Sunday, November 13, 2011

சரத் சந்திரன்

கலகக்காரன் சரத் சந்திரன் 

  - அமுதன் இராமலிங்ம் புஷ்பம்




சரத் சந்திரன் 2010, ஏப்ரல் 1ம் தேதி கேரளாவில் திருச்சூருக்கும் எர்ணா குளத்திற்கும் நடுவே கொடக்கரா என்ற ஊரில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்தார். அவரது மரணம் இந்தியாவின் ஆவணப்பட இயக்கத்திற்கு ஒரு பெரிய இழப்பு என்று ஆவணப்பட வட்டாரத்தில் கருதப்படுகிறது. அவரது முதலாம் நினைவு நாளில் (2011, ஏப்ரல் 1) இந்தியா முழுக்க பல இடங்களில் அவரது படங்கள் திரையிடப்பட்டு அவரது பங்களிப்பு நினைவு கூறப்பட்டது.

சரத் சந்திரனே ஒரு தனி நபர் இயக்கம். படங்கள் தயாரிப்பது, அவற்றைத் திரையிடுவது, மற்றவர் படங்களையும் திரையிடுவது, அவற்றைப்பற்றித் தொடர்ந்து பேசுவது, மக்கள் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது, அவற்றுக்கு ஆதரவு திரட்டுவது என்று ஒரு தவம் போல தனது பணிகளை நடத்திக்கொண்டிருந்தார். திடீரென்று இறந்து போனார். பல நண்பர்கள் அவரது அன்பையும், நட்பையும், பணியையும் எப்போதும் எளிதாகக் கிடைக்கக்கூடியதென்று சற்று மிதப்பிலிருப்பர். எல்லோரையும் அதிர்ச்சியூட்டியபடி மறைந்து போனார்.

திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் பேருந்து நிலையத்தில் ஒரு சாயங்கால வேளையில் சரத் சந்திரனை நான் 1999 ஆண்டு முதன்முதலாக சந்தித்தேன். அவர் தனது நண்பர் பி.பாபுராஜுடன் இணைந்து இயக்கியிருந்த “சாலியாறு – ஒரு இறுதிப்போராட்டம்” என்ற ஆவணப்படத்தைத் திரையிடுவதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்தார். நானும் நண்பர் சந்தோஸ்குமாரும் அவருடன் இணைந்துகொண்டோம். நிலம்பூர் பேருந்து நிலையத்தில் முதன்முதலாக அவர் திரையிடல் நடத்தியதை நான் பார்த்தேன்.


சாலியாறு - ஒரு இறுதிப்போராட்டம் என்ற படத்திலிருந்து 

சடசடவென்று கம்பி சன்னல்களில் மீதேறி திரை கட்டினார். பக்கத்து கடையில் பேசி மின்சார இணைப்பு கொடுத்தார். உள்ளூர் நண்பர்கள் ஒலி பெருக்கி பெட்டியைக் கொண்டுவந்தனர். வருகிற போகிற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தனர். சிலர் மம்முட்டி சினிமாவா என்று கிண்டல் செய்தனர். சிலர் குடும்பக்கட்டுப்பாடு விளம்பரமா என்று சிரித்தனர். சரத் பொறுமையாக புன்னகைத்தபடி மைக்கில் எல்லோருக்கும் வணக்கம் சொன்னார். நண்பர் ஒருவர் பாடல் பாடினார். மெதுவாகக் கூட்டம் கூடியது. சாலியாறு ஆவணப்படம் தொடங்கியது. பிர்லாவுக்குச் சொந்தமான ரேயான் தொழிற்சாலையினால் சாலியாறுக்கும் சுற்றி வாழும் மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு, அதை எதிர்த்த மக்கள் போராட்டம் பற்றிய படம் அது. திரையிடல் தொடங்கியதும் இருட்டில் அமர்ந்து சரத் சந்திரன் புகைபிடிக்க ஆரம்பித்தார்.

