Saturday, July 22, 2017

ஆண்தன்மை : ஆண்பால் பெண்பால் அன்பால் - ஆனந்த விகடன் தொடர்

ஆண்தன்மை : அமுதன் ஆர்.பி.

ஆண்பால் பெண்பால் அன்பால்  என்கிற தலைப்பில் ஆனந்த விகடனில் வரும் தொடருக்காக எழுதிய கட்டுரை

26 July 2017

ண்-பெண் சமத்துவம் வரவேண்டும் என்று உழைப்பவர்கள் மத்தியில், கடந்த 20 ஆண்டுகளாகச் சர்வதேச அளவில் பல சிந்தனை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாகப் பல சர்வதேச அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை, அதற்கு உட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி நிறுவனங்கள் முன்வைக்கிற சில பார்வைகள் கவனிக்கத்தக்கவை.

ஆண் பெண் சமத்துவம் வேண்டுவோர் வழக்கமாகப் பெண்களை மையப்படுத்தி வேலை செய்வார்கள். பெண்களை ஒருங்கிணைப்பார்கள். அவர்களை வலுவூட்டி அவர்களுக்கான கல்வி, வேலை, தொழில், அரசியல் வாய்ப்புகளை, பங்கேற்பை உறுதிப்படுத்துவார்கள்.  பெண்களுக்கு எதிரான வன்முறை, அத்துமீறல், பாகுபாடு இவற்றுக்கு எதிராகப் போராடுவது, அவற்றைத் தடுக்க சட்டங்கள் இயற்றுவது, அதை அமல்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்துவார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக உலக அளவில் பெண்களோடு சேர்த்து ஆண்களையும் கவனப்படுத்தவேண்டும் என்கிற சிந்தனை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு ஆண்- பெண் சமத்துவம் பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படுத்துவது, பெண்ணியச் சிந்தனை கொண்ட ஆண்களை ஊக்குவித்து பயிற்சிகள் கொடுப்பது, பாலியல் விதிகள், நடைமுறைகளைப் பற்றி விவாதிப்பது, பாலியல் சிறுபான்மையினருடன் வேலை செய்வது போன்ற விஷயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. முக்கியமாக ஆணாதிக்கம் மட்டுமல்லாது ஆண்மை அல்லது ஆண்தன்மை (MASCULINITY)யை விமர்சனத்திற்கு உள்ளாக்குவது, விவாதிப்பது, அதற்கு எதிராகப் போராடுவது ஆகியன முக்கியம் என்று ஆண்-பெண்  சமத்துவத்திற்காகப் போராடும் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
இதில் ஆண்மை அல்லது ஆண்தன்மை என்பது எது, அதை ஏன் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்,  ஆண்-பெண் உறவில் அதன் முக்கியத்துவம் என்ன? என்கிற கேள்விகள் மிகமிக முக்கியமானவை.

சரியான ஆண் அல்லது சிறுவனுக்கென்று சில வரையறைகள், குணங்கள், வழக்கங்கள், தகுதிகள், வசதிகள், உரிமைகள் வகுக்கப்பட்டு அவை ஆண்மை அல்லது ஆண்தன்மை என்று அழைக்கப்படுகின்றன. இந்த வரையறைகள் குடும்பங்களினாலும், சமூகத்தினாலும், மதங் களினாலும், பொதுவெளியிலும் ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் தொடர்ச்சியாகக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அவை தொடர்ந்து தலைமுறைகளாகப் பெற்றோர்களின் வழி, சமூகத்தின் வழி கடத்தப்பட்டு, வலியுறுத்தப்படுகின்றன.  

