இந்திய ஆவணப்பட இயக்கத்தின் பிதாமகன்
ஆனந்த் பட்வர்த்தன்
- அமுதன் இராமலிங்கம் புஷ்பம்
ஆனந்த் படவர்த்தன் மும்பையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர், ஒரு களப்போராளி, கட்டுரையாளர், சிந்தனையாளர், விமர்சகர் என்ற பன்முகம் கொண்டவர். இந்தியாவின் சுதந்தரமான அரசியல் சினிமாவின் பிதாமகன் என்றும் சொல்லலாம். சுதந்தரமான சினிமா எனில் அமைப்பு சாராத, அரசு சாராத சினிமா என்று சொல்லலாம். அரசியல் சினிமா எனில் இவ்வுலகின் அதிகாரமையங்கள் மக்களையும் சுற்றுச்சூழலையும் சுரண்டுவதையும் ஒடுக்குவதையும் அதன் பின்னணியையும் அதன் பாதிப்புகளையும் அதற்கெதிரான மக்களின் போராட்டங்களையும் எதிர்ப்பையும் விவாதிக்கும் சினிமா என்று விளக்கலாம். குறிப்பாக இந்தியாவில் நடக்கிற அரசியல் போராட்டங்கள், அதில் ஈடுபடும் இயக்கங்கள், அதன் போக்குகள் பற்றியே அவரது ஆவணப்படங்கள் பெரும்பாலும் அமைந்துள்ளன. அவரது படங்கள் சமூக மாற்றத்தைக் கோருகின்ற, அதே நேரத்தில் நகைச்சுவை உணர்வுடன் கூடிய அரசியல் விமர்சனங்கள்.
1974ல் தனது ஆவணப்பட தயாரிப்புப் பயணத்தைத் தொடங்கிய ஆனந்த் பட்வர்த்தன் 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் அரசியல், சமூகப் போக்கை படங்களாகப் பதிவு செய்திருக்கிறார். பல்வேறுபட்ட, சர்ச்சைக்குரிய படங்களை, நிறைய விருதுகள் வாங்கிய படங்களை, தேசிய தொலைக்காட்சியான தூர்தர்சன் தடை செய்த படங்களை, நீதிமன்றத்திற்கு சென்றே தணிக்கைச் சான்றிதழ் பெற்ற படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்படவிழாக்களில் அவரது ஆவணப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. அவரது ஆவணப்படமான WAR AND PEACE (போரும் அமைதியும்) மும்பை நகரில் உள்ள ஒரு மல்டிபிளக்ஸ் சினிமாவில் ஒரு வாரம் திரையிடப்பட்டது.
1950ல் மும்பையில் பிறந்த ஆனந்த் பட்வர்த்தன், 1970ல் மும்பை பல்கலைக்கழகத்தில் B.A. ஆங்கில இலக்கியம் பயின்றார். 1972ல் அமெரிக்காவின் பிரண்டீஸ் பல்கலைக்கழகத்தில் B.A. சமூகவியல் படித்தார். கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில் M.A. ஊடகவியல் பயின்றார். மாணவப்பருவங்களில் வியட்நாம் போருக்கு எதிரான போராட்டம், பின்னாட்களில் ஜெயப்பிரகாஸ் நாராயணன் தலைமையிலான ஊழல் எதிர்ப்புப் போராட்டம், எமர்ஜென்சிக்குப் பிறகான மனித உரிமை காக்கும் போராட்டம், மதவெறிக்கு எதிரான போராட்டம், மக்கள் விரோத வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள், அணு ஆயுத்திற்கு, அணு மின்சாரத்திற்கு எதிரான போராட்டம் என்று தன் வாழ்நாள் முழுக்க பல போராட்டங்களில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.
