Tuesday, December 23, 2025

விஜய் ரசிகர்கள் யார்?

விஜய் ரசிகர்கள் யார்? - அமுதன் ஆர்.பி. (ஆவணப்பட இயக்குனர்)


சமீபத்தில் ஒரு பேராசிரியர் என்னிடம் 'கரூர் சம்பவம்' பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். உணர்ச்சிவசப்பட்ட ஒரு கூட்டத்தை நடிகர் விஜய் உருவாக்கியுள்ளார். அவரது முதல் கூட்டத்திலிருந்தே இது மாதிரியான விபத்துக்கள் சிறிய அளவில் நடந்துக்கொண்டு தான் இருந்தன. நிறையப்பேருக்கு காயங்களும் சிறிய எண்ணிக்கையில் மரணங்களும் நடந்த வண்ணமே இருந்தன. இந்தக்கூட்டம் கட்டுக்கடங்காது போய் நெரிசல் ஏற்பட்டு இந்தத் துயரச்சம்பவம் ஏற்பட்டிருக்கிறது, இப்போது இல்லையென்றாலும் வெகுவிரைவில் இதைவிடக்கொடுமை நடந்திருக்கும் என்றேன் நான். இதற்கு விஜய்யின் பொறுப்பற்ற நடவடிக்கையும் அனுபவமின்மையும் தான் காரணம் என்று சொன்னேன். தமிழ்நாடு அரசு நிர்வாகத்தையும், காவல்துறையினரையும் தமது மேடைப் பேச்சுக்களில் மிரட்டிப் பேசி, சவால் விட்டு, தமது ரசிகர்களை உசுப்பேற்றி, உற்சாகமூட்டி, எந்தக்கட்டுப்பாடுகளுக்கும் அடங்காதவர்களாக்கியதன் விளைவாக அப்பாவி ரசிகர்கள் பரிதாபமாக உயிரை இழந்திருக்கிறார்கள் என்றும் கூறினேன்.

இருந்தாலும் விஜய் என்றால் எதற்கும் தயாராக இருக்கும் இந்த ரசிகர்கள் யார் என்ற கேள்வி நம்முன் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. இவர்களின் அபூர்வமான, மிகை நடவடிக்கைகள் அவர்களுக்கு தற்குறிகள் என்று பெயரையும் ஈட்டிக்கொடுத்திருக்கிறது. சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் எழில், திமுக இளைஞரணி நடத்திய அறிவுத்திருவிழாவில் விஜய் ரசிகர்களை தற்குறிகள் என்று அழைக்காதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார். என்ன இருந்தாலும் அவர்கள் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பின்னணியில் இருந்து வந்த நமது பிள்ளைகள் தானே என்று பொருள்படவும் பேசினார்.

கடைசியாக நடந்த ஈரோடு மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு இளம்பெண் தமது தேர்வையே பொருட்படுத்தாது, இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டதாகச் சொன்னார். உடன் இருந்த அவரது தாயார் அதைச் சிரித்தபடியே கேட்டுக்கொண்டிருந்தார். இன்னொரு பெண், தம்மைத் தாமதமாகத் திருமணம் செய்தவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, தமக்குத் தாமதமாகக் கரு உருவாகியிருக்கிறது என்றும் காத்திருந்து உருவான கரு ஒரு வாரம் தான் ஆகிறது என்றும் தாம் தான் நடிகர் விஜய் வாகனத்தை நோக்கி ஓடினேன் என்றும் பெருமையாகக் கூறினார்.

அதே போலக் கரூர் சம்பவத்தில் தமது உறவினர்களை இழந்தவர்கள், விஜய் மீது தவறில்லை, அவர் பாவம், விஜய்யை அருகில் இருந்து பார்த்ததே பாக்கியம், எத்தனை பேருக்குக் கிடைக்கும், அதற்கு தாங்கள் கொடுத்த விலை, மகன் போனால் என்ன, விஜய் தான் வரவேண்டும் என்றும் சொன்ன காணொலிகளைக் கண்டு நாம் கடும் அதிர்ச்சியும் அடைந்தோம்.

