Wednesday, September 5, 2012

எனது சமீபத்திய திரைப்பயணங்கள்

ஆவணப்படங்கள் திரையிடல் பயணம்!


கடந்த மூன்று மாதங்களில் மகாராஷ்ட்ரா, கேரளா மற்றும் ஆந்திரப்பிரதேசம் (ஆந்திரா அல்ல) மூன்று மாநிலங்களுக்குத் திரைப் பயணம் செய்து முப்பதுக்கும் மேற்பட்ட திரையிடல்கள் நடத்தியதும் அவற்றில் நேரடியாகக் கலந்து கொண்டு படங்களை அறிமுகப்படுத்தி, திரையிடலுக்குப் பிந்திய விவாதங்களில் கலந்து கொண்டதும் அப்போது என் மீது வீசப்பட்ட கேள்விகளுக்கு சில சமய்ங்களில் தடுமாறி பல சமயங்களில் சமாளித்து, சில நேரங்களில் ஆத்திரப்பட்டு பதில் சொன்ன அனுபவங்களும் மிகுந்த புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

2012 ஜூன் மாதம் மும்பையில் எனது சமீபத்திய "கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 3: கூடன்குளம்" என்கிற ஆவணப்படத்தைத் திரையிட வேண்டும் என்று இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தனைக் கேட்டுக்கொண்டதும் அவர் அன்புடன் ஒத்துக்கொண்டு "விகல்ப் திரையிடல்" ஒன்றுக்கு மும்பையில் ஏற்பாடு செய்தார். மும்பையில் இரண்டு விகல்ப் திரையிடல்கள் மாதம் தோறும் நடக்கின்றன. ஆனந்த் பட்வர்த்தன் மும்பை பிரித்வி தியேட்டரில் நடத்தும் விகல்ப் திரையிடலில் நான் கலந்து கொண்டேன். பெரும்பாலும் அரசியல் ஆவணப்படங்களே இங்கு திரையிடப்படும். மும்பையில் நடக்கும் இன்னோரு விகல்ப் திரையிடல் "தூயகலை" ஆவணப்படங்கள் திரையிடப்படும் இடம். ரமணி, பரோமித்தா வோரா, மதுசிரி தத்தா போன்றோர்கள் முன் வைக்கிற படங்கள் அவை. எதிரி முகாம் அல்ல. ஆனால் வேறு வகையான சினிமா எடுப்பவர்கள் அவர்கள். அதைப் பின்னால் பார்க்கலாம்.

 ஒரு திரையிடல் உறுதியானதும் அதை ஒட்டி மும்பையில் இருக்கிற டாடா சமூக அறிவியல் கல்லூரியில் இருக்கிற ஆவணப்பட இயக்குநர்கள் அஞ்சலி மொன்டய்ரோ மற்றும் கே.பி.ஜெயசங்கர் ஆகியோரிடம் அவர்கள் கல்லூரியில் ஒரு திரையிடல் ஏற்பாடு செய்யுமாறு கேட்டதும் அவர்களும் ஒத்துக் கொண்டனர். 

இப்படியாக இரண்டு திரையிடல்கள் மட்டும் உறுதியான நிலையில் மும்பை நகரத்திற்கு ரயிலில் கிளம்பினேன். வழக்கம் போல சீட்டு உறுதியாக வில்லை. அதனால் என்னைப்போல இன்னொரு அப்பாவியுடன் இருக்கையை பகிர்ந்தபடி மும்பை சென்றேன். சரியான தூக்கமில்லை. கழிப்பறைக்கு அருகில் உட்காராமல் குறைந்த பட்சம் இருக்கையாவது கிடைத்ததே என்று சந்தோசப்பட்டுக்கொண்டேன். மீசையில் மண் ஒட்டவில்லை என்ற தத்துவமே எனது வாழ்க்கையின் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. இப்போதும் அப்படியே.