எனது ஆவணப்படத் தயாரிப்புப் பணியை ஒரு அரசியல், சமூக தலையீடு அல்லது இடையீடாகத்தான் தொடங்கினேன் என்கிறார் ஆனந்த் பட்வர்த்தன். சினிமாவின் மீதான கலைத்தாகத்தினாலோ அல்லது சினிமாவின் மூலமாகத் தனது உள்ளக்கிடக்கையை, தேடலை வெளிப்படுத்தவோ ஆனந்த் தனது ஆவணப்பட முயற்சிகளைத் தொடங்கவில்லை. தனது சினிமா மூலமாக சமூகத்தில் நடக்கிற உரிமை மறுப்பை, போராட்டங்களை, ஒடுக்குமுறையை பதிவு செய்து அதன் மூலம் விவாதம் எழுப்புவது தான் ஆனந்த் பட்வர்த்தனின் சினிமாக்களின் நோக்கம். தனது படங்கள் தான் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தவில்லை எனில் அதற்குக்காரணம் அவை போதுமான அளவு பயன்படுத்தப்படவில்லை அல்லது விநியோகப் படுத்தப்படவில்லை என்பதுதானே ஒழிய ஊடகத்தின் பிரச்சனை அல்ல என்கிறார் ஆனந்த்.
புரட்சியின் அலைகள் (WAVES OF REVOLUTION) என்பதே ஆனந்த் பட்வர்த்தனின் முதல் ஆவணப்படம். 1974ம் ஆண்டு நிகழ்ந்த இந்திரா காந்தியின் ஊழல் ஆட்சிக்கு எதிரான ஜெயப்பிரகாஸ் நாராயணன் தலைமையிலான மக்கள் இயக்கத்தைப் பற்றிய படம் அது. பீகாரில் நடந்த ஜெ.பி. இயக்கத்தில் ஒரு தன்னார்வத் தொண்டராகப் போனவர் நடக்கிற போராட்டத்தை புகைப்படங்கள் எடுக்கப்படவேண்டியதன் காரணமாக டில்லியில் ஒரு காமெரா இரவல் வாங்கியிருக்கிறார். ஒரு SUPER 8 சினிமா கேமரா அதைக்கொண்டு போய் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தைப் பதிவு செய்திருக்கிறார். அவர் எடுத்த காட்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்ததும் அந்த காட்சிகளை 16MM வடிவத்தில் மறுபதிவு செய்து படத்தொகுப்பு செய்தார். அந்தப் படமே சுதந்திர இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் வெகுமக்கள் அரசியல் படம் என்று சொல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிக்கு வந்து ஊழலுக்கு எதிராகவும், பாகுபாடுகளுக்கு எதிராகவும் அநீதிக்கு எதிராகவும் போராடுவதும் இந்தியாவின் பாதையைத் திசை திருப்பவேண்டும் என்று குரல் கொடுப்பதும் அதை காவல்துறை ஒடுக்குவதையும் காணலாம். இந்தப்படம் இந்திரா காந்தியின் கவனத்திற்குப் போய் அதுவே ஆனந்தின் உயிருக்கு ஆபத்தாகி அவர் நாடு விட்டு நாடு செல்லவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்.
அதற்குப்பிறகு 1977ல் மனச்சாட்சியின் கைதிகள் (PRISONERS OF CONSCIENCE) என்கிற ஆவணப்படத்தை இயக்கினார். அது எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியின் அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் பற்றிய படம். மனித உரிமை மீறல், போலீசின் அத்துமீறல், சிறைக்கொடுமைகள், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனது போன்ற வன்முறைகள் பற்றி அந்தப்படம் பேசியது. இந்தியாவின் பல பகுதிகளுக்குப் பயணம் செய்து அந்தப்படத்தை ஆனந்த் தயாரித்திருந்தார். அந்தப் படத்தில் ஜெயப்பிரகாஸ் நாராயணன் தனது பேட்டியில் காந்தியவாதியும் இடதுசாரிகளும் புதிய இந்தியாவைக் கட்ட இணைந்து செயல்படவேண்டும் என்று சொல்வார்.
மேற்குறிப்பிட்ட படங்கள் ஒருவித கொரில்லாப் போர்முறைப் படங்களைப் போன்ற தோற்றமும் வடிவமும் கொண்டவை. கேமரா நேராக இருக்காது. வெளிச்சம் போதுமானதாக இருக்காது. காட்சிகள் ஒளிப்பதிவின் இலக்கணங்களை கடைபிடித்திருக்காது. நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டதே மிகுந்த ஆபத்துக்களுக்கிடையில் தான். ரகசியமான இடங்களில், ரகசியமான மனிதர்களின் பேட்டிகள், காட்சிகள் நிறைந்திருக்கும். ஒருவித ரொமாண்டிக் (காதல் தன்மை அல்ல) தன்மை கொண்ட புரட்சிகர சினிமா என்றே சொல்லலாம்.