அதுவரை ஆவணப்படத்தின் சத்தம் கேட்கும்படியிருக்கிறதா, படம் தெளிவாகத் தெரிகிறதா, ப்ரொஜக்டருக்கு மின்சாரம் சரியாக வருகிறதா என்று பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தவர் திரையிடல் தொடங்கியதும் சாந்தமாகிவிட்டார். குழந்தைக்கு முலைப்பால் ஊட்டும் போது தாயிடம் தெரியும் ஒரு அமைதி அவர் முகத்தில் தெரிந்தது. ஒரு பெருமை, ஒரு திருப்தி, ஒரு போதை அவரது நடவடிக்கையில் வெளிப்பட்டது. இது மாதிரி நூற்றுக் கணக்கான திரையிடல் நடத்தியிருக்கிறார் சரத் சந்திரன். தனக்குக் கிடைத்த ஒரு ஒளியை, முக்தியை, மார்கத்தை சகமனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு பக்திமானை ஒத்த பிடிவாதம் கொண்டவர். ஒரு நல்ல படம் கிடைத்தால் போதும். அதை எப்படியாவது அக்கறையான ரசனை மிகுந்த பார்வை யாளர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று உடனடியாகத் திட்டமிடத் தொடங்கிவிடுவார்.


சரத் சந்திரனைப் பற்றிய ராசி முகம்மது எடுத்த
 "மூன்றாவது கண்" என்ற படத்திலிருந்து

சரத் சந்திரன் 1958 ஆண்டு பிப்ரவரி 16 நாள் திருவனந்தபுரத்தில் சந்திரசேகரன் நாயர் என்கிற ஹிந்தி வித்துவானுக்கும் சமூக சேவகரும் காந்தியவாதியுமான MP மன்மதன் அவர்களின் மகளான சாரதாவிற்கும் பிறந்தார். கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் சுதாவின் கணவர்.

பள்ளிக்காலங்களில் எமர்ஜென்சிக்கு எதிரான அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார் சரத் சந்திரன். கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு மலையாளத் திரைப்பட இயக்குநர்கள் ஜான் ஆப்ரகாமிடமும் அரவிந்தனுடும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். 80களில் சம்கரமனம் என்ற மலையாள சிறுபத்திரிக்கை நடத்துவதில் பங்குபெற்றார். சைலன்ட் வேளி – மலையாள வார்த்தை இல்லை- (SILENT VALLEY) பாதுகாப்பு இயக்கத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.

இடையில் பிரிட்டிஸ் கவுன்சிலின் கல்வி வளர்ச்சி ஆலோசகராக சவுதி அரேபியாவில் பத்தாண்டுகள் வேலை செய்துவிட்டு தொண்ணூறுகளின் இறுதியில் இந்தியா வந்து அதிதீவிரமாக உலகளாவிய சினிமாவை கேரளாவின் மூலை முடுக்கெங்கும் எடுத்துச்சென்றார். தற்போது உலக சினிமாவின் DVDக்கள் சுலபமாகக் கிடைக்கின்றன. 2000த்தின் தொடக்கத்திற்கு முன்பு இவை சுலபமாகக்கிடைக்காது. இவற்றைக்காண திரைப்படவிழாக்கள் தான் ஒரேவழி. அவ்விழாக்களும் வருடத்திற்கு ஓரிரு முறை தான் நடக்கும். அவற்றில் கலந்து கொள்வததும் அத்தனை எளிதும் அல்ல.


அகிரா குரோசாவா

சரத் சந்திரன் சவுதியில் இருந்து உலகின் மிக முக்கிய இயக்குநர்கள் என்று கருதப்படுகிற ஃபெலினி, கொதார்ட், பெர்க்மான், குரோசாவா, கீஸ்லோவ்ஸ்கி போன்றவர்களின் படங்களின் VHS பிரதிகளைக் கொண்டு வந்தார். அவற்றை தனது வீட்டின் உள்ளறைக்குள் பூட்டி வைக்காமல் பரவலாகக் பகிர்ந்து கொண்டார். திரையிட்டார். மதுரையில் கீஸ்லோவ்ஸ்கியின் திரைப்படவிழா, திருநெல்வேலியில் டார்கொவ்ஸ்கியின் திரைப்படவிழா நடத்தியதை நண்பர்கள் மறக்க மாட்டார்கள்.


கிறிசிஸ்டவ் கீஸ்லோவ்ஸ்கி

சினிமா, அதுவும் குறிப்பாக ஆவணப்படங்கள் சமூக மாற்றத்திற்கான கருவியாக இருக்கவேண்டும் என்று சரத் சந்திரன் நம்பினார். கேரளாவில் நடந்த முக்கியமான மக்கள் போராட்டங்களில் தவறாமல் தனது கேமராவுடன் கலந்து கொள்வார். படமாக அது வெளிவருகிறதோ இல்லையோ பதிவு செய்து கொள்வார். பல சமயங்களில் தான் பதிவு செய்ய வந்திருக்கிறோம் என்பதை மறந்து போராட்டத்தில் கலந்து கொள்வார்.

