மோடி எனும் ஒரு ஆபத்து!
சில நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். ஏன் இவ்வளவு பதட்டம்? மோடி வரமாட்டார். அவருக்கு அத்தனை சீட்டுக்கள் கிடைக்காது என்கின்றனர்.
அவர் வருவாரா வரமாட்டாரா என்பதல்ல பிரச்சனை. நம்மிடம் பரவி வரும் பாசிச சிந்தனையே பிரச்சனை. இந்திய ஊடகங்களை நினைத்தால் கலக்கமாக இருக்கிறது. எப்படி ஒரு சதியின் கூட்டுகாரர்களாக இந்திய ஊடகம் மாறி விட்டதே என்பது நடுக்கத்தைத் தருகிறது.
நாம் யாரைக்கொண்டாடுகிறோம் என்று தெரியாமல் வெறும் பொய்யை மட்டுமே நம்பி மோடி பின்னால் போகும் அன்பர்களை நினைத்தால் பதட்டமாகவே இருக்கிறது.
மோடிக்கு எதிராகப் பிரிந்து கிடக்கிற கட்சிகளைப் பார்த்தால் மேலும் பதட்டம்.
வைகோ பாஜவை ஆதரிக்கிறார் என்று கேள்விப்பட்டேன். உண்மையா என்று தெரியவில்லை. உண்மையெனில் அவர் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டு சம்பாதித்த நன்மதிப்பை குழி தோண்டிப் புதைக்கவேண்டியது தான்.
இப்போது நடக்கும் முசாபர் நகர் கலவரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எல்லோரும் இணைந்து நடத்திய ஒரு மதவெறியாட்டத்தில் பாஜக சாதுர்யமாக தன் ஆதரவைப் பெருக்கிக்கொள்வதைப் பாருங்கள். முழுவீச்சில் நிகழும் சாணக்கிய ஆட்டம் இந்தியாவுக்கு மிகப்பெரிய அழிவைத் தந்துவிடுமோ என்று பதட்டமாக இருக்கிறது.
பிறக்கட்சிக்காரர்கள் தங்களது நேர்மையின்மை, திறமையின்மை ஆகிய பல இன்மைகளால் தமக்கு எதிராக தாமே போட்டு வைத்துள்ள கோல்கள் இன்று பாஜகவுக்கு பயன் தரும் நிலையை ஏற்படுத்தியுள்ளன.
காந்தியும் அம்பேத்கரும் நேரும் பணக்காரர்களின் இந்தியாவை உருவாக்க வில்லை. உயர் சாதிக்காரர்களின் இந்தியாவை உருவாக்க வில்லை. ஒடுக்கப்பட்டவர்க்கு பல ஆயுதங்களைக் கொடுத்துச்சென்றிருக்கின்றனர். ஏழை மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் வாழக்கூடிய இந்தியாவையே உருவாக்கினர். அவற்றையெல்லாம இழந்து இந்தியா சுதந்தரத்திற்கு முந்திய பார்ப்பனிய இந்தியாவாக வடிவம் கொள்ளுமோ என்ற பதட்டம்.
சுதந்தரத்திற்குப் பின்பு ஒடுக்கப்பட்டவருக்கான அரசியலுக்கும் ஆதிக்க உயர்குடி மக்களின் அரசியலுக்குமான போரில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்தன.
கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி, தமிழகத்தில் திராவிடக் கட்சிகள், வி.பி.சிங் கொண்டு வந்த மண்டல் கமிஷன், காங்கிரஸின் வீழ்ச்சி, பிராந்தியக்கட்சிகளின் வளர்ச்சி, மாயாவதி முதல்வரானது இப்படி பல ஏற்றங்கள் உண்டேனினும் பார்ப்பனிய சக்திகள் காங்கிரசுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் அவர்களுக்கு வசதியான விஷயங்களை உருவாக்கியபடியே இருந்தனர்.
இந்தக் கொடுக்கல் வாங்கல் போராட்டம் இன்று ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. ஒரு இந்துத்துவ, கார்பரேட் நலன் காக்கும் சர்வாதிகாரியை இந்தியர்கள் ஆதரிப்பது போலவும் அவருக்காக எல்லோரும் ஏங்குவது போலவும் ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் தினமணி, தினமலர், தினத்தந்தி ஆகிய மூன்று பெரிய தமிழ் பத்திரிக்கைகள் மோடி துதி பாடுவது மிரட்சியைத் தருகிறது.
தி இந்து என்ன செய்யப் போகிறது என்று பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
திமுக மோடியை ஆதரிக்காது என்று சொல்ல முடியாது. யாரும் மோடியை ஆதரிக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஜெயலலிதா பிரதமராகும் எண்ணம் கொண்டிருந்தால் அவர் மோடியை ஆதரிக்க மாட்டார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் தவிர எல்லோரும் மோடியின் மகுடிக்கு பலி ஆகலாம்.
ஒத்த கருத்துடையவர் இணைந்து போராட வேண்டிய காலம் இது. இதைவிட இந்தியாவுக்கு பெரும் நெருக்கடி வருமோ எனத் தெரியவில்லை.
No comments:
Post a Comment