இந்த வரையறையின்படி, ஓர் ஆண் எப்போதும் வெற்றி பெற வேண்டும். அவனே தலைமைப் பொறுப்பினை வகிக்கவேண்டும். எதற்கும் அவன் உறுதியாக இருக்க வேண்டும், அழக் கூடாது, வீரனாக இருக்க வேண்டும். அவனுடைய ஆண் குறி பெரிதாக இருக்க வேண்டும். அவன் மலடாக இருந்துவிடக் கூடாது. கண்டிப்பாகப் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும். பெண்களை மயக்குவது, அவர்களை வெல்வது, ஆள்வது, அவர்களைக் காப்பாற்றுவது, அவர்களிடம் எவ்வகையிலும் விட்டுக்கொடுக்காமல் வாழ்வது, யாரிடமும் சமாதானமாகப் போகாமல் இருப்பது முதலானவை ஆண்தன்மையின் அடிப்படையான குணங்களாகக் கருதப்படுகின்றன. மேலும் அவர்கள் நன்றாகச் சம்பாதிக்க வேண்டும், முதலிரவிலேயே `கதையை’ முடித்துவிட வேண்டும், வீட்டுவேலை செய்யக் கூடாது, வீட்டிலேயே எப்போதும் இருக்கக் கூடாது, வெளியில் நாலு இடத்திற்குப் போக வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகின்றன. 

தொடர்ச்சியாக இந்தக் கற்பிதங்கள் எதிர்பார்ப்புகளாக ஆண்கள்மீது திணிக்கப் படுகின்றன. இவற்றை அடைய முடியாமல் அல்லது பின்பற்ற முடியாமல் போகிற ஆணைத் தோல்வியடைந்தவன், கையாலாகாதவன், பொட்டை என்று அழைத்து அவனை அவமானங்களுக்கு உள்ளாக்குவதைச் சமூகம் தொடர்ச்சியாக நிகழ்த்துகிறது. 

ஆண்களுக்கு அவர்கள் தகுதிக்கு மீறி பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றன. இதனால், அவர்கள் கடும் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக நிறைய ஆண்கள் தங்களது தங்கைகளுக்கும் அக்காக் களுக்கும் திருமணம் முடித்து வைத்துவிட்டுத் திரும்பிப்பார்க்கும் போது வயது 40-ஐ நெருங்கிவிடுகிறது. அப்புறம்தான் அவர்கள் கல்யாணத்தைப் பற்றி சிந்திக்கவே முடியும். காதல், பெண் நட்பு என்பதெல்லாம் கடமைக்கு பிறகுதான்!

அதுவரை பாலுறவு என்பது வெறும் போர்னோ படங்களுடன் முடிந்துவிடும் அவலநிலை. வாழ்வின் பெரும்பகுதி நல்ல வேலை கிடைத்து, சம்பாதித்து, வீட்டில் இருப்போரைக் கரையேற்றுவதில் விழிப் பிதுங்கிவிடுகிறது. இன்றுவரை போர்களில் ஆண்களே அதிகம் சாகின்றனர். ஏனெனில், ஆண்கள் போரிட வேண்டும். பெண்களை, குழந்தைகளை அவர்கள் பாதுகாக்க வேண்டும். காரணம் அவனே வலிமையானவன். காப்பது ஆண்தன்மைக்கு அழகு, காக்கப்படுதல் பெண்மையின் குறியீடு என்று நம்பப்படுகிறது.

ஆண்களின் பாலியல் உறுப்பு தொடர்பான குழப்பங்களையும் சந்தேகங்களையும் நம்பி ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் லேகியங்கள் விற்கின்றனர். காரணம், ஆண் என்பவனுக்கு ஆணுறுப்பு என்பதும், அதன் அளவு என்பதும்கூட ஆண்தன்மையின் அடையாளங்களாக இருக்கிறது. அதனால்தான், தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது உலகெங்கும் கோடிக்கணக்கான போலி பாலியல் மருத்துவர்கள் பெருகியுள்ளனர். தொலைக்காட்சிகள் நடத்திவரும் பாலியல் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் குறிகளின் நீளம் பற்றியும் சுய இன்பம் அனுபவிப்பது குறித்தும் புலம்புகிற ஆண்கள் எவ்வளவு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பதையும் நாம் கண்கூடாகக் காணமுடியும்.

ஆண்தன்மையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று வெற்றி. இங்கே எல்லா ஆண்களும் வெற்றி பெற்று விடுவதில்லை. வெற்றிபெற முடியாத ஆண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். அதிகம் குடிக்கின்றனர். ஆண்கள் குடிக்கலாம் என்கிற உரிமை இங்கு ஆண்களுக்கு எதிராக வேலை செய்கிறது. வெற்றிபெற முடியாத ஆண்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்; குறிப்பாகக் குடும்பங்களுக்குள். வெளியில் போய் அதிகம் அடி, உதையும் வாங்குகின்றனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அடிபட்டுச் சாகின்றனர். பிறரையும் கொல்கின்றனர்.