ஆரம்பத்தில் VHS வடிவத்தில் படங்கள் திரையிட்டார். நாங்கள் மதுரையில் 1998ல் திரைப்படவிழா நடத்தத் தொடங்கியதும் மிகுந்த ஆர்வத்துடன் தன்னிடம் இருந்த வெளிநாட்டு முழு நீளத் திரைப்படங்களை, ஆவணப் படங்களைக் கொடுத்து உதவினார். தனது வீடியோ ப்ரொஜக்டரைக் கொண்டு வந்து தானே முன்னின்று திரையிட்டார். படங்களை அறிமுகப்படுத்தியும் படம் முடிந்த பிறகு விவாதத்தில் கலந்து கொண்டும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

1987ல் SAVE THE WESTERN GHAT MARCH, 1988ல் NO TO DAMS, 1988ல் எல்லாம் அஸ்தமிக்கும் முன்பே ஆகிய ஆவணப்படங்களைத் தயாரித்து இயக்கினார்.


"மூன்றாவது கண்" என்ற படத்தில் பி.பாபுராஜ்

1999ல் சாலியாறு – ஒரு இறுதிப்போராட்டம் (பி.பாபுராஜுடன் இணைந்து), 2001ல் கேரளாவின் ஆதிவாசிக் குழந்தைகள் பற்றி கனவு, 2003ல் பிளாச்சிமடாவில் கோககோலா கம்பெனிக்கு எதிரான போராட்டம் பற்றி BITTER DRINK (பி.பாபுராஜுடன் இணைந்து), 2003ல் முத்தங்காவில் ஆதிவாசிகளுக்கு எதிரான காவல்துறை வன்முறை பற்றி EVICTED FROM JUSTICE, 2005ல் SILENT VALLEY பற்றி ONLY AN AXE AWAY (பி.பாபுராஜுடன் இணைந்து), 2006ல் பிளாச்சிமடா போராட்டம் பற்றி 1000 DAYS AND A DREAM (பி.பாபுராஜுடன் இணைந்து) , 2010ல் ஜான் ஆப்ரகாம் பற்றி YOURS TRULY JOHN ஆகிய படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார்.


BITTER DRINK என்ற படத்திலிருந்து

சரத் சந்திரன் நோட்டம் என்கிற பெயரில் திரைப்படங்களை எடுத்துக்கொண்டு கேரளாவின் முக்கிய நகரங்களில் தொடர் சுற்றுப்பயணம் சென்று திரைப்பட விழாக்கள் நடத்தினார். மனித உரிமை, சுற்றுச்சூழல், மத அடிப்படை வாதம், சாதிய ஒடுக்குமுறை, பாலின சமத்துவம் போன்ற தலைப்புகளில் படங்கள் திரையிட்டு அவற்றைப் பற்றி கேரள சிந்தனைச் சூழலில் விவாதங்களை எழுப்பினார். இத்தகைய வேலைகளை பெரிய கட்சிகளோ, அமைப்புகளோ, நிறுவனங்களோ செய்யத் தயங்கிய காலங்களில் தனி நபராக நண்பர்களில் துணை கொண்டு நிறைவேற்றினார். இடது சாரி சிந்தனை கொண்டவராக இருந்தாலும் கட்சி சாராத களப்பணியாளராகவே தன்னை வடிவமைத்துக் கொண்டார்.


1000 DAYS AND A DREAM என்ற படத்திலிருந்து

நிறுவனங்களில் இருந்து படங்கள் தயாரிக்க நிதி வாங்குவதில்லை என்பதில் உறுதியாகயிருந்தார். பல சமயங்களில் கடும் நிதி நெருக்கடியிலிருக்கும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். நண்பர்கள் உதவியோடுதான் பல சிக்கல்களை சமாளித்தார். தனது மனைவி அரசு உத்தியோகத்தில் இருந்ததால் குடும்பச்செலவுக்கு சிக்கல் வந்ததில்லை. சவுதியில் வேலை செய்து சேமித்த காசில் திருப்புனித்துராவில் ஒரு வீடு வாங்கியிருந்தார். அன்றாட வாழ்வியல் சிக்கல்கள் இல்லையென்றாலும் அடுத்த படம் எடுப்பது அல்லது தொடங்கிய வேலையைத் தொடர்வது, முடிப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அவற்றைக் கடப்பதில் மிகுந்த சிக்கலுக்குள்ளானார்.