மும்பை தாதர் ரயில் நிலையத்தில் இறங்கியதும் அலைப்பேசியில் எடுத்த படம் இது. மும்பையில் விவேக் சந்த்ரா எனும் நண்பர் வீட்டில் தங்கலாம் என்று ஆனந்த் பட்வர்த்தன் சொல்லியிருந்தார். அப்படியே பாந்த்ராவில் இருக்கும் விவேக் என்பவரின் வீட்டுக்குப்போனேன். விவேக் தனியார் கம்பெனிகளில் பெரிய பதவிகளில் 30 வருடங்களுக்கு மேல் இந்தியாவிற்கு உள்ளும் வெளியேயும் வேலை செய்து  ஓய்வு பெற்ற  60 வயது இளைஞர். திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியாக ஒரு கொகுசு அடுக்கு மாடி வீட்டில் குடியிருக்கிறார். இப்போது அவர் ஒரு முழு நேரக் களப்பணியாளர். தனது முழு நேரத்தையும் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள்,  படிப்பது, சினிமா பார்ப்பது, பயணம் செய்வது என்று கழிக்கிறார். அவர் வீட்டுக்குப் போனதும் அவர் அன்பைப் பொழிந்து விட்டார். அப்படி ஒரு அற்புதமான மனிதரை நான் அரிதாகவே பார்க்கிறேன். என்னை தனது மகன் போலப் பார்த்துக் கொண்டார். அவர் மூலமாக மும்பையில் இன்னும் நிறைய திரையிடலுக்கு ஏற்பாடு ஆனது. இருவரும் சேர்ந்து அன்று மாலை விகல்ப் திரையிடலுக்குப் போனோம்.

விகல்ப் திரையிடல்:


விகல்ப் என்றால் தீர்வு அல்லது விடிவு என்று பொருள். 2004ம் ஆண்டு மும்பையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மும்பை சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவில் அதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் இணைத்துக்கொடுத்தால் தான் படங்கள் தேர்வுக்குழுவின் பார்வைக்கே போகும் என்ற புதிய விதி கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து இந்திய ஆவணப்பட இயக்குநர்கள் போராடினர். விகல்ப் என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கினர். போட்டித் திரைப்பட விழாவையும் நடத்தினர். அன்று முதல் இந்தியாவின் முக்கிய நகரங்களில் விகல்ப் கிளைகள் தொடங்கப்பட்டு திரையிடல்கள், திரைப்படவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. பல நகரங்களில் அவ்வமைப்புகள் செயலிழந்து விட்டன. இன்னும் மும்பையில் இரண்டு குழுக்களாகப் பிரிந்து திரையிடல்கள் நடக்கின்றன. ஒரு குழுவினர் சினிமா வெரிடே வகையினர். அதில் தான் ஆனந்த் பட்வர்த்தன் இருக்கிறார். அதில் தான் எனது கூடன்குளம் படம் திரையிடப்பட்டது. இன்னொரு குழுவினர் கிறிஸ் மார்க்கரின் கட்டுரைச் சினிமா வகையினர். அவர்களுக்கு என் வகை சினிமா பிடிக்காது. சினிமாவை செதுக்கி உருவாக்க வேண்டும் என்பது அவர்களது வாதம். சினிமா தானாக உருவாவதும் அதற்கு நாம் கருவியாக இருப்பதும் சினிமா வெரிதே முறை. இவர்களுக்கு அவர்களைப் பிடிக்காது. அவர்களுக்கு இவர்களைப் பிடிக்காது. ஆனால் பார்த்தால் பேசிக்கொள்வர். 


