உழைப்பு விடுதலையைக் கொடுக்குமா?
2003ம் ஆண்டு வெளிவந்த எனது "பீ" எனும் ஆவணப்படத்தில் நான் பயன்படுத்திய கதைசொல்லும் உத்தியைப் புரிந்து கொள்ளமுடிந்தது, ஆனால் விளக்கமுடியவில்லை. அப்படியே முயற்சித்தாலும், அது எங்காவது போய் முட்டுச்சந்தில் நினறு விடும். விளக்கமாக, நீண்ட அரசியல் பேசுவோம், ஆனால் அந்த உத்தியை விளக்கமுடியாது போய்விடும்.
அதற்கு இன்று விடை கிடைத்தது.1940களில் ஹிட்லரின் நாஜி படையினரின் ஆஷ்விட்ஸ் வதை மற்றும் கொலை முகாம்களைப் பற்றி நான் படித்துக்கொண்டிருக்கும் போது, அவர்கள் நடத்திய அனைத்து வதை முகாம்களின் வாயில்களிலும் “Arbeit macht frei” - 'உழைப்பு விடுதலையைக் கொடுக்கும்' என்று பொருளில் வாசகங்களை அச்சிட்டிருந்தனர் என்று அறிந்தேன்.
அதே தலைப்பில் எழுதப்பட்ட ஒரு நாவலில் இருந்த எடுக்கப்பட்ட அந்த வாசகத்தின் முக்கியத்துவம், அந்த நாவலில் கருவில் இருந்து நமக்குப் புலப்படுகிறது.
சூதாட்டக்காரனாகவும் மோசடிப்பேர்வழியாகவும் இருக்கிற அதன் கதைநாயகன், தனது வேலையை ஒழுங்காகச் செய்வதே தர்மம் என்று நினைக்கிறான் என்பது போல அந்த நாவல் போகிறது.
இதை ஏன் வதைமுகாம்களின் வாயில்களில் எழுதிவைத்தார்கள்?
அந்த வதைமுகாம்களில் ஏறக்குறையப் பத்தாண்டுகளில் - குறிப்பாக ஆஷ்விட்ஸ் முகாமில் லட்சக்கணக்கானோர் விதவிதமாகக் கொலை செய்யப்பட்டனர். ஆனால் அங்கு வேலை செய்யும் அதிகாரிகளில் பலர் அதை ஒரு வெறும் வேலையாகச் செவ்வனே செய்தனர். அல்லது அதற்குப் பழக்கப்படுத்தப்பட்டனர்.
இரவில் இலக்கியம் படிப்பார்கள், மேற்கத்திய செவ்வியல் இசை கேட்பார்கள், காலையில் வதை முகாம்களில் வேலைக்குப் போனார்கள்.
நாஜிக்கள் இதை ஒரு வேலையாகச் சுருக்கியதால், வதைமுகாம்களில் வேலை செய்த சாதாரண மனிதர்கள் கூட, கொலைகளை எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றி துரிதமாகச் செய்தனர். புதிய புதிய உத்திகளைக் கண்டுபிடித்தனர்.
இந்த இனஅழிப்பிற்கு அவர்களை எப்படிச் சம்மதிக்க வைத்தனர் என்பதை இந்த வாக்கியத்தின், அதன் பின்னணியில் இருந்த நாவலில் இருந்து அறிய முடிகிறது.
இப்போது எனது ஆவணப்படத்திற்கு வருவோம்.
2001ல் நான் எனது பட நாயகியான மாரியம்மாளை எனது ஆவணப்படத்திற்காகச் சந்தித்த போது, தாம் துப்புரவுப் பணி செய்கிறோம், மலம் அள்ளுகிறோம் என்பதைப் பற்றி எந்தக் கூச்சமோ, வருத்தமோ, கோபமோ இல்லாதது போல, வேக வேகமாக, துரிதமாக, துல்லியமாக அதை ஒரு வேலையாகச் செய்தது என்னைத் திகைக்கவைத்தது.
இந்த ஊரில், உலகில் நான் வாழவேண்டுமெனில், எனது பிள்ளைகளை வளர்க்கவேண்டுமெனில், எனது கடன்களைக் கட்டவேண்டும் எனில், எனது வேலையை, வெறும் வேலையாக மட்டும் தான் பார்க்கவேண்டும், நாறுகிறது, குமட்டுகிறது, இது நியாயமா, என்னை இப்படி அள்ளவைக்கலாமா? இது சரியா, இதைக் கேட்க ஆளில்லையா என்றெல்லாம் யோசித்தால் இங்கு பிழைக்கமுடியாது என்று அவரும் - நாஜி வதை முகாம்களில் வேலை பார்த்த அதிகாரிகளைப் போல - இந்தச் சமூகத்தினால், அமைப்பினால், அரசாங்கத்தால், தமது சக ஊழியர்களினால், தம் குடும்பத்தினரால், சம்மதிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.
ஜாதியக் கட்டமைப்பும், மதமும், ஆணாதிக்கமும், அதிகார வர்க்கமும், நவீன சமூகமும், அரசும் அவரை மூளைச்சலவை செய்துள்ளனர். அதன் விளைவாகவே,
இப்போது கூட மோடி துப்பரவுத் தொழிலாளர்களின் கால்களைக் கழுவுவது அதனால் தான். 'நீங்கள் தியாகிகள், நீங்கள் செய்வது புனிதமான செயல்' என்று சொல்லி அவர்களை மயக்குகிற, ஏமாற்றுகிற உத்தி தான். அதன் மூலம் இந்த வேலை செய்யாதோருக்கும் இருக்கும் குற்றவுணர்ச்சியிலிருந்து அவர்களை விடுவிப்பதும் அதன் நோக்கமாகும். எப்படியாவது இந்த ஜாதியப் படிநிலை காப்பாற்றப்பவேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். குலக்கல்வித் திட்டம், விஷ்வ கர்மா திட்டம் எல்லாம் இதன் இன்னொரு வடிவங்களே.
இதை நான் படம் எடுப்பதற்கு முன்பு அவரைச் சந்தித்த போதும், படம் எடுக்கும் போது, படத்தைத் தொகுக்கும் போதும் உணர்ந்தேன். 'உழைப்பே விடுதலையைத் தரும்' என்கிற அந்த வாக்கியம் எனக்கு மேலும் தெளிவைக் கொடுத்தது.
அதையே தான் பகவத் கீதை, கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்கிறது.
Enemy of the State எனும் ஹாலிவுட் படத்திலும் இதன் இன்னொரு வடிவத்தைப் பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=a0eWOHAvVn4&t=32s