Thursday, November 21, 2024

பிலிம்ஸ் டிவிசன் ஆவணப்படங்கள்!

 இந்திய அரசின் ஆவணப்படங்கள் : அமுதன் ஆர்.பி.


1947ல் இந்தியா விடுதலை அடைந்து ஒரு சுதந்தரமான நாட்டைக் கட்ட (nation building) முயன்ற போது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, மணிப்பூரிலிருந்து குஜராத் வரை வாழும் மக்களை அரசியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் அறிமுகப்படுத்தவும் இணைக்கவும் இந்திய அரசால் பல உத்திகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றிலொன்று, பிலிம்ஸ் டிவிசன் ஆப் இண்டியா (Films Division of India) என்று அழைக்கப்படும் இந்தியத் திரைப்படப் பிரிவாகும்.


ஒன்றிய அரசின் செய்தி ஒலிபரப்புப்த்துறையின் கீழ் வந்த இந்தப் பொதுத்துறை நிறுவனம், 1948ல் தொடங்கப்பட்டு இன்று வரை ஆயிரக்கணக்கான ஆவணப்படங்களை, அனிமேஷன் படங்களை, சிறிய கதைப்படங்களை தயாரித்திருக்கிறது. வெள்ளையரின் ஆட்சியிலிருந்து கற்றுக்கொண்ட பிரச்சார உத்திகளைக் கொண்டு, மேலிருந்து கீழ் நோக்கிப் பேசும் (top down approach) தோரணையில், வர்ணனையும், முழக்கமிடும் இசையுமாக, அறிவுரை சொல்லும் போக்கில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் படங்கள் தயாரிக்கப்பட்டன.


இதன் மூலம் இந்தப் படங்களைப் பார்ப்போர் மத்தியில் ஒரு கருத்துருவாக்கம் செய்வது, அவர்களிடம் ஒரு மனமாற்றம் ஏற்படுத்துவது, ஏறக்குறைய மனிதர்களுக்கு வரப்போகும் அல்லது வருவதாய் இருக்கும் நோயிலிருந்து காக்கத் தடுப்பூசி போடுவது போல, விவசாயப் பயிர்களின் தலைகளில் பூச்சிக்கொல்லியை அடிப்பது போல, வெள்ள காலத்தில் விமானத்திலிருந்து பாதிக்கப்பட்டோருக்கு, அவதிப்படுவோருக்கு உணவுப்பொட்டலங்களை எறிவது போல இந்தப் படங்கள் பார்வையாளர்களின் மீது தெளிக்கப்பட்டன


விடுதலை அடைந்த போது, பல மாநிலங்களில் ஒன்றிய, இந்திய அரசை ஏற்றுக்கொள்ளாத அரசியற்சூழல் இருந்தது. இந்திய அரசோடு தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் பல மாநிலங்களுக்கு இருந்தன. பல இடங்களில் தனிநாடு கோரிக்கையும் முனைப்புகளும் இருந்தன. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது பரப்பப்பட்ட வதந்திகள், வெறுப்புப்பிரச்சாரங்கள், ஏற்பட்ட மோதல்கள், வன்முறைகள், கொலைகள், கூட்டுப்பாலியல் வன்கொடுமைகள் சந்தேகத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியிருந்தன. பல மதங்கள், மொழிகள், ஜாதிகள், பழக்கவழக்கங்கள் இருந்தன. இவற்றையெல்லாம் தாண்டி இந்தியா எனும் நிலப்பரப்பிற்குள் வாழ்ந்த மனிதர்களை விடுதலைப் போராட்டம் ஒன்றிணைத்திருந்தாலும், இந்தியா எனும் புதிய அரசியல் வடிவத்திற்குள் நுழைய, வாழ, கனவு காண, நம்பிக்கை வைக்க, கற்பனை செய்ய, உழைக்க, முயற்சிக்க ஒரு ஒத்தக்கருத்தை உருவாக்க வேண்டியிருந்தது


இப்படிப்பட்ட நோக்கத்தில் பிலிம்ஸ் டிவிசனால் எடுக்கப்பட்ட படங்கள், அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, திரையரங்குகளில் திரையிடப்பட்ட அன்றாட, வணிக வெகுசனத் திரைப்படங்களுடன், அல்லது அவற்றிக்கு முன்பு, வலுக்கட்டாயமாக, பார்வையாளர்களின் தொண்டைக்குள், மூளைக்குள் திணிக்கப்பட்டன. வழக்கமான திரைப்படங்களுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்திலிருந்து ஒரு பங்கு இந்தப் படங்களுக்காக பார்வையாளர்களிடமிருந்து அவர்களின் சம்மதமில்லாமல் எடுத்துக்கொள்ளப்பட்டதுஅந்தக் காலத்து திரைப்படங்களின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான ராஜ்கபூர் நடித்த இந்திப்படத்தைப் பார்க்க ஒருவர் ஒரு திரையரங்கில் நுழைவுச் சீட்டு வாங்கினால், அந்தக் கட்டணத்தில் ஒரு பங்கு இந்திய அரசின் பிலிம்ஸ் டிவிசன் ஆவணப்படங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும். ராஜ்கபூரின் திரைப்படத்தில் என்ன காட்சிகள் வரும் என்று யூகித்துக்கொண்டு போகும் அல்லது எதிர்பார்த்துப்போகும் பார்வையாளருக்கு பிலிம்ஸ் டிவிசன் என்ன காட்டப் போகிறது என்பதை யூகிக்கமுடியாது