மும்பையில் ஜூஹூ கடற்கரைப் பகுதியில் இந்தி நடிகர் சசி கபூரின் மகள் சஞ்சனா கபூர் நடத்தும் ப்ரித்வி தியேட்டரின் ஒரு பகுதியில் உள்ள ஒரு நீண்ட அறையில் விகல்ப் திரையிடல் மாதந்தோறும் நடக்கிறது. ஆனந்த் பட்வர்த்தன் அதை முன் நின்று நடத்துகிறார். அன்றைய திரையிடலுக்கும் அவரே கேபிள் மாட்டுவது, சப்தத்தை சரி செய்வது, ப்ரொஜக்டரில் படம் சரியாக வருவதை உறுதி செய்வது ஆகிய வேலைகளை செய்தார். இது மாதிரி எத்தனை திரையிடல்கள் நடத்தியிருப்பார் என்று எனக்குத் தோன்றியது. பார்வையாளர்கள் பலர் தரையில் அமர்ந்து இருந்தனர். எல்லோருக்கும் பின்னால் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. சிலர் அவற்றிலும் அமர்ந்திருந்தனர். அரங்கு நிறைந்த காட்சி. கதிர்வீச்சுக் கதைகள் பாகம் 3: கூடன் குளம் எனும் எனது சமீபத்திய ஆவணப்படம் திரையிடப்பட்டது. 80 நிமிடம் ஓடக்கூடிய படம். எல்லோரும் நன்றாக ரசித்துப் பார்த்தனர். கைத் தட்டினர். சிரித்தனர். கண் கலங்கினர். படத்திலிருந்து கூடன்குளம் போராட்டத்தின் சக்தி பார்வையாளர்களுக்குப் பரவுவதை உணரமுடிந்தது. தலை தப்பியது போன்ற ஒரு நிம்மதி உருவானது.

டாடா சமூக அறிவியல் கல்லூரி

மும்பை, தேவ்னார் பகுதியில் இருக்கும் டாடா சமூக அறிவியல் கல்லூரியில் இருக்கும் ஊடகத்துறையின் சார்பாக அஞ்சலி மொன்டய்ரோ அவர்களும் கே.பி.ஜெயசங்கர் அவர்களும் 'கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 3: கூடன்குளம்' ஆவணப்படத்தின் திரையிடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். நான் மட்டும் ஒரு டாக்சி எடுத்துக்கொண்டு அந்தக் கல்லூரிக்குப் போனேன். திரையிடல் ஒரு சிறிய வகுப்பறையில் நடைபெற்றது. ஆனால் மாணவர்கள் நிறையப்பேர் வந்துவிட்டனர். அரங்கு நிறைந்த காட்சியாக திரை வரைக்கும் மாணவர்கள் உட்கார திரையிடல் நடைபெற்றது.


விவாதமும் அற்புதமானதாக இருந்தது. மாணவர்கள் சமூக அறிவியல் கல்லூரியின் பின்னணியிலிருந்து வந்ததனால் குறைந்த பட்ச அக்கறையும் புரிதலும் கொண்டிருந்தனர். அதனால் இந்தியாவிற்கு மின்சாரம் வேண்டாமா? ஒரு நாடு முன்னேற சிலர் தியாகம் செய்து தானே ஆகவேண்டும்! கூடன்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதாமே? அப்துல் கலாமே சொல்லி விட்டாரே என்று கேள்விகள் கேட்கப்படவில்லை. போராட்டம் பற்றிய தகவல்களை, மக்கள் தங்களை ஒருங்கிணைப்பு செய்து கொள்வது பற்றிய தகவல்கள், மக்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகள் ஆகியன பற்றி பேச்சு வந்தது.  இரண்டு திரையிடல்களும் நல்ல மனநிறைவைத் தந்தன. ஆனாலும் இரண்டுமே ஏற்கனவே மனம் மாறியவர்கள் மத்தியில் தான் நடந்தது என்கிற உண்மை காதில் ஒலித்தபடியே இருந்தது.


மும்பைத் திரையிடல் பயணத்தில் எனக்குக் கிடைத்த முக்கியமான அரிய வாய்ப்பு பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் வேலை பார்த்து, கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட, அணுசக்தித் துறையுடன் தொடர்ந்து தனது உரிமைக்காக போராடிய, ஓய்வு பெற்ற பொறியாளர், முதியவர் ஆர்.கே. குப்தா  அவர்களை நான் சந்தித்தது.  விகல்ப் (ப்ரத்வி) திரையிடலுக்கு ஒரு கால் நடக்க முடியாத நிலையிலும் வந்திருந்தார். அங்கே நான் அவரை சந்தித்தேன். அதன் பிறகு ஜய்தாபூர் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டு போராடும் சஜ்யஜித் எனும் நண்பரும் ராஜேந்திரா எனும் நண்பரும் என்னுடன் குப்தா அவர்களைப் பார்க்க வந்திருந்தனர்.


