Tuesday, May 28, 2013

வாங்க, எழுத்தாளரைச் சந்திக்கலாம்!

தமிழ் எழுத்தாளர்களை சேதாரம் இல்லாமல் சந்திப்பது எப்படி?

1) ஜெயா முன்பு நிற்பது போல வாயை மூடிக்கொண்டு நிற்கலாம்.
2) வாயை முடிந்தால் வீட்டிலேயே கழற்றி வைத்து விட்டுப் போகலாம்.
3) காதை யானைக்காது போல அகலப்படுத்திக்கொண்டு எழுத்தாளர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் சிந்தாமல் சிதறாமல் உள் இழுத்துக்கொள்ளலாம்.
4) ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்களைத் தனியாக சந்திப்பதைத் தவிர்க்கலாம். அவர்கள் சேர்ந்து திட்ட ஆரம்பித்தால் நாடு தாங்காது.
5) ஏதாவது பேச வேண்டும் என்று தோன்றினால் எழுத்தாளரிடம் மன்னிப்புக் கேட்டு விட்டுப் பேசலாம்.
6) எழுத்தாளர்கள் பற்றி நன்கு படித்து மனப்பாடம் செய்து விட்டுப் போகலாம். இல்லையென்றால் அன்னாரைத் தெரியுமா? இன்னாரைப் படித்திருக்கிறாயா? முட்டாளே என்று வசவு வாங்கவேண்டியிருக்கும்.
7) உங்களை யாராவது திட்டினால் தோஷம் அடங்கும் என்று வெள்ளியங்கிரி வெங்கடசாமி சொல்லியிருந்தால் எழுத்தாளரிடம் போய் உங்கள் பெயர், வயது, வயதுக்கு வந்த நாள் ஆகிய தகவல்களைச் சொன்னால் கட்டாயம் திட்டு விழும். தோஷம் அடங்கும்.
8) எழுத்தாளர்களுக்கு வெளிநாட்டுப் பயணம், சரக்கு, இன்ன பிற வசதிகளுக்கு ஸ்பான்சர் செய்தாலோ, ஸ்பான்சர் பிடித்துக்கொடுத்தாலோ திட்டு குறைய வாய்ப்பு இருக்கிறது.
9) உங்களுக்கு ஷங்கரைத் தெரியும், மணிரத்னத்தைத் தெரியும் என்று சொல்லிப்பாருங்கள் (அவர்களுக்கு உங்களைத் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை). பேச்சு வார்த்தை வசவில்லாமல் நடக்கலாம்.
10) எழுத்தாளரைச் சந்தித்துவிட்டு அவர் திட்டிய திட்டுக்களை நினைத்து தனியாக உட்கார்ந்தோ அல்லது கூட்டமாகவோ குமுறி குமுறி அழலாம்.
11) எழுத்தாளரை விட வயதில் மூத்தவராக இருந்தால் அவரைச் சந்திப்பதைத் தவிர்க்கவும். வயது மூத்தவர்களைத் திட்டுவது என்பது அவர்களுக்குப் பிடிக்கும். எத்து கூட விழும் என்று கேள்வி.
12) பத்து அடி தூரத்தில் நின்று பேசிவிட்டு ஓடி விட வேண்டும். இல்லையென்றால் தொலைந்தீர்கள்!
13) இந்து மதம் வாழ்க என்று சொல்லிவிடுங்கள். எழுத்தாளர்கள் பஜனை பாட ஆரம்பித்துவிடுவர்.
14) இட ஒதுக்கீடு ஒழிக என்று சொல்லுங்கள். எழுத்தாளர்கள் உங்களுக்கு முத்தம் கொடுக்கலாம்.
15) தமிழனுக்கு அறிவு இல்லை என்று சொல்லுங்கள். இல்லை. அதைச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. அதை அவரே சொல்வார்.

என் அறிவுக்குப் பட்டது இப்போதைக்கு இவ்வளவு தான்.

நண்பர்கள் மேலும் யோசனைகள் கூறலாம்.

No comments:

Post a Comment