 ஆண்தன்மையின் இன்னொரு குணம், தன் உடல் வேதனையைப் பொறுத்துக்கொள்வது, அலட்சியப்படுத்துவது, கண்டும் காணாமல் இருப்பது. தனக்கு வலிக்கிறது என்றால், தன்னை மென்மையானவன் என்று சமூகமும், குடும்பமும் என்ன சொல்லுமோ? என்கிற பிரமையில் தன் உடல் ஆரோக்கியத்தைப் பல ஆண்கள் கண்டுகொள்வதில்லை. இதனால், நோய் முற்றிப்போய் அவர்களும் பாதிக்கப்பட்டு, அவர்களின் குடும்பமும் நஷ்டப்படுகிறது.

மகாராஷ்ட்ராவிலும் ஆந்திராவிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும்கூட கடன் சுமையினால் விவசாயிகள் (படிக்கவும் ஆண் விவசாயிகள்) தற்கொலை செய்து கொள்வதுபற்றி நாம் அறிவோம். குடும்பத்தினரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சாகும் மனநிலை எப்படி உருவாகிறது ஒருவருக்கு? அந்தக் கடனை யார் கட்டுவது? மனைவியா? குழந்தைகளா? விவசாயிகள் பிரச்னைக்கு அரசின் கொள்கைகளும் சுற்றுச்சூழல் மாசுபடுதலும் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றோடு குடும்பத்தலைவர் என்ற முறையில் தோல்வியும் அவமானமும் ஆண்களுக்கு அதிக மன அழுத்தத்தைக் கொடுக்கின்றன.

மேலும் வங்கிகளும் ஆண்களுக்கே அதிகம் கடன் கொடுக்கின்றன. அவர்கள்மீது மிகுந்த பொறுப்பை ஏற்றுகின்றன. தான் எல்லாம் செய்துவிட முடியும் என்று நினைக்கிற சூழலில் விளைச்சல் இல்லை, மழை இல்லை, விலை கிடைக்கவில்லை எனும் இக்கட்டு, எல்லாவற்றையும் விட்டு ஓடிவிட வேண்டும் என்று நினைக்க வைக்கிறது. தன் ஆண்தன்மைக்கு, தன் தலைமைப் பண்புக்கு ஏற்பட்ட தோல்வியாக நினைக்கும் ஆண் தற்கொலை செய்துகொள்கிறான்.

பெரும் நகரங்களில் காதலிக்க மறுத்த பெண்கள்மீது திராவகம் ஊற்றும் ஆண்களும், ஆண் தன்மையினால் பாதிக்கப்பட்டவர்களே. அவர்களால் ஒரு பெண் `இல்லை’, ‘வேண்டாம்’ என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. கோபம் வருகிறது. வன்முறையில் இறங்குகின்றனர். தனக்கு எடுத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது என்று நினைப்பில் வளர்ந்தவன்,  ஒரு பெண் தன்னை நிராகரிக்கும்போது வரும் ஆத்திரம், புத்தியைப் பேதலிக்க வைக்கிறது. இந்தியாவில் நிறைய இளைஞர்கள் இப்படிப்பட்ட குற்றங்களுக்காகக் கைதாகிச் சிறையில் இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் இந்த ஆண்தன்மையின் மோசமான பிரதிகளைத் திரைப்படமாக்குகின்றனர். தங்கள் சினிமாக்களில் காதலிக்கிறேன் என்கிற பெயரில் பெண்களைச் சபிக்கின்றனர்; மிரட்டுகின்றனர்; அச்சுறுத்துகின்றனர்; பாலியல் தொந்தரவு செய்கின்றனர். இதெல்லாம் ஆண்தன்மை கொடுக்கும் உற்சாகமான பொழுதுபோக்கு மனநிலை. எனக்கு இல்லாதது யாருக்குமே கிடைக்கக் கூடாது, நான் கேட்டு எப்படி ஒரு பெண் மறுக்கலாம் என்கிற எண்ணங்கள் எல்லாம் ஆண்தன்மையின் மனப்பிறழ்வுகளே!

இங்கே ஆண்களும் விடுதிகளில், சிறைகளில், ராணுவத்தில், வீடுகளில், பொது இடங்களில் சக ஆண்களால் பாலியல் தொந்தரவுகளுக்கு, பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாகச் சிறுவர்கள் சித்தப்பாக்களாலும், மாமாக்களாலும், தாத்தாக்களாலும், பிற உறவினர்களாலும் வீடுகளுக்கு உள்ளேயும் ஆசிரியர்களாலும், அதிகாரிகளாலும், காப்பாளர்களாலும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். வேலை செய்யும் இடங்களில் தங்கியிருக்கும் சிறுவர்கள் கடும் வன்முறை நிறைந்த பலாத்காரத்தை சக ஆண்களிடம் இருந்து எதிர்கொள்கின்றனர். தெருவில் வசிக்கும் சிறுவர்களின் நிலை இன்னும் பரிதாபம். உலகில் ஆறில் ஓர் ஆண், சக ஆண்களால பலாத்காரத்திற்கு உட்படுத்தப் படுவதாகப்  புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கலவரங்களில் ஆண்களே ஆண்களால் வன்முறைக்கு ஆயுதமாகப் பயன்படுத்தப் படுகின்றனர். ஆண்களே ஆண்களால் கொலை செய்யப்படுகின்றனர். மிகைப்படுத்தப்பட்ட, வீங்கிய ஆண் திமிர் ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. சண்டைக்கும், வன்முறைக்கும் ஆண்கள் முன்னுக்கு நிற்கின்றனர். அதிகம் அடி, உதை வாங்குகின்றனர். சாகின்றனர். அதிகமாக லாக்அப் கொலைகளுக்குப் பலியாவதும் ஆண்களே. அவர்களை அடித்துக்கொல்வதும் ஆண்களே.

வயதான கிழவர், மனைவி இறந்துவிட்டால் வாழத்தெரியாமல் திண்டாடுகிறார். சிரமப்படுகிறார். ஆனால், இங்கே வயதான காலத்தில் கணவன் இறந்தபிறகும் கிராமத்திலும்கூட தன்னந்தனியாகத் தைரியமாக வாழ்கிற எத்தனையோ பாட்டிகள் இருக்கிறார்கள். காரணம், பொறுப்பாகக் குடும்பத்தையும் தன்னையும் பார்த்துக்கொண்ட அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது. சீராட்டி, பாராட்டி, கவனிப்புக்கு உள்ளாகும் ஆணோ, துணை போனதும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போகிறான்.

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களில் ஆண் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் கரடு முரடானவையாக, வன்முறையைக் கொண்டாடு வதாக இருப்பதையும், பெண் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் மென்மையை, அமைதியைக் கொண்டாடுவதாக இருப்பதையும் நாம் கவனிக்கலாம். ஆண்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே வன்முறையைக் கொண்டாடும் வலியுறுத்தும் ஆண்தன்மைக்குப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். அதுவே அவர்களின் சுமையாகவும் பழியாகவும் சாகும்வரை தொடர்கிறது. அவர்கள் அதிலிருந்து வெளிவர முயற்சித்தால் அன்றி ஆண்தன்மையின் சிக்கல்களில் இருந்து தப்பவே முடியாது.
சாலைகளில் வேகமாக வண்டி ஓட்டுவதுகூட ஆண் தன்மையின் அடையாளம்தான். நமது குடும்பம் அல்லது நட்பு வட்டாரத்தில் இப்படிக் கண்மூடித்தனமான வேகத்தில் வண்டி ஓட்டி விபத்துக்கு உள்ளானவர் பலர் உண்டு. நிரந்தர ஊனம் அல்லது மரணம் அல்லது பொருளாதார அழிவு இவைதான் இதற்குக் கிடைக்கும் பரிசு. பெண்கள் மெதுவாக வண்டி ஓட்டினால், கேலி செய்யப்படுவதும் அவர்கள் ஓட்டும் வாகனங்களை இடிப்பதுபோல ஓட்டிப் பயமுறுத்துவதும் இதன் தொடர்புடையதுதான். ஆண்கள் மெதுவாக வண்டி ஓட்டினால், `பொம்பள மாதிரி ஓட்டுகிறாயே’ என்று பலர் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம்.

பாலின சிறுபான்மையினர் அல்லது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவர்களின் பாலியல் தேர்வு இந்த ஆண்தன்மையின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. அதனால்தான், இன்னும் பல நாடுகளில் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் கடும் வன்முறைக்கு ஆளாகின்றனர். பல நாடுகளில் தன்பால் சேர்க்கை சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது.  பாலியல் சிறுபான்மையினர் ஆண்மை அல்லது பெண்மை என்கிற கறாரான வரையறையை இவர்கள் கலைத்து எறிகின்றனர். ஓர் ஆணுக்குள் பெண்மையும் ஒரு பெண்ணுக்குள் ஆண்மையும் இருக்க முடியும் என்கிற வாதம் பேராண்மை என்கிற பேருண்மையைத் தவிடு பொடியாக்குகிறது.

பெண்களுக்கும் ஆண்தன்மை உண்டு. அத்தகையவர்கள் பிற பெண்களையும் ஆண்களையும் ஒடுக்குகின்றனர். ஜெயலலிதா, மந்திரிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் தனது காலில் விழ வைத்துப் பார்ப்பதும் ஒருவித ஆண் தன்மையின் வெளிப்பாடுதான். பெண்களும் தங்களது பிள்ளைகளுக்கு ஆண்தன்மைகளைக்    கற்றுக் கொடுக் கின்றனர். பெண்களும் ஆண்தன்மை சரியென்று நம்புகின்றனர். தம்மையும் சக பெண்களையும் அது அதிகம் பாதிக்கிறது என்பது தெரியாமல் இது நடக்கிறது. பெண் காவல்துறை உயர் அதிகாரிகளை சார் என்றே அவருக்குக் கீழே வேலை செய்வோர் அழைக்கும் வழக்கம் பல காலம் இங்கிருந்தது!

நகர்புறத்துப் பெண்களின் ஆண்தன்மை, கிராமப்புற ஆண்களின் ஆண்தன்மையை விட வன்மமானதாக இருப்பதையும் உயர் சாதிப் பெண் களின் ஆண்தன்மை, ஒடுக்கப்பட்ட சாதி ஆண்களின் ஆண்தன்மையை விட மிகுந்த அழுத்தமானதாக இருப்பதையும் நாம் பார்க்கலாம். ஆண்தன்மை ஆண் உடலின் வழியாக மட்டும் செயல்பட வேண்டியதில்லை. ஆண்தன்மை ஓர் அரசியல். அது பல உடல்களின் வழியாகப் பல அளவுகளில் நேரத்திற்கு ஏற்றவாறு வெளிப்படுத்தப்படுகிறது.

இப்போது இந்த ஆண் தன்மைக்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கல், வளர்ந்துவரும் பெண்கள், அவர்கள் அடைந்திருக்கும் வெற்றி ஆகியன. முன்புபோல பெண்கள் குறிப்பாகப் படித்த பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள் ஆண்களின் தலைமையைக் கண்மூடித்தனமாக ஏற்பதில்லை. குடும்பங்களில், வேலை செய்யும் இடங்களில் பெண்கள் முன்முயற்சி எடுப்பதும், தலைமைப் பொறுப்பிற்கு வருவதும் எப்போதும் கவனமும் முக்கியத்துவமும் பெற்றுப் பழகிய ஆண்களுக்கு, சிக்கலை ஏற்படுத்துகிறது. கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தமது ஆண்தன்மை அல்லது ஆண்மை, நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதாக உணர்கின்றனர். சிறு வயதிலிருந்தே கடும் கட்டுப்பாடுகளுக்குள்ளான (அது அநீதியானதுதான் என்றாலும்) பெண்கள் பிற்காலத்தில் வரும் நெருக்கடிகளைத் தாங்கி அதைக் கடந்து பிழைத்துக் கொள்கின்றனர். எப்போதும் தேவையற்ற, அளவுக்கு மீறிய முக்கியத்துவம் பெற்ற ஆண்கள் பின்னாள்களில் வாழ்க்கை கொடுக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறு கின்றனர். அவர்களை எது கொண்டாடியதோ, அதுவே சுமையாகப் பின்னால் வதைக்கிறது. 

