Thursday, September 27, 2012

சர்வதேச அணு மின் உலை வியாபாரிகளும் உள்ளூர் தரகர்களும்!

நான் உனக்குத் துணை! நீ எனக்குத் துணை!

மின்சாரம், பெட்ரோல் போன்ற எரிசக்தி அல்லது ஆற்றல் உற்பத்தி முறைகளைக் கட்டுப்படுத்தி வைப்பது ஒரு அரசியல். அதனால் தான் வளைகுடா நாடுகளில் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் அத்தனை ஆட்டம் போடுகின்றனர். ஆட்சிகளை உருவாக்குகின்றனர். அதிபர்களைக் கொலை செய்கின்றனர். அதை நம்பி லட்சக்கணக்கான கோடிகளில் வியாபாரமும் முதலீடுகளும் செய்யப்படுகின்றன. அதே போல் தான் அணு மின்சாரமும்.

வளர்ந்து வரும் நாடுகளில் உலகமயமாதலினால் உருவாகியிருக்கும் புதிய பணக்காரர்கள் ஒரு மயக்கத்தில் இருக்கின்றனர். தொழிற் சாலைகளை கண்டபடி திறந்து கொண்டிருக்கின்றனர். ஒரு வெறித்தனமான நுகர்வுக் கலாச்சாரத்தைத் தழுவியுள்ளனர். அந்த மயக்கத்தைப் பயன்படுத்தி மின் தேவையை மிகைப்படுத்தும் கூட்டமும் இருக்கிறது. சொகுசாக வாழவேண்டும் எனில் இவ்வளவு மின்சாரம் வேண்டும் என்கிற பதட்டம் அவர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. 

அதைப் பயன்படுத்திக்கொண்டு வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் அணு மின் திட்டங்களை விற்று காசு பார்க்கின்றனர். அதனால் தான்  ஃபுகுசிமாவில் பாதிக்கப்பட்ட ஜப்பான் கூட கம்போடியாவிலும், தாய்லாந்திலும், வியட்நாமிலும் அணு உலைகளை விற்றுக் கொண்டிருக்கின்றது. அதில் உள்நாட்டு அரசியல் வாதிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், நிபுணர்களுக்கும், ஊடகங்களுக்கும், அதிகாரிகளுக்கும் நிறைய கமிசன்கள் கிடைக்கும். இந்த அரசியல் தான் இப்போது நடக்கிறது. 

இதற்கு மாற்றாக காற்று மூலமாகவோ, சூரிய வெப்பம் மூலமாகவோ மின்சாரம் தயாரிப்பது இந்த மையப்படுத்தப்பட்ட மோசடி அரசியலுக்கு எதிரானது. மக்களே அவரவர் ஊர்களில் மின்சாரம் தயாரித்துக் கொண்டால் அவர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது? திமுக அரசு தொலைக்காட்சியை இலவசமாகக் கொடுத்ததும் இந்தப் பின்னணியில் தான். அதனால் தான் தினமலர், சன் டிவி போன்ற முதலாளிகள் சம்பந்தம் இல்லாமல் உதயக்குமாரைப் பற்றி கண்டபடி பேசுகின்றனர்.

பின்குறிப்பு: பசிபிக் கடலில் உள்ள யாப் தீவுகளுக்கு அமெரிக்கா "விடுதலை" கொடுத்த போது அன்பளிப்பாக தொலைக்காட்சி நிலையங்களை நிறுவியது என்பதும் அதன் மூலம் ஒரு கலாச்சார காலனியத்தைத் தொடர்ந்தது என்பதும் வரலாறு. இதைப் பற்றி டென்னிஸ் ஓ ரூர்க் ஒரு ஆவணப்படமும் எடுத்திருக்கிறார்.

Wednesday, September 26, 2012

கூடன்குளம் போராட்டம்: சில மனப்பதிவுகள்!

ஒரு வரலாறு உருவாகிறது!



கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கட்டங்களில், பல்வேறு வடிவங்களில், பல்வேறு பெயர்களில் கூடன்குள்ம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரையை மையமாக வைத்து ஒய்.டேவிட் தலைமையில் தொடர்ந்து பல போராட்டங்கள் மதுரையிலும், திருநெல்வேலியிலும், நாகர்கோவிலும், தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் நடைபெற்றன. நாகார்ஜுனன், ஞாநி போன்ற எழுத்தாளர்களும் அணு சக்தி எதிர்ப்பு பற்றி தொடர்ந்து எழுதி வந்தனர். வைகோ 80களில் நாடாளுமன்றத்தில் கூடன்குளத்தில் அணு உலை வரக்கூடாது என்று பேசியிருப்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. கன்னியாகுமரியில்90களில் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் இடிந்தகரையைச் சேர்ந்த ஒருவர் இறந்திருக்கிறார்.

இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல் உட்பட்ட மீனவ கிராமங்களில் தொடர்ந்து அணு உலையை எதிர்த்து வந்திருக்கின்றனர். தூத்துக்குடியில் அன்டன் கோமஸ் போன்ற தலைவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மீனவர்கள் அணு உலை எதிர்ப்பில் எந்த தடுமாற்றமும் இன்றி உறுதியாகவே இருந்து வந்துள்ளனர்.

ஆனால் அணு உலை கட்டப்பட்டு  இருப்பதோ இடிந்தகரைக்கும் கூடன்குளத்திற்கும் நடுவில். இடிந்தகரைக்கும் கூடன்குளத்திற்க்கும் நடுவில் வைராவிக்கிணறு எனும் ஒரு கிராமமும் (விவசாய உள்நாட்டு) இருக்கிறது. இந்த மூன்று கிராமங்களைச் சேர்ந்தவர்களின் நிலங்கள் தான் அணு உலை வளாகத்திற்கு அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் எந்த ஒரு "வளர்ச்சித் திட்டம்" வந்தாலும் அரசாங்கம்  வழக்கம் போல என்ன செய்யுமோ அதையே இத்திட்டதிலும் செய்தது.


1) கூடன்குளத்திலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மக்களிடையே கறுப்பு ஆடுகளை உருவாக்கி, நிலங்களை கையகப்படுத்துவதற்கு ஏதுவான சூழ்லை உருவாக்கியது. உள்ளூரில் இருக்கிற சிலருக்கு கட்டுமானப்பணிக்கு ஒப்பந்த பணி உரிமையை லஞ்சமாகக் கொடுத்து இழுத்துக்கொண்டது. அப்படி அணு உலைக்கு நிலம் வாங்கிக்கொடுத்த ஒரு கூடன்குளம் விவசாயியே என்னிடம் அதைப் பற்றி வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார். அரசும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், காவல்துறையும், ஊடகமும்,  சினிமா நடிகர்களும், பணக்காரர்களும் ஒரு தொழிற்சாலை வந்தால் ஊருக்கு நல்லது என்று சொல்லும் போது விவசாயிகளும், தொழிலாளர்களும் குழம்பித்தான் போவார்கள். அணு உலையால் ஒரு ஆபத்தும் இல்லை என்று இப்போதும் சொல்லி வரும் அணு உலை நிர்வாகம் அன்று மட்டும் உண்மைகளை மக்களிடம் சொல்லியிருக்குமா என்ன? அப்போதும் உண்மைகள் மறைக்கப்பட்டன். பொய்யான பிரச்சாரங்கள் செய்யப்பட்டன். அதிகார துஷ்பிரயோகம் நடந்தது. விதிகள் மீறப்பட்டன. மக்கள் மீது மிகுந்த அழுத்தத்தைச் செலுத்தி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

2) காவல்துறையைக் கொண்டு போராட்டம் நடத்தும் பலர் மீது பொய் வழக்கு போட்டு அவர்களை மிரட்டியது. 2007ல் நான் கூடன்குளம் பற்றிய ஆவணப்படம் எடுக்க அங்கு போன போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் திறந்த வெளியில் என்னைச் சந்திக்கத் தயங்கினர். அவர்கள் மீது வழக்குகள் இருந்ததே காரணம். நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் அஞ்சுகிராமம் பேருந்திற்காக நின்றிருந்த போது கூடன்குளம் நண்பர் ஒருவர் (போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்) என்னுடன் பேச மறுத்துவிட்டார். காரணம் ஒரு உளவுத்துறைக் காவலர் அவரைக் கண்காணித்துக் கொண்டு இருந்ததே. அது எனக்குப் பிறகு தான் தெரியும். 2012ல் எப்படி காவல்துறை பலர் மீது வழக்குப் போட்டு மிரட்டி வருகிறதோ அது போல தொடர்ந்து ஆரம்பத்தில் இருந்து காவல்துறையின் நெருக்கடி இருந்து வந்திருக்கிறது. இதில் கூடன்குளம் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