ஒரு சிறுமி, தொலைக்காட்சிகளில் விஜய் படங்களையே ஒளிபரப்புவதில்லை என்றி தேம்பித் தேம்பி அழுகிற காட்சியையும் நாம் பார்த்தோம். விஜய் கூட்டங்களுக்கு வரும் இளைஞர்கள் மரங்களில், கம்பங்களில், வாகனங்களில் ஏறி ஆபத்தான முறையில் தமது ஆர்வத்தை வெளிப்படுத்துவதையும் நாம் பார்த்தோம்.

இப்படி சிறுவர்களும், இளைஞர்களும் பெரியவர்களும் ஒரு பித்துப் பிடித்தது போல நடந்துகொள்வது ஏன் என்ற கேள்வி நம்மில் பலருக்கு உருவாகியிருக்கும். இவர்கள் எல்லாம் யார் என்ற ஆச்சர்யமும் எழுந்திருக்கும்.



மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளில் இது மாதிரியான அதீத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பலர் கீழ்நடுத்தரவர்க்க (lower middle class) மக்களாகவும், வாழ்க்கையில் கடும் நெருக்கடியில் இருப்பவர்களாகவும், ஏமாற்றங்களையே சந்திப்பவர்களாகவும் இருப்பது தெரிகிறது. பொது சமூகத்தில் தமக்கு அங்கீகாரம் கிடைக்காத நபர்களாகவும் தென்படுகின்றனர். வகுப்புகளில் கடைசி பெஞ்ச் மாணவர்கள் போல, ஆசிரியர்களையும் சகமாணவர்களையும் தொடர்ந்து கேலி செய்பவர்கள் போல, அவ்வப்போது தண்டனைக்கு உள்ளாகிறவர்கள் போல, எந்த ஒழுங்கிற்கும் கட்டுப்படாதவர்கள் போலத் தென்படுகின்றனர்.

நடிகர் விஜய் இப்படிப்பட்ட நபர்களைத் தான் கவர்ந்திருக்கிறார். அவர்கள் தான் இப்படி உயிரையும் கொடுக்ககூடிய ரசிகர்களாகப் பரிணமித்துள்ளனர். இவர்களது முடிவெட்டிலிருந்து, உடைத்தேர்விலிருந்து, நடவடிக்கைகளிலிருந்து, ஒரு கலக மனநிலை படைத்தவர்கள் போல வெளிப்படுகின்றனர். புரட்சிமனநிலை என்பது ஆக்கப்பூர்வமானதாகும். ஒன்றை மாற்றி, இன்னொன்றாக உருவாக்க நினைப்பதாகும். ஆனால் கலக மனநிலை, வெறும் எதிர்ப்புத் தெரிவிப்பது மட்டுமேயாகும். அல்லது சிதைப்பு வேலைகளில் ஈடுபாடு கொண்டதாகும். விஜய் ரசிகர்கள் யாரையோ எதிர்க்கின்றனர். யாரிடமோ ஆதங்கப்படுகின்றனர். யாரிடமோ அவர்களுக்குப் புகார் இருக்கிறது. கணவன் சரியில்லை, காதல் நிகழவில்லை, பிடித்த வேலை கிடைக்கவில்லை, அதிலும் கடும் மன உளச்சல் நேரிடுகிறது என்று பொது சமூகத்திற்கு எதையோ சொல்ல நினைக்கின்றனர்.


குறிப்பாக ஜென் சீ (Gen Z) என்று அழைக்கப்படும் இரண்டாயிரத்தை ஒட்டிப் பிறந்த பிள்ளைகளிடம் இந்த அதிருப்தி இருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கு என்னவென்று தெரியாத கோபம் இருக்கிறது. அவர்களுக்கு எடுத்துச்சொல்ல பெற்றோர்களோ, உறவினர்களோ, ஆசிரியர்களோ இல்லை. ஆனால் கொஞ்சம் வசதி படைத்த ஜென் சீ மாணவர்களிடம் நான் பேசிய போது, அவர்களிடமும் இந்த அதிருப்தி இருக்கிறது. தம்மைச் சுற்றி எல்லோரும் போலியான, சமரசம் செய்த மனிதர்களாக இருப்பதாகக் கருதுகின்றனர். தமக்கு ஆதர்சமான தலைவர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை என்கின்றனர். அவர்களைச் சுற்றி பணம் சம்பாதிப்பது, செலவழிப்பது, கண்டபடி சாப்பிடுவது, சாமி கும்பிடுவது, களியாட்டத்தில் ஈடுபடுவது மட்டும் நடக்கும் போது, அல்லது அவை மற்றுமே கண்களுக்குப்படும் போது அவர்கள் என்ன செய்வார்கள்?