எல்லா ஆண்களும் சமமில்லை. எல்லா ஆண்தன்மைகளும் ஒன்றல்ல. இங்கு பல ஆண்தன்மைகள் நிலவுகின்றன. ஆதிக்கம் செலுத்துகிற ஆண்தன்மை, ஆதிக்கம் செலுத்தப்படுகிற ஆண்தன்மை, எதிர்மறையான ஆண்தன்மை, நேர்மறையான ஆண்தன்மை என ஆண்தன்மைகள் பலவகைப்பட்டவை. வர்க்கம், சாதி, மொழி, இனம், மதம் ஆகியன சார்ந்து ஆண்தன்மை மாறுபடுகிறது. ஒன்று இன்னொன்றை ஒடுக்குகிறது, சுரண்டுகிறது. முதலாளியின் ஆண்தன்மை வேறு. தொழிலாளியின் ஆண்தன்மை வேறு. இருவருக்கும் வெவ்வேறு விதமான அதிகாரங்கள் இருக்கின்றன. இருவரும் எதிர்கொள்ளும் நெருக்கடி வேறு.

திருப்பூரில் சிறிய பனியன் கம்பெனி வைத்திருக்கும் ஒரு நபர் இரவுபகல் தூங்காது வெளிநாட்டு Buyer (வாங்குபவர்) கொடுக்கும் நெருக்கடிக்குக் கட்டுப்பட்டு வேலை செய்கிறார். தன் தொழிலாளிகளிடம் வேலை வாங்குகிறார். அவரை Buyer விரட்டுவார். உருட்டுவார். அதே முதலாளி தன் தொழிலாளியை உருட்டுவார், மிரட்டுவார். Buyer, முதலாளி, தொழிலாளி என இங்கு மூன்று நிலைகளில் ஆண்தன்மைகள் செயல்படுவதைக் காணமுடியும். அதேபோல பனியன் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளி வீட்டுக்கு வந்து குளித்துச் சாப்பிடத் தயாராவார். அவருடன் பனியன் கம்பெனியில் வேலை செய்த அவரது மனைவி அப்படி இருக்க முடியாது. வீட்டுக்கு வந்ததும் சமைத்து எல்லோருக்கும் சோறும் போட வேண்டும். தொழிலாளியின் ஆண்தன்மை முதலாளியின் ஆண்தன்மையால் ஒடுக்கப்பட்டாலும், வீட்டில் தொழிலாளியின் ஆண்தன்மை ஆதிக்க ஆண்தன்மையாக உருவெடுக்கிறது.

ஓர் இஸ்லாமிய ஆண் இந்தியாவின் எந்த நகரத்திலும் நள்ளிரவில் காவலர்களின் நெருக்கடியைச் சந்திக்காது பயணிக்க முடியாது என்பதை  இங்கே  நாம்  நினைவு கொள்ள வேண்டும்.  இந்து மத ஆண்தன்மைகளுக்குக் கிடைக்கிற அங்கீகாரம் அவருக்குக் கிடைப்பதில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதேபோல அவருக்கு இருக்கிற உரிமை ஓர் இஸ்லாமியப் பெண்ணிற்கு இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

மேலும் ஆதிக்கசாதிக்கான ஆண்தன்மை வேறு, தலித் ஆண்தன்மை வேறு. ஆதிக்கசாதி ஆணுக்கு இருக்கிற வசதி வாய்ப்புகள் தலித் ஆணுக்கோ பிற இடைச்சாதி ஆணுக்கோ இல்லை என்பதும் ஆண்தன்மைகளில் இருக்கிற வேறுபாடுகளை நமக்கு உணர்த்தும். அதேபோல தலித் ஆண்தன்மையும் கூட, தன் வீட்டிற்குள் பல சமயங்களில் ஆதிக்க ஆண்தன்மையாக வெளிப்படுகிறது.

இப்படித் தன் குடும்பத்திற்குள் ஆதிக்கம் செலுத்தும் ஆண்தன்மை, தெருவில், பொதுவெளியில் தன் சாதி, வர்க்க, மத, நிற, உருவ அடையாளங்களின் காரணமாகச் சிக்கிச் சீரழிவதை நாம் கண்டிருக்கக்கூடும்.

அரசியல் தலைவர்கள் சமாதான விரும்பிகளாக இருந்தால், அவர்களது ஆண்தன்மை கேலிக்குள்ளாகிறது. போர், வன்முறை, முரட்டுத்தனம் எல்லாம் வசீகர ஆண்தன்மையாகக் கருதப்படுகிறது. மோடியின் 55 இன்ச் மார்பு என்கிற தேர்தல் பிரசாரம்கூட ஓர் ஆதிக்க ஆண்தன்மையின் வெளிப்பாடு தான்.  மோடி வண்ண வண்ண உடைகளை அணிவது, அசைந்து அசைந்து நடப்பது, முழக்கமிட்டுப் பேசுவது, துள்ளிக் குதித்து விமானத்தில் ஏறுவது எல்லாம் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஆதிக்க, ஆக்ரோஷ, வீர ஆண்தன்மையாகக் கருதலாம். இவர் பிரதமராக வந்தால் பாகிஸ்தானை, சீனாவை, தீவிரவாதிகளை என எல்லோரையும் துவம்சம் செய்துவிடுவார் என்று மோடியின் பக்தர்கள் முழங்கியதுகூட இன்னொரு அளவிலான ரசிக ஆண்தன்மையின் அறிகுறி. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவின் (ஒரு பெண்ணின்) பேச்சைக்கேட்டு நடந்தார் என்றும் மோடி சுதந்தரமாகச் (ஆண்மையோடு) செயல்படுவார் என்றும் இருவரது ஆண்தன்மைகள் தேர்தலின்போதும் அதற்கு முன்பும் ஒப்பீடு செய்யப்பட்டன.

பராக் ஒபாமா தனது பிரசாரக் காலங்களில் தன்னைச் சமாதான விரும்பியாகவும், நீதிமானாகவும் காட்டிக்கொண்டார். (அவரே அதிபரானதும் பல தாக்குதல்களை நடத்தினார் என்பது வேறு சமாசாரம்). அதே அமெரிக்கத் தேர்தலில் பின்னாள்களில் டொனால்ட் ட்ரம்ப் பெண்களை வெளிப்படையாக, அவதூறாகப் பேசுவது, போரை முன்னிறுத்தியது எனத் தலைகீழாக, வேறுவிதமான முரட்டு எதிர்மறை ஆண்தன்மையை வெளிப்படுத்தினார்.

இறுதியாக நேர்மறையான ஆண்தன்மை என்பது  நமக்கு  உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. பெண்ணியவாதியாக ஆண் இருப்பது, பெண்களின் உரிமையை மதிக்கிற ஆணாக இருப்பது, அவனுக்குக் கிடைக்கிற அதிகாரத்தை அவன் நேர்மறையாகப் பயன்படுத்துவது என இதைப் புரிந்துகொள்ளலாம். நமக்குத் தெரிந்து நிறைய அப்பாக்கள் தங்கள் பெண் பிள்ளைகளைப் படிக்கவைக்க கடும் முயற்சி எடுக்கின்றனர். நமக்குத் தெரிந்து நிறைய அண்ணன்கள் தங்களது சகோதரிகளின் சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரிக்கின்றனர். நமக்குத் தெரிந்து நிறைய கணவன்மார்கள் வீட்டில் தினசரி சமைப்பதைப் பார்க்க முடிகிறது. பொது இடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும்போது குறிப்பாக அதில் ஈடுபடுவது தம் நண்பர்களாக இருந்தாலும் அதை எதிர்க்கும் ஆண்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதெல்லாம் நேர்மறையான ஆண்தன்மைக்கு உதாரணங்களாகும்.

பெண்களுக்கு எதிராக வன்முறை நிகழும் போது அதைப் பெண்கள் அமைப்புகள்தான் கண்டிக்க வேண்டும் என்பதில்லை. ஆண்களும் கண்டிக்கலாம். கண்டிக்க வேண்டும். அதுவும் ஒரு நேர்மறையான ஆண்தன்மைதான். சமூக ஊடகங்களில் பெண்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும்போது அவர்களுக்கு ஆதரவாக ஆண்கள் வந்து சக ஆண்களுக்குப் புரிய வைப்பதும் சக ஆண்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் நேர்மறையான ஆண்தன்மையின் வெளிப்பாடுதான்.

ஓர் ஆண், பல ஆண்தன்மைகளைக் கொண்டவராக இருக்கிறார். நேர்மறையான ஆண்தன்மையுடன் இருப்பது எப்போது என்பதுதான் இங்கே கேள்வி!

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

No comments:

Post a Comment