Tuesday, July 26, 2022

போய் வாருங்கள் சக்ஸ்!

எங்களின் அன்பும் மரியாதையும் உங்களுக்கு எப்போதும் உண்டு!


வெங்கடேஷ் சக்ரவர்த்தி திரைப்பட ஆய்வு, கல்வியில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தவர். அதே போல தத்துவம், உளவியல் ஆகிய புலங்களிலும் ஆர்வமுடையவர்.
மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நாங்கள் நடத்திய திரைப்படவிழாக்களில், பயிற்சிப் பட்டறைகளில் சிறப்பு அழைப்பாளராக வந்துள்ளார். எங்களது போதாமைகளை எப்போதும் மன்னித்து அன்போடு ஆதரித்திருக்கிறார்.
சென்னையில் எல்.வி.பிரசாத் திரைப்படக்கல்லூரியில் அவர் தலைமைப் பொறுப்பில் இருந்த போது எனை அழைத்து எனது படங்களைத் திரையிட்டார்.
கூடங்குளம் போராட்டம் பற்றி நான் எடுத்த ஆவணப்படத்தை ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் திரையிட்ட போது - அப்போது அங்கு ராமா நாயுடு திரைப்படக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார் - வெங்கடேஷ் சக்ரவர்த்தி வெகு தூரம் பயணம் செய்து படம் பார்க்க வந்தார். கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அன்று இரவு அவரது வீட்டில் சிறப்பான உணவும் அளித்தார்.
வெங்கடேஷ் சக்ரவர்த்தி அன்பானவர். 'என்னப்பா, எப்படி இருக்க?" என்று அவர் கேட்பது இன்னும் என் காதில் ஒலிக்கிறது. அதே போல கோபக்காரர். கருத்து வேறுபாடு காரணமாக நண்பர்களுடன் கூட சண்டை போட்டுக்கொண்டு பேசாமலும் இருப்பவர்.
சுதந்தரமான சிந்தனையாளர். கறாரான விமர்சகர். தனது கொள்கைகளில் மிகவும் உறுதியாக இருந்தவர். அதனாலேயே பல காலம் நிலையான வேலையிலோ திடமான பொருளாதார நிலையிலோ இல்லாது இருந்தவர்.
கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தான் ராமா நாயுடு திரைப்படக்கல்லூரி, எல்வி பிரசாத் திரைப்படக்கல்லூரி, சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரி ஆகிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.


எனது மதுரை நண்பர்களான சுந்தர் காளி, பாபு, லோகு, சுபகுணராஜன் ஆகியோர் மூலம் தான் சக்ரவர்த்தி எனக்கு அறிமுகம். நண்பர்கள் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நடத்திய பெரியார் கருத்தரங்கில் தான் சக்ரவர்த்தி அவர்களைச் சந்தித்தேன் என்று நினைவு.
தொடர்ந்து கும்பகோணத்தில் பேரா அ மார்க்ஸ் வெகுசன சினிமா தொடர்பாக நடத்திய கருத்தரங்கிற்கு நாங்கள் மதுரையிலிருந்து கூட்டமாக பேருந்தில் போனதும், அங்கே வெங்கடேஷ் சக்ரவர்த்தி தமது கட்டுரையை வாசித்ததும் நினைவுக்கு வருகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து தனது கைனடிக் ஹோண்டாவில் எனை அழைத்துப்போய் வீட்டில் சாப்பாடு போட்டு, வெகு நேரம் பல அரசியல், பண்பாட்டு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். வயது வித்தியாசம் பார்க்காது மரியாதையுடன் நடத்தக்கூடியவர்.
எனது பார்ப்பனர் எதிர்ப்பை வெகுவாகக் கண்டிப்பார். பார்ப்பனியம் வேறு பார்ப்பனர் வேறு என்று விவாதிப்பார். பரிக்‌ஷா ஞாநி, பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும் பலரது நன்மதிப்பைப் பெற்றவர் என்று நான் எழுதியதைக் கடுமையாகக் கண்டித்தார்.