குப்தா அவர்கள் திருமணமான புதிதில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கு புளுட்டோனியம் அணு உலையில் தான் வேலை. புளுட்டோனியம் என்பது ஏற்கனவே ஒரு அணு உலையில் பயன்படுத்தப்பட்ட யுரோனியத்தின் கழிவிலிருந்து மறுசுத்திகரிப்ப்பு செய்யப்பட்டு உருவாகிறது. கதிர்வீச்சு அதிகம். பாதிப்பும் அதிகம். வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட ஆபத்தான புளுட்டோனியம் அணு உலையில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டதனால், அதில் வேலை செய்தார். சில மாதங்களிலேயே கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டு சோரியாசிஸ் எனும் தோல் வியாதி ஏற்பட்டது. அதற்கு மருத்தவம் பார்த்தார். மீண்டும் மீண்டும் அவ்வணு உலையில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்தாலும் கட்டாயபடுத்தப்பட்டார். அப்போது ஆரம்பித்த அவரது போராட்டம் இன்னும் தொடர்கிறது. அணு சக்தித் துறை எவ்வளவு மோசடி செய்கிறது என்றும் யாருக்கும் அவர்களைப் பற்றித் தெரியாததால் அவர்கள் தொடர்ந்து நிறைய ஊழல் புரிவதையும், விபத்துகள் நடப்பதையும், தொழிலாளர்களும், பொதுமக்களும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதையும் விவரமாக விளக்கினார். மிகுந்த தாக்கத்தை உண்டாக்கிய சந்திப்பு அது.

தானே நகரத்தில் திரையிடல்

அதற்கு அடுத்தபடியான திரையிடல் மும்பைக்கு அருகே உள்ள தானே நகரத்தில் நடைபெற்றது. களப்பணியாளர் ராஜேந்திரா ஏற்பாடு செய்திருந்தார். ஒரு சிறிய அறையில் 30 பேர் படம் பார்த்தனர்.  படத்தின் சப்தம் சரியாக இல்லை. திரையில் படம் கோணலாக விழுந்தது. இருந்தாலும் மக்கள் பொறுமையாகப் பார்த்தனர்.  விவாதம் தொடங்கியதும் தான் விவகாரம் தொடங்கியது. உதயகுமாருக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதாமே என்று தொடங்கினார் ஒருவர். போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்றார். பிரதமரே சொல்லிவிட்டார் வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்று. பிறகு என்ன? என்று ஆரம்பித்தார். விவாதம் அதைச் சுற்றியே நிகழ்ந்தது.


அதற்கான நான் அளித்த பதில்:

1) போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு சம்பளமோ லஞ்சமோ எதுவும் கொடுக்கப்படுவதில்லை. எல்லோரும் தன்னார்வத்துடன் தான் கலந்து கொள்கின்றனர்.
2) போராட்டத்தில் ஆகும் செலவை மக்களே ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். மீனவர்கள் தொடர்ந்து கடலுக்குச்செல்கின்றனர். மீன் பிடிக்கின்றனர். வாரத்தில் ஒரு நாள் எல்லோரும் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கு போராட்டத்திற்குக் கொடுக்கின்றனர். அதுவே போதுமானது. வேறு பணம் தேவையில்லை.
3)வேறு எந்த நிறுவனத்திடமிருந்தும் நிதி வாங்கவில்லை. எல்லாக் கணக்கையும் போராட்டக்குழு பத்திரிக்கையில் வெளியிட்டது. எல்லாமே வெளிப்படையாக இருக்கிறது.
4) சில தொண்டு நிறுவனங்களிடம் கணக்குப் பார்த்தார்கள். நெருக்கடி கொடுத்தார்கள். யாரும் போராட்டக்குழுவிற்கு பணம் கொடுத்ததாக நிரூபிக்கமுடியவில்லை என்று நாராயணசாமி ராஜ்யசபாவில் ஒத்துக்கொண்டார்.