விஜய் ரசிகர்கனான இந்த ஜென் சீ பிள்ளைகளின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் 40 வயதை ஒட்டியிருப்பார்கள் என்று வைத்துக்கொண்டால், அவர்களில் பலர் முதல் தலைமுறை பட்டதாரிகளாகவோ, சிறிது பொருளாதார வெற்றி பெற்றவர்களாகவோ இருப்பார்கள். இவர்கள் தமது வரலாற்றை மறந்தது தான் இந்த அதிருப்தி மட்டும் பித்தமனநிலைக்குக் காரணம் என்று சொல்லலாம். அல்லது தமது பிள்ளைகளுக்கு விளக்காமல் இருந்தது தான் காரணம் என்றும் சொல்ல்லாம். எங்கோ ஒரு இடத்தில் வரலாறு மறக்கப்பட்டிருக்கிறது. நாம் தொண்ணூறுகள் வரை எப்படி இருந்தோம், இப்போது என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை நாம் மறந்து விட்டிருக்கிறோம்.

மேலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியில் தமக்கு இடம் இருப்பதாக நம்பாதவர்களும் அவர்களின் பிள்ளைகளும் இப்படி 'தற்குறி' வேடம் தரித்திருப்பதாகவும் நாம் நம்பலாம். எனவே தான் இந்த இளைஞர்கள், தமக்கு இடம் இல்லாத இடத்தில் / வெளியாளாக (outsider) நான் ஏன் நாகரிகமாக நடந்துகொள்ளவேண்டும், நான் இப்படித்தான் ஒழுங்கற்றவனாக இருப்பேன் என்று அடம் பிடிக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

மேலும் நடிகர் விஜய் தமது படங்களில் ஒரு உதிரியாக, ஒழுங்கற்றவராக, விதிகளை மதிக்காதவராக, ஒரு கார்டூன் / அனிமேஷன் / அணில் போல அங்கும் இங்கும் துள்ளிக்கொண்டு காட்சியளிப்பதை நினைத்துப்பார்த்தால், இந்த ஜென் சீ பிள்ளைகளும் அவர்தம் பெற்றோர்களும் இந்த நடிகருக்காக ஏன் உயிரைக்கூட மாய்த்துக்கொள்ளத் தயாராகின்றனர் என்பது புரியும்.

சில வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் நாதக இளைஞர்கள் சட்டையை இறுக்கிக்கொண்டு, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு, மீசையை முறுக்கிக்கொண்டு சீமான் சொல்லும் கட்டுக்கதைகளை நம்பி கைத்தட்டி விசிலடித்தனர். கடுமையாக உழைத்து அந்தக்கட்சிக்கும் அவர்களது தலைவருக்கும் தமது சம்பாத்தியத்தை அள்ளி இறைத்தனர். அவர்களிடம் இழப்பதற்குப் பொருள் இருந்தது. அவர்களால் அதைத் தானமாக அளிக்க முடிந்தது. சீமானுக்கும் அது தேவைப்பட்டது.

ஆனால் நடிகர் விஜய்க்கு காசு தேவையில்லை. தம்மிடமும் இருக்கிறது. முதலீடும் வருகிறது. அவருக்குத்தேவை இப்படி ஒரு ரசிகர் கூட்டமே. அதை இந்த ஜென் சீ பிள்ளைகளின் அதிருப்தி, வெளியாள் மனநிலை ஈடுசெய்கிறது.

மாநில அரசும் சிவில் சமூகமும் இந்த விடுபட்ட கூட்டத்தை அரவணைத்து, அவர்களுக்கு அன்பூட்டி, அறிவூட்டி, நம்பிக்கையூட்டி கரையேற்றவேண்டும்.

அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்

விஜய் ரசிகர்கள் யார்?

விஜய் ரசிகர்கள் யார்? - அமுதன் ஆர்.பி. (ஆவணப்பட இயக்குனர்) சமீபத்தில் ஒரு பேராசிரியர் என்னிடம் 'கரூர் சம்பவம்' பற்றி என்ன நினைக்கிறீ...