ஆனந்தின் அடுத்த முக்கியமான ஆவணப்படம் BOMBAY OUR CITY (பம்பாய் எங்களுடைய நகரம்). இதுவும் கருப்பு வெள்ளைப் படம் தான். பம்பாய் நகரத்தை அழகுபடுத்தவேண்டி சாலையோரங்களிலும் குடிசைப்பகுதிகளிலும் வசிப்பவர்களை அப்புறப்படுத்தும் மகாராஸ்ட்ர அரசின் நடவடிக்கைகள், அதன் பின்னால் இருக்கும் பம்பாய் யாருக்குச் சொந்தம் என்ற விவாதம் – பணக்காரர்களுக்கு மட்டுமா அல்லது ஏழைகளுக்குமா என்ற அடிப்படையில் – நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களின் மேட்டுக்குடித் தன்மை ஆகியவற்றப் பேசுகிற படம் அது. ஒரு களப்பணிக்கான அரசியல் படத்திற்கான இலக்கணப்படம் இது என்று சொல்லலாம். இதற்கு மேல் எடுக்க ஆவணப்படங்களுக்கு ஒன்றுமில்லை என்று குட்டி ஜப்பானின் குழந்தைகள் என்ற ஆவணப்படம் தயாரித்த சலம் பென்னுரார்கார் சொல்ல கட்டுரையாளர் கேட்டதுண்டு.
தனது கொரில்லா பாணி சினிமாவில் இருந்து நியோ கொரில்லா பாணிக்கு ஆனந்த் பயணப்பட்ட படம் BOMBAY OUR CITY என்று குறிப்பிடலாம். இதில் கேமரா நிதானமாக, ஆனால் நிச்சயமாக, உறுதியாகப் படம் பிடிப்பதை நாம் காண முடியும். அதே சமயம் அரசியல் ரீதியான படங்கள், தைரியத்துடன், வெளிப்படையாக, அநீதி நடக்கும் இடங்களுக்கே காமெரா ஒரு இடையீடு செய்யும் கருவியாக உருமாருவதை நாம் காணமுடியும். இப்பொது நாம் தொலைக்காட்சியில் பார்க்கிற நேரடி ஒளிபரப்பு போன்று BREAKING NEWS போன்று 1980களிலேயே ஆனந்த் பட்வர்த்தன் படம் பிடித்து நமக்கு அளிப்பதை நாம் காண முடியும். அதே போன்று குடிசைவாசிகளின் நிதானமான, நீண்ட பேட்டிகளும் அவர்களுடைய தன்னிலை விளக்கங்களுடன் இந்தப்படத்தில் இடம்பிடித்திருக்கும்.
ஆனந்தின் அடுத்த முக்கியமான ஆவணப்படம் RAM KE NAAM – ராமரின் பெயரால் – என்கிற அத்வானியின் ரதயாத்திரை, ராமர் கோயில் கட்டும் பிரச்சாரம், இந்து மத அடிப்படைவாதிகளின் பாசிச மற்றும் பார்ப்பன வெறியை தோலுரித்துக் காட்டிய படம். ஏழை, தலித் மக்கள் ராமருக்குக் கோயில் கட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் உண்மையில் அவர்கள் இந்த மதவெறி நாடகத்தை ஏற்கவில்லை என்றும் இந்தப் படம் உரக்கச் சொல்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பரதனின் மதச்சார்பற்ற அரசியல் வண்ணம் கொண்ட நீண்ட மேடைப் பேச்சை ஆனந்த் பட்வர்தன் தனது குரலாக வைக்கிறார். இந்தியாவின் மதச்சார்பற்ற சக்திகளின் வாதங்கள் அந்தச் சூழலில் எத்தகைய தன்மை கொண்டவை என்பதை இந்தப்படத்தின் மூலம் நாம் அறியக்கூடிய அளவிற்கு RAM KE NAAM ஒரு சிறந்த வரலாற்று ஆவணம். காந்தியைக் கோட்சே கொன்றது சரியென்று ஒரு பாரதிய ஜனதாவின் ஆதரவாளர் சொல்வதும், காவல்துறையில் இந்துத்துவ ஆதரவு சக்திகள் எப்படி ஊடுருவியிருக்கின்றன என்று விளக்குவதும், மண்டல் கமிசன் அறிக்கை அமுல்படுத்தப்படுவதை உயர்சாதியினர் எந்த அளவிற்கு வெறுத்தனர் என்றும் ஒரு பார்ப்பன எதிர்ப்பு சினிமாவாக RAM KE NAAM அமைந்துள்ளது. அதே நேரத்தில் பூஜாரி லால் என்கிற அயோத்தியில் பூசாரியாக இருப்பவர் ராமரும் ஒரு கம்யூனிஸ்ட் தான், ராமராஜ்யத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தது, நான் அத்வானியின் மதவாத அரசியலை ஏற்கமாட்டேன் என்கிற குரலும் பதிவாகியுள்ளது. பின்னாட்களில் அவர் பஜ்ரங்தள் குண்டர்களால் கொல்லப்பட்ட செய்தியும் படத்தில் வருகிறது.