குடிப்பழக்கம் சரத்திற்கு பல முகங்களைக் கொடுத்தது. குடி அவருக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் சோர்வுக்கு விடையாகவும் இருந்திருக்கிறது. தன்னை மறந்த நிலை வரை குடிப்பது, குடித்துவிட்டு தெருவோரங்களில் கிடப்பது, பின்னிரவு நேரங்களில் போதையில் நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவது என்று குடிப்பழக்கம் அவரது ஆளுமையின் ஒரு அங்கமாகவே இருந்தது. சாகிற நாளில் கூட நன்றாகக் குடித்திருந்தார் என்றும் ரயிலில் இருந்து தவறித்தான் கீழே விழுந்தார் என்றும் நண்பர்கள் கூறுகின்றனர். நிறைய முறைகளில் போதையில் பொருட்களைத் தொலைத்திருக்கிறார். எந்நேரமும் தெருவிலேயே, பொதுவெளியிலேயே இருந்தார். அவருக்கு நண்பர்கள் மட்டும் தான், குடும்பம் இல்லை என்கிற எண்ணம் அவருடன் பழகும் நண்பர்களுக்கு உருவாகும். அவ்வளவு தூரத்திற்கு அவர் ஒரு பொதுமனிதர். எல்லாத் தரப்பிலும் நண்பர்கள் அவருக்கு. எல்லோருடனும் மிகுந்த வாஞ்சையோடு பழகுவார். நண்பர்களில் கலை முயற்சிகளுக்கு நல்ல உதவி செய்வார். தன்னிடமிருக்கும் தொடர்புகளைப் பகிர்ந்து நண்பர்களது முயற்சிகள் வெற்றியடைய முழுமுனைப்புடன் செயல்படுவார் சரத் சந்திரன். அவருக்கு வேறு வகையான –இயற்கையான அல்லது நோய்வாய்ப்பட்டு - மரணம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

சரத் சந்திரனுடைய ஆவணப்படங்கள் பல சர்வதேசத் திரைப்படவிழாக்களில் போட்டிக்கு, திரையிடலுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. நிறைய சர்வதேச அளவிலான விருதுகள் பெற்றிருக்கிறார். விருதுகள் பற்றியோ திரைப்பட விழாக்கள் பற்றியோ பெரிதும் அக்கறைப்படாமல், தான் படமாக எடுத்த விசயத்தை வெளிக்கொணர்ந்தால் போதும் என்றும் தனக்கு ஆதாயம் எதுவும் தேவையில்லை என்றும் அடிக்கடி சரத் கூறக்கேட்டதுண்டு. அவரது சினிமாக்கள் பிரச்சாரத் தன்மை கொண்டவை, கலைப்படைப்புகள் அல்ல என்கிற விமர்சனத்தை அவர் ஏற்றுக்கொண்டார். தான் படம் எடுக்கும் நோக்கமே மக்கள் பிரச்சனையை, போராட்டத்தை வெளிப்படுத்தவே ஒழிய தனது ஆளுமையை வெளிப்படுத்த அல்ல என்றும் அப்படி ஆளுமையை வெளிப்படுத்தும் கலைஞர்கள் கேரளாவில் நிறைய ஏற்கனவே இருக்கிறார்கள், நான் அதைச் செய்யவேண்டியதில்லை என்றும் சரத் சந்திரன் கூறு,வதுண்டு.


அருந்ததி ராய்

ஆனந்த் படவர்தன், மேதா பாட்கர், அருந்ததி ராய், கே பி சசி, போன்ற களப்பணியாளர்களுடன் நெருங்கிய நட்பில் இருந்தார் சரத். அவர்களது பணிகள் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் பேசுவார். அவர்கள் கேரளாவிற்கு வந்தாலோ அல்லது சரத் சந்திரன் அவர்களது ஊருக்குப் பயணப்பட்டாலோ நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்து சந்தித்துவிடுவார். இந்தியா முழுக்க நடக்கிற மக்கள் போராட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வார். நர்மதா அணைத்திட்டங்களுக்கு எதிரான போராட்டம், போபால் பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான போராட்டம், குஜராத்தில் நடந்த இஸ்லாமியர் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டம், ஒரிசாவில் நடந்த கிறிஸ்தவர் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டம், ஆதிவாசிகளுக்கு எதிராக பல மாநிலங்களில் குறிப்பாக ஜார்க்கண்ட், சத்திஸ்கர், ஒரிசா ஆகிய இடங்களில் அம்மாநில அரசுகள் நடத்தி வருகிற வன்முறை, ஒடுக்குமுறை, சுரண்டலுக்கு எதிராக படங்கள் திரையிடுவது, விவாதங்கள் நடத்துவது, போராட்டம் நடத்துவது என்று ஒரு முழு நேரக் களப்பணியாளராகவே இருந்தார்.