இந்த ஆவணப்படங்கள் கசப்பான மாத்திரையைப் போல எல்லோருக்கும் வழங்கப்பட்டாலும், ஒரு மாத்திரை உடலுக்கு செய்யக்கூடிய நற்பணியை இவை செய்யாமல் இல்லை. இந்தியாவைப் பற்றிய ஒரு பரந்துபட்ட பார்வையை, இந்தியாவில் உள்ள மாநிலங்கள், அவற்றின் பண்பாடு, வளர்ச்சி, தேவைகள் ஆகியவை பற்றி ஒரு தொடக்ககால அறிமுகத்தை இந்த படங்கள் கொடுத்தன. இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுத் தலைவர்கள், இந்தியத் தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள், ஐக்கியநாடுகளின் சபையின் கூட்டங்கள், உலகில நடக்கும் பேரழிவுகள், போர்கள் என பலவற்றை  இந்தப் படங்கள் இந்தியப் பார்வையாளர்களுக்குக் காட்சிகளாக வழங்கின. பொது அறிவு வேண்டுவோருக்கு இந்தப் படங்கள் நன்மை பயத்தன என்று சொன்னால் மிகை ஆகாது.


மேலும் பிலிம்ஸ் டிவிசன் இது போன்ற பிரச்சாரப் படங்களை எடுத்ததோடு, நவீன இந்தியாவிற்கு பொதுமக்களைத் தயார்படுத்தும் வேலையையும் செய்தது. தேசிய கீதத்தை எப்படிப் பாடுவது, சக மனிதர்களை மரியாதையாக நடத்துவது, குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல் இருப்பது, நேரத்தைக் கடைபிடிப்பது போன்ற அறிவுரைப் படங்களும் எடுக்கப்பட்டன. தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், தடுப்பூசி, கல்வி, மருத்துவம், போக்குவரத்து, சத்தான உணவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அந்தப் படங்கள் விளக்கின


இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கைகள், தேர்தல்கள், பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள், திறப்புவிழாக்கள், உதவித் திட்டங்கள் வழங்கும் அரசு விழாக்கள் போன்றவற்றைப் பற்றிய செய்திக்குறிப்புகளை இந்தப் படங்கள் ஆவணப்படுத்தி மக்களுக்கு இந்தியாவெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளின் மூலம் பரவலாக்கின


பிரதமர், ஜனாதிபதி, மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நாட்டின் முக்கியத் தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் ஆகியோரைப் பற்றிய அறிமுகத்தையும் பிலிம்ஸ் டிவிசன் படங்கள் மக்களுக்கு வழங்கின.


நூற்றுக்கணக்கான பிரபல நபர்களைப் பற்றிய வரலாற்றுப் படங்களும் எடுக்கப்பட்டன. இந்தியாவின் பாரம்பரிய நடனங்கள், இசைக்கலைஞர்கள், திருவிழாக்கள், வழிபாட்டுத் தலங்கள், சிற்பக்கலைகள், பழங்குடியினரின் வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய பண்பாட்டு ஆவணக்காப்பகத்தையும் இந்தப் படங்கள் ஏற்படுத்தின


ஏறக்குறைய பின்னாட்களில் தூர்தர்சன் எனும் அரசுப் பொதுத் தொலைக்காட்சி செய்யக்கூடிய ஒன்றிய அரசின் சார்பான பிரச்சார வேலைகளை தொடக்கத்தில் கருப்பு வெள்ளையில், பிறகு வண்ணப்படங்களாக, 35 எம்.எம். (35mm) திரைவடிவில் மிகத் தரமான ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னணி இசை. படத்தொகுப்பு, கலை வடிவத்துடன், தேவைப்பட்டால் நல்ல நடிகர்களின் உதவியுடன், ஆண் பெண் இருவரின் தீர்க்கமான குரல்களில்  வர்ணனையுடன், இந்த பிலிம்ஸ் டிவிசன் ஆவணப்படங்கள் திறம்பட செய்தன.


இந்தப் படங்களை பிலிம்ஸ் டிவிசனின் முழு நேர ஊழியர்களாக இருந்த தொழிற்நுட்பக் கலைஞர்கள் தயாரித்ததோடு, தற்காலிக ஊழியர்களும் பங்கேற்றனர். சிலர் வெளியிலிருந்தும் ஆவணப்படங்களைத் தயாரித்துக் கொடுத்தனர். இதில் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள், தெரிந்தவர்கள், திறமையானவர்கள், புதியவர்கள், பழையவர்கள், வெளிநாட்டவர் ஆகியோரும் அடங்குவர். இவை கலவையான சில திரை முயற்சிகளுக்கும் வழிவகுத்தன


பிலிம்ஸ் டிவிசன் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மகராஷ்டிர மாநிலத்தின் மும்பை (அந்தக் காலத்து பாம்பே) நகரத்தில் இருந்ததால், அந்த நகரம் ஏற்கனவே இந்தித் திரைப்படத்தின் தலைநகரமாக இருந்ததால், ஆவணப்பட இயக்குனர்கள், கலைஞர்கள் அந்த நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கத் தொடங்கினர். பக்கத்து நகரமான பூனாவில் இந்திய அரசின் திரைப்படக் கல்லூரி தொடங்கப்பட்டு (1960) அங்கிருந்து வரும் புதிய இயக்குனர்களுக்கு, கலைஞர்களுக்கு இந்தித் திரைப்படத்துறையும், பிலிம்ஸ் டிவிசன் நிறுவனமும் வேலை வாய்ப்பைக் கொடுத்து ஈர்த்தன.


அறுபதுகளுக்குப் பிறகு பிலிம்ஸ் டிவிசன் தயாரித்த குறிப்பிட்ட சில படங்கள் வெறும் அறிவுரை, பிரச்சார, விளக்கப் படங்களாக இல்லாமல், கவித்துவமான, வடிவ ரீதியான பரிசோதனை முயற்சிகள் கொண்ட, புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துகிற படங்களாகவும் இருந்தன. குறிப்பாக இந்திரா காந்திஒன்றிய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை மந்திரியாகப் பதவி ஏற்ற பிறகு (1964) பிலிம்ஸ் டிவிசன் இப்படிப்பட்ட வெளிக்குரல்களுக்கு அதிகம் இடம் கொடுக்கத் தொடங்கியது. இந்திரா காந்திக்கும் பல இயக்குனர்களுக்கும் இருந்த தனிப்பட்ட நட்பும், இத்தகைய முயற்சிகளுக்கு இடம் கொடுத்தன


எஸ் என் எஸ் சாஸ்திரி இயக்கிய என் வயது 20 (I am 20) மற்றும் அமீர் கான் (Amir Khan), சுக்தேவ் இயக்கிய இந்தியா 67 (India 67) மற்றும்வெகுதூரம் போகவேண்டும்’ (Miles to Go), லோக்சென் லால்வானி இயக்கியஅவர்கள் என்னை சமார் என்று அழைக்கிறார்கள் (They Call me Chamar), மணி கெளல் இயக்கியவருகை’ (Arrival), மற்றும் சித்தேஸ்வரி (Siddeshwari) போன்ற படங்கள் ஆவணப்படங்களுக்கான புதிய திரைமொழி உருவாக்கத்தில், மெருகேற்றுவதில், வளர்த்தெடுப்பதில் உறுதியான பாய்ச்சல்களைக் கொண்டிருந்தன.


சத்யஜித் ரே, மிருணாள் சென், அடூர் கோபால கிருஷ்ணன், ஷ்யாம் பெனகல், அரவிந்தன், குல்ஷார் போன்ற பிரபலமான திரைப்பட இயக்குனர்களும் பிலிம்ஸ் டிவிசன் நிறுவனத்தோடு இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணப்படங்களை அவர்களது பாணிகளில் எடுத்துள்ளனர்


இப்படிப்பட்ட பரந்துபட்ட வரலாற்றைக் கொண்டிருந்த பிலிம்ஸ் டிவிசன் நிறுவனம் தான் எழுபதுகளின் நடுப்பகுதி வரை, குறிப்பாக இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலைக் காலம் வரை, இந்திய ஆவணப்படத்திற்கான மையமாக இருந்தது


அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள், ஒடுக்குமுறைகள்சித்ரவதைகள், கொலைகள் மற்றும் மாற்றங்கள், இந்தியாவின் பல பகுதிகளில் புதிய சுதந்தரமான, மக்கள் மையக் கலை, இலக்கிய, திரைப்பட, நாடக முயற்சிகளுக்கு வழிவகுத்தது போல, ஆனந்த் பட்வர்த்தன் என்கிற இளம் இயக்குனரின் வருகையோடு, அவசர கால நிலையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு  எதிராக  அவர் இயக்கியமனச்சாட்சியின் கைதிகள்’ (Prisoners of Conscience) என்கிற படத்தோடு, புதிய ஆவணப்படங்களுக்கான் அலை தொடங்கியது என்று துணிந்து சொல்லமுடியும்.


இந்த மாற்றங்கள் பிலிம்ஸ் டிவிசனுக்கு வெளியே காத்திரமான, விடுதலைக்கான கலகக்குரல்களைப் பிரதிபலிக்கும், மாற்றுப் பார்வைகளை வெளிப்படுத்தும் எதிர் ஆவணப்படங்கள் தோன்றுவதற்கும் பல நகரங்களில் இருந்து புதிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வருவதற்கும் காரணமாக அமைந்ததோடு, பிலிம்ஸ் டிவிசனை மையமாகக் கொண்ட இந்திய அரசின் சார்பான ஆவணப்பட உலகத்தை நீர்த்துப் போகவும் வைத்தன.


அமுதன் ஆர்.பி.

19 நவம்பர் 2024 








No comments:

Post a Comment