15 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் சாலை ஓரத்தில் ஒரு மாலையில் நல்ல புழுதி நிரம்பிய சாலையில் ஒரு தட்டுக்கடையில் குடல்கறி, தோசையை விரும்பி விரும்பி சக்ரவர்த்தி சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது.
கருவாடு மிகவும் விரும்பி சாப்பிடுவார். ரசித்து ருசித்து மது அருந்தக் கூடியவர்.
தமிழில் மிகவும் முக்கியமான சினிமா விமர்சகர். சிக்மண்ட் ப்ராய்டு தொடங்கி லகான் என சர்வதேச கோட்பாடுகளின் அடிப்படையில் தனது ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசவும் கூடியவர். ஆங்கிலத்தில் ப்ரண்ட் லைன், இபிடபிள்யூ மாதிரியான முக்கியமான பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார். ரோஜா, இருவர் ஆகிய படங்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.
தமிழில் பாரதிராஜாவின் சினிமா பற்றி அவர் எழுதிய கட்டுரை மிகவும் முக்கியமான பங்ளிப்பாகக் கருதப்படுகிறது.
சினிமாவைக் கல்விப்புலத்திலிருந்து அணுகியவர் என்றால் சக்கரவர்த்தி என்றால் மிகையாகாது.
இந்தியாவில் பல முக்கியமான கல்லூரிகளில் சினிமா தொடர்பான வகுப்புகளும் பட்டறைகளும் எடுத்திருக்கிறார்.
திரைப்பட ரசனை தொடர்பாக அவர் நடத்திய பட்டறைகளில் நான் கலந்து கொண்டு பயனடைந்திருக்கிறேன்.
நான் சென்னைக்குப் புலம்பெயர்ந்து வந்த பிறகு நடத்திய பல திரையிடல்களில், கலந்துரையாடல்களில் கருத்துரையாற்றி எங்களை ஆதரித்திருக்கிறார்.
பரிசல் செந்தில்நாதன் தமது படப்பெட்டி இதழ் சார்பாக நடத்திய கபாலி படம் தொடர்பான விவாதத்தில் வெங்கடேஷ் சக்ரவர்த்தி பேசியது பிடிக்காது 'ரசிகர்கள்' அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அவர் அங்கிருந்து வேகமாக வெளியேறியதும் நினைவுக்கு வருகிறது. அன்று நடந்த பரிமாற்றம் பற்றி அவர் பின்னாட்களில் என்னுடன் பலமுறை தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவரது நுட்பமான கருத்துக்கள் அன்று கடும் கண்டனத்திற்கு ஆளானது அவரைத் தொந்தரவுக்குள்ளாக்கியது.
சென்னை நகரத்தின் வளர்ச்சி பற்றி வெங்கடேஷ் சக்ரவர்த்தி எடுத்த ஸ்பிலிட் சிட்டி எனும் ஆவணப்படத்தை மதுரையிலும் சென்னையிலும் கொச்சியிலும் திரையிட்டிருக்கிறேன். கொச்சியில் நான் திரையிட்ட விதம் பற்றி அவருக்கு வருத்தம் ஏற்பட்டு அது பெரிய சண்டையில் முடிந்தது. அதற்குப் பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. என்னை முகநூலில் ப்ளாக் செய்துவிட்டார் என்று நினைவு.
அமெரிக்காவில் வாழும் மதுரை ஓவிய நண்பர் லோகு சமீபத்தில் சென்னை வந்திருந்திருந்த போது சக்ரவர்த்தியைப் பார்க்கப் போனார். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டேன். அப்போதும் நான் லோகுவுடன் போய் அன்னாரைப் பார்க்க முடியவில்லை.
வெங்கடேஷ் சக்ரவர்த்தி அவர்களை நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தான் அவருடனான பழக்கம் எனக்கு இருந்ந்தது என்று சொல்லலாம்.
20 ஆண்டுகளுக்கு மேலான பழக்கம் என்று சொல்லாம். என்னைப் போன்ற பலருக்கு ஆதர்சமாக இருந்தார்.
சக்ஸ் என்று பிரியமாக நாங்கள் அழைக்கும் வெங்கடேஷ் சக்ரவர்த்தி இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டேன்.
தமிழக அரசு அவருக்கு ஒரு விருது அளித்து மரியாதை செய்யவேண்டும். எல்லோருக்கும் போய்ச்சேர வேண்டிய பெயர் அவருடையது. அவருக்குப் போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே சொல்வேன்.


அவரது இணையர் ப்ரீதம் ஒரு மேடைக் கலைஞர். அவரது ஒரு நபர் நாடகங்கள் மிகவும் முக்கியமானவை. திருநங்கைகள் பற்றி அவரது நாடகத்தைப் பார்த்து மயக்கம் போடாதவர்கள் குறைவு. 90களில் பூனாவில் நடந்த ஒரு மாநாட்டில் எனது தீவிரவாதிகள் எனும் தமிழ் ஆவணப்படம் திரையிடப்பட்ட போது ப்ரீதம் அவர்கள் உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததை நான் நன்றியோடு எப்போதும் நினைப்பேன். அவர்களது பெண்கள் மாளவிகாவும் சம்யுக்தாவும் கலை / ஊடகத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
போய் வாருங்கள் சக்ஸ்! எங்களின் அன்பும் மரியாதையும் உங்களுக்கு எப்போதும் உண்டு.

இணைப்புகள் :