ஆனாலும் அந்த நண்பர் திருப்தி அடையவில்லை. திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் இந்த மாதிரியான கேள்வி கேட்பவர்கள் நான் சொல்லும் சொன்ன பதிலை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ, பொது அரங்கில் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்படும் போது பொறுமையாக பதில் சொல்வதன் மூலம் கேள்வி கேட்கும் நபரை விட மற்றவர்களுக்கு உண்மை போய் சேர்வதை சுலபமாக்க முடியும். ஏனெனில் நிறைய நேரங்களில் கேள்வி கேட்பவர்கள் முன் முடிவு எடுத்தே கேட்கின்றனர். அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி மொளனமாக இருக்கிற மற்றவர்கள் காதுகளில் நமது கருத்தைப் போடுவதே சிறந்த செயல் என்று நினைக்கிறேன்.


தானே நகரத்திற்குப் பிறகு நான் போன ஊர் பூனா. செங்கொடி (லெனின்வாதி) என்றொரு கட்சி அலுவலகத்திற்குப் போனேன். இடதுசாரி கட்சியான அக்கட்சிக்கென்று பூனா நகரின் மையப்பகுதியில் இரண்டு மாடி கட்டடம் ஒன்று இருக்கிறது. பூனா நகரத்தில் நிறைய உறுப்பினர்கள் கொண்ட தொழிற்சங்கங்களைக் கொண்ட கட்சி அது. அதன் அலுவலகத்தில் ஒரு மாலை நேரத்தில் கூடன்குளம் படம் திரையிடப்பட்டது. 200க்கும் மேற்பட்டவர்கள் ஆண்களும் பெண்களுமாய் வந்திருந்தனர். கட்சி உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் அவர்கள். பூனாவில் வாழும் தமிழர் ஒருவர் மராட்டிக்கு மொழிபெயர்ப்பு செய்ய முயன்றார். ஆனால் அவரால் நிறைய "போராட்ட வார்த்தைகளுக்கு" மராட்டி வார்த்தை கொடுக்க முடியவில்லை. எனவே செங்கொடி கட்சியின் தோழர்களின் ஒருவரான மேதா ஆங்கிலத்திலிருந்து மராட்டிக்கு படம் போகும் போது நேரடி மொழிபெயர்ப்பு செய்தார். மக்களும் ரசித்துப் பார்த்தனர். அதன் பிறகு நல்ல விவாதம் நடைபெற்றது.  

அக்கட்சியின் தலைவர் மூத்த கம்யூனிஸ்ட தோழர் பாலச்சந்திர கேட்கர் பேசும் போது "இனி நமது பழைய அரசியல் உத்திகள் எல்லாம் செல்லுபடி ஆகாது. இந்தியாவிற்கு உதயகுமார் போன்ற தலைமைகள் தான் வேண்டும்" என்றார். அன்று இரவே நான் உதயகுமாரை கைபேசியில் அழைத்தேன். திரையிடல் பற்றி சொன்னேன் அவரிடம். பாலச்சந்திர கேட்கரும் உதயகுமாரிடம் பேசினார். எனக்கு மிக்க மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது. நல்ல வேலை தான் செய்து கொண்டிருக்கிறோம் என்றும் புரிந்தது.

தொடரும்...

2 comments:

  1. வாழ்த்துக்கள்! அன்புடன்....பாலகணேசன்,கூடங்குளம்.

    ReplyDelete
  2. நன்றி பாலகணேசன். கூடன்குளம் படம் பிடிக்க நான் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த போது காவலர்கள் கண்காணிக்கிறார்கள் என்று நீங்கள் என்னிடம் பேசாமல் தூரத்தில் நின்றிருந்ததும் கூடன்குளம் படத்தை எப்போது முடிப்பேன் என்று அடிக்கடி நீங்கள் தொலைபேசியின் அழைத்ததும் எனக்கு நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete