பிபிசி தயாரித்த மோடி பற்றிய ஆவணப்படம் பலவிதங்களில் நமக்கு முக்கியமான ஆவணம்.
நாம் பல சமயங்களில் சங்கிகளுடனும் பக்தர்களுடனும் தனிப்பட்ட முறையிலும், பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் முட்டி மோதிக்கொண்டிருக்கும் போது எப்போதும் எல்லாத்தரவுகளுடனும் இருப்பதில்லை. நாம் ஒன்றை எழுப்பினால் சங்கிகள் இன்னொன்றைப் பேசுவார்கள். நாம் அதற்கு பதில் சொன்னால் வேறொன்றுக்குப் போவார்கள். எப்படியாவது நமது முதன்மையான புகாரிலிருந்து விவாதத்தை எங்கோ நகர்த்திச்சென்று நம்மை அயர்ச்சி அடையச் செய்வதோடு, நாம் எழுப்பிய கேள்வியின் முக்கியத்துவத்தை நீர்த்துப் போகச்செய்வார்கள்.
மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் இந்த சித்து விளையாட்டை முறியடிக்கிறது. மோடி மேல் கணக்கில்லா குற்றச்சாட்டுக்களை வைக்காமல், குஜராத் இனப்படுகொலை, ஹரேன் பாண்டியா படுகொலை, அதைக் கேள்வி கேட்ட காவல்துறையினர் கைது, குல்பர்க் சொசைட்டியில் கலவரக்காரர்களால் தமது தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு முன்பு முதல்வர் மோடியாடு தொலைபேசியில் பேசிய முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரோடு படுகொலை செய்யப்பட்ட 60 பேர், அப்போது இங்கிலாந்திலிருந்து வந்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று முஸ்லீம்களின் படுகொலை, அதில் கிடைக்காத நீதி என முதல் பாகத்தில் அளவான புகார்களை நிதானமாக, ஆதாரங்களுடன் வைக்கிறது. அது மட்டுமின்றி வைக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் பாஜக பிரமுகர் ஸ்வபன் தாஸ் குப்தா, அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியசாமி மற்றும் ஒரு பாஜக ஆதரவாளர் ஆகியோரது கருத்துக்களைப் பதிவு செய்கிறது. எந்தக் குற்றச்சாட்டும் மறுப்பு இல்லாமல் சேர்க்கப்படவில்லை.
இரண்டாவது பாகத்தில் மாட்டுக்கறி படுகொலைகள், காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டது, சிஏஏவிற்கு எதிரான மக்கள் போராட்டம், அதை காவல்துறையினரை, அடியாட்களை, சங்கிகளை வைத்து முறியடித்தவிதம், பல்கலைக் கழக மாணவர்கள் அவர்களது வளாகத்திற்குள்ளேயே கொடூரமாகத் தாக்கப்பட்டவிதம் என குறிப்பான சிலவற்றை மீண்டும் ஆதாரங்களுடன், மறுப்புடன், நிதானமாக, ஆழமாக இந்தப் படம் விவாதிக்கிறது.
சுயபுத்தியுள்ள, பகுத்தறிவுள்ள, குறைந்த பட்சம் சுரணையுள்ள எந்த மனிதருக்கும் இந்த இரண்டு பாகங்கள் எழுப்பும் கேள்விகளின் நியாயம் புரியும்.
இந்தப்படத்தை ஒரு வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிறுவனம், அதுவும் ஆயிரக்கணக்கான ஆவணப்படங்கள் எடுத்த அனுபவம் கொண்ட பிபிசி நிறுவனம் எடுத்திருப்பதால் உள்ளூர் அரசியலின் தாக்கமில்லாமல், தள்ளி நின்று, பொதுவான மனிதர்களையும் சேரும் வண்ணம், அவர்களும் நம்பும் வண்ணம், மிகவும் கச்சிதமாக திரைக்கதை (பல தொலைக் காட்சி ஆவணப்படங்கள் எழுதித் தான் எடுக்கப்படுகின்றன) உருவாக்கமும் படத்தொகுப்பும் நிகழ்ந்திருக்கிறது.
இந்த ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களையும் கிளாசிகல் தொலைக்காட்சி புலனாய்வுப் படங்கள் என்று உறுதியாகத் துணிந்து சொல்லமுடியும். முக்கியமாக முரட்டு அடி, மட்டை அடி என போகிற போக்கில், அவசரகதியில், பொத்தாம் பொதுவாக எந்தக் காட்சியும் இல்லை. அதே போல ஒரு பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டிருப்பதால், பல தரப்பட்ட கோப்புக் காட்சிகள் பல இடங்களில் இருந்து கவனமாகச் சேகரிக்கப்பட்டு படத்தில் சரியான இடங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பல நாடுகளுக்கு, மாநிலங்களுக்கு பல ஊர்களுக்கு இந்தப் படம் நம்மை அழைத்துச் செல்கிறது. ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டால் அதை விவாதிக்கத் தேவையான அனைத்துத் தரவுகளும் போதுமான அளவில் சேர்க்கப்பட்டுள்ளன. போதுமான நேரம் ஓவ்வொரு விவாதப்பொருளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம் என்றே சொல்லமுடியும். ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டால் அதை பட்டிமன்ற ரீதியில் கேலிக்கூத்தாக்கி, உணர்ச்சிமயமாக்கி, பேசவேண்டிய பொருட்களைப் பேசாமல், குத்துச்சண்டை மாதிரி விவாதம் நடத்தும் இவர்களுக்கு இந்த படத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய இருக்கின்றன.
ஏனெனில் நம்மிடம் பணம் இருக்கிறது. ஆனால் ஆவணப்படம் எடுப்பதற்கான மெனக்கெடல் இல்லை. அது அவ்வளவு முக்கியம் என்றே நாம் நினைப்பதில்லை. கதை சொல்லியே காலம் கடத்திவிடமுடியும் என்பதால் தான் சீமான் நம் ஊரில் பெரிய அரசியல்வாதியாக இருக்கிறார்.
ஆவணம் என்பதே கூடாது என்று நினைக்கிற ஆரியக் கூட்டத்தின் அடிமைகள் தானே நாம்! எந்த ஆதாரத்தையும் வெளியிடாமல், காதும் காதும் வைத்த மாதிரி தானே பார்ப்பனியம் தமது ஆதிக்கத்தை இரண்டாயிரம் ஆண்டுகளாக நிகழ்த்திவருகிறது.
பிபிசி தயாரித்த மோடி பற்றிய இந்த ஆவணப்படம் மோடியைப் புரிந்து கொள்ள உதவுவதோடு, ஆவணப்படம் என்ற வடிவத்தையும் புரிந்து கொள்ள உதவும் என்று ஒரு ஆவணப்பட இயக்குனராக, ஆவணப்பட விழாக்களின் ஒருங்கிணைப்பாளராக, நான் உறுதியாக நம்புகிறேன்.
மீம்ஸ் மாதிரி நொடிப்பொழுது சம்பாஷனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இரண்டு மணி நேர ஆவணப்படம் வந்திருப்பதும் அது வெகுமக்களை பெரிதும் பாதித்திருப்பதும் மிகவும் முக்கியமான நிகழ்வெனக் கூறலாம். இப்போதெல்லாம் யார் பெரிய படங்கள் பார்ப்பார்கள் என்று வியாக்கியானம் செய்யாமல், நம்மையும் நம் சந்ததியினரையும் காக்க, இப்படி ஆழமான உரையாடல்களை நம்மிடையே உருவாக்குவோம்.
இதே போல பல புலனாய்வு ஆவணப்படங்கள் தமிழில் வரவேண்டும். அதை இங்கிருக்கும் கட்சிகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும், மக்கள் இயக்கங்களும் முன்னெடுக்கவேண்டும். வெறும் வாய்ச்சவடால்களால் தொடர்ந்து காலம் கடத்திவிடமுடியாது. குறிப்பாக அறிவே கூடாது என்று வெறித்தனமாக அரசியல் செய்யும் சங்கிகள் மத்தியில் அவர்களைப் போல வெற்றுக்கூச்சல் சாக்கடையில் விழுந்து புரளாமல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரும், சாக்ரடீசும், அரிஸ்டாட்டிலும், ப்ளேட்டோவும் உருவாக்க நினைத்த அறிவுச்சமூகத்தை நோக்கி முன்னேறுவோம்.