இதுவரை 16MM வடிவத்தில் படம் எடுத்த ஆனந்த் படவர்தன் அதற்கு அடுத்தபடியாக எடுத்த A NARMADA DIARY என்ற படத்தை MINI DV வடிவத்தில் எடுத்தார். இந்தப்படத்தை சிமாந்தினி துரு என்பவரோடு இணைந்தும் தயாரித்திருந்தார். 1995ல் எடுக்கப்பட்ட இந்தப்படம் நர்மதா நதிக்கு குறுக்கே கட்டப்படும் பெரிய அணைகள், அவற்றிக்கு எதிரான மக்கள் போராட்டம் பற்றிய பதிவாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களாக நர்மதா பாதுகாப்பு இயக்கம் நடத்துகிற பல போராட்டங்களை, நிகழ்ச்சிகளை பதிவு செய்து, பாதிக்கப்பட்ட மக்களின் பேட்டிகள், அவர்கள் வாழ்நிலைச்சூழல், பாரம்பரிய நடனங்கள், பாரம்பரிய அறிவு இவற்றுடன் இணைந்து தயாரித்துள்ள படம். ஆனந்த் பட்வர்த்தனின் பாரம்பரிய இடது சாரி அரசியலில் இருந்து விலகி நாட்டில் நடக்கிற போராட்டங்களுடன், விவாதங்களுடன், காந்தியச் சிந்தனை மேலிடும் படம் நர்மதா டைரி. தேர்தல் அரசியல் கட்சிகளைத் தாண்டி மக்கள் அரசியல், வன்முறையற்ற அரசியல், சத்யாகிரகம், உண்ணாவிரதம் என்கிற போராட்ட வடிவங்களுடன் இந்தப் படத்தில் சாதாரண ஆதிவாசி மக்கள், மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளுடன் இணைந்து கதாநாயகர்களாக வலம் வரும் ஆவணப்படம்.
இதற்கு அடுத்து 2002 ஆனந்த் பட்வர்தன் தயாரித்த குறிப்பிடத் தகுந்த ஆவணப்படம் போரும் அமைதியும் (WAR AND PEACE). பொக்ரானில் இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனை, அதை ஒட்டி பாகிஸ்தானுக்கு இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட போர்ச்சூழல், அதில் கலந்திருக்கும் மதவெறி, தேசவெறி, ஆண்மைவெறி அரசியல், இதற்கெல்லாம் மூலக்காரணகர்த்தாவான அமெரிக்காவின் அணு அரசியல், ஜப்பானில் ஒலிக்கும் அணுகுண்டால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்ப்புக்குரல் என்ற ஒரு சர்வதேசப் படம் போரும் அமைதியும். இதிலும் ஆனந்த் சாதாரண மக்கள் தேசவெறி அரசியலுக்கு எதிரான விமர்சனம் செய்யும் காட்சிகளை பாகிஸ்தான் பள்ளிச்சிறுமிகளின் பேட்டி, பொக்ரானருகே வசிக்கும் கிராமத்தினரின் கவலை, ஹிரோசிமாவில் வெடிகுண்டு போடப்பட்டதற்கு முன்பிருந்த தனது வீட்டைப் பற்றிக் கண்ணீர் விடும் ஒரு அணு ஆயுத எதிர்ப்பாளரின் பகிர்வு மூலம் வெளிப்படுத்துகிறார்.
ஆனந்த் பட்வர்தன் தனது சில படங்களைத் தவிர எல்லாவற்றுக்கும் அவரே ஒளிப்பதிவாளர். தனது சினிமாவின் திட்டமிடாத தன்மை அப்படி ஒரு தேவையை ஏற்படுத்துகிறது என்கிறார். எல்லாமே திட்டமிட்டு படம் பிடித்தால் வேறொருவர் ஒளிப்பதிவு செய்வது தனக்கு சரிவரும். அடுத்து என்ன நடக்கும் என்று ஊகிக்கமுடியாத கணங்களில் வேறொருவர் காமெராவைக் கையாளுவது தனது சினிமாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ளமுடியாது; அது வேறொருவரின் பார்வையாகவே அமையும் என்கிறார் ஆனந்த். டென்னிஸ் ஒ ரூர்க் தவிர மிகச் சிலரே உலக அளவில் தனது ஆவணப்படங்களுக்கு – அவர்கள் தொழில்முறை ஒளிப்பதிவாளர் இருந்தால் தவிர – ஒளிப்பதிவு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் பட்வர்த்தனின் எடிட்டங் முறையும் மைய நீரோட்ட சினிமாவைப் போன்றோ அல்லது தொலைக்காட்சி படங்கள் போன்ற துரிதமான வெட்டுதல் முறையைச் சேர்ந்தது அல்ல. தனக்குப் பிடித்த அல்லது தனது அரசியலை ஒத்தவர்களின் பேட்டியை எடிட் செய்யும் போது எப்பொதும் வாக்கியங்கள் முடிந்ததும் சிறிது நேரம் படம் அமைதியாகவே ஓடும். பேட்டி கொடுத்தவர்களின் பிற பரிமாணங்களைப் பதிவு செய்வது அல்லது அவர்களுடனான உறவைத் துண்டிக்காது தொடர்வது போன்ற அர்த்தங்களை அது கொடுக்கும். அதே போன்று ஆன்ந்த் பட்வர்த்தனின் அரசியலுக்கு ஒவ்வாத கருத்துடையவர்களின் பேட்டிகளில் வாக்கியம் முடிந்ததும் அவர்களது காட்சி வெட்டப்படும். அவர்கள் சொன்ன உண்மைக்கு முரணான கருத்துக்களைத் தொடர்ந்து உண்மையான நிலவரத்தைக் காண்பித்து – JUXTAPOSE என்ற முறையில் – அந்தப் பேட்டியின் நம்பகத்தன்மையை அல்லது நேர்மையை அல்லது முரணை வெளிக்கொணர்வார் ஆனந்த்.
உதாரணமாக BOMBAY OUR CITY – மும்பை எங்களுடைய நகரம் – என்கிற படத்தில் நகரத்தின் மேயர் பேசும் ஒரு காட்சியில் அவர் குடிசைவாசிகள் மற்றும் சாலையோரத்தில் வசிப்போரை விமர்சித்துப் பேசுவார். உடனடியாக அவரது அந்த வாக்கியத்தைத் தொடர்ந்து அந்த மேயரின் வீட்டில் இருக்கும் புல்வெளி, தோட்டம் ஆகிய காட்சிகள் காண்பிக்கப்படும். அதன் மூலம் ஒரு மேயருக்கு எவ்வளவு இடம் தேவைக்கு மேலாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அந்த மேயர் சாலையோரத்தில் மிகச்சிறிய இடத்தில் பற்றாக்குறையுடன் வசிக்கும் ஏழை மக்களைப் பற்றி விமர்சிப்பது என்ன நியாயம் என்ற உணர்வை ஆனந்த் பட்வர்த்தன் பார்வையாளருக்குத் தருகிறார்.
ஆனந்தின் படங்களைப் பற்றிப் பேசும் போது அவை சுட்டும் அரசியல் தான் குறிப்பிடப்படுமே ஒழிய அவரது படங்கள் ஒரு ஊடகம் என்ற அளவில் அதிகம் பேசப்படுவதில்லை. ஆவணப்படத் தயாரிப்பு, காமெரா, எடிட்டிங் என்கிற தொழில்நுட்பம் அல்லது வடிவம் மறைந்துபோய் விடுகிறது. தான் திட்டமிட்டு தனது சினிமாவின் வடிவத்தை காமெராவை விவாதங்களில் மறைப்பதில்லை எனினும் தனது அரசியலே அதிகம் கவனம் பெறுகிறது. தனது படங்கள் நேரடியாக அரசியல் விவாத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச்செல்வது தனக்கு மகிழ்ச்சியே என்கிறார் ஆனந்த்.
தனது படங்களின் அழகியல் தன்மை வலியப் புகுத்தியதாக இருக்கக்கூடாது; அது தனது ஆவணப்படங்களின் பொருளுடன் தொடர்புடையதாகவே இருக்க வேண்டும் என்றும் ஆனந்த் கறாரான பார்வை உடையவர். மேலும் ஆனந்தின் படங்களில் அழகியல் என்பது ஒடுக்கப்பட்டோரின் சார்பு அரசியல் தன்மை உடையதாகவும், நகை முரண், எள்ளல், கோபம் போன்ற அம்சங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். அவரது சினிமாக்கள் IMPERFECT CINEMA – சீரற்ற சினிமா - என்ற வகையில் இருந்து தொடங்கியவை. பேட்ரிசியோ குஸ்மான், ஃபெர்னாண்டோ சொலானஸ் போன்று லத்தின் அமெரிக்காவில் 1960களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் நடத்திய, பங்கேற்ற, ஆயதம் தாங்கிய, ஆயுதமற்ற விடுதலை இயக்கங்கள் பற்றி படம் எடுத்தவர்களின் அழகியல் சிந்தனைகளை ஆனந்த் பட்வர்தன் தனது வழியாகப் பின்பற்றிக்கொண்டுள்ளார்.
(பேட்ரிசியோ குஸ்மான் சிலி நாட்டில் இடதுசாரி ஆலென்டே ஆட்சியை முறியடிக்க அமெரிக்க உளவு நிறுவனமான CIAயின் துணைகொண்டு அந்நாட்டு ராணுவம் எதிர்புரட்சி செய்தபோது அங்கு துணிச்சலோடு BATTLE OF CHILE என்று ஒரு படம் எடுத்தார். அது பின்னால் பாகம் 1,2,3 என்று வளர்ந்தது. அமெரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் செய்த அடக்குமுறைகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டிய படம். கொரில்லா பாணி சினிமா முறையைக் கையாண்டது).
ஆனந்த் பட்வர்தன் தனது படங்களுக்கான நிதியை தொடக்கத்தில் நண்பர்களிடமிருந்து சிறு நன்கொடை என்ற வகையில் தான் திரட்டினார். தனது இரண்டாவது படத்திற்குப் பிறகு சர்வதேசத் தொலைக்காட்சிகள் அவரது படங்களை ஒளிபரப்பின. அதன் மூலம் அவருக்குப் படங்கள் தயாரிக்கவும் தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் போதுமான நிதியை உருவாக்கமுடிந்தது. தனது படங்களை விநியோகம் செய்வதும், அவற்றை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதும், திரைப்படவிழாக்களில் திரையிடுவதும் என்று தொடர்ந்து ஆனந்த் தனது ஆவணப்படங்களை பரப்புவதில் அக்கறை கொண்டிருப்பதும் அவருக்கும் நிதி திரட்டிக்கொடுக்கிறது. அவர் தனது படங்களுக்கு எந்த நிதி நிறுவனங்களிடமிருந்தும் நிதி கோருவதில்லை. யாருக்காகவும் படங்கள் தயாரித்துத் தருவதில்லை. தனக்கு எது சரியென்று படுகிறதோ அதையே படமாக எடுக்கிறார். தனது படங்கள் தவிர மற்றவர் படங்களையும் திரையிடுவதில் அதிகம் அக்கறை கொண்டவர். தனது படங்கள், தனது கருத்துக்கு ஒத்த படங்களைக் கொண்டு இந்தியாவில் நிறையச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். தன்னை ஒத்த சுதந்தரமான அரசியல் சினிமா எடுப்பவர்களுக்கு எப்பொதுமே ஒரு ஆதரவு சக்தியாகவே இருக்கிறார்.
ஆனந்தின் சினிமா மொழி சமீப காலமாக நிறைய விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அவரது படங்களில் அவர் பயன்படுத்தும் இடையீட்டு முறை ஒரு நிச்சயத்தன்மை கொண்டது, முன்முடிவு கொண்டது, கறுப்பு வெள்ளை தன்மை கொண்டது என்று அவர் மீது விமர்சனம் செய்வோரும் உண்டு. அதுபோன்று அரசியல் தன்மை என்பது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களிலும் இருக்கிறது என்றும் பொதுவாழ்க்கையில் மட்டும் தான் இருப்பதாகக் கூறமுடியாது என்றும் ஆனந்தின் படங்கள் பொதுவாழ்க்கை அரசியலைத் தான் பேசின என்றும் பலர் விமர்சிக்கின்றனர்.
தனிப்பட்ட வாழ்க்கைப் படங்கள் என்பவை தற்போது பெரிய நிதி நிறுவனங்களாலும் தொலைக்காட்சிகளாலும் திரைப்படவிழாக்களாலும் அதிகம் வளர்க்கபடுகின்றன என்பதும் உண்மை. ஆனந்த் பட்வர்த்தன் தனது சினிமா மொழியோடு பயணித்திருக்கிறார் என்பதும் உண்மை. போராட்டங்களைப் பற்றிய படங்கள் என்ற ஒரு வகையே இந்தியாவில் அதிகம் இப்பொது எடுக்கப்படுவதில்லை. ஏனெனில் சமீபத்தில் உருவான ஊடகப்பயிற்சிப் பள்ளிகள் திட்டமிட்டு அரசிலற்ற ஊடகக் கல்வியைப் பயிற்றுவிப்பதே காரணம். ஊடகக்கல்வி என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்த கல்வியாகவும் பொதுவாக இந்தியாவில் வளர்ந்து வருகிற நுகர்வுக் கலாச்சார அரசியல் ஊடகத்துறையிலும் வலுபெற்றிருப்பதும் கூடுதல் காரணங்கள்.
தனியார் தொலைக்காட்சிகள் சமூகப் பிரச்சனைகளைப் பேசுகின்றன. ஆவணப்படங்கள் அந்த வேலையைச் செய்யத் தேவையில்லை என்ற ஒரு வாதமும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. தொலைக்காட்சிகளும் விளம்பரங்களை நம்பித்தான் இருக்கின்றன. பெருமுதலாளிகளின் நலன்களைக் காப்பது தான் அவர்களது பிரதான நோக்கம். தொலைக்காட்சி ஒரு தொழில். அது எப்படி ஆவணப்படங்களுக்கு பதிலியாக முடியும் என்பதும் ஒரு கேள்வி.
ஆவணப்படங்களுக்கு நிறைய நிதி கிடைக்கிறது இப்பொது. ஆனால் குறிப்பிட்ட சினிமா மொழியில் குறிப்பிட்ட பொருளில் தான் எடுக்கப்படவேண்டும் என்கிற பின்னிணைப்போடு. இந்த உலகமயமாதல், தனியார்மயமாதல் சூழலில் லாபம், நுகர்வு, களியாட்டம் என்று வரும்போது போராட்டம், பிரச்சனை, உரிமை என்று பேசுவதற்கு இடமில்லை. இத்தகைய சூழலில் ஆனந்த் பட்வர்த்தன் என்று ஒருவர் இருந்தார். (இன்னும் இருக்கிறார். தொடர்ந்து இயங்கி வருகிறார்). அவர் அரசியல் படங்களே எடுத்தார். நிதி வாங்கவில்லை. போராட்டங்களில் கலந்து கொள்வார். நிறையத் திரையிடல்களில் கலந்து கொள்வார் என்று சொன்னால் பலர் ஆச்சர்யமாகப் பார்க்கக்கூடும்.
அமுதன் R.P.
சென்னை
28 செப்டம்பர்
ஆனந்த் பட்வர்தனின் புதிய ஆவணப்படமான ஜெய் பீம் தோழரே (JAI BHIM COMRADE) என்கிற ஆவணப்படத்திற்கு அக்டோபர் மாதம் 2ம் தேதி நிறைவு பெற்ற நேபாள நாட்டு காட்மாண்டு தெற்காசிய திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான ராம் பகதூர் விருது கிடைத்திருக்கிறது.
1997ஆம் ஆண்டு மும்பை நகரில் 10 ஆயுதமற்ற தலித் மக்கள் காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். விலாஸ் கோக்ரே என்கிற கவிஞர், பாடகர் இத்துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தூக்கில் தொங்கி தன்னை மாய்த்துக்கொண்டார். அதிலிருந்து தொடங்கி 14 ஆண்டுகளாகப் பதிவு செய்யப்பட்ட மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படம் இந்திய வரலாற்றை சாதி மற்றும் வர்க்கப் பார்வையில் விரித்துக் காட்டுகிறது.
AMUDHAN R.P.
No comments:
Post a Comment