இலங்கை இனப்படுகொலை

இலங்கையில் நடந்த தமிழர் படுகொலை, அவ்விடயத்தில் தமிழக அரசியல் கட்சிகள் நடந்து கொண்ட விதம் சரத் சந்திரனை மிகவும் பாதித்தது. ஆவணப் பட இயக்குநர் சோமிதரன் இயக்கிய முல்லைத்தீவு என்கிற படத்தை வெகுவாக கேரளா முழுக்கத் திரையிடல் நடத்தி விவாதம் நடத்துவதில் பெரும் பங்காற்றினார். ராஜப்க்சே ஒரு போர்க்குற்றவாளி தான் என்றும் அவர் விசாரணைக்குட் படுத்தப்படவேண்டும் என்றும் சரத் உறுதியாக இருந்தார். முல்லை பெரியாறு அணைப்பிரச்சனையில் இரு மாநில மக்களின் கருத்துக்களைப் பதிவு செய்யும் படமொன்றை எடுக்க வேண்டும் என்றும் தண்ணீர் பற்றிய உரையாடல் நடத்துவதற்கு அது துணையாக இருக்க வேண்டும் என்றும் சரத் சந்திரன் கூறக்கேட்டதுண்டு.



கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்று வரும் விப்கியார் VIBGYOR திரைப்படாவிழாவின் நிறுவனர்களில் அமைப்பாளர்களில் சரத் சந்திரனும் ஒருவர். VIBGYOR திரைப்பட விழாவில் சர்வதேச ஆவணப்படங்கள், குறும்படங்கள், அனிமேசன் படங்கள், இசைப் படங்கள் ஆகியவற்றைத் திரையிடுவதோடு உலகம் முழுக்க நடக்கிற மக்கள் போராட்டங்கள் பற்றிய கலந்தாய்வுகள், கருத்தரங்கங்கள், புகைப்பட மற்றும் புத்தகக் கண்காட்சிகள் மற்றும் இசை இரவுகள் நடைபெறும். கேரளாவின் பல பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், உலகின் பல நாடுகளிலிருந்தும் பங்கேற்பாளர்கள், களப்பணியாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் கலந்து கொள்வர். சரத் சந்திரனுக்கு VIBGYOR திரைப்பட விழா மீது மிகுந்த நம்பிக்கையும் பிரியமும் பெருமையும் உண்டு.

2011 பிப்ரவரி மாதம் நடைபெற்ற VIBGYOR திரைப்படவிழா சரத் சந்திரனை நினைவு கூர்ந்தது. அவர் விட்டுச்சென்ற பணிகள் தொடரும் என்ற வெளிச்சத்தை அது கொடுத்தது. எப்பொதும் கூடவே இருப்பார் என்று நம்பிய சரத் தம்மிடமில்லை என்று நண்பர்கள் உணர்ந்து கொண்டனர். அவர் செய்த வேலைகள் இனியொரு தனி நபரால் செய்ய முடியுமா என்கிற கேள்வியும் அவர் ஏன் நிதிச்சிக்கலில் தொடர்ந்து மாட்டிக்கொண்டார், அதை ஏன் அவரால் கடைசி வரை நிவர்த்தி செய்யவே முடியவில்லை, இவரைப் போன்றவர்க்கு ஏன் இப்படிப்பட்ட சிக்கல்கள் நீடிக்கின்றன, பொது வேலைகள் செய்தால் இப்படிப்பட்ட நெருக்கடிகள் வரத்தான் செய்யுமா என்று பல கேள்விகள் எழுந்தன. கலகக்காரனாக வாழ்வது வெளியே பரவசமாகத் தெரிந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் விரக்தியும் சோர்வும் தடுமாற்றமும் வலி நிறைந்தவை. சரத் சந்திரன் கலகக்காரனாகவே வாழ்ந்தார். கலகக காரனாகவே மறைந்தார்.

No comments:

Post a Comment