Friday, June 22, 2018

பழைய மகாபலிபுரம் ரோடு எனும் மோசடி!

சென்னையின் வளர்ச்சி எவ்வளவு கொடுமையானது, இயற்கைக்கு எதிரானது, ஏழைகளுக்கு எதிரானது என்பதற்கு ஒரு உதாரணம், பழைய மகாபலிபுரம் ரோடு, அங்கிருந்து அகற்றப்பட்ட மரங்கள், அதற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட கண்ணாடி மூடிய ஏசி பொருத்தப்பட்ட கட்டடங்கள்.
சாலை விஸ்தரிப்பு, கட்டடங்கள் கட்டுதல், விரிவாக்கம், புதுப்பித்தல் என்ற பெயரில் ரோடு முழுக்க ஏற்கனவே இருந்த மரங்கள் வெட்டித்தள்ளப்பட்டுவிட்டன. சாலையே மொட்டையாகக் காட்சியளிக்கிறது.
மரத்தைப் பார்த்தால் அந்தத் தெருவே ஒன்றிணைந்து வெட்டித்தள்ளும் அளவுக்கு அவர்களுக்கு இயற்கையின் மீது வெறுப்பு. காசு இருக்கும் ஆணவம். பணம் இருந்தால் எதையும் வாங்கிவிட முடியும் என்கிற திமிர். ஏசியைக் கொண்டு எதையும் எதிர்கொள்ள முடியும் என்கிற மடமை.
அங்கு பகலில் மனிதர்கள் போகவே முடியாத அளவுக்கு கடும் வெயில். ஏசி காரில் பயணம் செய்வோர் தவிர எல்லோருக்கும் சிரமம் தான். கடும் வெயிலில் அவஸ்தைப் படுகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் புலம்புகிறார்கள். எங்குமே நிறுத்த முடியவில்லை என்று. ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். சவாரி இல்லையென்றால் எங்கும் நின்று காத்திருக்கமுடியாது. அவ்வளவு கொடுமையான வெயில்.
இருசக்கர வாகன ஓட்டிகள் நிலையும் அது தான். பேருந்தில் போனால் அடுப்பில் இருப்பது போன்ற வேதனை.
நிழல் வேண்டுமெனில் இறங்கி ஏதாவது ஏசி வைத்த கடைக்குள் போய் எதையாவது தின்று, வாங்கி இளைப்பாறலாம். அது தான் அவர்கள் சதித் திட்டம்.
வெயிலில் வெந்து போ, இல்லையென்றால் உள்ளே வந்து காசைக் கொட்டு, கரியாக்கு, நான் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற புரிதல்.
இது தான் பழைய மகாபலிபுரம் ரோட்டின் நிலை. இது தான் வளர்ச்சி.
அப்பட்டமான முட்டாள்த்தனம். மோசடி.

No comments:

Post a Comment