3) இந்து முன்னணி போன்ற மதவாத அமைப்புகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தபடியே இருந்து வந்துள்ளனர். அவர்கள் கூடன்குளத்தில் அணு உலை வரவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வந்துள்ளனர். நான் 90களில் இறுதியில் பங்கேற்ற ஒரு கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு ஊர்வலத்தில் கூடன்குளத்தில் இந்து முன்னணியினர் எங்கள் மீது கற்கள் எறிந்து தாக்குதல் நடத்தினர். அப்போதும் இடிந்தகரை பெண்களே முன் நின்று போராடி இந்து முன்னணியினரை அடித்து விரட்டினர். இந்து முன்னணி போன்ற அமைப்புகளை அரசாங்கமும் அணு உலை நிர்வாகமும் ஊக்குவித்தது. அவர்களுக்கு கட்டுமானப்பணிக்கான ஒப்பந்த உரிமைகளில் முக்கியத்துவம் கொடுத்தது.


பின்னாட்களில் கூடன்குளம் மக்களில் பலர் குழம்பிப் போய் வெளியூரில் வந்து அணு உலை வளாகக் கட்டுமானப் பணியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வீடுகளை, அறைகளை வாடகைக்குக் கொடுத்தனர். அத்தொழிலாளர்களுக்கென்று பலசரக்குக் கடைகளும், மருந்துக்கடைகளும், உணவுக்கடைகளும், சலூன்களும், துணிக்கடைகளும் கூடன்குளத்தில் உருவாகின. இது போராட்டத்திற்கு கூடன்குளத்தில் ஒரு பின்னடைவைக் கொடுத்தது. நான் 2007ல், 2008ல் படம் பிடிக்கப் போன போது பலர் அணு உலை எதிர்ப்பில் உறுதியாக இல்லை. அல்லது வெளிப்படையாக இல்லை. யாரும் என்னிடம் பேச வரவில்லை. ஆனாலும் பரவலாக, அமைதியான எதிர்ப்பு உணர்வு இருந்தது.

ஆனால் பக்கத்தில் இருக்கும் கடற்கரையோர கிராமங்களான இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளியில் மக்கள் அணு உலைத் திட்டத்தை எதிர்த்தே வந்தனர். இவை எல்லாம் கத்தோலிக்க மீனவ கிராமங்கள். இங்கு பங்குச் சாமியார்கள் தான் ஏறக்குறைய ஊர்த் தலைவர்கள். ஊர்க்கமிட்டியினர் இருந்தாலும் பங்குச் சாமியார் மிகவும் முக்கியமானவர். 2008ல் நான் போன போது இடிந்தகரை பங்குச் சாமியார் அணு உலை நிர்வாகத்துடன் இணக்கமாக இருந்தார். அதனால் அந்த ஊரில் கூட்டங்கள் போடுவது சிரமமாக இருந்தது. இப்போது இருக்கும் பங்குச் சாமியார் இளைஞர், முற்போக்கு சிந்தனை உடையவர், தைரியமானவர். இவரது இல்லத்தில் தான் உதயக்குமாரும் மற்ற தலைவர்களும் தங்கியிருக்கின்றனர். பங்குச் சாமியாரின் இல்லத்திற்கு எதிரே தான் தேவாலயம். அங்கு தான் போராட்டம் நடக்கிறது.  இது தான் பலருக்குக் குழப்பத்தை விளைவிக்கிறது. மதச்சார்பின்மை அரசியல் தான் இங்கு தடையாக இருக்கிறது.

ஒரு கிராமம் இறை நம்பிக்கையுள்ள கிராமம் எனில், அது ஒரு போராட்டத்தில் கலந்து கொள்கிறது எனில் அக்கிராம மக்கள் கோவிலில் இருந்து போராட்டத்தைத் தொடங்கினால் என்ன தவறு? போராட்டம் ஏன் செகூலராக இருக்க வேண்டும்? இடிந்தகரை மக்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால், அந்தக் கிராமத்தில் பங்குத் தந்தை ஊர்த்தலைவருக்குச் சமமாகக் கருதப்படுவதால், அவரும் அந்தப் போராட்டத்தில் பங்கு கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? அவர் கோவிலில் மணி அடிப்பதற்கு மட்டும் என்று யார் சொன்னது? அவரே கிராமத் தலைவர் எனில், தேவாலயமே அவர்களின் மையம் எனில் அங்கு போராட்டம் நடத்துவது என்ன தவறு? அது தான் நடக்கிறது இடிந்தகரையில்.  தமிழ்நாட்டில் நிறைய பாதிரியார்கள் சமூக விடுதலைக்காகப் போராடியிருக்கின்றனர். புஷ்பராயன் ஒரு முன்னாள் பாதிரியார். அவர் உவரியில் பங்குத் தந்தையாக இருந்த போது 90களில் இறுதியில் நடைபெற்ற பெருமணல் போராட்டத்தில் கலந்து கொண்டு காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவருடன் நிறைய கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் கடுமையானத் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். தென் அமெரிக்காவில் பாதிரியார்கள் ஒடுக்கும் அரசுகளுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்திருக்கிறார்கள். விடுதலை இறையியல் எனும் சிந்தனை இதற்கு துணை நின்றது.


ஆக, கடற்கரையோர கிராமங்கள் அணு உலைத் திட்டத்தை 1980களில் இருந்தே எதிர்த்து வந்திருக்கின்றன. கூடன்குளம் மக்களும் எதிர்த்து வந்திருக்கின்றனர். அரசாங்கம் பல உத்திகளைக் கொண்டு அந்த எதிர்ப்பை ஒடுக்கியே வந்திருக்கிறது என்பதற்கு நான் சில உதாரணங்களைக் குறிப்பிட்டேன்.

ஃபுகுசிமா அணு உலை விபத்திற்கு பிறகும், 2011 ஜூலையில் நடந்த சோதனை ஓட்டத்தின் போது ஏற்பட்ட சத்தம், கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு சக்தி நிர்வாகம் வெளியிட்ட விளம்பரம் (விபத்து ஏற்பட்டால் எப்படித் தப்பிக்க வேண்டும் என விளக்கமளிக்கும்) ஆகியன எல்லோரையும் விழிப்படையச் செய்தது.  உதயக்குமார், புஷ்பராயன், சேசுராஜ் ஆகியோரின் தலைமைப் பண்பு, மக்களை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளது.

2011 ஆகஸ்ட் தொடங்கிய புதிய போராட்டம் ஒரு வருடத்திற்கு மேலாக வீறு கொண்டு முன்னேறிக்கொண்டிருக்கிறது. பல எதிர்ப்புகள், பல தாக்குதல்கள், பல துரோகங்கள், பல தடைகள்,  உயிர் இழப்புகள், பொருட் சேதங்கள், தியாகங்கள் என இன்னும் போராடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள். தினமலர், சன் டிவி, தினகரன், ஹிந்து போன்ற ஊடகங்கள் அணு உலை ஆதரவு மட்டுமின்றி அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை முடக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். இன்னும் வருகின்றனர். தினமலர் பத்திரிக்கையில் உதயக்குமார் உள்ளிட்ட தலைவர்களில் முகவரிகள், தொலைபேசி எண்களை வெளியிட்டு வாசகர்கள் அவர்களை தூற்றச்சொல்லி ஊக்குவித்தது. இது என்ன பத்திரிக்கை தர்மம் என்று தெரியவில்லை. தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்கின பல ஊடகங்கள். இதுவும் என்ன தர்மம் என்று தெரியவில்லை. தீக்கதிர் கூட 'உதயக்குமார் தப்பி ஓட்டம்' என்று குறிப்பிட்டது.


ஒரு கிராமத்தில் ஒரு அரசு ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறது. அதில் அக்கிராம மக்களுக்கு திருப்தி இல்லை. ஒப்புதல் இல்லை. அதனால் அம்மக்கள் அத்திட்டத்தை எதிர்த்து போராடுகின்றனர். அவர்களிடம் நிறைய சந்தேகங்களும், கருத்துக்களும், கேள்விகளும் இருக்கின்றன. இதைத் தெளிவு படுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதிகாரிகளும், விஞ்ஞானிகளும், தலைவர்களும் சொல்லி விட்டால் மக்கள் வாயை மூடிக்கொண்டு கேட்க வேண்டுமா? அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்லி விட்டால் அது தான் இறுதியா? இந்த அரசும் அதிகாரிகளும் தலைவர்களும் அப்பழுக்கற்றவர்களா? அப்படிப்பட்ட வரலாறு கொண்டவர்களா? எல்லாக்கணங்களிலும் நேர்மையாக, மக்கள் நலனுக்காக சிந்திப்பவர்களா? தியாகம் செய்பவர்களா? அவர்கள் எவ்வளவு  ஊழல் நிறைந்தவர்கள் என்பதற்கு எத்தனை சாட்சியங்கள் நம்மிடையே உள்ளன. அவர்கள் செய்யும் அத்துமீறல்கள் எத்தனை இழப்புகளை இது வரை இந்நாட்டுக்கு கொடுத்திருக்கின்றன? இது எல்லாம் இந்தப் பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் தெரியாதா? ஏன் இவர்கள் இப்படி தனிமனித தாக்குதல்களில் இறங்கினார்கள்? இவர்களுக்கு இந்தப் போராட்டம் பற்றிய தவறான புரிதலா? இல்லை மக்கள் அடிமைகள் தான். அவர்கள் எதிர்ப்புக் காட்டக் கூடாது என்று நினைக்கின்றனரா? இனிமேல் நியாயம், நீதி எல்லாம் கிடையாது. அல்லது எப்போதுமே கிடையாது  என்று நினைக்கின்றனரா?

தொடரும்

Monday, September 24, 2012

கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 1,2,3


எனது சமீபத்திய ஆவணப்படங்கள்:


2007ல் படப்பிடிப்பு தொடங்கி மணவாளக்குறிச்சி, கல்பாக்கம் மற்றும் கூடன்குளம் ஆகிய பகுதிகளைப் பற்றி நான் எடுத்த ஆவணப்படங்களை கதிர்வீச்சுக்கதைகள் என்ற பெயரில் மூன்று பாகங்களாக வெளியிட்டுள்ளேன்.

கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 1: மணவாளக்குறிச்சி
54 நிமிடங்கள்; 2010 


அணுசக்தியின் ஆபத்துக்களைப் பற்றிப் பேசும் போது அணு உலைக்குத் தேவையான யுரேனியம் அல்லது தோரியம் தோண்டி/பிரித்தெடுப்பது பற்றி விவாதிப்பது அவசியம். கன்னியாகுமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சி அருகே சின்னவிளை, பெரியவிளை உட்பட்ட ஆறு கடற்கரையோர கிராமங்களில் இந்திய அணுசக்தித் துறையின் இந்திய அருமணல் ஆலை கடற்கரை மணலில் இருந்து தோரியம் எடுக்கிறது. 1964ல் இருந்து நடத்தப்படும் இந்த ஆலையால் கடல் அரிப்பும், கடல் அடியும், கதிர்வீச்சும் அதிகரிக்கவே மீனவர்கள் அதை எதிர்த்துப் போராடினர். மீனவர்களையே மணல் அள்ள வைத்து அவர்களுக்கு மாதச் சம்பளமும் கொடுத்து இந்திய அருமணல் ஆலை அவர்களையும் மணல் அள்ளும் பணிக்கு பாதுகாவலாக்கியது. இது வரை இப்பகுதியில் அதிகரித்த கதிர்வீச்சால் நூற்றுக்கணக்கானவர்கள் விதம் விதமான புற்று நோயால் பாதிக்கப்பட்டு மடிந்து போயிருக்கின்றனர். அப்பகுதியில் ஊனமுற்றவர்களும், மூளை வளர்ச்சியற்ற பிள்ளைகளும் அதிகம். குறைப்பிரசவமும், தோல் நோயும் கதிர்வீச்சால் என்ன விளையும் என்பதற்கு வெளிப்படையான எடுத்துக் காட்டாக விளங்குகிறது மணவாளக்குறிச்சி.

கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 2: கல்பாக்கம்
28 நிமிடங்கள்; 2011


கல்பாக்கத்தில் இருப்பவை சிறிய அணு உலைகள் தான் என்றாலும் அங்கிருக்கும் இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும் அணுக்கழிவு மறுசுழற்சி வேலைகள் மிகுந்த ஆபத்தானவை.  அதிகக் கதிர்வீச்சு வெளியிடும் தன்மை கொண்டவை. இவை புளுட்டோனியம் அணு உலைகள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் அங்கு அணுசக்தியால் இயங்கும் நீர்முழ்கிக் கப்பலும் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. தோரியத்தைப் பயன்படுத்தும் இந்திய  சுதேசி அணு உலைகள் தயாரிக்கும் ஆராய்ச்சி வேலைகளும் நடைபெறுகின்றன. இதனால் கல்பாக்கம் பகுதியில் கதிர்வீச்சால் பாதிப்பு அதிகம் என்கிறார் மருத்துவர் புகழேந்தி. சட்ராஸ்குப்பத்தில் அந்நியர்கள் நுழைந்தாலே உளவுத்துறையினர் தேடி வந்து விடுகின்றனர். நான் படம் எடுக்க ஆரம்பித்த பிறகும் நிறையப் பேர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டும் இறந்திருக்கின்றனர். அதில் ஒருவன் தான் நீங்கள் பார்க்கும் எலும்புப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சூர்யா. நான் அவனைப் படம் பிடித்த சில நாட்களிலேயே அவன் இறந்து விட்டான்.

கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 3: கூடன்குளம்
80 நிமிடங்கள்: 2012


கூடன்குளம் போராட்டம் சமகால இந்திய வரலாற்றிலேயே இல்லாத அபூர்வமான போராட்டம் என்று எனது படத்தைப் பார்த்த பூனாவின் மூத்த தொழிற்சங்கத் தலைவர் பாலசந்திர கேர்க்கர் கூறியது மிகையல்ல. எத்தனை தயாரிப்பு வேலைகள் நடந்திருக்க வேண்டும் இப்படி ஒரு நீண்ட போராட்டம் நடைபெறுவதற்கு என்று பல தமிழர் அல்லாத சிந்தனையாளர்கள் பாராட்டுகின்றனர். போராட்டத்தை நான் படம் பிடிக்கையில் பலரிடம் நான் இதைப் பற்றிக் கேட்ட போது தலைமை தான் காரணம் என்று மனதாரப் புகழ்ந்தனர் உள்ளூர் மக்கள். நாடார்களையும் மீனவர்களையும் பிரிக்கும் சக்திகளைத் தூக்கி எறிந்தது தான் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றனர். இந்தப் போராட்டம் ஒரு அணு  உலைக்கு மட்டும் எதிரானது அல்ல. ஒட்டு மொத்த வளர்ச்சி மாதிரிக்கே எதிரானது.

Thursday, September 13, 2012

எதற்கு வேண்டும் மின்சாரம்?



மின்சாரத்தை நாம் உற்பத்தி செய்கிற, கொண்டு செல்கிற, பகிர்ந்து கொள்கிற, பயன்படுத்துகிற முறைகளில் தீவிரமான, புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டு வந்தால் தான் கூடன்குளம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும் என்பது எனது கருத்து! நாம் இது வரை எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்திருக்கிறோம்? அதை யார் பயன்படுத்தினார்கள்? அதற்கு நாம் கொடுத்த விலை என்ன? எவ்வளவு மக்களை, அவர்களின் வாழ்வாதாரத்தை, நம்பிக்கையை, சுயமரியாதையை அழித்து இந்த மின்சாரத்தைத் தயாரித்தோம்? அதற்கு என்ன கணக்கு? பல குடும்பங்களைத் தெருவில் நிற்கதியாக்கி விட்டு உங்களுக்கு சொகுசு வாழ்க்கை வேண்டும் என்றால் அது நீதியல்ல! நியாயமல்ல!

எதற்கு வேண்டும் 24 மணி நேர மின்சாரம்? அதை வைத்து என்ன சாதித்தீர்கள்? நீங்கள் எவ்வளவு மின்சாரக் கட்டணம் கட்டினாலும் அதற்காக அழிக்கப்பட்ட வாழ்க்கையை ஈடு செய்ய முடியுமா?

எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் பல கிராமங்களில் கருணாநிதி கொடுத்த இலவச தொலைக்காட்சி வந்த பிறகு தான் மின்சாரத்தின் பயன்பாட்டே அதிகரித்தது. அதற்கு முன்பு அதிகாலையில் எழுந்து வேலையைப் பார்ப்பார்கள். சும்மா இருக்கிற சோம்பேறி முதலாளிகள் தான் மின்விசிறியைப் போடு, மின்விளக்கப்போடு என்று பிதற்றுவான். உழைக்கிற மக்கள் மாலையில் சீக்கிரமே உறங்கிவிடுவார்கள். விவசாயத்திற்குத் தான் அதுவும் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் வந்தால் கூட போதும். அதை வைத்து பம்பு செட்டை இயக்கி வெள்ளாமை போட்டு விடுவான் நம் விவசாயி!

எதற்கு வேண்டும் மின்சாரம்? அது என்ன தண்ணீரா? காற்றா? உணவா? பலரது அடிப்படைத் தேவைகளான தண்ணீர், காற்று மற்றும் உணவை அழித்துத்தான் மின்சாரம் எனும் சொகுசு உற்பத்தி செய்யப்படுகிறது.

அதனால் தான் நகரத்தில் இருக்கும் படித்த தமிழன் கொதிக்கிறான்! கூடன் குளம் வேண்டும் வேண்டும் என்று!

நீ நியாயமான மனிதன் என்றால் நீ உபயோகப்படுத்தும் மின்சாரத்தின் ஒவ்வொரு யூனிட்டிற்குப் பின்பும் அழிக்கப்பட்ட, சொந்த ஊர்களை விட்டு விரட்டப்பட்ட, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட பலரது துயரமும், கண்ணீரும் இருக்கிறது என்று நினைத்துப்பார்!

அறிவியல் கல்விக்கு நாம் கொடுத்த விலை!



கடந்த முப்பது ஆண்டுகளில் திமுகவும் அதிமுகவும் ஆட்சியில் இருக்கும் போது செய்த சிறந்த கல்விச் சேவைகளில் ஒன்று வரலாறு, மொழி, தத்துவம், சமூகவியல், அரசியல், பொருளாதாரம் போன்ற "மானிடவியல்" படிப்புகளை திட்டமிட்டு கல்லூரி, பல்கலைக்கழக வட்டாரங்களில் அழித்தொழித்தது. அவை வேலை வாய்ப்புத் தரும் பட்டங்கள் அல்ல என்ற கருத்து ஊக்குவிக்கப்பட்டது. பல கல்லூரிகளில் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவேயில்லை. மாணவர்கள் சேர்க்கையும் இல்லை. பல மானிடவியல் பட்டப்படிப்புகள் காணாமல் போய்விட்டன.

அதே நேரத்தில் அறிவியல் தொழில்நுட்பக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பொறியியில் கல்லூரிகள் முளைத்தன. புதிய அறிவியல் பாடங்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. அடிமாட்டு சம்பளத்துக்காவது ஆசிரியர்களை பணியில் அமர்த்தினார்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகளை தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்கிறது. அதில் பலருக்கு வேலை கிடைப்பதில்லை என்பது வேறு விஷயம்.

இதனால் ஏற்பட்ட ஆபத்துக்களில் ஒன்று தமிழ்நாட்டில் படித்தவர்களினால் கூடன்குளம் போராட்டத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த போராட்டம் எவ்வளவு தூரத்திற்கு அறிவியல் பூர்வமாகத் தவறு என்று நிரூபிப்பதிலேயே அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். எவ்வளவு தூரத்திற்கு தாம் மனிதத் தன்மை அற்றவர்களாகி விட்டோம் என்பதை உணர மறுக்கின்றனர்.

அறிவியல் மீதான மோகம் அவர்களின் கண்களை, அறிவை மறைக்கிறது. "விஞ்ஞானி" அப்துல் கலாம் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் படித்தவர்களின் ஆதர்சமான ஆளாகியிருப்பது எதேச்சையாக நடந்தது அல்ல. அதன் விளைவு சமூக அக்கறை அற்ற, சுரணையற்ற, தன் வரலாறு தெரியாத ஒரு படித்த வர்க்கத்தை உற்பத்தி செய்திருக்கிறோம். அரசின் மீதும் அதிகாரிகள் மீதும் ஊடகங்கள் மீதும் விஞ்ஞானிகள் மீது கண்மூடித்தனமான, பகுத்தறிவற்ற நம்பிக்கை வைத்திருக்கும் இக்கூட்டம், ஏழைகள் போராட்டம் நடத்தினால் அதன் நோக்கத்தை உடனடியாக சந்தேகப்படுகின்றனர். தட்டிக்கழிப்பதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர்.

படிப்பு வெறும் வேலைக்கே என்று ஒரு சமூகம் நினைக்க ஆரம்பித்தால் என்ன விளையும் என்பதற்கு தமிழ்நாடு ஒரு சான்று!