Thursday, September 13, 2012

அப்துல் கலாம் எனும் ஒரு மாயை!



அறிஞர் அப்துல் கலாம் பற்றி எனது தாழ்மையான கருத்துக்கள்:

ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தனின் "போரும் அமைதியும்" என்ற ஆவணப்படத்தில் ஒரு காட்சி. அதில் இந்தியா பொக்ரான் அணு குண்டு சோதனை செய்ததற்கு பாராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. காஞ்சி சங்கராச்சார்யார் பேசுகிறார். மேடையில் பல "விஞ்ஞானிகள்" இருக்கின்றனர். ஜனாதிபதி ஆவதற்கு முந்தைய அப்துல் கலாம் அவர்களும் மேடையில் இருக்கிறார். அப்போது சங்கராச்சாரியார் கலாமைப் பார்த்து "இவர் நம்மவர்" என்கிறார். எல்லோரும் கைத்தட்டுகின்றனர். சில வருடங்களில் கலாம் ஜனாதிபதி ஆகிறார். கலாம் ஜனாதிபதியாக இருக்கும் போது தான் குஜராத்தில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். (அப்படுகொலையையும் சில கூமுட்டைகள் நடந்ததாக இன்னமும் நம்பவில்லை)

கலாம் முன் வைக்கும் மதிப்பீடுகள் என்ன?

1) லோகத்தில் பிரச்சனை இல்லை. நீ நன்னா படிச்சா பெரியாளாயிடலாம். அதுக்கு நானாக்கும் சாட்சி!

2) தொழில்நுட்ப வளர்ச்சி தான் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு. அந்த தொழில்நுட்பம் யார் கையில் இருக்கிறது? அது தன்னளவில் நடுநிலையானதா? அது யாருக்குப் பயன்படுத்தப்படுகிறது? என்பதைப் பற்றி இந்த "விஞ்ஞானி" கேள்வி கேட்பதில்லை

3) அப்துல் கலாம் வேலை பார்த்தது அக்னி ஏவுகணை தயாரிக்கும் அரசு கம்பெனியில். அந்த ஏவுகணை என்ன தண்ணீர் அடிக்கும் பம்பா? ஆட்களைக் கொலை செய்யும் கருவி. அதன் தலையில் அணு குண்டை வைத்து அதை ஒரு புவிப்பரப்பின் மீது வீசினால், அது வெடித்து லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவார்கள். அதற்கு அணு உலை வேண்டும். ஏனெனில் அணு உலையிலிருந்து தான் புளுட்டோனியம் என்கிற பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. புளுட்டோனியம் தான் அணு குண்டுக்கு ஆதாரம். பிறகு எதற்கு அப்துல் கலாம் அணு உலை வேண்டாம் என்பார்? அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானி அல்ல! ஒரு கொலைக்கருவி தயாரிக்கும் கொடூரன்!

4) ஒரு விஞ்ஞானி அரசுக்கும், கார்பரேட் கம்பெனிகளுக்கும் ஜால்ரா போட்டால் எவ்வளவு சீக்கிரமாக முன்னேறி விடலாம் என்பதற்கு அப்துல் கலாம் ஒரு சாட்சி.

5) கண் மூடித்தனமான தேச பக்தி. அப்துல் கலாம் காலத்தில் அது வெளிப்பட்டதா இல்லை அந்தக் காலத்தில் அவர் ஜனாதிபதியாக இருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் நாட்டுக்காக எதையும் செய்யத்துணியும் சுயபுத்தியற்ற, பகுத்தறிவில்லாத நாட்டுப்பற்று வெளிப்பட்டது இவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான். இதற்கு கலாம் ஒரு சின்னமாக விளங்கினார்.

6) நான் உண்டு என் வேலை உண்டு என்று இருக்கும் "ஒழுக்க" மனோபாவம். பள்ளிக்கூடங்களை, சிறைச்சாலைகளுக்கும், போலீசுக்கும், ராணுவத்திற்கும் ஒப்பிடலாம். அங்கு தான் ஒழுக்கம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அந்த ஒழுக்கம் நாளைக்கு வயதானாலும் எல்லாவற்றையும் பார்த்து பயப்படும் மனப்பழக்கத்தைத் தருகிறது. அதுவே எந்தப் பொது பிரச்சனையிலும் தலையிடத் தடையாக இருக்கிறது. எதிர்த்துக்கேட்கும் தைரியத்தைக் குலைக்கிறது. அதற்கு நல்ல ஒரு .கா. கலாம் அவர்கள். நன்றாகப் படித்து அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பவர். இருக்கும்படி எல்லாக் குழந்தைகளுக்கும் சொல்பவர். அதனால் கார்பரேட் கம்பெனிகளுக்கும் அரசுக்கும் பிடித்தமானவர்.

No comments:

Post a Comment