக மாரியம்மாள் சொல்வதைக் காணலாம்.

இப்போது தான் நிலவுடைமைச் சமுதாயத்திற்கு மாற்றாக கல்வி மற்றும் வேறு வேலைகள் அருந்ததியருக்கு எட்டும் தூரத்தில் வந்திருக்கின்றன. இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக்கின்றனர். வேறு வகையில் பிழைத்துக்கொள்ளலாம் என்று தைரியம் வரும் போது இந்த வேலைக்குப் போக மாட்டார்கள். இப்போதே இளைஞர்களிடம் பெரிய மாற்றம் வந்திருக்கிறது. அரசியல் ரீதியாக ஒருங்கிணைந்து போராடும் சூழல் கடந்த பத்தாண்டுகளாகத் தான் அருந்ததியருக்கு உருவாகியிருக்கிறது. இப்போது தான் அருந்ததியருக்கு என கட்சிகள், அமைப்புகள் உருவாகியிருக்கின்றன. உள் இடஒதுக்கீடு வந்திருக்கிறது. மாற்றங்கள் வரும்.

கிராமங்களில் முன்பு வீடுகளில் எடுப்பு கக்கூஸ் என்று இருந்தது. வீடுகளுக்கு அருகே இருக்கும் குறுக்கு சந்துகள் வழியாக வந்து கூடையில் மலத்தை அள்ளிக்கொண்டு போனார்கள். இப்போது எடுப்பு கக்கூஸ் இல்லை. ஆனால் வீடுகளுக்கு கீழே தொட்டி கட்டி மலத்தை சேமிக்கின்றனர். அதில் அடைப்பு வந்தால் இதே தொழிலாளி தான் இறங்கி சுத்தம் செய்ய வேண்டும். இவனும் அழைக்கிறான். அவனும் வருகிறான். இருவரின் மூளைகளிலும் சாதியக் கோட்பாடு ஆழப் பதிந்து இருவரையும் வழிநடத்துகிறது.

இன்றும் பிற சாதியினரின் வீடுகளில் குழந்தையின் மலத்தை பெண்கள் தான் சுத்தம் செய்கின்றனர். ஆண்கள் செய்வதில்லை. இதுவும் ஒரு வகையான பாகுபாடு தான்.

தொடரும்…

No comments:

Post a Comment